Showing posts with label மிக்சர். Show all posts
Showing posts with label மிக்சர். Show all posts

Sunday, October 22, 2023

சவாலே சமாளி! {நவராத்திரி நினைவுகள் 2023}

நானும் பல வருடமாக கண்ணில் படும் கணினி நிபுணர்களை எல்லாம் கெஞ்சிப் பார்த்து சலித்து விட்டேன்.  பகல் இரவு அப்படீன்னு பாரபட்சம் பார்க்காமல் எந்நேரமும் கணினியோடு குடுத்தனம் பண்ணும் சக இந்தியர்களில் ஒருவர் கூட  என் வேண்டுகோளை காதில் வாங்காமல் போனது வருந்தத் தக்க விஷயம்.  இந்த உலகத்தில் இரக்கம், தயை, பச்சாதாபம் எல்லாம், தலிபான் ஆட்சியில் பெண் சுதந்திரம் போல் கடத்தப்பட்டது எப்போது?  நவராத்திரி சீசனில் இரிச்மண்டு நகரில் பெண்கள் படும் பாட்டை பார்த்து இனி அந்த கொலுவில் இருக்கும் கடவுளே மனமிரங்கி வந்து ஒரு app ஐ எழுதினால் தான் எங்களுக்கு விடிவு வரும் போல இருக்கு. 

நாங்கள் பெண்கள்.  பெரும் ஆற்றல் மிக்கவர்கள் தான்.  ஒத்துக்கறேன்.  வாழ்க்கை எங்கள் பக்கமாக  விட்டெறியும் எந்த பந்தையும் அஞ்சாமல் நேர்கொண்டு அசராமல் சிக்ஸர் அடிக்கும்  மன உறுதி கொண்டவர்கள் தான்.  இல்லைன்னு சொல்லலை.  இருந்தாலும் நவராத்திரி சீசனில் வந்து எங்கள் முன் குவியும் சவால்களில் நாங்கள் ஆடிப்போவது என்னவோ மறுக்க முடியாத ஒரு உண்மை.

அப்படி என்ன மீனா உங்களுக்கு பெரிய சவால்கள் னு நீங்க கேட்பீங்கன்னு தெரிஞ்சு தான் நான் ரெடியா list போட்டு கொண்டு வந்திருக்கேன்.  மேலே படிங்க.

சவால் #1:  

வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே போகும் கொலு அழைப்புகள்.  Evite, whatsapp, text, email அப்படீன்னு பல திசைகளிலிருந்து வந்து குவியும் இந்த அன்பான அழைப்புகளை வர வர சமாளிக்கவே முடியலை.  யார் யார் என்னென்னிக்கு கொலுவுக்கு கூப்பிட்டு இருக்காங்க?  சுதா வீட்டில் செவ்வாய் கிழமை கூப்பிட்டால் சுதாவின் தெரு முனையில் இருக்கும் கீதாவும் அன்னிக்கே கூப்பிட கூடாதா?  அவங்க தெரு ரொம்ப அழகா தான் இருக்கு.  நான் மறுக்கலை. ஆனால் அதுக்குன்னு பெட்ரோல் விக்கற விலைக்கு ஒரே  தெருவுக்கு எத்தனை முறை வண்டியை விட முடியும், சொல்லுங்க?  

இன்னொரு  ரொம்ப முக்கியமான புள்ளி விவரம் இதோ.  எத்தனை மணிக்கு பிறகு அவரவர் கொலுவுக்கு கூப்பிட்டு இருக்காங்க?  ஏன்னா அந்த வீட்டம்மா சுண்டலை தாளிப்பதற்கு முன்னாடி நம்ம போய்  நின்னா நல்லா இருக்காது பாருங்க. அப்புறம் ஒன்பது நாட்கள் தானே நவராத்திரி விழா?  சராசரியாக ஒரு வீடு  மூணு  மணி நேரம் அவங்க கொலுக்கதவை திறக்கையில், optimal ரூட் மேப் இல்லாமல் எப்படிங்க  ஐம்பதுக்கும் மேலே உள்ள கொலு வீடுகளுக்கு போக முடியும்?  விறு விறுன்னு நடந்து பாருங்களேன்னு விவரமில்லாமல் நீங்கள் சொன்னீங்கன்னா அடுத்த கொலுவில் உங்களுக்கு சுண்டல் cut.

சவால் #2:

கடந்த சில வருடங்களாக நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் எந்த நிறத்தில் புடவை கட்டணும்னு யாரோ ரூம் போட்டு யோசிச்சு பட்டியல் போட்டு வாட்ஸாப்பில் சகட்டு மேனிக்கு பரப்பி விடறாங்க.  தப்பில்லை.  ஒரு விதமா உதவி தான்.  ஏன்னா என்ன புடவை உடுத்தணும்னு நாம மண்டையை உடைத்து கொள்ள வேண்டாம் பாருங்க.  பின்ன என்னதுக்கு இப்படி புலம்பணும்னு நீங்க கேக்கறீங்க.  நியாயமான கேள்வி.  

என்னோட குறை இது தான்.  பட்டியல் போடறவங்க சும்மா நீலம், பச்சை, சிவப்பு அப்படீன்னு சொன்னா பத்தாதா?  மயில் பச்சை, ராயல் நீலம், காஷ்மீர் மிளகாய் சிவப்பு., கூவம் நதி கருப்பு.....இப்படி எல்லாம்  நுணுக்கமா பட்டியல் போடுவது அவசியமா?  ஒரு நாள் கிளம்பும் அவசரத்தில்  (ராயல் ப்ளூ தேதியில்) நான் ஒரு பிங்க் கலர் புடவையில் ஏதோ ஒரு ப்ளூ பார்டர் புடவை கட்டி கொண்டு போனேன்.  அவ்வளவு தான்.  அன்னிக்கு ஊர் மக்கள் என்னை அவங்க மூக்கு கண்ணாடியை கீழே தள்ளி பார்த்த பார்வையில் ரொம்ப shame shame ஆ போச்சு.   இந்த சோதனை எங்களுக்கு தேவையா?

சவால் #3:

நம்ப பாரம்பரியத்துக்கு ஒரு குறையில்லாமல் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் கொண்டு வரும் ஆப்பிளும் ஆரஞ்சு பழ மூட்டைகளும் தான் எங்களோட அடுத்த சவால்.  ஒவ்வொரு வருஷமும் இந்த ஒன்பது நாளும் அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளில் ஒரு பழம் கூட விட்டு வைக்காமல் நம்மூர் பெண்கள் வழித்து கொண்டு போவதாக ஊரில் பேச்சு.  நானே எங்க வீட்டு கொலுவுக்கு வரவங்களுக்கு கொடுக்க  போன வாரம் 200 பழங்கள் வாங்கினேன்னா பாருங்களேன்.  வீட்டுக்கு வந்தவங்களுக்கு தாம்பூலத்தில் ஆளுக்கு ரெண்டு பழம் வைத்து கொடுத்து ஒரு வழியா எங்க வீட்டு பழ மலையை மடுவாக மாத்தி விட்டு நிமிர்ந்தால், வந்தவங்க அன்போடு எங்கள் கொலுவுக்கு கொண்டு வந்து குமித்திருந்த ஆப்பிளும் ஆரஞ்சும் வாழைப்பழமும் என்னை பார்த்து கெக்கலி கொட்டிச்சு.  எவ்வளவு தான் நாங்களும்  ஜூஸ் பண்ணி குடிக்க முடியும், சொல்லுங்க?  ஆப்பிள் ரசம், ஆப்பிள் தொக்கு, ஆப்பிள் ஜேம், வாழைப்பழ அப்பம், வாழைப்பழ பிரெட்......இதுக்கு மேல என்ன பண்ண முடியும்?  வேறே சமையல் குறிப்பு தெரிஞ்சா சொல்லுங்களேன் ப்ளீஸ். 

சவால் #4:

"மீனா, எங்க கொலுவில் இந்த வருடம் எந்த பொம்மை புதுசுன்னு சொல்லுங்க பார்க்கலாம்?"  - இப்படி அதிரடியாக கிளம்பும் திடீர் தேர்வுகள். ஆவலோடு என் முகத்தை பார்த்து இந்த கேள்வியை கேட்கும் இரிச்மண்டு  பெண்களை பார்த்தால் எனக்கு என்னவோ பாவமாக  தான் இருக்கும்.  இந்த மாதிரி தேர்வில் என்னிக்குமே நான் பாசானதாக சரித்திரம் இல்லை.  எனக்கு மட்டும்  சொல்லணும்னு ஆசை இருக்காதா?  ஆனால் பாருங்க, எங்க வீட்டு கொலுவில் என்ன பொம்மை  இருக்குன்னு எனக்கே கொஞ்சம் சுமாரா தான் நியாபகம் இருக்கும் போது, போன வருடம் உங்க வீட்டில் ஒரு ஐந்து நிமிஷம் நான் பார்த்த பொம்மை எனக்கு நினைவிருக்கும்னு நீங்க எப்படி எதிர்பார்க்கறீங்க?  இதுக்காக எல்லாம் கோவிச்சுக்கிட்டு என்னை போல மறதி உள்ளவங்களுக்கு சுண்டல் தராம மட்டும் இருந்தீங்கன்னா அது ரொம்ப தப்பு.  தேங்காய் மாங்காய் போட்ட அமர்க்களமான சுண்டல் இல்லை அப்படீன்னாலும் பரவாயில்லை. ஒரு சுமார் சுண்டலையாவது ஆறுதல் பரிசாக கொடுத்துடுங்க, சரியா?  

என் நவராத்திரி சவால் பட்டியல் இன்னும் ரொம்பவே நீளம்.  அதனால் இன்னிக்கு இதோடு நிறுத்திக் கொண்டு,  ஊரெல்லாம் சுண்டல் மணம் கமழும் இந்த நவராத்திரி சீசனில்  அனைவருக்கும் என் நவராத்திரி வாழ்த்துக்கள் சொல்லி விடை பெறுகிறேன். 

-மீனா சங்கரன் 

Tuesday, December 19, 2017

கச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3

இந்த வாரக்கடைசியில் இந்தியாவை விட்டு கிளம்பணும். அதுக்குள்ள நிறைய கச்சேரிகளையும் , காண்டீன்களையும்  பார்த்திடணும்னு  சபதம் எடுத்து தினமும் ரெண்டு அல்லது மூணு கச்சேரி சபாக்களுக்கு  விடாமல் படை எடுக்கிறேன்.

Ola டாக்சி கம்பெனி ஆளுங்க காந்தி சிலைக்கு பக்கத்துல எனக்கும் சிலை எழுப்ப ஏற்பாடு பண்ணறாங்கன்னு ஒரு வதந்தி இருக்கு. இந்த ரெண்டு வாரத்தில், கொண்டு வந்த அந்நிய செலாவணில முக்காலுக்கும் மேல நான் ஓலா டாக்சிக்கு கொடுத்தேங்கறது உண்மை தான். அதுக்காக காந்திக்கு சமமா எனக்கு சிலை எழுப்பரதெல்லாம் அதிகமா படறது.  ஏதோ மனசுல பட்டதை சொல்லறேன். அப்புறம் அவங்க இஷ்டம்.

சென்னைல மக்கள் தொகை பெருக்கத்தை கண் கூடா பார்க்கணும்னா சாயந்திரம் நாலு மணிக்கு மேல ஏதாவது ஒரு கச்சேரிக்கு கிளம்பி வந்தா போதும். தெருவுக்கு தெரு ஒரு கச்சேரி இருந்தாலும் சாயந்திரம் நடக்கும் எல்லா கச்சேரிகளிலும் கும்பல் அலை மோதுவது ஆச்சர்யம் தான். 

நாலு நாள் முன்னாடி அபிஷேக் ரகுராம் அவர்களின் கச்சேரிக்கு போயிருந்தேன்.  இடம் கிடைக்காதோன்னு ரெண்டு மணி நேரம் முன்னாடியே போய் இடம் பிடிச்சது நல்லதா போச்சு. சீக்கிரமா போய் இடம் பிடிக்கற நல்ல பழக்கத்தை சின்ன வயசுல என் அப்பா கிட்ட தான் கத்துண்டேன்.  ராத்திரி எட்டு மணி ரயிலுக்கு காலை பத்து மணிக்கே ஸ்டேஷன் போய் உக்காந்து ப்லாட்போர்ம் பெருக்கி துடைப்பதை கண் கொட்டாம ஆசையா பார்க்கற குடும்பம் எங்களது தான்.

அபிஷேக்கோட கச்சேரிக்கு சீக்கிரம் போனது நல்லதா போச்சு. முதல்ல உட்காரும் சேரெல்லாம் காலி. அப்புறம் நடை பாதைல ஒரு இன்ச் இடத்தை கூட வேஸ்ட் பண்ணாம  மக்கள் உட்கார்ந்தாங்க. வேற வழி தெரியாம சபா ஆட்கள் ஒரு பெரிய ஜமக்காளத்தை மேடைக்கு கீழ விரிக்க ரெண்டு நிமிஷத்துல அதுவும் கூட full ஆகவே அடுத்து மக்கள் பாய்ஞ்சது மேடைக்கு ஏறும் படிக்கட் மேல தான். அபிஷேக் சாரோட  மடி மட்டும் தான் பாக்கி இருக்குன்னு ஆனதும் தான் கதவை ஒரு வழியா பூட்டினாங்க. ஸ்பைடர் மேன் மாதிரி சுவத்துல ஒட்டிக்க கூடிய திறமை மட்டும் மனிதனுக்கு இருந்திருந்தா இன்னும் நூறு பேராவது குறைஞ்சது அந்த அருமையான கச்சேரியை ரசிச்சிருக்கலாமேன்னு என்னால நினைக்காம இருக்க முடியலை.

நிறைய சபாக்களில் காலை 9 மணியிலேர்ந்தே கச்சேரிகள் ஆரம்பம். வெளிநாட்டிலேர்ந்து வரும்  நிறைய இளம் பாடகர்கள் இந்த நேரத்துல  தான் பாடறாங்க. ரொம்ப  அருமையா பாடற இந்த இளம் வித்வான்களின் திறமையை கேட்க நிறைய கும்பல் இல்லாதது வருத்தமா தான் இருக்கு. பகல் உணவை முடிச்சப்புறம் ரெண்டு மணி நேரம் தூங்கி எழுந்து காபி குடிக்கற நேரமா தான் மக்கள் சபா கான்டீனை பார்த்து போறாங்கன்னு என்னோட அனுமானம். அவங்களை சொல்லியும் குத்தமில்லை. காப்பின்னா அது கான்டீன் காப்பி தான். ரொம்பவே சூப்பர். 

இப்பல்லாம் அடிக்கடி எனக்கு கனவுல குழிப்பணியாரமும்,  கீரை வடையுமா  வருது.  எப்பவாவது தான் வாழைப்பூ வடையும் வாழைக்காய் பஜ்ஜியும் வரும்.  எது வந்தாலும் வராட்டாலும் ஒவ்வொரு கனவிலும் கரெக்ட்டா ஆஜராவது சபா கேன்டீன் காப்பி தான்.  வாரக்கடைசியில் ஊருக்கு போன பிறகு என் குடும்பத்தினருக்கு அடுத்து நான் ரொம்ப மிஸ் பண்ணுவது இந்த கான்டீன் காப்பியா தான் இருக்கும்னு நினைக்கிறேன்.

பாட்டை தலை ஆட்டி ரசிக்கறச்சே பேசாம கண்ணை மூடிக்கறது தான் நமக்கு நல்லது என்பதை இந்த இரண்டு வார அனுபவம் எனக்கு கற்று கொடுத்திருக்கு. இல்லைன்னா அடுத்த நாற்காலியில் உட்கார்ந்திருப்பவர் நம்ம கிட்ட ராகம் பேரை கேட்க வாய்ப்பிருக்கு.  ஏதோ பத்துல நாலு ராகம் தட்டு தடுமாறி சொல்லிடுவேன்.  மிச்சது multiple choice ல ஜம்முனு விட்டுடுவேன். ராகம் தெரிஞ்சா மட்டும் தான் கண்ணை திறந்து வச்சுக்கறது.  ராகம் புரியலைனா கண் மூடி த்யானத்துல ஆழ்ந்திடுவேன்.  அனாவசியமா நம்மை யாரும் அப்போ தானே கேள்வி கேட்க மாட்டா. வாழ்க்கை நமக்கு எத்தனையோ பாடங்களை கத்து கொடுக்கிறது. அதுல இது ரொம்ப முக்கியமான ஒண்ணு அப்படிங்கறது என்னோட அபிப்ராயம். 

ரெண்டு வாரமா என்னை தொடர்ந்து வந்து என் கூட கச்சேரி அனுபவங்களை பகிர்ந்து கொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி கூறி இந்த கச்சேரி கலாட்டா தொடரை இத்துடன் முடித்து கொண்டு விடை பெறுகிறேன்.

- மீனா சங்கரன்
வர்ஜீனியா, அமேரிக்கா

Tuesday, August 24, 2010

ஊத்தப்பமும் ஊத்தெடுக்கும் சமூக உணர்வும்!

சென்னையில் ஒரு பத்து பெண்கள் பொது இடத்தில் கூடும் போது இப்படி பேசித்தான் நீங்க கேட்டிருப்பீங்க - "போத்தீஸ்ல இப்போ ஆடி தள்ளுபடி நடக்குதாம். நீ போக போறியா?", "தங்க மாளிகையில் இந்த வாரம் ஆர்டர் குடுத்தால் கூலி சேதாரமே கிடையாதாம். டீவியில் ஒன்பது மணி செய்தி வாசிக்கற பத்மஜா போட்டுக்கற மாதிரி கழுத்தை ஒட்டி மாங்காய் மாலை இன்னிக்கு போய் ஆர்டர் பண்ண போறேன். நீயும் வரியா?" மற்றும் "நேத்தி கோலங்கள் சீரியல் பாத்தியா? இப்படி கூட ஒரு அநியாயம் நடக்குமா? பாவம் இந்த அபியும் தொல்காப்பியனும்". இதெல்லாம் சகஜமா கோவில், கல்யாணம் போன்ற பொது இடங்களில் நம்ம காதில் விழும் சுவாரசியமான பேச்சுகள்.

எங்க ஊர் ரிச்மணட் தமிழ் பெண்கள் எங்கேயாவது கூடினால் பேச்சு கொஞ்சம் வித்யாசமாக போகும். "புளியோதரை நாலு கப்பா அஞ்சு கப்பா?", "கேசரியா சர்க்கரை பொங்கலா?", "பத்து பவுண்ட் வெங்காயம் வெட்ட முடியுமா இல்லேன்னா ஆறு கட்டு கொத்தமல்லி நறுக்க முடியுமா?" இந்த ரேஞ்சுல தான் எல்லோரும் பேசுவாங்க. என்னடா எல்லாமே சாப்பாட்டு விஷயமா இருக்கேன்னு யோசனை பண்ணறீங்களா? சாப்பாடு தான் எங்களுக்கு ரெண்டாவது மதம். சர்டிபிகேட் இல்லாத சமையல் கலை வல்லுனர்களான எங்க ஊர் பெண்கள் சமூக உணர்வு அதிகம் உள்ளவங்க. வீட்டில் சமைப்பாங்களோ மாட்டாங்களோ, சமூக நிகழ்ச்சிகளுக்கு அசராமல் அண்டா அண்டாவா சமைப்பாங்க. கோவிலில் சஷ்டியா? பெருமாளுக்கு கல்யாணமா? தோழியின் பெண்ணோட அரங்கேற்றமா? எடு பேப்பரையும் பென்சிலையும். விறுவிறுன்னு மெனு போடுவதும், போன் மேல் போன் போட்டு ஆட்கள் திரட்டி இரு நூறு அல்லது முன்னூறு பேருக்கு சமைப்பதும் எங்க ஊர் பெண்களுக்கு காலை காப்பி கலப்பது போல அல்வா வேலை. இவர்களின் இந்த திறமையை எப்படி மிஞ்சுவதுன்னு அடுத்த ஊர்க்காரங்க ரூம் போட்டு யோசிப்பதா கேள்விப்பட்டேன்.

உதாரணத்துக்கு இந்த வாரக்கடைசியில் எங்க ஊரில் புதிதாக கட்டப்பட்டு வரும் இந்து கோவிலுக்கு நிதி திரட்டும் ஒரு பெரிய நிகழ்ச்சி நடக்க இருக்கு. கல்யாண சத்திரம் போல் உள்ள பெரிய ஹாலில் பல குட்டி கடைகள் போட்டு இட்டிலியிலிருந்து கச்சோரி வரைக்கும் சுட சுட உணவு வகைகளை பரப்பி, ஜொள்ளு விட்டுக் கொண்டு வரும் அமெரிக்கர்களுக்கு விற்று (கோவிலுக்கு நிதி திரட்டி) இந்திய கலாசாரத்தை பறைசாற்றும் இது கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு புகழ் பெற்ற நிகழ்ச்சி. இதில் நம்ம தமிழ் மக்கள் நடத்தப்போகும் கடை ஊத்தப்பம்/குழிப்பணியாரம்/இட்டிலி கடை.

கடந்த பத்து நாட்களாகவே இதுக்கு ரெடியாக எங்கூர் பெண்கள் மும்முரமா வேலை செஞ்சுட்டு வராங்க. ரெண்டு நாள் முன்னாடி பால் வாங்க கடைக்கு போனேன். காய்கறி செக்ஷன் பக்கம் நாலு பெண்கள் நிற்பதும் அதில் ஒரு பெண் பேசுவதும் காதுல விழுந்தது. "நீ காரட், நான் குடைமிளகாய், ரமா வெங்காயம், உமா கொத்தமல்லி. எல்லோரும் ரெண்டு மூட்டை வாங்கிட்டு போய் வெட்ட ஆரம்பிக்கலாம். ஊத்தப்பம் பூத்துக்கு டான்னு பதினொரு மணிக்கெல்லாம் வந்திருங்க." மாங்கு மாங்குன்னு கை வலிக்க காய் வெட்டி, கால் கடுக்க ஊத்தப்பம் ஊத்திட்டு இதே பெண்கள் வீட்ல கணவருக்கும், குழந்தைகளுக்கும் Taco Bell லில் சாப்பாடு வாங்கி கொடுத்துடுவாங்க. எப்பேர்ப்பட்ட ஒரு தியாகம்! என்ன ஒரு சமூக உணர்வு!

எங்க ஊருக்கு வர்றதா இருந்தீங்கன்னா இதெல்லாம் கேட்டு பயந்து போய் டிக்கெட்டை ரத்து செஞ்சுராதீங்க. சமூக சேவை மாதிரியே விருந்தோம்பலிலும் எங்க பெண்களை மிஞ்சவே ஆள் கிடையாது. உதாரணத்துக்கு புதுசா ஊருக்கு ஒரு தமிழ் குடும்பம் வந்திருப்பது தெரிஞ்சால் எங்க வரவேற்ப்பு குழு உடனே போய் அவங்களை பார்த்து பேசி வரவேற்று அப்படியே சில பல முக்கிய விஷயங்களை தெரிந்து கொண்டு வருவாங்க. அந்த வீட்டு பெண்ணிடம் எத்தனை பெரிய குக்கர் இருக்கு, மூணு தோசையாவது வார்க்க கூடிய மாதிரி பெரிய தோசைக்கல் இருக்கா, ஒரு எழுபத்தைந்து பேருக்காவது சாம்பார் வைக்க தோதான பாத்திரம் இருக்கா - இது போல அத்தியாவசியமான விஷயங்களை தெரிந்து கொண்டு, இதெல்லாம் இருந்தால் மிகப் பெரிய வரவேற்ப்பு கொடுத்து விட்டு வருவாங்க. இப்ப சொல்லுங்க. எப்ப வரீங்க எங்க ஊருக்கு?

நீங்க புதுசா கல்யாணம் ஆனவரா? உங்க மனைவி செய்யும் சமையல் அவங்க அளவுக்கு அம்சமா இல்லையா? வெங்காய சாம்பாரும், கத்தரிக்காய் ரசவாங்கியும் கனவா போச்சேன்னு கவலைப்படரீங்களா? டேக் இட் ஈசி. எங்க ஊருக்கு டிக்கெட் வாங்கி அனுப்பி வையுங்க. ஒரே மாசம் தான். கல்யாண சமையலுக்கே கான்ட்ராக்ட் எடுக்க தயாராகிடுவாங்க உங்க மனைவி.

தூக்கத்தில் கூட இல்லாத கரண்டியை பிடித்து ஐந்நூறு மைசூர்பாக் கிண்டும் ரிச்மணட் தமிழ் பெண்களின் தன்னலமற்ற சமூக உணர்வு நாலு பேருக்கு சொல்லப்பட வேண்டிய ஒரு விஷயம்னு நினைச்சு தான் உங்க கிட்ட சொன்னேன். சரி தானே?

-----
ps: This was published in the RTS blogpage in October 2009.