Thursday, July 29, 2010

வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை!

சமீபத்தில் நண்பர் ஒருவர் "வார இறுதியில் மலை ஏற போகிறோம், வரீங்களா" ன்னு எங்களையும் சேர்த்து சில குடும்பங்களை கேட்டிருந்தார். விடுமுறை கழிஞ்சு வந்த களைப்பா இருக்குன்னு சாக்கு சொல்லி நான் ஜாலியா படுத்து தூங்கிட்டேன். மிச்ச குடும்பங்களும் வேறு சில காரணங்களால் போகவில்லை.

நாங்க எல்லோரும் இப்படி கழுத்தறுத்த பின்னும் கூட மனம் தளராமல் சென்று மலை ஏறி வெற்றி வாகை சூடி வந்தாங்க இந்த நண்பர் குடும்பத்தார். இவர்கள் மலை மேல் ட்ரெக்கிங் செய்வதில் கால் தேர்ந்தவர்கள் (கை தேர்ந்தவர்கள்னு சொன்னா ஏதோ இலக்கண பிழை போல இடிக்கிறதே!). எங்க குடும்பத்தின் கோட்டாவையும் சேர்த்து இவங்க அவ்வப்போது ஏதாவது மலை அல்லது குன்றின் மேலே ஏறி கொடி நட்டு விட்டு வந்திடுவாங்க. (கொடி நடுவாங்கன்னு தான் நினைக்கிறேன். அவ்வளவு தூரம் கால் கடுக்க ஏறி கொடி நடாமல் திரும்பி வந்தால் என்ன பிரயோசனம்?) இந்த காலத்தில் நாற்காலி உருளைகிழங்காக (அதாங்க couch potato) உள்ள முக்கால்வாசி குடும்பங்களுக்கு நடுவில் இந்த குடும்பத்தின் 'outdoor activities' என்னை கவர்ந்த ஒன்று.

இதில் அதிசயம் என்னன்னா ஏற்கனவே ஒருதரம் எங்கள் குடும்பத்தோடு ட்ரெக்கிங் செய்த அனுபவம் இருந்தும் இந்த நண்பர் மறுபடி எங்களை கூப்பிட்டது தான். என்னை மலை ஏறக் கூப்பிடறதும் பூனையை மடியில் வைத்து கொண்டு சகுனம் பாக்கறதும் ஒண்ணு தான். ஏணியில் நாலு படி ஏறினாலே நான் அசந்து போய் ஸ்டூல் கொண்டு வரச்சொல்லி உட்கார்ந்து நீர்மோர் கேட்கற ரகம். போன மாசம் சென்னை போயிறந்தப்போ கூட நல்லி கடைக்குள்ள போய் சில்க் காட்டன் செக்ஷன்லேந்து தஸ்ஸர் சில்க் செக்ஷன் போறதுக்குள்ள காத்து போன பலூன் போல தொஞ்சு போய் ஒரு பன்னீர் சோடா குடிச்சுட்டு அரைமணி உட்காராமல் இனியொரு புடவை பாக்க மாட்டேன்னு என் தங்கை கிட்ட கண்டிப்பா சொல்லிட்டேன். அவளும் உடனே என்கிட்டே கண்டிப்பா சொல்லிட்டா - இனி ஒருதரம் நான் அவளை கடைக்கு போகலாம் வான்னு கூப்பிட்டால் உடனே நாட்டு எல்லையை தவழ்ந்தாவது கடந்து பாகிஸ்தானுக்கு குடிபோயிடுவாள்னு. அவளை சொல்லி குத்துமில்லைங்க பாவம். அதுக்கு கொஞ்சம் முன்னாடி தான் பாண்டிபஜார்ல ஒரு சின்னக் கடைக்கு என் துணிகளுக்கு மாட்சிங்கா வளையல் வாங்க போயிருந்தோம். என்னை விட எனக்காக அதிக சிரத்தையோடு எல்லாக்கலர் வளையலையும் எடுத்து காமிக்க சொல்லி என் தங்கை கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்த போது நான் குறுக்கிட்டு ரொம்ப முக்கியமா உட்கார ஒரு பெஞ்சும் குடிக்க ரெண்டு சோடாவும் கொண்டு வர சொல்லி கேட்டேன். கோவம் வருமா வராதா சொல்லுங்க? ஒரு வழியா இனி எங்கே கிளம்பினாலும் நாலு சோடா பாட்டிலும் மடக்குற நாற்காலியும் மறக்காமல் கொண்டு வருவேன்னு சத்தியம் பண்ணினப்புறம் தான் என் தங்கை கொஞ்சம் சமாதானம் ஆனாள்.

இதுக்கு முன்னாடி ஒருதரம் நாங்களும் இன்னும் சில நண்பர்கள் குடும்பங்களும் இதே நண்பரின் ஊக்குவித்தலில் ட்ரெக் செய்ய கிளம்பிச் சென்றோம். கையில் எலுமிச்சம்பழசாதம், புளியஞ்சாதம், தயிர் சாதம், ஊறுகாய், சிப்ஸ், பழவகைகள், ஜூச்வகைகள், சோடாவகைகள் எல்லாத்தையும் பாத்து பாத்து பாக் பண்ணிண்டு கிளம்பிப்போனோம் (பின்ன மலை ஏறிட்டு வந்தா பசிக்காதா? கண்ணு போடாதீங்க). போய் மலை அடிவாரத்தில் ஒரு பிக்னிக் ஏரியாவில் சாப்பாட்டு மூட்டையை இறக்கி விட்டு ஒரு கும்பலாக ஏற ஆரம்பித்தோம். முதல் கொஞ்சம் நேரம் கேலியும் சிரிப்புமா ஜாலியாக தான் இருந்தது. அப்புறம் தான் ஆரம்பிச்சது அவஸ்தையே. முதலில் குதி கால் வலிக்கற மாதிரி இருந்தது. கொஞ்ச நேரத்தில் பின்னங்காலும் பங்க்சர். அப்புறம் கீழ்கால் தசைகளில் தபலா அடிக்கும் எபெக்ட். குழந்தைகளால் புகழ்பெற்ற "Are we there yet?" கேள்வியை நான் திருடி கெஞ்ச ஆரம்பித்த போது எனக்கு கிடைத்த ஒரே பதில் "இதோ வந்துடும். ரொம்ப தூரம் இல்லை." மந்திரி குமாரி படத்தில் மாதுரி தேவிக்கு "வாராய் நீ வாராய்" பாட்டின் போது எப்படி இருந்திருக்கும்னு எனக்கு அப்போ நல்லா புரிஞ்சது. ஒரு பெரிய கதையை சுருக்கனும்னா கடைசி அரை மைல் இருக்கும் போது கடவுள் என் கதறலை கேட்டு தாங்க முடியாமல் ஒரு பெரிய பாறையை கண்ல காமிச்சார். அவ்வளவு தான். நானும் எங்கள் கும்பலில் இருந்த குழந்தைகளும் தாவி ஏறி அதில் உட்கார்ந்து இனி நடக்க மாட்டோம்னு உற்சாகமா மறியல் பண்ணினோம். வேறு வழியில்லாமல் மத்தவங்க எல்லோரும் மிச்ச தூரம் இறங்கி போய் காரை எடுத்துண்டு வந்து எங்களை கூட்டி கொண்டு போனாங்க.

என்னை மலை ஏற நீங்க கூப்பிடுவீங்களா?

Tuesday, July 20, 2010

அலிபாபாவுக்கும் அம்புஜம் மாமிக்கும் என்ன தொடர்பு?

அதிர்ச்சி அடையாமல் கேட்பீங்கன்னா உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லுவேன். எதுக்கும் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு உட்கார்ந்தே கேளுங்க. நீங்கள் கர்ப்பிணியாகவோ, இருதய நோய் உடையவராகவோ இருந்தால் இந்தப் பதிவை மேற்கொண்டு படிக்காமல் இருப்பது உங்களுக்கு நல்லது. ரெடியா? இதோ கேளுங்க.

நான் உல்லாச விடுமுறைப் பயணம் ஒன்றை முடித்து கொண்டு ஊர் வந்து சேர்ந்து ரெண்டு நாள் தான் ஆகியிருக்கும். ஜெட் லாக் என்று பேர் பண்ணி கொண்டு என் தோழிகளின் அருமையான நளபாகத்தை அனுபவித்து கொண்டிருந்த போது தான் அந்த போன் கால் வந்தது. வாரக்கடைசியில் நடக்கவிருக்கும் கோவிலுக்கு நிதி திரட்டும் நாட்டிய விழாவில் பங்கு கொள்ள முடியுமா என்று என்னை கேட்க ஊரில் நாட்டிய ஆசிரியையாக இருக்கும் என் தோழி தான் கூப்பிட்டாள்.

அச்சச்சோ! என்னங்க ஆச்சு? மூச்சு விட மறந்துட்டீங்களா? பரவாயில்லை ஆசுவாசப் படுத்திக்கோங்க. உங்களுக்கே இவ்வளவு அதிர்ச்சியாய் இருந்தால் எனக்கு எப்படி இருந்திருக்கும் சொல்லுங்க. பரதக்கலைக்கும் எனக்கும் அலிபாபாவுக்கும் அம்புஜம் மாமிக்கும் உள்ள அதே தொடர்பு தான். (சும்மா ர்ய்மிங்கா இருக்கட்டுமேன்னு சொன்னேங்க. வேற ஒண்ணும் இல்லை..ஹி ஹி). அதுவும் நடிகை ஊர்வசியின் தங்கையா அப்படீன்னு பலரால் கேட்கப்பட்ட எனக்கு பரத நாட்டிய மேடைக்கு அழைப்பா? மேடை தான் தாங்குமா? அதுவும் சமீபத்தில் தான் ஒரு சின்ன பூகம்பம் வந்து உலுக்கி விட்டு போன எங்க ஊருக்கு இப்படி ஒரு கெட்ட நேரமா? அப்படியே ஆடி போயிட்டேன்.

தொலைபேசியின் அந்தப்பக்கத்தில் இருந்து மூச்சு பேச்சு இல்லாமல் போகவே பதறிப் போன என் தோழி அவசரமாக விஷயத்தை சொன்னாள். மேடை ஏற சொல்லி கூப்பிட்டது நாட்டியமாட இல்லையாம். முருகன் தெய்வானை கல்யாணம் பற்றிய நாட்டியத்தில் கல்யாணத்துக்கு வரும் விருந்தினர் போல வந்து மணமக்களை பூப்போட்டு ஆசீர்வதிக்க வேண்டிய ஒரு சின்ன ரோல் தான், பயப்பட வேண்டாம்னு சொன்னாள். அப்பாடா.....கலெக்டர் ஆபீஸ் டைபிஸ்ட் வேகத்தில் அடித்து கொண்டிருந்த என் பல்ஸ் நிதானப்பட்டு மூச்சு சீராகி முகம் தெளிய முழுசா முப்பது நொடி ஆச்சு. விஷயம் சொல்லிவிட்டு போனை வைக்கும் முன் மாலை ரிஹர்ஸலுக்கு கட்டாயம் வந்துவிடும்படி சொன்னாள்.

ரிஹர்ஸலா? இந்த ஜுஜுபி ரோலுக்கா? எப்படி யோசிச்சாலும் நின்னு பூப்போடுவதில் சொதப்ப முடியும்னு எனக்கு தோணலை. நான் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு சூப்பர் பட்டு புடவை கட்டி ஜிலுஜிலுன்னு நகை போட்டு மேடை ஏறி கை நிறைய பூவெடுத்து தூவணும். அவ்வளவு தானே? இதுக்கு எதுக்கு ரிஹர்ஸல்? இப்படி நினைச்சு தான் கொஞ்சம் கொழுப்பும் மிச்சம் நமுட்டு சிரிப்புமா ரிஹர்ஸலுக்கு போனேன். என் ஆணவத்தை பாத்து கலியுக கிருஷ்ணன் கண் மறைவா நின்னு கை கொட்டி சிரித்திருப்பான் போல இருக்கு.

மேடை ஏறி நாலு தப்படி நடந்து சிரித்த முகத்தோடு எங்கே நிக்கணும்னு சொல்லி கொடுத்தாங்க. மேடை ஏறுவது வரை எல்லாம் சூப்பரா செய்தேன். பிறகு தான் எல்லாமே ரிப்பேர். பளிச்சுன்னு பத்து விளக்குக்கு அடியில் நின்னு சிரிக்கணும்னா எவ்வளவு கஷ்டம்னு தெரியணும்னா என்னை கேளுங்க, நான் சொல்லறேன். இஞ்சி தின்ன குரங்குன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா? கண்ணாடியில் பார்க்கா விட்டால் கூட என் முகம் அப்படித் தான் அப்போ இருந்திருக்கும்னு என்னால அடிச்சு சொல்ல முடியும். சரி அதை விடுங்க. நாலு தப்படி எடுத்து மேடைக்கு அந்தப் பக்கம் போகணுமே? நடக்க முடியாமல் பின்னி போயிருந்த கால்களோடு நின்றிருந்த எனக்கு அந்த சின்ன மேடை கிரிகெட் மைதானம் போல விரிஞ்சு தெரிஞ்சது. ஒருவழியா மேடைக்கு அந்தப்பக்கம் வந்தவுடன் அடுத்த பிரச்சனை பூப்போடும் வரை கைகளை என்ன செய்யறது? மொத்தத்துல அந்த அஞ்சு நிமிஷம் முடியறதுக்குள்ளே சொதப்பி தள்ளினேன். இதுல அக்கிரமம் என்னன்னா எனக்கு முன்னால் மேடையில் நடனம் ஆடிக்கொண்டு இருந்த பதினைந்து இருபது வயசு கலைஞர்கள் எல்லாம் நூறு பேர் முன்னாடி மேடையில் ஆடுவது என்னவோ அவர்கள் தினமும் செய்யும் டெக்ஸ்ட் மெசேஜிங் போல யதார்த்தமா, இயல்பா, அற்புதமா செய்தாங்க.

மேடை ஏறி பத்து பேர் முன்னாடி நின்று ஆடியோ, பாடியோ, நடித்தோ மக்களை மகிழ்விக்கும் perfoming artists அனைவருக்கும் என் தொப்பி தூக்கி வணங்கி (hats off ) விடைபெறுகிறேன்.

Saturday, July 17, 2010

அஹிம்சை முறையில் குழந்தை வளர்ப்பா?

சிலரோட பேச்சில் தேன் ஒழுகும் அப்படீன்னு சொல்லி கேட்டுருக்கேன். இரண்டு நாட்கள் முன்னாடி சன் டீவியில் ஒரு பெண்மணி குழந்தை வளர்ப்பு பற்றி அப்படித்தான் ரொம்ப அழகாக, இனிமையாக, தெளிவாக பேசினாங்க. குழந்தைகளை திட்டாமல், அடிக்காமல் அன்பாக பேசி நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டிய அவசியத்தை ரொம்ப வலியுறுத்தி சொன்னாங்க. இன்று பல அம்மாக்கள் கொத்தனார் சிமென்ட் பூசுவது போல் குழந்தைகளுக்கு சாதம் ஊட்டுவதை பார்த்தால் நாம் சாப்பிட்டதெல்லாம் வெளியே வந்து விடும் போல இருக்குன்னு வருத்தத்தோட சொன்னாங்க. இன்னும் குழந்தை வளர்ப்பு பற்றி ஆச்சரியத்தக்க விஷயங்கள் நிறைய சொன்னாங்க. இவங்களை மட்டும் நான் நேரில் பார்த்தால் சாஷ்டாங்கமா காலில் விழுந்திடுவேன். அஹிம்சை முறையில் குழந்தை வளர்ப்பா? இது நடக்க கூடிய ஒரு விஷயம் தானா? நினைத்தால் எட்டாக்கனி போல் ஏக்கமாக இருக்கு எனக்கு.

தினமும் இருபத்து நாலு மணி நேரத்தில் எப்படியாவது ஒரு எட்டு மணி நேரமாவது என் குழந்தைகளைத் திட்டாமல் இருக்க நான் முயற்சி செய்வேன். ஏதோ கடவுள் புண்ணியத்தில் இரவு எட்டு மணி நேரம் அவங்க தூங்கரதாலே இது முடியறது. மீதியுள்ள நேரமெல்லாம் வாளும், அம்பும் இல்லாத போர்களம் போல் அமர்க்களப்படும் எங்கள் வீடு. பீஷ்மரும், துரோணரும் மறுபிறவி எடுத்து வந்தால் கலியுக குருக்ஷேத்ரம்னு எங்க வீட்டு வாசல்லதான் தேரோட வந்து நிப்பாங்க. பள்ளி நாட்களில் காலையில் குழந்தைகளை எழுப்பி தயாராக சொல்லி கழிவறைக்குள் தள்ளி விட்டு சமையலறைக்குள் நான் வந்த பத்தாவது நிமிடம் சங்கு ஊதாமலே போர் தொடங்கி விடும் எங்க வீட்டில்.

"மணி ஆறு அம்பது. Breakfast ready. சீக்கிரம் வாடா கண்ணம்மா கீழே."

"-----------------------------"

"ஏழு பத்து. பல் தேச்சாச்சா இல்லியா? நான் வரட்டா மாடிக்கு?"

"--------------------------------"

"ஏழு பன்னண்டு. மாச மசன்னு என்னடீ பண்ணிண்டு இருக்க அங்க? "

"இன்னிக்கு Spirit wear டே அம்மா. என் ஸ்பெஷல் ஷர்ட் எங்கே?"

"எதுக்கு இவ்வளவு சீக்கிரமா கேக்கற? இன்னும் அரை மணி கழுச்சு கேக்கறது தானே? கழுதை. நேத்து ராத்திரி என்ன பண்ணின இத பாத்து எடுத்து வச்சுக்காம?"

"----------------------------------"

"வாயில் என்ன கொழுக்கட்டையா? பதில் சொல்லேண்டி."

இப்படியாக பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கும் ஒரு சாதாரண நாள் இரவு நாங்கள் படுக்கும் முன் என்னை ராட்சசியாக ஆக்கி விட்டு தான் முடியும். பொறுமையை மட்டும் கவர்மென்ட் ரேஷனில் கொடுத்தால் முதல் நாளே போய் படுத்து க்யூவில் இடம் பிடித்து ஒரு பத்து கிலோ அதிகமா வாங்கிடுவேன் நான். எங்க வீட்டில் அரியதொரு பண்டம் அது தான். சிரித்த படியே குழந்தைகளை கண்டிக்கும் முறை அறிந்த தாய்மார்கள் போர்ட் மாட்டி கிளாஸ் எடுக்க ஆரம்பித்தால் ரெஜிஸ்டர் பண்ண நான் தயார். ஆனால் நரசிம்ம அவதாரம் போல் காட்சி கொடுத்து பழகிய நான் பழக்கமில்லாமல் சிரித்து அன்பா பேசினால் என் குழந்தைங்க திடுக்கிட்டு போய் என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்தாலும் சேர்த்துடுவாங்க. இந்த அஹிம்சா முறை குழந்தை வளர்ப்பை படிப்படியா தான் செயல் முறைல காட்டணும்னு நினைக்கிறேன்.

உங்கள் வீட்டில் குழந்தை வளர்ப்பு எப்படீ? அஹிம்சை முறையா? மீனா முறையா? சும்மா சொல்லுங்க.

----------

ஜூலை 2009 RTS ப்ளாக் தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை.

Tuesday, July 13, 2010

கண்டு பிடிச்சேன், கண்டு பிடிச்சேன்!

காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவுப்பு இந்த விளம்பரத்திற்கு பின் தொடரும்.

"அம்மா...இன்னிக்கு டின்னருக்கு என்ன? இட்டிலியா? வேண்டாம். தோசையா? வேண்டவே வேண்டாம். பீட்சா எக்ஸ்ப்ரெஸ்ஸில் பீட்சா வாங்கலாமா? தேங்க்ஸ் அம்மா. நீ தான் என் செல்ல அம்மா."

இட்டிலி தோசையெல்லாம் அந்தக் காலம். பீட்சா எக்ஸ்ப்ரெஸ் பீட்சா வாங்கி கொடுங்கள். நல்ல அம்மா என்று பெயர் எடுங்கள்.
-----

காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவிப்பு.

வணக்கம். இன்றைய காணாமல் போனவர் அறிக்கையில் முதலிடம் பெறுவது எளிமையில் பொலிவுடன் ஜொலித்த அழகுச் சென்னை. இந்நகர் தொலைந்து போய் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. காணாமல் போன இந்நகரை கண்டு பிடிக்க உதவும் சில முக்கிய அடையாள அம்சங்கள் - தெருவில் பல்பத்தில் கோடு கிழித்து பாண்டி விளையாடும் குழந்தைகள், பாவடை சட்டை அணிந்து இரட்டை பின்னலுடன் பள்ளி செல்லும் இளம் பெண் குழந்தைகள், செல் போனில் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோருக்கும் எஸ்.எம்.எஸ் செய்து சுற்றியுள்ள உலகத்தை மறக்காத நகர் மக்கள், இடிக்காமல் நடக்க இடமில்லாத ஊரில் அடுக்கடுக்காக கட்டடங்கள் கட்டி 'ஷாப்பிங் மால்' என்று நெரிசலை அதிகரிக்காத கடைகள், பாஸ்ட் புட் அல்லது காபி அரங்கங்களை விடுத்து தெருவோர கல்வெட்டில் கூடி அரட்டை அடிக்கும் கல்லூரி மாணவர்கள். இந்நகரைக் கண்டு பிடித்து கொடுப்பவர்க்கு 'காணாமல் போனவர் நிதியில்' இருந்து தகுந்த சன்மானம் வழங்கப்படும். இந்த காணாமல் போன நப(க)ரைப் பற்றிய விவரம் தெரிந்தால் நீங்கள் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண் 555-5555.

----

ட்ரிங் ட்ரிங்......ஹலோ, யாரு பேசறது? மீனா சங்கரனா? ஆமாம் காணாமல் போனவர் தகவல் சொல்ல வேண்டிய தொலைபேசி எண் இது தான். சொல்லுங்க. என்னது, காணாமல் போன சென்னையை கண்டு பிடிச்சுட்டீங்களா? ஒரு நிமிஷம் லைன்ல இருங்க. (தொலைபேசியின் வாயை மூடி கொண்டு சுற்றியுள்ளவர்களிடம் பரபரப்புடன் "யாரோ மீனா சங்கரனாம்....தொலைஞ்சு போன சென்னையை கண்டு பிடிச்சுட்டாராம்." சக ஊழியர் "முதலில் எல்லா விவரங்களையும் லைன் கட்டாகரத்துக்கு முன்னாடி வாங்கு. அப்புறம் சந்தோஷப்படலாம்."

"மேடம், சொல்லுங்க. எங்க பாத்தீங்க சென்னையை? மைலாப்பூர் கபாலீச்வரர் கோவில் தெப்பக்குளம் பக்கத்திலா? நீங்க பார்த்த அடையாளங்களைச் சொல்லுங்க....நான் எழுதிக்கறேன்.

சந்நிதி தெருவுல நடக்கவே இடமில்லாமல் நிரம்பி இருந்த தெருவோரக் கடைகள்ள பூஜை சாமான்கள், அர்ச்சனைக்கு தேங்காய், மண் பானைகள், பச்சை காய்கறிகள், மல்கோவா மாம்பழம், முல்லை, மல்லி, சாமந்தி பூக்கள் எல்லாம் விற்பனைக்கு பரத்தி வச்சிருக்கும் போது , இதுக்கு நடுவுல பூந்து எப்படியோ நாலு கார்கள், ரெண்டு சக்கர வண்டிகள், எட்டு ஆட்டோ எல்லாம் போட்டி போட்டுண்டு இடிச்சுண்டு போறதை பார்த்தீங்களா?

அப்புறம்? திருவெல்லிக்கேணி வீடுகள் மாதிரி இரும்புக் கம்பி வெச்ச ஜன்னல்கள் கொண்ட பழங்கால வீடுகள் அங்கே இருந்ததா? அதில் பல வீடுகளில் வாசல் திண்ணைகளில் அம்மாக்கள் உட்கார்ந்து அவங்க வீட்டு பெண் குழந்தைகளுக்கு எண்ணை வச்சு இழுத்து வாரி மணக்கும் பூச்சரங்களை வெக்கரதைப் பார்த்தீங்களா. வெரி குட், வெரி குட்.

வடக்கு, தெற்கு மாட வீதிகளில் பல கடைகளில் சீசன் இல்லாத போது கூட கொலு பொம்மை வச்சு விக்கறாங்களா? பெப்சியும், கோக்கும் குடிச்சு அலுத்து போன உங்களுக்கு அருமையான கரும்பு ஜூஸ் கிடைச்சுதா? பேஷ், பேஷ். சொல்லுங்க மேடம். எப்படி, எப்படி? எங்கு தேடியும் கண்டு பிடிக்க முடியாத செருப்பு தையல்காரரை அங்கு பார்த்தீங்களா? கிரி ட்ரேடிங் கடைக்குள் நுழையும் போதே தசாங்கம் வாசனை மூக்கை துளைக்கிறதா? கோவில் பக்கத்தில் வீட்டில் செய்யறது போல வெல்லக் கொழுக்கட்டையும், உப்புக் கொழுக்கட்டையும் வாங்கி சாப்டீங்களா?

மேடம், தொலைஞ்சு போன சென்னையை கண்டு பிடிச்சு விவரம் சொன்னதுக்கு உங்களுக்கு ரொம்ப நன்றி. சன்மானம் விவரத்துக்கு இன்னொரு நாள் கால் பண்ணுங்க.(!!!!!?????)

------------------------

போன வருஷம் 2009 கோடை விடுமுறைக்கு இந்தியா சென்ற போது, அங்கிருந்து எழுதி ஜூலை மாதம் RTS ப்ளாக் தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை.

Tuesday, July 6, 2010

பாம்பு செவியா? எனக்கா?

எனக்கு பாம்பு செவின்னு நேத்து பேச்சு வாக்குல யாரோ சொன்னா. அதாவது அந்த அளவு துல்லியமா எனக்கு காது கேட்கிறதாம். மனசுக்குள்ளே நான் சிரிச்சுண்டேன். ஒரு இருபது வருஷத்துக்கு முன் என் காது அடிச்ச கூத்து இவங்களுக்கு எப்படி தெரியும்? இல்லை இல்லை. சரியா சொல்லணும்னா என் காதை வச்சுண்டு என் அம்மாவும், ஒரு காது மூக்கு தொண்டை வைத்தியரும் அடிச்ச கூத்துன்னு சொல்லணும். எனக்கு காது சரியா கேக்கும்னு நம்பிக்கை போய் வீட்டுல எல்லோரும் Charades விளையாட்டு ஆடி சைகை செய்ய பழக ஆரம்பிச்சுட்டாங்கன்னா பாருங்களேன். சுருக்கமா சொல்லணும்னா.......அனாவசியமா எதுக்கு சுருக்கணும்? அப்புறம் பதிவை நான் எப்படி ஜவ்வாட்டம் இழுக்கறது? முழுசாவே சொல்லறேன். கேளுங்க.

----------------------------------------------

பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரும் போதே எனக்கு முணுமுணுன்னு ஒரே காது வலி அன்னிக்கு. பையை வீசி விட்டு நேரா அம்மாகிட்ட போய் சொன்னேன். அம்மியில் ஏதோ துவையல் அரைச்சிண்டு இருந்த அம்மா நொடியில் டாக்டரா மாறி "மார்கழி மாச குளுரில் ஜில்லுனு தண்ணியில் காலங்கார்த்தால தலைக்கு குளிக்காதேன்னு நான் சொன்னா யார் கேக்கறா? அதான் சளி பிடிச்சு காது வலிக்கறது" அப்படீன்னு பளிச்சுன்னு டியாக்னோசிஸ் கொடுத்தா. "அதெல்லாம் இல்லைம்மா. காதுக்குள்ள ஒரு கட்டி இருக்குன்னு நினைக்கிறேன்" ன்னு நான் சொன்னேனோ இல்லையோ அம்மா மட மடன்னு வீட்டுக்குள்ளே போய் டார்ச் எடுத்துண்டு வந்தா .

இதை டார்சுன்னு சொல்லறதை விட பீமனோட கதைன்னு சொன்னா பொருத்தமா இருக்கும். அத்தனை பெருசா இருக்கும். இந்த டார்ச் கூடிய சீக்கிரத்தில் மைகல் ஜாக்சனை விட பிரபலமாக போகுதுன்னு எங்களுக்கு அப்போ தெரியலை. சொர்கலோகத்து கதவு திறந்தால் என்ன மாதிரி ஒளி வரும்னு எங்க வீட்டு டார்ச் லைட் அடிச்சு பார்த்தா உங்களுக்கு புரிஞ்சுடும். டார்ச்சை என் காதுக்குள் அடித்து பார்த்த அம்மா அதிர்ந்து போனாள். "என்னடி இது, பிள்ளையார் சதுர்த்தி வெல்ல கொழுக்கட்டை சைசுக்கு இருக்கு இந்த கட்டி" அப்படீன்னு கவலையில் ஆழ்ந்தாள். இதை தொடர்ந்து நாலு நாட்கள் மஞ்சளும், உப்பும் அரைத்து கை வைத்தியம் செய்து பார்த்து தோற்ற அம்மா இனி டாக்டரை தான் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

எங்க குடும்ப வைத்தியரை பத்தி தான் உங்களுக்கெல்லாம் தெரியுமே. விடிகாலை சூரியன் உதிக்கும் முன் அவர் க்ளினிக்குக்குள்ளே போய் டென்ட் கட்டி கயித்து கட்டில் போட்டு படுக்க தயாரா இருந்தா தான் அங்கே போகணும். அதுக்கு நேரமோ பொறுமையோ இல்லாமல் நானும் என் அம்மாவும் நாலு தெரு தள்ளி புதுசா திறந்திருந்த ஒரு காது, மூக்கு, தொண்டை வைத்தியரிடம் போக தீர்மானித்தோம். "கோடியாத்து மாமி நேத்தி என் கிட்ட சொன்னா...இந்த டாக்டர் ரொம்ப படிச்சவராம். அதுவும் காதை பத்தி மட்டுமே ரெண்டு வருஷம் தனியா படிச்சிருக்காராம். நிச்சயம் சரி பண்ணிடுவார்." அம்மாவின் மனசு நிறைய நம்பிக்கையோடு என் காது நிறைய கட்டியோடு நாங்க இந்த டாக்டரிடம் நேரம் குறித்து கொண்டு ஒரு வழியாக செக்கப்புக்கு போனோம்.

என் அம்மாவை பத்தி ஒரு விஷயம் இங்கே சொல்லணும். கொடுக்குற காசு வீணாகாம டாக்டர்கிட்ட நிறைய கேள்வி கேட்பா. நிறைய விஷயம் சொல்லுவா. இந்த காது டாக்டர் முன் போய் உட்கார்ந்ததும் அம்மா பேச்சை துவங்கினாள். "வணக்கம் டாக்டர். என் பொண்ணுக்கு நாலு நாளா காதுல கட்டி. புதன்கிழமை அன்னிக்கு ஆரம்பிச்சது. அன்னிக்கி கார்த்தால ரசம் சாதம் சாப்டுட்டு போனா ஸ்கூலுக்கு. கொஞ்சம் மாம்பழம் நறுக்கி கொடுத்தேன். அதனால சூடு ஜாஸ்தியாகி இந்த கட்டி வந்ததோன்னு சந்தேகமா இருக்கு. எனக்கு வீட்டுல கொஞ்சம் வேலை ஜாஸ்தி டாக்டர். இவள் காதை நன்னா செக் பண்ணி உள்ளுக்கு சாப்பிட நாலு மாத்திரையும், வெளியே தடவ ஒரு களிம்பும் எழுதி குடுத்திடுங்கோ. அடிக்கடி வந்துட்டு போறது கொஞ்சம் சிரமம். ஆனா பாவம் குழந்தைக்கு அடிக்கடி வயிற்று வலி வரும். அதனால பாத்து நல்ல மாத்திரையா எழுதுங்கோ." அம்மா மூச்செடுத்து மறுபடி ஆரம்பிக்கறதுக்குள்ளே டாக்டர் புகுந்தார். "முதல்ல செக் பண்ணலாம் அம்மா. அப்புறம் எப்படி ட்ரீட் பண்ணனும்னு நான் சொல்லறேன்." என்னை பக்கத்து நாற்காலியில் உக்கார சொல்லி வாயை திறந்து நாக்கை நீட்ட சொன்னார். அவ்வளவு தீவிரமா அவர் என் வாய்க்குள்ளே டார்ச் அடித்து பார்ப்பதை பார்த்தால் கோகுல கிருஷ்ணன் வாய்க்குள் தெரிந்த உலகம் என் வாய்க்குள்ளேயும் தெரியுதோன்னு எனக்கு பயங்கர சந்தேகம். அப்படியே திறந்த வாக்கில் உறைஞ்சு போயிடுமோன்னு பயந்திருந்த என் வாயை ஒரு வழியா மூடிய போது, டாக்டர் டார்ச்சை மூக்கின் பக்கம் திருப்பினார். மூக்கை செக் செய்து விட்டு மருந்து சீட்டு எழுதி அம்மா கையில் கொடுத்தார். "இந்த மாத்திரையை வாங்கி சாப்பிட்டுட்டு பத்து நாளைக்கப்புறம் வாங்க" ன்னு சொல்லி எங்களை அனுப்பி வச்சுட்டார். வெளியே வந்த நாங்க குழம்பி போய் நின்னோம். கிளினிக் வாசலில் இருந்த பெரிய போர்டை மறுபடி படித்து பார்த்தால் "காது" டாக்டர்னு தான் போட்டிருந்தது. ஹ்ம்ம்...காதை தவிர மத்ததை தானே இவர் செக் பண்ணினார்? நிஜமாவே பெரிய டாக்டர் தான் போல இருக்கு. கட்டியை பாக்காமலே மாத்திரை குடுத்துட்டாரே?

அடுத்த பத்து நாளும் வீடு ஒரே சர்க்கஸ் தான். மாத்திரை சாப்பிட்டு எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் காது கட்டி சௌபாக்யமா இருந்தது. ஒரு நாளைக்கு நாலு தரம் அம்மா என் காதுக்குள் டார்ச் லைட் அடித்து பார்த்து புலம்புவா. அதோட நிக்காமல் வாசல் கதவை திறந்து உள்ளே வரும் ஒருவரையும் விட்டு வைக்காமல் கூப்பிட்டு "கொஞ்சம் இப்படி வாங்கோளேன். எங்க மீனா காதுல கட்டி. பெரிய காது டாக்டரிடம் காமிச்சும் ஒண்ணும் சரியா போற மாதிரி இல்லை. இதோ டார்ச். மீனாவை கூப்பிடறேன். நீங்க கொஞ்சம் செக் பண்ணுங்கோ, சரியா? மீனா.....இங்க வந்து உன் காதை கொஞ்சம் காமிம்மா." என்னவோ பெருமையா ரிப்போர்ட் கார்ட் கொண்டு வந்து காமின்னு சொல்லரா மாதிரி அம்மா என்னை கூப்பிடுவா. ஒரு நாள் எங்க தெரு கீரைக்காரி கஷ்டப்பட்டு தலையில் இருந்த கூடையை இறக்கி வச்சுட்டு என் காதை டார்ச் அடிச்சு பார்த்து விட்டு தனக்கு தெரிந்த நாலு கை வைத்தியத்தை சொல்லிட்டு போனாள். வாசக்கதவு பக்கமா டார்ச் வைக்க ஸ்பெஷல் தட்டு ஒண்ணு கட்டலாமான்னு கூட வீட்டில் பேச்சு நடந்தது. ஒரு வாரம் அம்மா கூப்பிடவுடன் வந்து டார்ச் வெளிச்சத்தில் காதை காமித்து பழகி போய் அப்புறம் நானே வாசக்கதவு திறக்குற சத்தம் கேட்டால் டக்குனு போய் டார்ச் எடுத்துண்டு நின்னுடுவேன்னா பாருங்களேன்.

ஒரு வழியா பத்து நாள் மாத்திரை சாப்பிட்டு முடித்து விட்டு கட்டியில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் காது டாக்டரிடன் மறுபடியும் போனோம். இந்த முறை அவரிடம் காதை எப்படியாவது காட்டி விடணும் அப்படீங்கற தீர்மானத்தோடு போனோம். போய் நாற்காலியில் உட்காரும் போதே திரும்பி காது அவர் கண்ணுக்கு தெரியும் படி உட்கார்ந்தேன். இப்ப அவராலே எப்படி மிஸ் பண்ண முடியும்? ஆனால் அவர் "நேரா உட்கார்ந்து வாயை திறந்து நாக்கை நீட்டும்மா" ன்னாரு. வேறு வழியில்லாமல் அவர் சொன்ன படி உட்கார்ந்தால் பழைய படி தொண்டையையும், மூக்கையும் செக் செய்து விட்டு ஏதோ எழுத ஆரம்பிச்சார். நொந்து போய் "டாக்டர், எனக்கு கட்டி காதுல" ன்னு மெதுவா சொன்னேன். "ம்ம் தெரியும்மா. இந்த மாத்திரையை ஒரு அஞ்சு நாள் சாப்பிட்டுட்டு வா. கட்டி கரயலைனா கீறி எடுத்துடலாம்." என்னவோ மைசூர் பாகை கீறல் போடற மாதிரின்னாவது சொல்லறார். அங்கே நாங்க எடுத்த ஓட்டம் எங்க குடும்ப வைத்தியர் கிளினிக் வாசல்ல தான் நின்னுது. என் காது கூத்தை கேட்டு சிரிச்சுண்டே ஒரு களிம்பு எழுதி கொடுத்த எங்க வைத்தியர் "உனக்கு காசு ரொம்ப இருந்தா போய் அட்மிட் ஆகி ஆபரேஷன் எல்லாம் பண்ணிக்கோ. இல்லைன்னா இதை தடவிப்பாரு" அப்படீன்னாரு. ரெண்டே நாளுல கட்டி இருந்த இடம் தெரியாமல் போயிடுத்து. டார்ச்சை நல்லா துடைச்சு உள்ளே வச்சோம். அதுக்கும் தான் பாவம் ஓய்வு வேண்டாமா?

Friday, July 2, 2010

வைத்தியரே! என்னைய வச்சு காமடி கீமடி பண்ணிறாதீங்க ஐயா

கீழே காணப்படும் பதிவு போன வருஷம் கோடைகால விடுமுறைக்கு நான் இந்தியா போன போது அங்கிருந்து எழுதி RTS ப்ளாக் தளத்தில் வெளியிட்டது.

----------------------------

இரண்டு வாரங்களுக்கு முன்பு சூளுரைத்து நான் எடுத்த சபதத்தில் ஓரளவு வெற்றி கண்டேன். அது என்ன ஓரளவு வெற்றின்னு யோசனை பண்ணறவங்களுக்கு இதோ என் விளக்கம். விளக்கம் சொல்லரத்துக்கு முன் ஒரு விஷயம். இது ஒரு நகைச்சுவை பதிவுன்னு நினைச்சு படிக்க வந்திருந்தீங்கன்னா என்னை மன்னிச்சுக்கங்க. இது ஒரு சோக கதை. இதே ஒரு சினிமாவா இருந்தா வயலின்ல சோககீதம் வாசிச்சு உங்க மனசை பிழிஞ்சிருப்பாங்க. ஏதோ என்னால முடிஞ்சது ஒரு விளக்கம் தான்.

பத்து நாட்களுக்கு முன்பு நான் ஒரு சபதம் எடுத்தேன். விமானம் ஏறி இந்தியா சென்ற ரெண்டு நாளுக்குள் சரவண பவன் போய் சாம்பார் வடை சாப்பிடாமல் எந்த ஒரு நகைக்கடைக்கும் செல்ல மாட்டேன் அப்படீன்னு. என் சபதத்தை முதலில் படிச்சிட்டு ஒரு தோழி வெளியூரிலிருந்து தொலைபேசியில் அழைத்து கேட்டாள். அது என்ன நகைக்கடை? அழகா பாஞ்சாலி சபதம் மாதிரி விரித்த கூந்தலை முடிய மாட்டேன்னு கம்பீரமா சபதம் எடுக்க கூடாதான்னு. அவளுக்கென்ன தெரியும்? இந்தியாவுல வேர்க்கும் அப்படீன்னு ரெண்டு நாள் முன்னாடி தான் தலைமுடி வெட்டிண்டு வந்தேன். இருந்தா முடிய மாட்டேனா? வெச்சுண்டா வஞ்சகம் பண்ணறேன்? சரி அது போகட்டும். சொன்னபடியே இந்தியா வந்த மறுநாள் சரவண பவனுக்கு போனேன். என் பல நாள் கனவான சாம்பார் வடையை ஜொள்ளோழுக சாப்பிட்டேன். இது வரையில் என் சபதம் வெற்றி தான். அப்புறம் தான் ஆரம்பிச்சது என் தொல்லைகள்.

என் கனவு நனவான மறுநாள் காலையில் இருந்து வயிற்று வலி, வாந்தி, சுரம் போன்ற பல உடல் உபாதையில் சுருண்டு போன நான் சுமார் காலை ஒன்பது மணிக்கு என் தங்கையின் உதவியோடு எங்கள் குடும்ப வைத்தியரை தேடித் போனேன். திருப்பதி வெங்கடாசலபதியை கூட சுலபமாக பார்த்து விடலாம். எங்க வைத்தியரை தரிசிப்பதற்கு ஜாதகத்தில் குரு பலம் கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். என் போறாத நேரம், என் ஜாதகத்தில் குரு மட்டும் இல்லை சனி, கேது, ராகு எல்லோருமே அன்னிக்கு குப்புற படுத்து தூங்கி விட்டார்கள் போல இருக்கு. சுமார் ஒன்பதரை மணிக்கு கிளினிக் உள்ளே போய் நாங்கள் எடுத்த டோக்கன் எண் 45. கம்பவுண்டரிடம் விசாரித்ததில் அதுவரை 30 டோக்கன்களை தான் கூப்பிட்டிருக்காங்கன்னு தெரிய வந்தது.

இந்த கிளினிக் பற்றி சில விஷயங்களை இங்கே நான் உங்களுக்கு சொல்லியாகணும். இந்த கிளினிக்கில் பல அறைகள் உண்டு. வைத்தியரை பார்க்கும் அறை. ஊசி போடும் அறை. மருந்து வாங்கும் அறை என்று பல அறைகள். ஒவ்வொரு முறையும் வைத்தியரின் அறைக்கதவை திறந்து கம்பவுண்டர் 3 டோக்கன் எண்களை தான் கூப்பிடுவார். உடனே சுமார் முப்பது பேர் அடித்து பிடித்து கொண்டு சொர்க்க வாசலுக்குள் செல்வார்கள். மூணு எண்ணுக்கு எப்படி முப்பது பேர் போக முடுயும்னு நான் பல முறை யோசனைப் பண்ணி விடை தெரியாமல் பின்பு நமக்கு தான் கணக்கு சரியா வரலைன்னு விட்டிருக்கேன். இந்த முப்பது பேரையும் எங்க வைத்தியர் ஆற அமர செக் செய்து மருந்து சீட்டு எழுதி கொடுத்து ஊசி போடும் அறைக்குள் அனுப்புவார். அங்கு ஒரு முக்கால் மணி தவம் கிடந்த பின்பு தான் அவர் வந்து ஊசி போடுவார். பிறகு மருந்து அறைக்குள் க்யூவில் நின்று மருந்து வாங்கி கொண்டு வீடு செல்ல வேண்டும். ஒரு அறையிலிருந்து அடுத்த அறை சென்று காத்திருக்கும் போதே பலருக்கு உடம்பு குணமாகி வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள் என்று கேள்வி. பின்னேஇவரை ராசியான வைத்தியர்னு சும்மாவா சொல்லறாங்க?

என் விஷயத்துக்கு வருவோம். நாப்பத்தைந்தாவது டோக்கனை வைத்து கொண்டு மலையூர் மம்முட்டியான் ஸ்டைல்ல ஒரு போர்வையை போத்திக் கொண்டு நான் சுருண்டு போய் ஒரு ஓரமாய் உட்கார்ந்து கம்பவுண்டர் எங்கள் எண்ணை கூப்பிட காத்திருக்க ஆரம்பித்த போது சுமார் மணி ஒன்பதரை. சோர்வில் கண்ணை மூடி மறுபடி கண் திறக்கையில் மணி ஒன்று. பக்கத்தில் இருந்த தங்கையிடம் விசாரித்தால் 30 எண்ணுக்கப்பரம் இன்னும் வேறு டோக்கன் எண்களை கூப்பிடவே இல்லைன்னு தெரிஞ்சது. அதுக்கு மேல் பொறுமையோ தெம்போ இல்லாமல் நாங்க கிளினிக்கை விட்டு வெளியே வந்தோம்.

ஸ்டெதஸ்கோப் மாட்டிண்டு ஒரு குச்சி நடந்து வந்தா கூட அது கால்ல விழ தயாரா இருந்த எங்க கண்ணுக்கு வேறு ஒரு ஆஸ்பத்திரி தென்பட்டது. உள்ளே போய் விசாரிச்சா ரெண்டே நிமிஷத்தில் வைத்தியர் அறைக்குள் கூட்டி கொண்டு போனார்கள். நிமிர்ந்து என்னை பார்த்த வைத்தியர் டக்குனு சொன்னார் "அதுக்கென்ன அட்மிட் பண்ணிடலாம்" அப்படீன்னு. அசந்தே போனேன் நான். இவரென்ன தீர்கதரிசியா? நாங்க இன்னும் என்ன வியாதின்னே சொல்லலை. அவர் இன்னும் என் நாடி கூட பார்க்கலை. அதுக்குள்ள அட்மிஷனா? அரை நொடியில் வீல் சேர் வந்தது. நாலு நர்ஸ் வந்து என்னை அறைக்கு அழைத்து கொண்டு வந்து படுக்க வைத்து விட்டு போனார்கள். அவங்க போறச்சே 'பல்ஸ்பலவீனமா இருக்கு' அப்படீன்னு சொன்ன மாதிரி இருந்தது. சுத்தி முத்தி பார்த்தா தங்கையை வேற காணலை. திடுக்கிட்டு போனேன். என்ன செய்யறது? சரி நம்ம குடும்ப பாட்டை பாடுவோம், (இது போல அவசர நிலைக்கு தயாரா நாங்க நாலு குடும்ப பாட்டு எப்பவும் வச்சிருக்கோம்) தங்கை எங்க இருந்தாலும் சலோ மோஷன்ல ஓடி வந்திடுவான்னு வாயை திறந்தா தேவர் மகன் படத்துல வந்த ரேவதி சொன்ன மாதிரி காத்து தானுங்க வந்தது. நல்ல காலம் என் தங்கை ஏதோ கையெழுத்து போட்டுட்டு அப்ப தான் வந்தா.

அடுத்த ஐந்து நிமிஷங்கள் ஒரே கலவரம். கண்ணில் பட்ட நர்செல்லாம் கையில் ஒரு ஊசியோடு வந்து குத்தி விட்டு போனார்கள். பல முறை குத்தி பார்த்து ஊசி நல்லா வேலை செய்யறதுன்னு தீர்மானம் பண்ணின பிறகு ஒரு வழியா ஐ. வீ. ஊசியை குத்தி மருந்து மற்றும் க்ளுகோஸ் தண்ணீர் எல்லாம் ஏத்த ஆரம்பிச்சாங்க. எனக்கு பயங்கர சந்தேகம். இவங்கல்லாம் நமக்கு குத்தி பார்த்து தான் ட்ரைனிங் எடுத்துக்கராங்களோ அப்படீன்னு. கையுல ஊசியோட திரியரவங்களை அனாவசியமா பகைச்சுக்க கூடாதுன்னு வாய் திறக்காமல் படுத்திருந்தேன். குத்தி களைச்சு போய் நர்சுங்கல்லாம் ஓய்வெடுக்க போனதும் வைத்தியர் வந்து "ஏம்மா நீ வெளிநாட்டுலேந்து வந்திருக்கியா? உனக்கு பன்னி ஜுரம் இருக்குதா?" அப்படீன்னு கேட்டார். கண்டிப்பா இல்லைன்னு அடிச்சு சொன்னேன். உடனே நம்பி சரின்னு சொல்லிட்டு போய் சில நிமிஷங்கள்ல திரும்பி வந்து "ஏம்மா நீ வேணும்னா ரெண்டு நாள் இங்க தங்கிகிட்டு ஓய்வா இருந்துட்டு போயேன்" அப்படீன்னாரு. இது என்ன ஐந்து நட்சத்திர ஹோட்டலா? சொகுசா தங்கிட்டு போக. "அதெல்லாம் வேணாம் டாக்டர். நாலு மாத்திரை எழுதி குடுங்க. நான் வீட்டை பார்த்து போறேன்" தீர்மானமா சொல்லிட்டேன். ரொம்ப ஏமாத்தமா திரும்பி போனார் அவர். "இவர் எதுக்கு இப்படி வருந்தி வருந்தி நம்மளை இங்க தங்க சொல்லறார்? நம்மள வச்சு ஏதாச்சும் காமடி கீமடி செய்ய போறாரோ" அப்படீன்னு நான் கவலையோடு அறையில் கண்களை சுழல விட்ட போது தான் விஷயமே புரிஞ்சுது. அது ஒரு புத்தம் புதிய ஆஸ்பத்திரி. திரும்பின எல்லா இடத்திலும் ஒரு பளபளப்பு. நான் தான் முதல் கிராக்கி போல இருக்கு. அதான் பார்த்த உடனே கோழி மாதிரி அமுக்கி படுக்க போட்டுட்டாங்க. எது எப்படியோ வைத்தியர் நல்லவர். மாத்திரை எழுதி கொடுத்து ஒரு ஆறு மணி நேரத்தில் என்னை டிஸ்சார்ஜ் செய்து விட்டார். அங்கே உள்ளே நுழைந்ததை விட அதிக தெம்போடு வெளியே வந்து காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன்.

---------------------------------------

அவ்வளவு தாங்க என் சோக கதை. கண்ணை துடைச்சுகிட்டு போய் ஆக வேண்டிய வேலையே கவனியுங்க.