Saturday, September 25, 2010

கூப்பர்டினோவில் குஞ்சம்மா - நாலாவது பாகம்

வருடம்: 2060
நாடு: அமெரிக்கா
இடம்: கலிபோர்னியா மாநகரத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரின் சர்வதேச விமான தளம். பயணிகள் களைப்பாறும் தனி அறை.)

{முழங்கால் வரை தூக்கி கட்டியிருந்த பச்சையில் சிகப்பு கோடு போட்ட சின்னாளம்பட்டு புடவையில் ரெண்டு ஜப்பானிய சூமோ விளையாட்டு வீரர்கள் கால் நீட்டி உட்காரக்கூடிய அளவு பெரிய வட்ட சோபாவின் நடுவில் குஞ்சம்மா சப்பணம் போட்டு உட்கார்ந்திருக்கிறாள். அறைக்குள் 'குஞ்சம்மா, உனக்கு காப்பி போட தெரியுமாம்மா?' என்று கேள்வியுடன் வேகமாக நுழைந்த செந்திலின் பின்னால் மைதிலி ஓட்டமும் நடையுமாக வருகிறாள்.}

குஞ்சம்மா: யோவ், இன்னாத்துக்கு இந்த ஓட்டம் ஓடற? காந்தி தாத்தான்னு நெனப்பா ஒன் மனசுல? ஒங்க ஊட்டம்மா பாவம்யா. மலை மேலேந்து உருட்டி விட்ட கல்லாட்டமா எப்படி உருண்டுகிட்டு வருது பாரு. யக்கா, இப்படி குந்து நீ மொதல்ல.

மைதிலி: (மூச்சிரைக்க கையால் நெஞ்சை நீவி விட்டபடி) குந்தறேம்மா குந்தறேன்.

செந்தில்: அது ஒண்ணும் இல்லை குஞ்சம்மா. எனக்கு ரெண்டு வேளை காப்பி சாப்பிடலைனா உடம்பும் மூளையும் லேசா மரத்து போயிடும். இவ கிட்ட நாளை காப்பிக்கு இன்னிக்கே ஆர்டர் பண்ணியாகணும். அதான் உனக்கு காப்பி போட தெரியுமான்னு கேக்க ஓடி வரேன்.

குஞ்சம்மா: காப்பியா? அந்த கண்ணராவியயா நீங்கல்லாம் குடிக்கிறீங்க? அதுக்கு ஒரு கப்பு எலி மருந்த குடிச்சுட்டு போய் கட்டய நீட்டுங்களேன்.

செந்தில் மற்றும் மைதிலி: (அதிர்ச்சியோடு) என்னது?

குஞ்சம்மா: பின்ன காப்பீல இன்னாயா சத்திருக்கு? ஊர்ல என் தங்கச்சி குப்பம்மா இப்படி தான் காப்பி காப்பின்னு அலைஞ்சிகிட்டு குடிக்கும். இன்னா ஆச்சு? ஒரு நாள் சோர்வு சாஸ்தியாயி மயக்கம் போட்டு விழுந்திருச்சு. ஊட்டாண்ட இருக்கிற ஒரு நர்சம்மா வந்து பாத்து காப்பி குடிச்சு குடிச்சு குப்பு ஒடம்புல ரத்தத்துக்கு பதில கழனி தண்ணி தான் ஓடுதுன்னு சொல்லிட்டு போயிருச்சு.

மைதிலி: அய்யய்யோ அப்புறம்?

குஞ்சம்மா: அப்புறம் இன்னா, காப்பிய கடாசிட்டு நாங்க குடும்பத்தோட பாதாம்கீர்ல எறங்கிட்டோம். ஆனா எனக்கு இந்த பவுடர் பாதாம் பாலெல்லாம் தொண்டை குழிககுள்ள எறங்காதுக்கா. காலைல நல்லா ஒரு பிடி பாதாம் பருப்ப ஊற வச்சு, அரைச்சு, சூடா ஒரு தம்ளர் பால்ல கரைச்சி குடிக்கணும். இல்லைனாக்க ஒரு வேலை ஓடாது. நல்லா லண்டன் பாதாமா வாங்கி வச்சிருக்கா எனக்கு. அமரிக்கா ஆப்பரிக்கா பாதாம்லாம் சொத்தை. என் ஒடம்புக்கு ஆவாது.

மைதிலி: அதுக்கென்ன வாங்கிட்டா போறது குஞ்சம்மா.

செந்தில்: நாங்களாவது காப்பி குடிக்கலாமா குஞ்சம்மா? இல்ல உனக்கு அதுவும் ஒத்துக்காதா?

குஞ்சம்மா: தோ பாருயா. நெருப்பு சுடும்னு தான் சொல்ல முடியும். இல்ல குளுருது, நான் தீக்குளிச்சு தான் தீருவேன்னு நீ அடம் பிச்சா நா இன்னா செய்ய முடியும், சொல்லு? நீயே போட்டு குடிப்பென்னா அந்த கண்ணராவிய தாராளமா குடிச்சுக்க.

மைதிலி: குப்புவுக்கு என்ன ஆச்சுன்னு கேட்டீங்கல்ல? இனிமே வீட்டுல யாருக்கும் காப்பி கிடையாது. நம்மளும் பாதாம்கீரே குடிக்கலாம்.......................... அய்யய்யோ ஏன் கால் செருப்பை கழட்டறீங்க?

செந்தில்: சும்மா உள்ள சங்கை ஊதி கெடுத்தானாம்னு கூட்ஸ் வண்டி வேகத்துல வந்தாலும் காப்பின்னு ஒண்ணு வந்திட்டுருந்ததை நானே அநியாயமா கெடுத்துண்டேனே, அதை மெச்சிக்க என் மூளையைநானே நாலு சாத்து சாத்திக்கலாம்னு பாக்கறேன்.

மைதிலி: ஏர்போர்ட்ல வந்து அச்சுபிச்சுன்னு ஏதாவது பண்ணாதீங்க.

குஞ்சம்மா: அக்கா, அண்ணே ஏதோ சொல்லிட்டு போவட்டும், விட்டிரு. ஒன் பாதாம்கீர் சூப்பரா இருந்திச்சுக்கா. அதான் தேர்வுக்கு கூட்டியார சொன்னேன். ஒரு நாலஞ்சு முக்கியமான விஷயத்த பேசிட்டோம்னா ஊட்டுக்கு கிளம்பிரலாம். எது இருக்கோ இல்லையோ, மொதல்ல எனக்கு ஒரு laptop குடுத்துருங்க என்ன? MAC இருந்திச்சுனா ரொம்ப நல்லது. இல்லேனா அதுக்குன்னு டென்சன் ஆவாதீங்க. PC வச்சிக்கிட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன். இன்டர்நெட் ஸ்பீட் மட்டும் ஒரு 120 mbps இருக்கணும். தெனமும் Facebook ல தங்கச்சி குப்பு, என் ஆயா செல்லாயி, சித்தி மவளோட ஓரவத்தி ராசாத்தி எல்லாரையும் பாக்கறேன்னு சொல்லியிருக்கேன். அதனால காலையில நான் வேலைக்கு வர கொஞ்சம் லேட்டாவும். நாஷ்டா சாப்பிடாம எனக்காக குந்தியினு இருக்காதீங்க. நான் தப்பால்லாம் நெனைக்க மாட்டேன், சரியா? பாதாம் பால் பண்ணி ஒரு லோட்டாவுலஎனக்கு விட்டு வச்சிட்டு ஒங்க ஜோலியை பாத்துக்குனு போய்கினேயிருங்க. பால் சூடா இல்லேன்னா நோ டென்சன். நா வந்து சுட பண்ணிக்குவேன்.

செந்தில்: பாத்தியா மைதிலி? எவ்வளோ நல்ல மனசு குஞ்சம்மாவுக்குன்னு. அவளே சுட பண்ணிப்பாளாம்! உன் பிரார்த்தனைக்கு முருகன் செவி சாய்ச்சுட்டான் பாரு. குஞ்சம்மா இருக்கறப்போ இனிமே என்ன கவலை உனக்கு?

-தொடரும்

Friday, September 17, 2010

கூப்பர்டினோவில் குஞ்சம்மா - மூன்றாவது பாகம்

வருடம்: 2060
நாடு: அமெரிக்கா
இடம்: கலிபோர்னியா மாநகரத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரின் சர்வதேச விமான தளம்.

{வரவேற்ப்பு அறையின் நடுவில் மைதிலி, செந்தில் தம்பதியினர் அமெரிக்காவுக்கு வீட்டு வேலை செய்ய வந்திருக்கும் ஆட்களுக்கு முன்னால் கை கட்டி பணிவாக நிற்கிறார்கள்.}

மைதிலி: உங்க எல்லோருக்கும் வணக்கம். விமான பிரயாணம் முடிஞ்சு நீங்க ரொம்ப களைச்சிருப்பீங்கன்னு தெரிஞ்சு தான் உங்களுக்கு இந்த ஐஸ் பாதாம்கீர் கொண்டு வந்திருக்கேன். எல்லோரும் முதல்ல இதை கொஞ்சம் குடிங்க (ஒரு பெரிய கூலரையும் பேப்பர் கப்புகளையும் விநியோகம் செய்கிறாள்).

செந்தில்: அடேங்கப்பா ஐஸ் போதுமா? முறைக்காதே, பாதாம்கீர்ல ஐஸ் போதுமான்னு தான் கேட்டேன்.

மைதிலி: வீட்டுக்கு போய் எப்படா படுப்போம்னு அலுப்பா இருக்கா உங்களுக்கு? எங்களை தேர்ந்தேடுத்தீங்கன்னா உங்களை வீட்டுக்கு கூட்டிகிட்டு போக Honda Podpuller பறக்கும் காரை கொண்டு வந்திருக்கோம். ஆட்டோ போல அலுங்கல் குலுங்கல் எல்லாம் இல்லாம சுகமா பறந்து போயிடலாம். அது மட்டுமா? பிரயாண களைப்பு போக இன்னிக்கு ராத்திரி நீங்க "சூசூசீசீ" கம்பனியின் புது கண்டுபிடிப்பான 'மிதக்கும் மெத்தையில்' படுத்து தூங்கலாம். புது டிசைனர் விரிப்பெலாம் கூட போட்டு வச்சுட்டு வந்திருக்கேன். உங்க களைப்பெல்லாம் பஞ்சா பறந்து போயிடும்.

செந்தில்: உங்களுக்கு வேணும்னா இவ நல்லா கால் கூட பிடிச்சு விடுவா. அதை சொல்ல மறந்துட்டயேம்மா மைதிலி.

மைதிலி: (செந்திலின் காதுக்கு மட்டும் கேட்கும் படி) வீட்டுக்கு வாங்க உங்களை நான் பிடிக்கிறேன். எங்கே இப்ப ஒரு அம்பது தோப்புக்கரணம் போட்டு இவங்களை சந்தோஷப்படுத்துங்க பார்ப்போம்? ஒண்ணு, ரெண்டு.....

(சத்தமாக) கால் தானே, பிடிச்சு விட்டா போச்சு! அப்புறம் நான் வெஜிடரியன் புட் மணக்க மணக்க நல்லா சமைச்சு போடுவேன். உங்களுக்கு அதிக சிரமம் குடுக்க மாட்டேன். சமைக்கும் போது பாதி பாத்திரம் நானே தேயச்சுடுவேன். மிச்சத்தை நீங்க தேய்ச்சா போதும். துணிமணி தோய்ப்பதை பத்தி கவலைப்படாதீங்க. இதோ என் வீட்டுக்காரர் நல்லா தோய்ப்பார். அவர் தோச்சது போக மீதி ஏதாவது இருந்தா நீங்க தோச்சா போதும். உங்களுக்கு அதுவும் ரொம்ப அலுப்பாக இருந்தா சொல்லுங்க. நாங்களெல்லாம் வாரத்துக்கு ஒரே ஒரு துணியையே போட்டுக்க பழகிக்கிறோம். ஒண்ணும் பிரச்சனையே இல்லை.

செந்தில்: ஐயோ கப்படிக்குமே? சரி பரவாயில்லை விடு. சென்ட் அடிச்சுக்குவோம்.

ஏஜன்சி அதிகாரி: உங்கள் நேரம் முடிந்து விட்டது. அடுத்ததாக சுஷ்மா, சுரேஷ் குடும்பத்தை அரங்கத்தின் நடுவில் வந்து பேச அழைக்கிறோம்.

மைதிலி: (அவசர அவசரமாக) அறை சுவர் அடைக்கறா மாதிரி ரூமுக்கு ஒரு பெரிய டி.வி இருக்கு எங்க வீட்டுல. கிட்டத்தட்ட 500 channel ல படங்கள் வரும். வாரத்துல மூணு நாள் விடுமுறை தருவோம். நல்ல டிசைனர் துணிமணி வாங்கி ........

செந்தில்: போதும் வா. விட்டா நீ சொத்தையே இந்த வேலையாளுக்கு எழுதி வச்சிடுவியோன்னு எனக்கு இப்போ பயம்மா இருக்கு. அந்தப் பக்கம் போய் தரைல உக்காரணும் போல இருக்கு. வா போகலாம். ஆ...

மைதிலி: என்ன ஆச்சு?

செந்தில்: என்ன ஆச்சா? என் இடுப்பு கடோத்கஜன் கடுச்சு துப்பின கரும்பு சக்கையாட்டம் ஆச்சு. பிள்ளையாருக்கே தோப்புக்கரணம் போடாம டிமிக்கி கொடுத்துட்டு இருந்த என்னை இன்னைக்கு இப்படி டிங்கு வாங்கிட்டீங்களே! (இடுப்பை பிடிச்சுகிட்டு முனகறார்)

ஏஜன்சி அதிகாரி: வாழ்த்துக்கள், நீங்கள் தேர்ந்தெடுக்க பட்டிருக்கீங்க. உங்களை தேர்ந்தெடுத்த பணியாளர் குஞ்சம்மா உங்களை தனியாக நேர்முக தேர்வு செய்ய ரெடியாக இருக்கிறார். என்னோடு இந்த பக்கம் வாங்க.

மைதிலி: (சந்தோஷத்தில் கண் பணிக்க) எனக்கு தெரியும் என் முருகன் என்னை கைவிட மாட்டான்னு. வேலும் மயிலும் தான் நமக்கு துணை. வேகமா வாங்க, குஞ்சம்மாவை அனாவசியமா வைட் பண்ண வைக்க கூடாது. ஏன் நின்னுட்டீங்க?

செந்தில்: குஞ்சம்மாவை அனாவசியமா வைட் பண்ண வைக்க கூடாதா? என்ன அநியாயம்! தினம் ஆபீஸ் போயிட்டு வந்து நான் ஒரு கப் காப்பிக்கு ஒரு யுகம் வைட் பண்ணறேனே, அது மட்டும் பரவாயில்லையா? எனக்கு ஒரு சந்தேகம் மைதிலி. அது எப்படி தினம் சாயந்திரம் ஆறு மணி ஆச்சுன்னா சொல்லி வச்சா மாதிரி உனக்கு உன் தோழிங்க கிட்ட இருந்து புடலங்காய் மாதிரி நீள நீளமா போன் கால்கள் வருது?

மைதிலி: அது வேற ஒண்ணும் இல்லைங்க. எங்க லேடீஸ் க்ளப்ல சமீபத்துல 'கணவர்களுக்கு தினம் ரெண்டு கப் காப்பி அவசியமா?" அப்படீன்னு பட்டிமன்றம் நடத்தினோம். நடுவர் 'அவசியம் இல்லை' ன்னு தீர்ப்பு கொடுத்திட்டார். அதான் எல்லோரும் இப்ப கொஞ்சம் பிசியா 'கணவர் காப்பி கட்' அப்படீன்னு ஒரு petition தயார் பண்ணி கூப்பர்டினோ பெண்கள்கிட்ட கையெழுத்து வாங்கிகிட்டிருக்கோம்.

செந்தில்: லேட்டா வந்தாலும் காப்பின்னு ஒண்ணு வந்திட்டு இருந்தது. அதுக்கும் ஆப்பு வச்சிட்டீங்களா? சரி மசமசன்னு நிக்காதே. குஞ்சம்மா கிட்ட முக்கியமா ஒரு விஷயம் கேக்கணும் எனக்கு.

(விறுவிறுன்னு நடந்தபடியே செந்தில்) குஞ்சம்மா.........காப்பி போட தெரியுமாம்மா உனக்கு?

-தொடரும்
__________________

PS: This was originally published in the RTS blogpage in Dec 2009.

Sunday, September 12, 2010

கூப்பர்டினோவில் குஞ்சம்மா - இரண்டாம் பாகம்

வருடம்: 2060
நாடு: அமெரிக்கா
இடம்: கலிபோர்னியா மாநகரத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரின் சர்வதேச விமான தளம்.

சான் பிரான்சிஸ்கோ விமான தளத்தின் வரவேற்ப்பு கூடம்:

ஒலிபரப்பியில் ஆங்கில அறிவிப்பு: ஜெட் ஏர்வேஸ் விமானம் 985 வந்து இறங்கியுள்ளது. பிரயாணிகள் கஸ்டம்ஸ் ..........

மைதிலி: (பரபரப்புடன்) அதோ வராங்க அதோ வராங்க. நீங்க கொஞ்சம் பேனரை தூக்கி பிடிங்க. (கண் மூடி முணுமுணுக்கிறாள்) காக்க காக்க கனக வேல் காக்க நோக்க நோக்க நொடியினில் நோக்க...........

செந்தில்: நீ வேணா பாரு, உன் தொல்லை தாங்காம அந்த முருகன் கூடிய சீக்கிரத்துல ஒரு நாள் ஓடி போய் லேக் டாஹோ (Lake Tahoe) பனிமலைல ஏறி ஐசாண்டவனா உக்காந்துக்க போறார். பின்ன என்ன? வீட்டுல பாத்ரூம் flush பண்ணலை, ஏசி ரிப்பேர், கார்பெட்ல கறை - இப்படி கண்ட விஷயத்துக்கும் நீ 'நோக்க நோக்க' ன்னு அவரை நோண்டினா பாவம் அவரும் தான் என்ன செய்வார், சொல்லு?

மைதிலி: இந்த நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை! Benz car வாங்கி தருவோம்னு பேனர் எழுத சொன்னா அதை கோட்டை விட்டுட்டீங்க. அந்த குடும்பத்தை பாருங்க Hawaaii cruise டிக்கெட் வாங்கி தருவோம்னு அம்சமா பேனர் எழுதிண்டு வந்திருக்காங்க. நமக்கு மட்டும் இன்னிக்கு ஆள் கிடைக்கலை, இப்பவே சொல்லிட்டேன் நீங்க தான் இனி நம்ம வீட்டு ஆஸ்தான முனியம்மா.

சபீனா சர்ப் சர்வதேச ஏஜன்சி அதிகாரி: (கையில் பெரிய மைக்ரோபோனில்) வணக்கம் பெண்கள் மற்றும் சாதுஆண்களே (Ladies and gentlemen)! சபீனா சர்ப் சர்வதேச ஏஜன்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது. இன்னும் சற்று நிமிடத்தில் உங்கள் தேர்வு தொடங்கி விடும். எங்கள் வேலையாட்கள் அறையின் இந்த பக்கத்தில் உள்ள நாற்காலிகளில் அமர்வார்கள். ஒவ்வொரு குடும்பமாக வந்து அவர்கள் முன் பேனருடன் 5 நிமிடங்களுக்கு நின்று உங்களை பற்றிய சில வார்த்தைகள் பேசலாம். பணிவோடு கைகட்டி நிற்பது, தோப்புக்கரணம் போடுவது, மரியாதையுடன் பேசுவது போன்ற விஷயங்கள் தேர்வில் உங்களின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும். உங்கள் நேரம் முடிந்தவுடன் அறையின் ஓரத்தில் போய் தரையில் உட்காரவும். நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் வேலையாளுடன்ஸ்பெஷல் நேர்முக தேர்வுக்கு அழைத்து செல்லப்படுவீர்கள்.

செந்தில்: அடடா முக்கியமானதை கொண்டு வர மறந்து போயிட்டேனே!

மைதிலி: என்னத்தை மறந்துட்டு வந்தீங்க?

செந்தில்: சாமரத்தை தான். தோப்புக்கரணம் போட்டுகிட்டே சாமரம் வீசியிருக்கலாம்டி. நிச்சயம் வேலைக்கு ஆள் கிடைச்சிருக்கும் நமக்கு. அவங்கல்லாம் நாற்காலி நாமெல்லாம் தரையா? சபாஷ் சபாஷ்.

மைதிலி: ஷ்ஷ்..யார் காதுலயாவது விழப்போறது, சும்மா இருங்க. அப்புறம் அவங்க முன்னாடி நிக்கரச்ச கொஞ்சம் இடுப்பு வளைஞ்சு பதவிசா நில்லுங்க, சரியா?

ஏஜன்சி அதிகாரி: செந்தில், மைதிலி குடும்பம் இப்பொழுது அரங்கத்தின் நடுவில் வந்து பேசலாம்.

மைதிலி: நம்பள தான் கூப்பிடறாங்க, வாங்க போகலாம். இதோ வந்துட்டோம்...(பீ.டி. உஷா போல ஓடுகிறாள்)

-தொடரும்

PS: This was originally published in the RTS blogpage in Dec '09.

Saturday, August 28, 2010

கூப்பர்டினோவில் குஞ்சம்மா - முதல் பாகம்

வருடம்: 2060
நாடு: அமெரிக்கா
இடம்: கலிபோர்னியா மாநகரத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரின் சர்வதேச விமான தளம்.

உங்களுக்கு தெரியாத ஒரு முக்கியமான விஷயம்: நான்கு மாதம் முன்பு வெள்ளைவீட்டு சட்ட சபையில் காங்கரெஸ் ஆசீர்வதித்த ஒரு புது மனுவின் படி பாத்திரம் தேய்ப்பது, வீடு பெருக்குவது, துணி தோய்ப்பது போன்ற வீட்டு வேலைகள் செய்வதற்கு அயல் நாட்டிலிருந்து வேலையாட்களை கூப்பிட்டு கொண்டு வரலாம். இந்த மனுவிற்கு அமெரிக்காவில் வந்து குடிபுகுந்துள்ள இந்திய மக்களிடம் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.

சான் பிரான்சிஸ்கோ விமான தளத்தின் வரவேற்ப்பு கூடம்:

மைதிலி: இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு விமானம் வந்து இறங்க. சீக்கிரமா வாங்க. க்யூவுல முதல் இடம் கிடைச்சா தானே நம்பள யாராவது தேர்ந்தெடுக்க வாய்ப்பிருக்கு? ஆமாம் அந்த ஏஜன்சி பேரு என்ன சொன்னீங்க?

செந்தில்: சபீனா ஸர்ப் சர்வதேச ஏஜென்சி. இவங்க இந்தியாவோட எல்லா மாநிலத்திலையும் நல்லா அலசி வீட்டு வேலைக்கு ஆட்கள் திரட்டி நேர்முகத்தேர்வேல்லாம் பண்ணி இப்போ அமெரிக்காவுக்கு அழைச்சுகிட்டு வராங்களாம். வேலையாட்கள் ப்ளேன்ல வந்து இறங்கினப்பரம் ஏர்போர்ட்ல அந்த காலத்து சுயம்வரம் போல ஏதோ நடக்குமாம். வேலையாட்கள் எல்லா குடும்பங்களையும் நல்லா அலசி பல கேள்விகள் கேட்டு அவங்களுக்கு பிடிச்ச ஒரு குடும்பத்தை தேர்ந்தெடுப்பாங்களாம் . நம்பள தேர்ந்தெடுத்தாங்கன்னா ஏஜன்சி கிட்டே கையெழுத்து போட்டுட்டு நம்ம அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் குடுத்துட்டு வேலைக்கு ஆளை அழைச்சுகிட்டு போக சொல்லியிருக்காங்க.

மைதிலி: புண்ணியவான்கள் அந்த ஏஜன்சிகாரங்க. கடவுள் கடாக்ஷம் என்னிக்கும் இருக்கும் அவங்களுக்கு. மனசு குளிர்ந்து சொல்லறேங்க.

செந்தில்: சரி சரி போதும் வா. ரொம்ப குளிர்ந்தா ஜன்னி வந்திட போகுது. விட்டா சபீனா ஸர்ப் ஏஜென்சி பெயர்ல Trust Fund ஆரம்பிச்சு ஏழை பாழைங்களுக்கு தர்ம காரியங்களே பண்ணுவ போல இருக்கே.

மைதிலி: நீங்க ஏன் சொல்ல மாட்டீங்க? போன வாரம் ஜிம்முல நாலு பேர் என்னை மடக்கி 'மொத்தத்துல நீ உருண்டையா இருக்கிறப்போ எப்படி உன் கை மட்டும் தனியா இப்படி இளைச்சு போயிருக்கு' ன்னு கேட்டானுங்க. பாத்திரம் தேய்ச்சு தேய்ச்சு தான்னு பளிச்சுன்னு சொல்லிட்டு வந்தேன்.

செந்தில்: ஆமாம், கிளம்பறத்துக்கு முன்னாடி பூஜை அறைல அவ்வளவு நேரம் கண்ணை மூடி என்ன தான் வேண்டிகிட்ட?

மைதிலி: வேறென்ன, யாராவது ஒரு வேலயாளுக்காவது நம்ம குடும்பத்தை பிடிக்கணுமேன்னு கவலை எனக்கு. நம்மளை யாராவது தேர்வு செய்தாங்கன்னா இன்னிக்கு சாயந்திரமே Concord முருகன் கோவிலுக்கு வந்து பதினோரு தேங்காய் உடைக்கிறேன்னு வேண்டிகிட்டு இருக்கேன். அந்த முருகன் மேல தான் பாரத்தை போட்டிருக்கேன். வேலும் மயிலும் தான் நமக்கு துணை.

செந்தில்: விட்டா நீ ஏர்போர்ட்ல உட்கார்ந்து கந்த சஷ்டி கவசமே பாடிடுவ. நீ கொஞ்சம் நேரம் இந்த பேனரை தூக்கிண்டு வரியா? எனக்கு கை வலிக்கறது. பொணம் கணம் கணக்கறது இது.

மைதிலி: அபசகுனமா இப்படி அச்சுபிச்சுன்னு பேசாதீங்க. அந்த பேனரை இப்படி என்கிட்டே குடுங்க. __________________அய்யய்யோ முக்கியமானதை எழுத விட்டுட்டீங்களே? நம்மள தேர்ந்தெடுத்தா Benz கார் வாங்கி தருவோம்னு எழுத சொன்னேனே. இதுல காணுமே. என்னங்க இப்படி பண்ணிட்டீங்களே!

செந்தில்: உனக்கே இது கொஞ்சம் அதிகமா தெரியல? நான் வேணும்னா இனிமே பாத்திரம் தேய்க்கிறேன். எனக்கு Benz வாங்கி கொடு முதல்ல. சரி சரி பேசினது போதும் வா. நல்ல காலம் க்யூவில் ரொம்ப பேர் இல்லை. வீட்டை விட்டு சீக்கிரம் கிளம்பினது நல்லதா போச்சு.

(தொடரும்)

ps: This was written and published originally in the RTS blogpage in October 2009.

Tuesday, August 24, 2010

ஊத்தப்பமும் ஊத்தெடுக்கும் சமூக உணர்வும்!

சென்னையில் ஒரு பத்து பெண்கள் பொது இடத்தில் கூடும் போது இப்படி பேசித்தான் நீங்க கேட்டிருப்பீங்க - "போத்தீஸ்ல இப்போ ஆடி தள்ளுபடி நடக்குதாம். நீ போக போறியா?", "தங்க மாளிகையில் இந்த வாரம் ஆர்டர் குடுத்தால் கூலி சேதாரமே கிடையாதாம். டீவியில் ஒன்பது மணி செய்தி வாசிக்கற பத்மஜா போட்டுக்கற மாதிரி கழுத்தை ஒட்டி மாங்காய் மாலை இன்னிக்கு போய் ஆர்டர் பண்ண போறேன். நீயும் வரியா?" மற்றும் "நேத்தி கோலங்கள் சீரியல் பாத்தியா? இப்படி கூட ஒரு அநியாயம் நடக்குமா? பாவம் இந்த அபியும் தொல்காப்பியனும்". இதெல்லாம் சகஜமா கோவில், கல்யாணம் போன்ற பொது இடங்களில் நம்ம காதில் விழும் சுவாரசியமான பேச்சுகள்.

எங்க ஊர் ரிச்மணட் தமிழ் பெண்கள் எங்கேயாவது கூடினால் பேச்சு கொஞ்சம் வித்யாசமாக போகும். "புளியோதரை நாலு கப்பா அஞ்சு கப்பா?", "கேசரியா சர்க்கரை பொங்கலா?", "பத்து பவுண்ட் வெங்காயம் வெட்ட முடியுமா இல்லேன்னா ஆறு கட்டு கொத்தமல்லி நறுக்க முடியுமா?" இந்த ரேஞ்சுல தான் எல்லோரும் பேசுவாங்க. என்னடா எல்லாமே சாப்பாட்டு விஷயமா இருக்கேன்னு யோசனை பண்ணறீங்களா? சாப்பாடு தான் எங்களுக்கு ரெண்டாவது மதம். சர்டிபிகேட் இல்லாத சமையல் கலை வல்லுனர்களான எங்க ஊர் பெண்கள் சமூக உணர்வு அதிகம் உள்ளவங்க. வீட்டில் சமைப்பாங்களோ மாட்டாங்களோ, சமூக நிகழ்ச்சிகளுக்கு அசராமல் அண்டா அண்டாவா சமைப்பாங்க. கோவிலில் சஷ்டியா? பெருமாளுக்கு கல்யாணமா? தோழியின் பெண்ணோட அரங்கேற்றமா? எடு பேப்பரையும் பென்சிலையும். விறுவிறுன்னு மெனு போடுவதும், போன் மேல் போன் போட்டு ஆட்கள் திரட்டி இரு நூறு அல்லது முன்னூறு பேருக்கு சமைப்பதும் எங்க ஊர் பெண்களுக்கு காலை காப்பி கலப்பது போல அல்வா வேலை. இவர்களின் இந்த திறமையை எப்படி மிஞ்சுவதுன்னு அடுத்த ஊர்க்காரங்க ரூம் போட்டு யோசிப்பதா கேள்விப்பட்டேன்.

உதாரணத்துக்கு இந்த வாரக்கடைசியில் எங்க ஊரில் புதிதாக கட்டப்பட்டு வரும் இந்து கோவிலுக்கு நிதி திரட்டும் ஒரு பெரிய நிகழ்ச்சி நடக்க இருக்கு. கல்யாண சத்திரம் போல் உள்ள பெரிய ஹாலில் பல குட்டி கடைகள் போட்டு இட்டிலியிலிருந்து கச்சோரி வரைக்கும் சுட சுட உணவு வகைகளை பரப்பி, ஜொள்ளு விட்டுக் கொண்டு வரும் அமெரிக்கர்களுக்கு விற்று (கோவிலுக்கு நிதி திரட்டி) இந்திய கலாசாரத்தை பறைசாற்றும் இது கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு புகழ் பெற்ற நிகழ்ச்சி. இதில் நம்ம தமிழ் மக்கள் நடத்தப்போகும் கடை ஊத்தப்பம்/குழிப்பணியாரம்/இட்டிலி கடை.

கடந்த பத்து நாட்களாகவே இதுக்கு ரெடியாக எங்கூர் பெண்கள் மும்முரமா வேலை செஞ்சுட்டு வராங்க. ரெண்டு நாள் முன்னாடி பால் வாங்க கடைக்கு போனேன். காய்கறி செக்ஷன் பக்கம் நாலு பெண்கள் நிற்பதும் அதில் ஒரு பெண் பேசுவதும் காதுல விழுந்தது. "நீ காரட், நான் குடைமிளகாய், ரமா வெங்காயம், உமா கொத்தமல்லி. எல்லோரும் ரெண்டு மூட்டை வாங்கிட்டு போய் வெட்ட ஆரம்பிக்கலாம். ஊத்தப்பம் பூத்துக்கு டான்னு பதினொரு மணிக்கெல்லாம் வந்திருங்க." மாங்கு மாங்குன்னு கை வலிக்க காய் வெட்டி, கால் கடுக்க ஊத்தப்பம் ஊத்திட்டு இதே பெண்கள் வீட்ல கணவருக்கும், குழந்தைகளுக்கும் Taco Bell லில் சாப்பாடு வாங்கி கொடுத்துடுவாங்க. எப்பேர்ப்பட்ட ஒரு தியாகம்! என்ன ஒரு சமூக உணர்வு!

எங்க ஊருக்கு வர்றதா இருந்தீங்கன்னா இதெல்லாம் கேட்டு பயந்து போய் டிக்கெட்டை ரத்து செஞ்சுராதீங்க. சமூக சேவை மாதிரியே விருந்தோம்பலிலும் எங்க பெண்களை மிஞ்சவே ஆள் கிடையாது. உதாரணத்துக்கு புதுசா ஊருக்கு ஒரு தமிழ் குடும்பம் வந்திருப்பது தெரிஞ்சால் எங்க வரவேற்ப்பு குழு உடனே போய் அவங்களை பார்த்து பேசி வரவேற்று அப்படியே சில பல முக்கிய விஷயங்களை தெரிந்து கொண்டு வருவாங்க. அந்த வீட்டு பெண்ணிடம் எத்தனை பெரிய குக்கர் இருக்கு, மூணு தோசையாவது வார்க்க கூடிய மாதிரி பெரிய தோசைக்கல் இருக்கா, ஒரு எழுபத்தைந்து பேருக்காவது சாம்பார் வைக்க தோதான பாத்திரம் இருக்கா - இது போல அத்தியாவசியமான விஷயங்களை தெரிந்து கொண்டு, இதெல்லாம் இருந்தால் மிகப் பெரிய வரவேற்ப்பு கொடுத்து விட்டு வருவாங்க. இப்ப சொல்லுங்க. எப்ப வரீங்க எங்க ஊருக்கு?

நீங்க புதுசா கல்யாணம் ஆனவரா? உங்க மனைவி செய்யும் சமையல் அவங்க அளவுக்கு அம்சமா இல்லையா? வெங்காய சாம்பாரும், கத்தரிக்காய் ரசவாங்கியும் கனவா போச்சேன்னு கவலைப்படரீங்களா? டேக் இட் ஈசி. எங்க ஊருக்கு டிக்கெட் வாங்கி அனுப்பி வையுங்க. ஒரே மாசம் தான். கல்யாண சமையலுக்கே கான்ட்ராக்ட் எடுக்க தயாராகிடுவாங்க உங்க மனைவி.

தூக்கத்தில் கூட இல்லாத கரண்டியை பிடித்து ஐந்நூறு மைசூர்பாக் கிண்டும் ரிச்மணட் தமிழ் பெண்களின் தன்னலமற்ற சமூக உணர்வு நாலு பேருக்கு சொல்லப்பட வேண்டிய ஒரு விஷயம்னு நினைச்சு தான் உங்க கிட்ட சொன்னேன். சரி தானே?

-----
ps: This was published in the RTS blogpage in October 2009.

Tuesday, August 10, 2010

சரித்திர நாயகி நானா சாவித்திரியா?

உலகத்தில் எல்லா மனைவிகளும் அவங்க வாழ்க்கையில் ஒரு முறையாவது கிடைக்குமான்னு ஏங்கும் ஒரு வாய்ப்பு எனக்கு வந்த போது நான் வேண்டாம்னு முகம் திருப்பிக்கிட்டேன்னு நினைச்சால் எனக்கே என்னை நினைத்து பெருமையா இருக்கு. என்னுடைய இந்த பெருந்தன்மையை பற்றி கேள்விப்பட்டாங்கன்னா நம்ம ஊரு 'அமர்சித்ர கதைகள்' கம்பெனிகாரங்க 'சத்தியவான் சாவித்ரி' கதையோடு சேர்த்து என் கதையையும் வெளியிட்டுருவாங்க. அதில் எனக்கு சந்தேகமே இல்லை. ஆனால் புத்தகமா வெளி வந்து நம்மூர் நண்டு சிண்டெல்லாம் படிக்க நேர்ந்தால் கணவர் மனம் நோகுமேன்னு ஒரு நல்ல எண்ணத்தில் தான் இப்படி அதிகமா யாருமே படிக்காத தமிழ் சங்க ப்ளாக்ல வந்து இந்த கதையை சொல்லறேன்.

மூணு வருஷத்துக்கு முன் நடந்த இது ஒரு உண்மை சம்பவம்.

---------------------------------------------------------------------------------

இந்தியாவுக்கு கோடைகால விடுமுறைக்கு கிளம்ப எல்லா ஆயத்தங்களும் செய்தாச்சு. நாளை விடிந்தா பெட்டி படுக்கையை தூக்கி கொண்டு விமானதளத்துக்கு போக வேண்டியது தான். இந்த நேரத்தில் நீங்களா இருந்தா என்ன செய்வீங்க? நிம்மதியா படுத்து தூங்கி கனவில் அபிமான நடிகர் 'ஹாரிசன் போர்ட்' கையை குலுக்கி விட்டு எழுந்து ஊருக்கு போய் சேருவீங்க. அதை செய்யாமல் விட்டு விட்டு பொழுது போகலைன்னு நான் வாசல் பக்கம் குழந்தைகளுடன் விளையாட போனதை விதின்னு சொல்லாமல் வேறெப்படி சொல்லறது?

முப்பது வயசில் மூணு வயசு குழந்தையின் ஆர்வத்தோட ஸ்கூட்டர் விட்டு விளையாடினால் என்ன நடக்குமோ அது தான் நடந்தது. தார் ரோட்டில் தலை குப்புற விழுந்து வலது கண் பக்கம் பயங்கர அடி. வீங்கிய முகத்துக்குள்ளே புதைஞ்சு போன கண்களை கஷ்டப்பட்டு திறந்து பார்த்த போது எதிரில் கலங்கலாய் தெரிஞ்சது வீடு. ஒரு இருநூறு மில்லிசரக்கு போட்டு சோகத்தில் ஆடி ஆடி நடக்கும் சினிமா ஹீரோ போல் ரத்த சிவப்பான கண்களோடு ஆடிக்கொண்டே வீட்டுக்குள் வந்த என்னை பார்த்து பதறி போன என் கணவர் என்னை பக்கத்து ஆஸ்பத்திரியின் எமர்ஜென்சி அறைக்கு அழைத்து போக அங்கே ஆரம்பிச்சது அவருடைய கெட்ட நேரம்.

கரு ரத்தம் கட்டி போய் வீங்கியிருந்த என் முகத்தை பார்த்த நர்சுகளும் டாக்டர்களும் கோபத்தில் திரும்பி என் கணவரை பார்த்த பார்வையில் இருந்த உக்கிரத்தை பாண்டிய நாட்டு சபையில் நடந்த திருவிளையாடல் காட்சியில் சிவன் "நக்கீரா என்னை நன்றாக பார்" அப்படீன்னுதன் நெற்றிக்கண்ணை கோபத்தில் திறந்த போது கடைசியாக பார்த்த ஞாபகம். அவங்களோட கோவத்தின் காரணம் புரியாமல் மலங்க மலங்க விழித்த என் கணவரை வெளியே உட்கார சொல்லி விட்டு ஸ்கேன் செய்யும் ரூமுக்கு என்னை அழைத்து போய் அனுதாபத்தோடு பார்த்த நர்சை கண்டு எனக்கும் குழப்பம் தான். ஆனால் மேலே யோசனை பண்ண முடியாமல் முகம் பத்து விசில் வந்த ப்ரெஸ்டீஜ் குக்கர் போல வலியில் தெறித்தது.

ஒரு வழியாக ஸ்கேன் முடிந்து டாக்டர் வந்து பார்த்து வலிக்கு மாத்திரை குடுத்து முடித்த போது தான் என் கணவர் கவலையோடு கதவுக்கு வெளியே நின்னு எட்டி பார்ப்பது தெரிந்தது. அவரை உள்ளே கூப்பிட சொல்லி நான் சொன்ன போது ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட டாக்டரும் நர்சும் மெதுவாக என்னிடம் பேச்சை ஆரம்பித்தார்கள். வீட்டில் ஏதும் பிரச்சனை என்றால் தைரியமாக சொல்லலாம். பயப்பட வேண்டாம். என்னை போல பெண்களுக்கு பல காப்பகங்கள் இருக்கு. கை நீட்டும் கணவருக்கு பயந்து கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சட்டம் என் பக்கம் தான். இந்த ரீதியில் இன்னும் பல விஷயங்களை கனிவாக பொறுமையாக சொல்லி கொண்டே போனாங்க. ஒன்றும் புரியாமல் முதலில் விழித்த எனக்கு விஷயம் விளங்க ஆரம்பித்த போது அடி வயத்திலிருந்து பொங்கிய சிரிப்பை மீறி ஒரு விஷயம் உறைத்தது.

என் கணவரின் குடுமி அந்த ஒரு வினாடி என் கையில். என் ஒரு தலை அசைப்பில் பாவம் அவர் மாமியார் வீட்டு களியை ருசி பார்க்க வேண்டி இருக்கும். ஆஹா! எப்பேர்பட்ட ஒரு அரிய வாய்ப்பு! கோடானு கோடி மனைவிகள் உலகத்தில் தங்கள் வலது புருவத்தை வெட்டி கொடுக்க தயாராக இருக்கும் (மாசம் ரெண்டு தரம் அழகு நிலையம் சென்று தீட்டி விட்டு கொண்டும் வரும் அதே புருவத்தை தான் சொல்லறேன்) இந்த ஒரு வாய்ப்பு தேடாமல் கனிந்த பழம் போல என் மடியில் விழுந்த போது மனம் சஞ்சலப்படாமல் நெஞ்சில் உரமுடன் 'இவர் இதற்கு காரணமில்லை. இவர் நிரபராதி' ன்னு சொல்லி சட்டத்தின் கொடும் பிடியில் சிக்காமல் என் கணவரை மீட்டு கொண்டு வந்த நானா இல்லை சத்யவானின் சாவித்ரியா சரித்திர நாயகி?

Thursday, July 29, 2010

வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை!

சமீபத்தில் நண்பர் ஒருவர் "வார இறுதியில் மலை ஏற போகிறோம், வரீங்களா" ன்னு எங்களையும் சேர்த்து சில குடும்பங்களை கேட்டிருந்தார். விடுமுறை கழிஞ்சு வந்த களைப்பா இருக்குன்னு சாக்கு சொல்லி நான் ஜாலியா படுத்து தூங்கிட்டேன். மிச்ச குடும்பங்களும் வேறு சில காரணங்களால் போகவில்லை.

நாங்க எல்லோரும் இப்படி கழுத்தறுத்த பின்னும் கூட மனம் தளராமல் சென்று மலை ஏறி வெற்றி வாகை சூடி வந்தாங்க இந்த நண்பர் குடும்பத்தார். இவர்கள் மலை மேல் ட்ரெக்கிங் செய்வதில் கால் தேர்ந்தவர்கள் (கை தேர்ந்தவர்கள்னு சொன்னா ஏதோ இலக்கண பிழை போல இடிக்கிறதே!). எங்க குடும்பத்தின் கோட்டாவையும் சேர்த்து இவங்க அவ்வப்போது ஏதாவது மலை அல்லது குன்றின் மேலே ஏறி கொடி நட்டு விட்டு வந்திடுவாங்க. (கொடி நடுவாங்கன்னு தான் நினைக்கிறேன். அவ்வளவு தூரம் கால் கடுக்க ஏறி கொடி நடாமல் திரும்பி வந்தால் என்ன பிரயோசனம்?) இந்த காலத்தில் நாற்காலி உருளைகிழங்காக (அதாங்க couch potato) உள்ள முக்கால்வாசி குடும்பங்களுக்கு நடுவில் இந்த குடும்பத்தின் 'outdoor activities' என்னை கவர்ந்த ஒன்று.

இதில் அதிசயம் என்னன்னா ஏற்கனவே ஒருதரம் எங்கள் குடும்பத்தோடு ட்ரெக்கிங் செய்த அனுபவம் இருந்தும் இந்த நண்பர் மறுபடி எங்களை கூப்பிட்டது தான். என்னை மலை ஏறக் கூப்பிடறதும் பூனையை மடியில் வைத்து கொண்டு சகுனம் பாக்கறதும் ஒண்ணு தான். ஏணியில் நாலு படி ஏறினாலே நான் அசந்து போய் ஸ்டூல் கொண்டு வரச்சொல்லி உட்கார்ந்து நீர்மோர் கேட்கற ரகம். போன மாசம் சென்னை போயிறந்தப்போ கூட நல்லி கடைக்குள்ள போய் சில்க் காட்டன் செக்ஷன்லேந்து தஸ்ஸர் சில்க் செக்ஷன் போறதுக்குள்ள காத்து போன பலூன் போல தொஞ்சு போய் ஒரு பன்னீர் சோடா குடிச்சுட்டு அரைமணி உட்காராமல் இனியொரு புடவை பாக்க மாட்டேன்னு என் தங்கை கிட்ட கண்டிப்பா சொல்லிட்டேன். அவளும் உடனே என்கிட்டே கண்டிப்பா சொல்லிட்டா - இனி ஒருதரம் நான் அவளை கடைக்கு போகலாம் வான்னு கூப்பிட்டால் உடனே நாட்டு எல்லையை தவழ்ந்தாவது கடந்து பாகிஸ்தானுக்கு குடிபோயிடுவாள்னு. அவளை சொல்லி குத்துமில்லைங்க பாவம். அதுக்கு கொஞ்சம் முன்னாடி தான் பாண்டிபஜார்ல ஒரு சின்னக் கடைக்கு என் துணிகளுக்கு மாட்சிங்கா வளையல் வாங்க போயிருந்தோம். என்னை விட எனக்காக அதிக சிரத்தையோடு எல்லாக்கலர் வளையலையும் எடுத்து காமிக்க சொல்லி என் தங்கை கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்த போது நான் குறுக்கிட்டு ரொம்ப முக்கியமா உட்கார ஒரு பெஞ்சும் குடிக்க ரெண்டு சோடாவும் கொண்டு வர சொல்லி கேட்டேன். கோவம் வருமா வராதா சொல்லுங்க? ஒரு வழியா இனி எங்கே கிளம்பினாலும் நாலு சோடா பாட்டிலும் மடக்குற நாற்காலியும் மறக்காமல் கொண்டு வருவேன்னு சத்தியம் பண்ணினப்புறம் தான் என் தங்கை கொஞ்சம் சமாதானம் ஆனாள்.

இதுக்கு முன்னாடி ஒருதரம் நாங்களும் இன்னும் சில நண்பர்கள் குடும்பங்களும் இதே நண்பரின் ஊக்குவித்தலில் ட்ரெக் செய்ய கிளம்பிச் சென்றோம். கையில் எலுமிச்சம்பழசாதம், புளியஞ்சாதம், தயிர் சாதம், ஊறுகாய், சிப்ஸ், பழவகைகள், ஜூச்வகைகள், சோடாவகைகள் எல்லாத்தையும் பாத்து பாத்து பாக் பண்ணிண்டு கிளம்பிப்போனோம் (பின்ன மலை ஏறிட்டு வந்தா பசிக்காதா? கண்ணு போடாதீங்க). போய் மலை அடிவாரத்தில் ஒரு பிக்னிக் ஏரியாவில் சாப்பாட்டு மூட்டையை இறக்கி விட்டு ஒரு கும்பலாக ஏற ஆரம்பித்தோம். முதல் கொஞ்சம் நேரம் கேலியும் சிரிப்புமா ஜாலியாக தான் இருந்தது. அப்புறம் தான் ஆரம்பிச்சது அவஸ்தையே. முதலில் குதி கால் வலிக்கற மாதிரி இருந்தது. கொஞ்ச நேரத்தில் பின்னங்காலும் பங்க்சர். அப்புறம் கீழ்கால் தசைகளில் தபலா அடிக்கும் எபெக்ட். குழந்தைகளால் புகழ்பெற்ற "Are we there yet?" கேள்வியை நான் திருடி கெஞ்ச ஆரம்பித்த போது எனக்கு கிடைத்த ஒரே பதில் "இதோ வந்துடும். ரொம்ப தூரம் இல்லை." மந்திரி குமாரி படத்தில் மாதுரி தேவிக்கு "வாராய் நீ வாராய்" பாட்டின் போது எப்படி இருந்திருக்கும்னு எனக்கு அப்போ நல்லா புரிஞ்சது. ஒரு பெரிய கதையை சுருக்கனும்னா கடைசி அரை மைல் இருக்கும் போது கடவுள் என் கதறலை கேட்டு தாங்க முடியாமல் ஒரு பெரிய பாறையை கண்ல காமிச்சார். அவ்வளவு தான். நானும் எங்கள் கும்பலில் இருந்த குழந்தைகளும் தாவி ஏறி அதில் உட்கார்ந்து இனி நடக்க மாட்டோம்னு உற்சாகமா மறியல் பண்ணினோம். வேறு வழியில்லாமல் மத்தவங்க எல்லோரும் மிச்ச தூரம் இறங்கி போய் காரை எடுத்துண்டு வந்து எங்களை கூட்டி கொண்டு போனாங்க.

என்னை மலை ஏற நீங்க கூப்பிடுவீங்களா?