Wednesday, June 30, 2010

வெள்ளிக்கிழமையா? பூசாரியை கூப்பிடுங்க!

"உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே"

தெனாலி மாதிரி லிஸ்ட் போட்டு சொல்லற அளவு பல பயங்கள் எனக்கு இருந்தா கூட, நம்ம பாரதி சொல்லற இந்த உச்சி மீது வானம் இடிஞ்சு விழற ஜுஜுபி வேலைக்கெல்லாம் நான் அனாவசியமா பயப்படறது இல்லை. அது பாட்டுக்கு விழுந்திட்டு போகட்டும்னு விட்டுடுவேன். நான் அதிகமா பயந்து நடுங்கறது ஒரே ஒரு விஷயத்துக்கு மட்டும் தான். அது தான் வெள்ளிக்கிழமை.

வெள்ளிக்கிழமை விடிஞ்சாலே நான் 'உலக மகா கோழை' அப்படீங்கற பட்டத்தை வாங்க தயாராயிடுவேன். ஊர் உலகத்துல எல்லாரும் வெள்ளிக்கிழமை சாயந்திரம் வந்தா "அப்பாடா, இனி ரெண்டு நாள் வேலைக்கு போக வேண்டாம், ஸ்கூல் போக வேண்டாம்"னு சந்தோஷமா இருப்பாங்க. நான்? அம்மன் கோவில் பூசாரியை வேப்பிலை அடிக்க கூப்பிடும் நிலையில் இருப்பேன். என்னோட இந்த பயத்துக்கு என்ன காரணம்னு சொல்லறேன் கேளுங்க.

என் குழந்தைகளுக்கு 102 டிகிரி ஜுரம் வந்தா, அது வெள்ளிக்கிழமை சாயந்திரம் தான் வரும்னு ஒரு தீர்கதரிசியோட தீர்மானத்தோட என்னால சொல்ல முடியும். திங்கள் லேந்து வெள்ளி சாயந்திரம் வரை ஒரு பூச்சி பொட்டு கூட கடிக்காம மிகச்சிறந்த உடல் நிலையில் இருக்கும் என் குழந்தைங்களுக்கு வெள்ளிகிழமை ராத்திரிக்குள் ஜுரம், வாந்தி, பேதி, தலை வலி, வயித்த வலி, பல் வலி மற்றும் இதர பல உடல் உபாதைகள் வரக்கூடிய வாய்ப்பு மிக மிக அதிகம். ஐந்து மணிக்கு குழந்தை வைத்தியர் ஆபீஸ் இழுத்து மூடியாச்சா என்று உறுதிப்படுத்திண்டு தான் எல்லா உபாதைகளும் ஆரம்பிப்பது போல இருக்கும்.

அது மட்டும் இல்லை. வாழ்க்கைக்கு எங்களுக்கு அதி அவசியமா தேவைப்படும் எல்லா இயந்திரங்களும் வெள்ளிக்கிழமை சாயந்திரம் வந்தா சொல்லி வச்சா மாதிரி பட்டுன்னு உயிர் விட்டுடும். வெய்யில் காலத்தில் குளிர் சாதன பெட்டி வெள்ளிக்கிழமை அன்னிக்கு தான் விறைத்து போய் நிற்கும். குளிர் காலத்தில் வெப்ப நிலை பெட்டி பொசுங்கி சாம்பலாவது வெள்ளி அன்று தான். பாத்ரூம் பைப்பெல்லாம் உடைஞ்சு வீட்டை வெள்ளத்துல ஆழ்த்துவது சர்வநிச்சயமா வெள்ளிக்கிழமை அன்னிக்கு தான். ரிப்பேர் செய்பவர்கள் இனி இரண்டு நாள் கழித்து திங்களன்று தான் வேலைக்கு வருவார்கள் அப்படீன்னு உறுதிப்படுத்திண்ட பின்பு தான் எங்கள் வீட்டு துணி துவைக்கும் இயந்திரம் வேலை செய்வதை நிறுத்தும். உயிரில்லாத இந்த இயந்திரங்களுக்கு எங்கிருந்து இவ்வளவு புத்திசாலித்தனம் வருதுன்னு எவ்வளவு யோசனை பண்ணியும் எனக்கு புரியலைங்க.

என் கணவரின் புத்தம் புது நூறு டாலர் சூட்டில் அரை கப் சாம்பாரை நான் கொட்டினால் அது சர்வ நிச்சயமா வெள்ளி இரவாய் தான் இருக்கும். Dry Cleaners கடை திறந்திருக்கும் போது ஏன் இப்படி நடக்கமட்டேங்கறது அப்படீங்கற என் கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கலை. மொத்ததுல என்னை கதறடிக்க கூடிய திறன் வெள்ளிக்கிழமையிடம் தான் இருக்கு.

அடடா, நாளைக்கு வெள்ளிகிழமையா? ஒக்க நிமிஷம் வைட்டீஸ் ப்ளீஸ். பக்கத்து கோவில் பூசாரிக்கு ஒரு போன் பண்ணி ஒரு கொத்து வேப்பிலைக்கு ஆர்டர் கொடுக்கணும்.

உங்களோட தெனாலி லிஸ்ட் எவ்வளவு நீளம்? யோசிச்சு வைங்க இதோ வந்திடறேன்.

ராக்பெல்லர் மாமி எங்கே? நரிக்கொரவாஸ் எங்கே?

சில வருஷங்களுக்கு முன்னாடி நான் கலிபொர்னியாவில் வசித்த போது ஒரு தோழியின் தங்கைக்கு கல்யாணம் நிச்சயித்து பக்கத்தில் இருக்கும் ஒரு கோவிலிலேயே செய்வதா சொன்னாங்க. ஒரு மாதம் முன்பே கல்யாண பத்திரிகை குடுத்து எங்களை அவசியம் வர வேண்டும் அப்படீன்னு சொல்லிட்டு போனாங்க.

உங்களைப் பத்தி எனக்கு தெரியாதுங்க ஆனா எனக்கு நம்மூர் கல்யாணம்னாலே எப்பவும் ஒரு தனி குஷி. அதுவும் அமெரிக்காவில் நான் பார்க்க போற முதல் இந்திய கல்யாணம் இது தான். சின்ன வயசில் எழுத்தாளர் சாவியின் 'வாஷிங்டனில் திருமணம்' ங்கர புத்தகத்தை நான் படிச்சு படிச்சு கிழிச்சதுல என் தொல்லை தாங்காம ஒரு நாள் அந்த புத்தகம் சொல்லாம கொள்ளாம வீட்டை விட்டு சந்நியாசம் வாங்கிண்டு போயிடுத்து.

அமெரிக்காவுல கல்யாணம்னா சும்மாவா? பெண் வீட்டுக்காரங்களுக்கு தான் எத்தனை வேலை இருக்கும்? இந்தியாலேந்து வண்டி(விமானத்த தான் சொல்லறேங்க) வச்சு எத்தனை சாமான் கொண்டு வரணும்? எத்தனை பேரை கூட்டிண்டு வரணும்? அதான் நம்ம எழுத்தாளர் சாவி அமெரிக்காவில் கல்யாணம் செய்தா என்னென்ன பண்ணனும்னு அவர் புத்தகத்துல பிட்டு பிட்டு வச்சிருக்காரே.

* தட்டானை வரவழைச்சு கல்யாண பெண்ணுக்கு வேண்டிய ஒட்டியாணம், வங்கி, வளையல்கள், ஹாரம், திருமாங்கல்யம் போன்ற நகைகளை செய்தாகணும்.
* வயசான பல பாட்டிகளை கூட்டி கொண்டு வந்து அப்பளம் இட்டு காய வைத்து கல்யாண விருந்துக்கு தயார் பண்ணியாகணும்.
* இட்ட அப்பளங்களை காய வைக்க பெரிய கட்டடங்களோட மொட்டை மாடியை வாடகைக்கு எடுத்தாகணும்.
* மடிசார் கட்டிக்க ஆசைப்படற பெண்களுக்கு, (ராக்பெல்லர் மாமி உட்பட) அதை சொல்லித்தர பாட்டிகளை ஏற்பாடு செய்தாகணும்.
* புரோகிதர்களை வரவழைத்து அவங்க தங்கரத்துக்கு இட வசதிகள் செய்து கொடுத்தாகணும்.
* வைதீக காரியங்களுக்கு மடியா தண்ணி வேணும்னு சொல்லற புரோகிதர்களுக்கு புதுசா கிணறு வெட்ட ஆட்களை வரவழைக்கணும்.
* மாப்பிளையை கார்ல ஊர்வலமா அழைச்சுண்டு போற ஜானவாச ரூட்டுக்கு கவர்மென்ட் பர்மிட் வாங்கணும்.
* ஜான்வசத்தில் மாப்பிள்ளை காரின் பின்னாலே காஸ் விளக்கு தூக்கி கொண்டு நடக்க இந்தியாவுலேந்து நரிக்கொரவர்களை வரவழைக்கணும்.
* நலங்கில் பெண்ணும், மாப்பிள்ளையும் உருட்டி விளையாட தேங்காய் வரவழைக்கணும்.
* கல்யாண சத்திரம் வாசல்ல கட்ட வாழை மரம் வரவழைக்கணும்.
* பந்தியில் பரிமாற வாழை இலை வரவழைக்கணும். வடு மாங்காய் வரவழைக்கணும். வெள்ளைக்காரர்கள் பந்தியில் உட்கார்ந்து வடு மாங்காய் சாப்பிட்டு விரலை கடித்து கொண்டால் அவங்க கைக்கு பேண்ட் ஐட் போட தேவையான first aid boxes வரவழைக்கணும்.

நினைக்கவே எனக்கு மலைப்பா இருந்தது. என் தோழி வீட்டுக்கு போன் பண்ணி கல்யாண ஏற்பாடுகள் பண்ண எந்த உதவி வேணும்னாலும் சொல்லுங்க செய்யறேன் அப்படீன்னு சொன்னதுக்கு எல்லாம் 'under control' அப்படீன்னு சொன்னாங்க. சரி தான். நிறைய ஆள்பலம் இருக்கும் போல இருக்குன்னு நானும் விட்டுட்டேன்.

கல்யாண நாள் கிட்ட நெருங்க நெருங்க எங்க வீட்டு கல்யாணம் மாதிரி எனக்கு ஒரே பரபரப்பு. தினமும் நான் அலமாரியை திறந்து நாலு தரம் கட்ட வேண்டிய பட்டு புடவைகளையும் நகைகளையும் சரி பார்த்து வைப்பதை பார்த்து என் கணவருக்கு ஒரே குழப்பம். அமெரிக்காவில் பட்டுப் புடவை கட்டிண்டு ஜானவாச கார் பின்னாடி நடக்கவும், நலங்கு போது கலாட்டா பண்ணி பாட்டு பாடவும், வாழை இலை கட்டி மாக்கோலம் போட்டிருப்பதை பாக்கவும் ஒரு குடுப்பினை வேண்டாமா? 'வாஷிங்டனில் திருமணம்' கதை போல நடக்கவிருக்கும் கலிபோர்னியா கல்யாணத்தை பாக்க எனக்கிருந்த ஆர்வம் அவருக்கு புரியலை.

கல்யாணத்துக்கு முதல் நாள் பெண் வீட்டுக்காரங்களை விட அதிக கவனத்தோட நான் ஜானவசத்துக்கு ரெடியாகி கொண்டிருந்த போது எதேச்சையா என் வீட்டுக்கு வந்த இன்னொரு தோழி என்னை பாத்து குழம்பி போய் நின்றாள். விசாரிச்சா கல்யாணத்துல ஜானவாசமே கிடையாதாம். அது மட்டுமில்லை. அடுத்த நாள் கல்யாணம் ரொம்ப சிம்பிளா தாலி மட்டும் கட்டி அரை மணியில முடிஞ்சுடுமாம். அப்புறம் எல்லோரும் ஹோட்டலுக்கு போய் buffet சாப்பாடு சாப்பிட்டு போகணுமாம்.

என்ன அக்கிரமம்க இது? ஒரு ஜானவாச கார் கிடையாதாம். கார் பின்னாடி நடக்கற ஊர்வலம் கிடையாதாம். ஊர்வலத்துக்கு காஸ் விளக்கு தூக்கிண்டு நடக்கும் நரிக்குரவங்க கிடையாதாம். மடிசார் கட்டிய ராக்பெல்லர் மாமி கிடையாதாம். உட்கார வச்சு வாழை இலைல பரிமாரற விருந்து கிடையாதாம். ரொம்ப ஏமாத்தமா இருந்துதுங்க. எனக்கு இருந்த கோவத்துல ஆசை காமிச்சு மோசம் பண்ணினதுக்கு திருவாளர் சாவி மேல கேஸ் போடலாமான்னு கூட யோசனை பண்ணினேன். நல்ல காலம் அப்படியெல்லாம் செய்யாமல் விட்டேன். இல்லேன்னா இப்போ அவர் பேரை சொல்லி ப்ளாக் எழுதினத்துக்கு என் மூக்கறுத்து மொளகாப்படி தூவாம விட்டுருவாங்களா?

பி.கு. - இது ஜூன் 2009 ல் RTS ப்ளாக் தளத்தில் வெளி வந்த என் கட்டுரை.

Tuesday, June 29, 2010

துப்பறியும் சாம்பு இப்பொழுது எங்கே?

ரொம்ப சுறுசுறுப்புன்னு சொல்ல முடியாட்டாலும் என்னை யாரும் இது வரை சோம்பேறின்னு சொன்னது இல்லைங்க. அடிக்கடி துடைச்சு துடைச்சு சுத்தம் பண்ணாட்டாலும் வீட்டுக்கு நாலு பேர் வரப்போறாங்கன்னு தெரிஞ்சா உடனே வாழும் அறையில் (living room) இறைஞ்சு கிடக்கிற பத்து விளையாட்டு சாமான்கள், அரை டஜன் நாய் பொம்மைகள், ஐந்தாறு அழுக்கு காலணி உறை, நாலு தலையணை, இரண்டு கதை புத்தகங்கள் மற்றும் பற்பல கலர் ரிமோட் கண்ட்ரோல்கள் எல்லாத்தையும் அள்ளி எடுத்துட்டு போய் பக்கத்து அறையில் போட்டு கதவை இழுத்து தாளிட்டு சுத்தம் செஞ்சிடுவேன். வீட்டுக்கு வர்றவங்க மூக்கில் விரல் வச்சு ஆச்சர்யப்படுவாங்க. என் நல்ல பேருக்கு பங்கம் வராமல் என்னுடைய நாய் பக்கத்து அறை வாசலில் உட்கார்ந்து யாரையும் உள்ளே போக விடாமல் காவல் இருக்கும். இப்ப நானே அந்த அறைக்குள் போக பயந்து போகறது இல்லைன்னா பாருங்களேன்!

அப்படிப்பட்ட நான் வீடு நிறைய கூடைகளில் தோய்த்து மடிக்காமல் துணி மணிகளை அப்படியப்படியே போட்டு வைத்திருப்பதை பார்த்து நீங்க ஆச்சர்யப்படறது எனக்கு புரியுது. என்னை மட்டும் இல்லை. எல்லா வீட்டு தலைவிகளையும் கேட்டு பாருங்க. அதுக்கு ஒரு காரணம் தான் சொல்லுவோம். முடிவேயில்லாத ஒரு வேலையை எப்படீங்க செய்ய முடியும்? ஒரு வழியா ஐந்தாறு கூடை துணிகளையும் வாஷிங் மஷினில் போட்டு துவைத்து, காய வைத்து, மடித்து அலமாரியில் வைத்து விட்டு திரும்பினால், எங்கிருந்தோ இன்னும் ரெண்டு கூடையில் அழுக்கு துணி வந்து உட்கார்ந்து என்னை பார்த்து கை கொட்டி கெக்கலிக்கிறது. பல வருஷங்களா 'நீயா நானா பார்ப்போம்' அப்படீங்கற வீராப்பில் நான் அழுக்கு துணியுடன் தனியாக போட்ட குஸ்தியை பார்த்து பரிதாபப்பட்டு என் கணவர் என்னை ஒதுங்கச் சொல்லி இப்போது அவர் இந்த போரில் இறங்கியிருக்கார்.

சில வருடங்களுக்கு முன்னாடியெல்லாம் ஆர்வத்துடன் துணி துவைச்சு மடிச்சு வைப்பேங்க. எதையும் சாதிக்க முடியும்னு நம்புகிற வயசு அப்போது. ஆனால் இப்பல்லாம் பெருகி வரும் அழுக்கு துணிகளை வெல்ல எனக்கு சக்தி இல்லைன்னு ஒத்துக் கொள்ளும் மனப்பக்குவம் வந்து விட்டது. இந்தப் பக்குவம் வந்ததால தான் "துவைத்த துணியை மடிச்சு அலமாரியில் வைத்து என்ன செய்ய போகிறோம்? நம் தலை அந்தப்பக்கம் திரும்பியவுடன் அது குதித்து அழுக்கு கூடையில் உட்கார போகிறது. அதனால் மடிக்காமல் கூடையிலே இருக்கட்டும்" னு விட்டுட்டேன்.

ரொம்ப காலமாவே ஒரு சந்தேகம் எனக்கு. நான் தான் எங்க வீட்டில் துணிகள் வாங்குவேன். அளவாத்தான் வாங்குவேன். அப்படி இருக்கையில் ராத்திரியோட ராத்திரியாக எப்படியோ துணிமணித்தொகை வீட்டில் பெருகிக் கொண்டு வரா மாதிரி தோணுது. நாலு துணி இருந்த அலமாரியில் இருபது துணி இருக்கிற மாதிரி தோன்றுகிறது. இந்த மர்மத்தை துப்பு துலக்க எனக்கு நேரமும் இல்லை. புத்திசாலித்தனமும் பத்தாது. இந்த வேலைக்கு துப்பறியும் சாம்புவைத் தான் கூப்பிடலாம்னு இருக்கேன். அவர் தொலைபேசி எண் உங்ககிட்ட இருக்கா?

பி.கு. - இது RTS ப்ளாக் தளத்தில் மே 2009 ல் வெளிவந்த கட்டுரை.

Monday, June 28, 2010

ஆஸ்தான புலவரும் சின்னத் திரையும்!

காட்சி - 1
எலியூர் அரண்மனை

"யாரங்கே?" இடி போல் முழங்கியது எலியூர் அரசனின் குரல். இரு காவலாளிகள் எங்கிருந்தோ நொடியில் வந்து வணங்கினர்.

"மன்னா, தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம்."

"உடனே சென்று ஆஸ்தான புலவரை அரண்மனைக்கு அழைத்து வரவும். இரண்டு நாட்களாக அவர் சபைக்கு வரவில்லை. இன்று பல்லியூரில் இருந்து வந்த புலவரை தர்க்கத்தில் நான்கு கேள்விகள் கேட்க நம் சபையில் ஒருவரும் இல்லை. எலியூருக்கு எத்தனை பெரிய அவமானம்?" கோபத்தில் அரசனின் முடுக்கிய மீசை துடித்தது.

விரைந்து சென்ற காவலாளிகள் சில நிமிடங்களில் புலவருடன் திரும்பினர். அழுது வீங்கி நிராசையுற்ற கண்களுடன் தன் முன்னே நின்ற புலவரைப் பார்த்ததும் அதிர்ந்து போனான் மன்னன்.

"புலவரே, என் நாட்டின் குடிமகனின் கண்களில் கண்ணீரா? ஐயகோ, நான் என் கடமையை செய்ய தவறியவன் ஆனேனே. என்ன குறை உங்களுக்கு? என்னிடம் சொல்லுங்கள்."

"சின்னத்திரையில் ஐந்து வருடங்களாக ஓடிக்கொண்டிரும் மெகா சீரியல் இன்றுடன் முடிவடைகிறது மன்னா. ஐந்து வருடங்களாக என் குடும்பத்தின் அங்கமாகவே ஆகி விட்ட சின்னத்திரை நடிகர்களை இனி பார்க்கவே முடியாதே என்ற வருத்தத்தில் அழுது அழுது எனக்கு ஜன்னி கண்டு விட்டது. அதனால் தான் என்னால் சபைக்கு வர இயலவில்லை அரசே."

"என்னது, சின்னத் திரையில் வரும் மெகா சீரியல் நடிகர்களிடம் உங்களுக்கு அவ்வளவு பிரியமா? ஆச்சர்யமாக உள்ளதே! அதன் காரணத்தை சற்றே விளக்கமாக சொல்லுங்கள் புலவரே."

"எலியூர் அரசே, தினமும் சபை முடிந்து வீடு திரும்பினால் எனக்காக மெகா சீரியல் குடும்பங்கள் காத்திருக்கும். ஒவ்வொரு நாளும் அந்த கதாபாத்திரங்கள் படும் துன்பங்கள் சொல்லில் அடங்காது மன்னா. இவைகளின் கதாநாயகிகள் மாமியாரிடம் உதைப்பட்டு, கணவனிடம் அடிபட்டு, பிறந்த வீட்டார் முன் அவமானப்பட்டு, தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்டு, கொலை சூழ்ச்சியில் அகப்பட்டு........அப்பப்பா...அவர்கள் படும் பாட்டை பார்த்து எத்தனை நாட்கள் நான் கண்ணீர் விட்டுருப்பேன். அரசே.....உங்கள் கண்களில் கண்ணீரா?"

"புலவரே...போதும் போதும். இனி சொல்லாதீர்கள். உங்கள் மெகா சீரியலில் நல்லது எதுவுமே நடக்காதா?"

"மன்னா....எலியூரில் சூரியன் மேற்கில் உதித்தாலும் உதிக்கலாம்...மெகா சீரியலில் நல்லதாக எதுவும் நடக்க சிறிதும் வாய்ப்பில்லை."

"புலவரே, எனக்கு ஒரு நல்ல யோசனை. நாளை பல்லியூர் புலவர் சபைக்கு வரும் போது நீர் இந்த மெகா சீரியல் பற்றி நாலு கேள்வி அவரைக் கேளுங்கள். நிச்சயம் வெற்றி உங்களுக்கே."

"அப்படியே செய்யலாம் மன்னா. நாளைக் காலையில் சபையில் பல்லியூர் புலவரை சந்திக்க தயாராக வருகிறேன்."

------------

காட்சி - 2
புலவர்களின் மோதல்
எலியூர் அரண்மனை ராஜ சபை

காவலாளன்: எலி பிடிக்கும் பூனையின் எதிரி அவன் வீரன், பராக்ரம சூரன், தான் உண்ட மீதியை தானம் செய்யும் வள்ளன், பளபள உடை அணியும் அழகன், அவன் எலியூர் மன்னன் அழுமூஞ்சிவர்மன் பராக் பராக் பராக்.

பல்லியூர் புலவர்: மன்னாதி மன்னா, பல்லியூர் நாட்டு மக்களின் சார்பாக உங்களுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

எலியூர் அரசன்: வெளிநாட்டு புலவரே, வருக வருக...இன்று எங்கள் ஆஸ்தான புலவர் உங்கள் பண்டிதத்தை சோதனை செய்வார். ஆஸ்தான புலவரே, தர்க்கத்தை துவக்கலாம்.

ஆஸ்தான புலவர்: அப்படியே ஆகட்டும் மன்னா.

புலவரே, இதோ உங்களுடைய முதல் கேள்வி. சின்னத் திரையில் வரும் மெகா சீரியலில் ஒரு மாமியார் தன்னுடைய மருமகளுக்கு இன்முகத்துடன் காப்பி பானம் கொடுத்தால் அதற்கு என்ன அர்த்தம்?

வெளிநாட்டு புலவர்: அவருக்கு மருமகளிடம் அபரிதமான அன்பென்று அர்த்தம்.

ஆஸ்தான புலவர்: தவறு. பானத்தில் விஷம் கலந்து கொடுத்து "சென்று வா மகளே" என்று சொல்கிறார் என்று அர்த்தம். இதோ உங்களுடைய அடுத்த கேள்வி. தமிழ் மெகா சீரியலில் கிட்டத்தட்ட அறுபது வயது இருக்கும் ஒரு பெரியவர் குனிந்த தலையுடன் அழுகையில் உடம்பு குலுங்க ஒரு துண்டால் வாயை மூடி கொண்டு ஒரு வீட்டை விட்டு வெளியே வருகிறார் என்றால் அதற்கு என்ன அர்த்தம்?

வெளிநாட்டு புலவர்: அந்த வீட்டில் அவருடைய உறவினர் ஒருவர் தவறி விட்டார் என்று அர்த்தம்.

ஆஸ்தான புலவர்: இல்லை. அவருடைய மகள் புகுந்த வீட்டில் வேலைக்காரியாக உழைப்பதை கண்டு ரத்த கண்ணீர் பெருகி மகளின் கணவரையும், மாமியாரையும் "இது நியாயமா?" என்று கேள்வி கேட்டு அவர்களிடம் அவமானப்பட்டு வீடு திரும்புகிறார் என்று அர்த்தம்.

இதோ உங்களுடைய மூன்றாவது கேள்வி. சின்னத் திரையில் கதாநாயகிகளாக வரும் பாத்திரங்கள் அதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

வெளிநாட்டு புலவர்: இந்தக் கேள்வி சற்று கடினமாக உள்ளது. எனக்கு சிறிது நேர அவகாசம் வேண்டும் புலவரே.

எலியூர் அரசன்: ஒரு மணி நேர உணவு இடைவேளைக்கு பின் தர்க்கத்தை மறுபடியும் தொடரலாம்.

புலவர்கள்: அப்படியே ஆகட்டும் மன்னா.

ராஜ சபையை விட்டு அனைவரும் வெளியேறுகிறார்கள்.

---------------

காட்சி - 3
உணவு இடைவேளைக்கு பின் தர்க்கம் தொடர்கிறது
எலியூர் அரண்மனை ராஜ சபை

காவலாளன்: எலி பிடிக்கும் பூனையின் எதிரி அவன் வீரன், பராக்ரம சூரன், தான் உண்ட மீதியை தானம் செய்யும் வள்ளன், பளபள உடை அணியும் அழகன், அவன் எலியூர் மன்னன் அழுமூஞ்சிவர்மன் பராக் பராக் பராக்.

எலியூர் அரசன்: வெளிநாட்டு புலவரே, ஆஸ்தான புலவரின் மூன்றாவது கேள்விக்கு விடை சொல்லி தர்க்கத்தை தொடர தாங்கள் தயாரா?

வெளிநாட்டு புலவரே: ஆமாம் மன்னா.

எலியூர் அரசன்: ஆஸ்தான புலவரே மீண்டும் ஒரு முறை மூன்றாவது கேள்வியை கேளுங்கள்.

ஆஸ்தான புலவர்: அப்படியே ஆகட்டும் மன்னா. புலவரே, சின்னத் திரையில் கதாநாயகிகளாக வரும் பாத்திரங்கள் அதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

வெளிநாட்டு புலவர்: விளம்பரங்களில் நடித்து பற்பல சாமான் விற்கும் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

ஆஸ்தான புலவர்: தவறு. அவர்கள் அதற்கு முன் பெரிய திரையில் முன்னிலை கதாநாயகிகளாக நடித்து திருமணமான அடுத்த நாளிலிருந்து அழகையும் கவர்ச்சியையும் இழந்ததாக முத்திரை குத்தப்பட்டு அக்கா, பெரியம்மா, சிறிய தாயார் போன்ற பாத்திரங்களுக்கு ஒதுக்கப்பட்ட சோகத்தில் நொடிந்து போய் நடித்து கொண்டிருந்தார்கள்.

எலியூர் அரசன்: சபாஷ்! சபாஷ்!

ஆஸ்தான புலவர்: நன்றி அரசே! இதோ எனது அடுத்த கேள்வி. ஒரு மெகா தொடரை இன்று பார்த்த பின்பு ஒரு வருடம் சென்ற பின்பு மறுபடி பார்த்தால் கதையில் மாற்றம் இருக்குமா இருக்காதா?

வெளிநாட்டு புலவர்: அது எப்படி ஒரு வருடத்தில் மாற்றம் இல்லாமல் போகும்? நிச்சயம் ஒரு வருடத்தில் பல சம்பவங்கள் முடிந்திருக்கும்.

ஆஸ்தான புலவர்: அது தான் இல்லை. வாரத்தில் ஒரு முறை அரைமணி நேரம் வரும் தொடரில் இருபத்தெட்டு நிமிடம் விளம்பரங்கள் போட்டு இரண்டு நிமிடம் மட்டுமே தொடர் வருவதால் ஒரு வருடத்தில் கதை நகர சிறிதும் வாய்ப்பில்லை.

இதோ எனது கடைசி கேள்வி புலவரே. கொலைக் காட்சி போன்ற ஒரு முக்கியமான காட்சியில் வில்லன் கத்தியை உயர்த்தி பிடித்து குத்துவதற்கு முன்பு அதிர்ச்சி தருவது போல பின்னணி இசை வரும். அப்பொழுது என்ன நடக்கும்?

வெளிநாட்டு புலவர்: இதற்கு விடை எனக்கு தெரியாது புலவரே. உங்கள் புலமைக்கு நான் தலை வணங்கி இந்த தர்க்கத்தை நீங்களே வென்றீர் என ஒத்துக் கொள்கிறேன். உங்களது கடைசி கேள்விக்கு நீங்களே பதிலையும் சொல்லி விடுங்கள் ஐயா.

ஆஸ்தான புலவர்: இதோ அதன் பதில் புலவரே. ஒன்றுமே நடக்காது. மறுபடி அடுத்த வாரம் தொடரும் என்று கூறி நேயர்களை நோகடிப்பார்கள். அவ்வளவு தான்.

வெளிநாட்டு புலவர்: நான் தோற்று விட்டேன் மன்னா. உங்கள் நாட்டு புலவரின் அறிவாற்றலின் முன்பு நான் தலை குனிகிறேன் அரசே. இனி நான் எலியூர் பக்கம் எந்த ஒரு தர்க்கத்திற்கும் வர மாட்டேன் என்று கூறி விடை பெறுகிறேன்.

எலியூர் அரசன்: சென்று வாரும் புலவரே. சின்னத் திரையை கரைத்து குடித்திருக்கும் எங்கள் புலவரிடம் தோற்றது உமக்கு இழிவு அல்ல. பெருமை தான். ஆஸ்தான புலவரே, நன்று செய்தீர், இந்நாட்டின் பெருமையை உயர்த்தினீர். உங்களின் சின்னத் திரை மெகா தொடர்களின் பண்டிதத்தை பாராட்டி 'மெகா புலவர்' என்று பட்டம் அளித்து இந்த பத்து பொற்காசுகளை சமானமாக அளிக்கிறேன்.

ஆஸ்தான புலவர்: கொடைவள்ளல் அழுமூஞ்சிவர்மா! உங்கள் அல்பத்தனத்துக்கு நான் என்றென்றும் கடன் பட்டிருக்கேன். வாழ்க எலியூர் மன்னன்! வளர்க அவன் புகழ்!

(முடிவுற்றது)

பிகு: இந்த நாடகம் ரிச்மன்ட் தமிழ் சங்கம் ப்ளாக் தளத்திற்காக மே 2009 ல் நான் எழுதியது.

இது ஒரு குத்தமா? நீங்களே சொல்லுங்க

நீங்க நம்ப மாட்டீங்க. நானும் கடந்த சில மணி நேரங்களா ரொம்ப கடுமையா முயற்சி செய்யறேன். வீட்ல பல அறைகளில் உட்கார்ந்து பாத்துட்டேன் . உட்கார்ந்திருந்த நாற்காலியை மாத்தி பாத்துட்டேன். சோபாவில் சாய்ந்து மோட்டை வெறித்து பாத்துட்டேன். ஆழ்ந்த யோசனைக்கு அறிகுறியா விரல் நுனியால் மோவாய் கட்டையை தட்டி பாத்துட்டேன். வைரமுத்து கணக்குல குறுக்கும் நெடுக்குமா நடந்து பார்த்துட்டேன். ம்ஹூம் ..........பதிவுக்கு ஒரு நல்ல ஐடியா வரக்காணுமே! நம்ம கற்பனை குதிரைய தட்டி ஓட விடலாம்னு பார்த்தா அது சுருண்டு படுத்து தூங்கிடுத்துங்க.

நாட்டுல மக்கள் அரைப்பக்கத்தில் அம்சமா கதையே எழுதறாங்க. நமக்கு மட்டும் மைண்ட் இப்படி லைசால் ஸ்ப்ரே போட்டு தொடச்ச சமையல் மேடை போல இருக்குதேன்னு கவலையோடு நான் ஜன்னல் வழியே தோட்டத்தை பாத்துண்டு இருந்த போது தான் அது மறுபடி கண்ணில் பட்டுது. பத்து நாளைக்கு முன்னாடி பூத்து குலுங்கிய எங்க வீட்டு செம்பரத்தி செடி இப்போ வாடி வதங்கி கொல்லையில் தொட்டியில கிடக்குது.

முதலிலேயே ஒரு விஷயத்தை தெளிவா சொல்லிடறேன். அந்த செம்பருத்தி செடி காலமாப்போனதுக்கு நான் காரணம் இல்லைங்க. எங்க வீட்ல செத்துப்போன வேறு ஐந்தாறு செடிகளுக்கும் நான் பொறுப்பு இல்லீங்க. ஊருல வேறு விதமா பேச்சு இருக்கும். ஆனா நீங்க நம்பாதீங்க. நடந்ததை நான் வெவரமா உங்களுக்கு சொல்லறேன்.

என் கணவர் சில மாசங்களா அடிக்கடி வேலை விஷயமா வெளியூர் போறார். ஊரில் இருக்கும் போது சின்ன குழந்தைகளை பராமரிக்கிற மாதிரி செடிகளுக்கு தண்ணி விட்டு வளர்ப்பார். ஏன் நான் தண்ணி விட மாட்டேனான்னு கேக்கறீங்க, அப்படி தானே? விடக்கூடாதுன்னு எண்ணம் கிடையாதுங்க. சின்ன வயசுல ஞாபக சக்திக்கு சூரணம் குடுத்த போது நான் துப்பிட்டேன் போல இருக்கு. எனக்கு கொஞ்சம் மறதி ஜாஸ்தி. என் நினைவாற்றலின் மேல் நம்பிக்கையற்று தான் என் கணவர் தானே செடிகளுக்கு தண்ணி விட்டு, பூச்சி மருந்து அடிச்சு எல்லாம் செய்வார்.

போன மாசம் ரெண்டு வாரம் வெளியூர் போறதுக்கு முன்னாடி என்னைய உக்காத்தி வெச்சு எந்தச்செடிக்கு எத்தனை கப் தண்ணி விடணும்னு வெவரமா சொல்லிட்டு தான் போனார். இந்த முறையாவது இவர் ஊரிலிருந்து திரும்பும்போது வாய் பிளக்குமாறு நாலு இலை பச்சையாக இருக்கட்டும்னு நானும் ரெண்டு நாள் முனைஞ்சு விட்டேங்க. மூணாவது நாள் செம்பருத்தி செடியோட இலைல கொஞ்சம் ஓட்டைங்க இருந்துது. ரெண்டு தடவை அதை சுத்தி வந்து பாத்துட்டு யோசனையா நகந்து போயிட்டேன். அடுத்த நாள் முழு செடியிலும் பூச்சி கடித்து நம்மூர் சல்லடை மாதிரி ஓட்டைங்க.

இது என்ன அனாவசியமான வம்பு? இந்த செடிக்கு ஒண்ணுன்னா பழி என் மேலல்லவா வரும்? கவலையோட நிமிர்ந்து பார்த்த போது அறை மூலையில் இருந்த விண்டக்ஸ் கண்ணில் பட்டது. ஆஹா, என் கை கொடுக்கும் தெய்வம். எல்லாக்கிருமிகளையும் அழிக்கும் தீர்த்தம். இதன் வீரியத்துக்கு முன்னாடி எந்த பூச்சி ஜெயிக்கும்னு நினைச்சு விண்டக்ஸ் பாட்டிலால் செடியை ஸ்ப்ரே பண்ணி விட்டு 'பகவானே நீ விட்ட வழி' அப்படின்னு போயிட்டேன். மொதல்ல எல்லா பூச்சியும் செத்து போச்சு (நான் சொல்லலை இது வேலை செய்யும்னு?). பிறகு எல்லா இலையும் உதிர்ந்து போச்சு. அப்புறம் செடியே வதங்கி, சுருண்டு படுத்துருச்சுங்க. மனசு நிறைய துக்கத்துல அடுத்த ஒரு வாரம் நானே சரியா சாப்பாடு, தண்ணி இல்லாம வளைய வந்ததுல, மிச்சம் மீதி செடிகளுக்கு தண்ணீர் விட மறந்து போச்சு. இது ஒரு குத்தமா? நீங்களே சொல்லுங்க.

ஊருக்கு போயிட்டு வந்து கோபமா என் மேல் பாய்ந்த கணவரிடம் நிச்சயமா சொல்லிட்டேன். அடுத்த பயணத்தின் போது வீட்டுல இருக்கிற எல்லா செடிகளையும் கூடவே எடுத்துட்டு போக சொல்லி. இவர் பாட்டு ஊருக்கு கிளம்பி போக, இவர் தெரு முனை திரும்பறத்துக்குள்ள செடிகளெல்லாம் மறியல் போராட்டம் செய்து தற்கொலை முயற்சியில் இறங்கினா நான் என்ன செய்ய முடியும், சொல்லுங்க?

பிகு: இது ரிச்மன்ட் தமிழ் சங்கம் ப்ளாக் தளத்திற்காக மே 2009 ல் நான் எழுதிய ஒரு கட்டுரை.

Sunday, June 27, 2010

மட்டை தேங்காய் தெரபி

என்னை மறை கழண்ட கேஸ்னு அவசரப்பட்டு முடிவெடுக்காதீங்க. அடிக்கடி டென்ஷன் ஆகற ஆளா இருந்தீங்கன்னா நீங்க கூட இந்த தெரபியை முயற்சி பண்ணலாம். அது என்ன மட்டை தேங்காய் தெரபி ன்னு கேக்கறீங்களா? அதை ஒரு கதை மூலம் உங்களுக்கு சொல்லறேன். தமிழ் சினிமாவில் flash back காமிக்க வட்டமா ஒரு சக்கரம் சுழன்று சுழன்று போகும் பாத்திருக்கீங்களா? இப்போ உங்க மனக்கண்ல அத பாத்துகிட்டே இந்தக் கதையை கேளுங்க. இது ஒரு உண்மை சம்பவம்.

------------------------------------------------------------------------
"இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு. சீக்கிரம் சமையல் கடையை முடியுங்கோ." பெரியப்பா சொல்லிட்டு பரண் மேல் ஏறி மட்டை தேங்காய்களை இறக்க ஆரம்பித்தார். அப்பா பூஜை அறையில் கணீர்னு ருத்ரம் சொல்லறது கேக்கறது. கடிகாரத்தை பார்த்தேன். இன்னிக்கு தினத்தை விட அப்பா ரொம்ப நேரமா பூஜை பண்ணறா. காரணம் எல்லோருக்கும் தெரியும். அது தான் இன்னும் அரை மணில ஆரம்பிக்கப் போறதே.

"ஸ்கூல் ஹோம்வர்க் எல்லாம் முடிச்சாச்சா? இன்னும் அரை மணியில ஆரம்பிச்சிடும். அப்புறம் உங்க யாரையும் பிடிக்க முடியாது. இப்பவே முடுச்சு வச்சுண்டா உங்களுக்கு தான் நல்லது" அம்மா அங்கலாய்ச்சிண்டே சமையல் அறைக்கு போறா. "இன்னிக்கு மைசூர் பாக் கிண்டிப் பார்ப்போம். சமையலோ சீக்கிரம் முடிஞ்சுடும். என்ன சொல்ற?" பெரியம்மா அம்மாவிடம் கேட்பது காதில் விழுந்தது. "இன்னும் அரை மணியுல இவாள்ளாம் பிசியாயிடுவா. நம்பள யாரும் புடுங்க மாட்டா. அப்போ ஸ்வீட் கிண்டலாம்." அம்மாவும் பெரியம்மாவும் சர்க்கரைப்பாகு எந்த பதத்துல இருக்கணும்னு வாதம் பண்ணறது கோடியாத்து வரைக்கும் கேட்டிருக்கும்.

"வாசல்ல தாழ்பா திறக்கற சத்தம் கேக்கறது. யாருன்னு பாருங்கோ." பெரியப்பா உள் அறையிலேர்ந்து சத்தம் போடறா. எட்டிப் பார்த்தேன். எதிர் ஆத்து மாமா வந்துண்டு இருந்தார். பூஜையை முடிச்சிண்டு அப்பா அப்போ தான் வெளியே வந்தார். "வாங்கோ கோபாலகிருஷ்ணன் சார். பூஜை இப்ப தான் முடிச்சேன். பிரசாதம் எடுத்துக்கோங்கோ." அப்பா தட்டை நீட்டினார். "ஒ இன்னிக்கி ஸ்பெஷல் பூஜையா? வெரி குட் வெரி குட். God is great. கடவுள் துணை நமக்கு இன்னிக்கு ரொம்ப வேணும் சார். இன்னும் இருபது நிமிஷம் தான் இருக்கு. சரியான நேரத்துல எங்காத்துல கரண்ட் போயிடுத்து. மாப்பிள்ளைகள் ரெண்டு பெரும் வேற இதுக்குன்னே இன்னிக்கு வந்திருக்கா." மாமா குரல் கவலையில் கனத்திருந்தது. "அதுக்கென்ன, எல்லாரையும் அழைச்சுண்டு இங்கே வந்துடுங்கோ." அப்பா சொல்ல கூடத்துல நுழைந்த பெரியப்பாவும் ஆமோதித்தார். "இதோ போய் எல்லோரையும் கூட்டிண்டு வந்துடறேன். ரொம்ப தேங்க்ஸ் சார்." மாமா வேக வேகமா சொல்லிட்டு கிளம்பினார்.

நாலு நாற்காலியையும் பின்னால் தள்ளி விட்டுட்டு கூடத்தில் மூணு பாயை தரையில் விரித்து போடும் போதே பக்கத்தாத்துலேந்து என் தோழி ஷோபனா வந்து சேர்ந்தாள். அடுத்த பத்து நிமிஷத்தில் அப்பா, பெரியப்பா, நான், என் அக்கா, தங்கை, ஷோபனா, எதிராத்து மாமா, ரெண்டு அக்காக்கள், அவங்க கணவர்கள், குழந்தைகள்னு கூடத்துல இருபது பேர் ஆஜரானோம். டீவியை ஆன் பண்ணிட்டு பெரியப்பா உட்கார்ந்தார். ரொம்ப டென்ஷனா இருந்தார். இந்தியா பாகிஸ்தான் கிரிகெட் மேட்ச் அப்படின்னாலே அப்பாவுக்கும், பெரியப்பாவுக்கும் டென்ஷன் தான்.

டாஸ் ல இந்தியா பேட் செய்ய வேண்டி வந்தது. கவாஸ்கர், ஸ்ரீகாந்த் தான் ஆரம்ப மட்டையாளர்கள். ஸ்ரீகாந்த் வழக்கம் போல பெவிலியன்லேந்து வரும் போது அண்ணாந்து சூரியனை பார்த்துண்டே மைதானத்துக்குளே வந்தார். சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன். அப்பா ஏதோ சுலோகம் முனுமுனுத்துண்டே பூஜை அறைக்குள் போவது தெரிந்தது. ஆட்டம் ஆரம்பிக்கரத்துக்குள்ள இப்படி டென்ஷன் படராறேன்னு நான் நினைக்கரச்சையே எதிர் ஆத்து மாமா "முருகனின் நாமத்தை சொல்லேண்டா; அந்த முகுந்தன் மருகனை வேண்டினேண்டா; சரவண பவனை கூப்பிடடா; அந்த கார்த்திகேயனை கேளேண்டா" அப்படின்னு பாட ஆரம்பிச்சார். பெரிய முருக பக்தர் அவர். சகலத்துக்கும் முருகனை கூப்பிடுவார்.

ஸ்ரீகாந்த் முதல் பந்தில் ஆறு அடித்து அமர்க்களமாக ஆரம்பிக்கிறார். எங்க எல்லோர் முகத்திலேயும் பரம சந்தோஷம். திடீர்னு எதிர் ஆத்து அத்திம்பேர் ஒரு கையளவு வெங்கடாசலபதி படத்தை பாக்கெட்டில் இருந்து எடுத்து டீவீயில் ஸ்ரீகாந்த் முன் காமிக்கிறார். பாகிஸ்தான் பௌலேர் படம் டீவியில் வந்தவுடன் சடக்குன்னு வெங்கடாச்சலபதி படத்தை மறைச்சுட்டார். ரொம்ப தீவிர கிரிகெட் பிரியர்னு புரிஞ்சிண்டேன். ஸ்ரீகாந்த் இரண்டாவது பந்தை சுழன்று அடித்து நாலு ரன்கள் குவித்தார். திரும்பிப் பார்த்தேன். பெரியப்பா துண்டால் நெத்தி வேர்வையை துடைக்கறது தெரிந்தது. அடுத்த பந்தை தட்டி விட்டுட்டு ஒரு ரன் ஓட பார்த்து ரன் அவுட் ஆகத் தெரிந்தார் ஸ்ரீகாந்த். நல்ல காலம் மயிரிழையில் தப்பித்தார். டென்ஷனில் முகம் சிவக்க எழுந்த பெரியப்பா தனக்கு தெரிந்த இரண்டு கெட்ட வார்த்தையால் ஸ்ரீகாந்தை திட்டியபடி வேக வேகமாக சமையல் அறைக்கு சென்றார். பரணில் இருந்து காலையில் இறக்கிய மட்டை தேங்காய் ரெண்டை எடுத்துண்டு கொல்லைபுரத்துக்கு சென்று வெறி வந்தது போல அரிவாளால் தேங்காய் உரிக்க ஆரம்பித்தார். சமையல் அறை ஜன்னல் வழியா பார்த்த அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் ரொம்ப சந்தோஷம். ராத்திரி அவியலுக்கு தேங்காய் இல்லைன்னு கவலையா இருந்தா. இந்த கிரிகெட் மேட்ச் முடியரதுக்குளே பத்து தேங்கயாவது நிச்சயம் உரிச்சிடுவான்னு சந்தோஷத்துல வேலையை கவனிக்க போனா. தேங்காய் உரிச்சு முடிச்சதும் கொஞ்சம் நிதானத்துக்கு வந்த பெரியப்பா மறுபடியும் கூடத்துக்கு சென்று உட்கார்ந்தார்.

-----------------------------------------------

அவ்ளோ தாங்க கதை. மட்டை தேங்காய் தெரபி புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன். இல்லைனா பரவாயில்லை விட்டுருங்க. அப்படி ஒண்ணும் தலை போற விஷயமில்லை.

PS: This post was originally published in the RTS blogpage in May 2009.