Sunday, October 22, 2023

சவாலே சமாளி! {நவராத்திரி நினைவுகள் 2023}

நானும் பல வருடமாக கண்ணில் படும் கணினி நிபுணர்களை எல்லாம் கெஞ்சிப் பார்த்து சலித்து விட்டேன்.  பகல் இரவு அப்படீன்னு பாரபட்சம் பார்க்காமல் எந்நேரமும் கணினியோடு குடுத்தனம் பண்ணும் சக இந்தியர்களில் ஒருவர் கூட  என் வேண்டுகோளை காதில் வாங்காமல் போனது வருந்தத் தக்க விஷயம்.  இந்த உலகத்தில் இரக்கம், தயை, பச்சாதாபம் எல்லாம், தலிபான் ஆட்சியில் பெண் சுதந்திரம் போல் கடத்தப்பட்டது எப்போது?  நவராத்திரி சீசனில் இரிச்மண்டு நகரில் பெண்கள் படும் பாட்டை பார்த்து இனி அந்த கொலுவில் இருக்கும் கடவுளே மனமிரங்கி வந்து ஒரு app ஐ எழுதினால் தான் எங்களுக்கு விடிவு வரும் போல இருக்கு. 

நாங்கள் பெண்கள்.  பெரும் ஆற்றல் மிக்கவர்கள் தான்.  ஒத்துக்கறேன்.  வாழ்க்கை எங்கள் பக்கமாக  விட்டெறியும் எந்த பந்தையும் அஞ்சாமல் நேர்கொண்டு அசராமல் சிக்ஸர் அடிக்கும்  மன உறுதி கொண்டவர்கள் தான்.  இல்லைன்னு சொல்லலை.  இருந்தாலும் நவராத்திரி சீசனில் வந்து எங்கள் முன் குவியும் சவால்களில் நாங்கள் ஆடிப்போவது என்னவோ மறுக்க முடியாத ஒரு உண்மை.

அப்படி என்ன மீனா உங்களுக்கு பெரிய சவால்கள் னு நீங்க கேட்பீங்கன்னு தெரிஞ்சு தான் நான் ரெடியா list போட்டு கொண்டு வந்திருக்கேன்.  மேலே படிங்க.

சவால் #1:  

வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே போகும் கொலு அழைப்புகள்.  Evite, whatsapp, text, email அப்படீன்னு பல திசைகளிலிருந்து வந்து குவியும் இந்த அன்பான அழைப்புகளை வர வர சமாளிக்கவே முடியலை.  யார் யார் என்னென்னிக்கு கொலுவுக்கு கூப்பிட்டு இருக்காங்க?  சுதா வீட்டில் செவ்வாய் கிழமை கூப்பிட்டால் சுதாவின் தெரு முனையில் இருக்கும் கீதாவும் அன்னிக்கே கூப்பிட கூடாதா?  அவங்க தெரு ரொம்ப அழகா தான் இருக்கு.  நான் மறுக்கலை. ஆனால் அதுக்குன்னு பெட்ரோல் விக்கற விலைக்கு ஒரே  தெருவுக்கு எத்தனை முறை வண்டியை விட முடியும், சொல்லுங்க?  

இன்னொரு  ரொம்ப முக்கியமான புள்ளி விவரம் இதோ.  எத்தனை மணிக்கு பிறகு அவரவர் கொலுவுக்கு கூப்பிட்டு இருக்காங்க?  ஏன்னா அந்த வீட்டம்மா சுண்டலை தாளிப்பதற்கு முன்னாடி நம்ம போய்  நின்னா நல்லா இருக்காது பாருங்க. அப்புறம் ஒன்பது நாட்கள் தானே நவராத்திரி விழா?  சராசரியாக ஒரு வீடு  மூணு  மணி நேரம் அவங்க கொலுக்கதவை திறக்கையில், optimal ரூட் மேப் இல்லாமல் எப்படிங்க  ஐம்பதுக்கும் மேலே உள்ள கொலு வீடுகளுக்கு போக முடியும்?  விறு விறுன்னு நடந்து பாருங்களேன்னு விவரமில்லாமல் நீங்கள் சொன்னீங்கன்னா அடுத்த கொலுவில் உங்களுக்கு சுண்டல் cut.

சவால் #2:

கடந்த சில வருடங்களாக நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் எந்த நிறத்தில் புடவை கட்டணும்னு யாரோ ரூம் போட்டு யோசிச்சு பட்டியல் போட்டு வாட்ஸாப்பில் சகட்டு மேனிக்கு பரப்பி விடறாங்க.  தப்பில்லை.  ஒரு விதமா உதவி தான்.  ஏன்னா என்ன புடவை உடுத்தணும்னு நாம மண்டையை உடைத்து கொள்ள வேண்டாம் பாருங்க.  பின்ன என்னதுக்கு இப்படி புலம்பணும்னு நீங்க கேக்கறீங்க.  நியாயமான கேள்வி.  

என்னோட குறை இது தான்.  பட்டியல் போடறவங்க சும்மா நீலம், பச்சை, சிவப்பு அப்படீன்னு சொன்னா பத்தாதா?  மயில் பச்சை, ராயல் நீலம், காஷ்மீர் மிளகாய் சிவப்பு., கூவம் நதி கருப்பு.....இப்படி எல்லாம்  நுணுக்கமா பட்டியல் போடுவது அவசியமா?  ஒரு நாள் கிளம்பும் அவசரத்தில்  (ராயல் ப்ளூ தேதியில்) நான் ஒரு பிங்க் கலர் புடவையில் ஏதோ ஒரு ப்ளூ பார்டர் புடவை கட்டி கொண்டு போனேன்.  அவ்வளவு தான்.  அன்னிக்கு ஊர் மக்கள் என்னை அவங்க மூக்கு கண்ணாடியை கீழே தள்ளி பார்த்த பார்வையில் ரொம்ப shame shame ஆ போச்சு.   இந்த சோதனை எங்களுக்கு தேவையா?

சவால் #3:

நம்ப பாரம்பரியத்துக்கு ஒரு குறையில்லாமல் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் கொண்டு வரும் ஆப்பிளும் ஆரஞ்சு பழ மூட்டைகளும் தான் எங்களோட அடுத்த சவால்.  ஒவ்வொரு வருஷமும் இந்த ஒன்பது நாளும் அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளில் ஒரு பழம் கூட விட்டு வைக்காமல் நம்மூர் பெண்கள் வழித்து கொண்டு போவதாக ஊரில் பேச்சு.  நானே எங்க வீட்டு கொலுவுக்கு வரவங்களுக்கு கொடுக்க  போன வாரம் 200 பழங்கள் வாங்கினேன்னா பாருங்களேன்.  வீட்டுக்கு வந்தவங்களுக்கு தாம்பூலத்தில் ஆளுக்கு ரெண்டு பழம் வைத்து கொடுத்து ஒரு வழியா எங்க வீட்டு பழ மலையை மடுவாக மாத்தி விட்டு நிமிர்ந்தால், வந்தவங்க அன்போடு எங்கள் கொலுவுக்கு கொண்டு வந்து குமித்திருந்த ஆப்பிளும் ஆரஞ்சும் வாழைப்பழமும் என்னை பார்த்து கெக்கலி கொட்டிச்சு.  எவ்வளவு தான் நாங்களும்  ஜூஸ் பண்ணி குடிக்க முடியும், சொல்லுங்க?  ஆப்பிள் ரசம், ஆப்பிள் தொக்கு, ஆப்பிள் ஜேம், வாழைப்பழ அப்பம், வாழைப்பழ பிரெட்......இதுக்கு மேல என்ன பண்ண முடியும்?  வேறே சமையல் குறிப்பு தெரிஞ்சா சொல்லுங்களேன் ப்ளீஸ். 

சவால் #4:

"மீனா, எங்க கொலுவில் இந்த வருடம் எந்த பொம்மை புதுசுன்னு சொல்லுங்க பார்க்கலாம்?"  - இப்படி அதிரடியாக கிளம்பும் திடீர் தேர்வுகள். ஆவலோடு என் முகத்தை பார்த்து இந்த கேள்வியை கேட்கும் இரிச்மண்டு  பெண்களை பார்த்தால் எனக்கு என்னவோ பாவமாக  தான் இருக்கும்.  இந்த மாதிரி தேர்வில் என்னிக்குமே நான் பாசானதாக சரித்திரம் இல்லை.  எனக்கு மட்டும்  சொல்லணும்னு ஆசை இருக்காதா?  ஆனால் பாருங்க, எங்க வீட்டு கொலுவில் என்ன பொம்மை  இருக்குன்னு எனக்கே கொஞ்சம் சுமாரா தான் நியாபகம் இருக்கும் போது, போன வருடம் உங்க வீட்டில் ஒரு ஐந்து நிமிஷம் நான் பார்த்த பொம்மை எனக்கு நினைவிருக்கும்னு நீங்க எப்படி எதிர்பார்க்கறீங்க?  இதுக்காக எல்லாம் கோவிச்சுக்கிட்டு என்னை போல மறதி உள்ளவங்களுக்கு சுண்டல் தராம மட்டும் இருந்தீங்கன்னா அது ரொம்ப தப்பு.  தேங்காய் மாங்காய் போட்ட அமர்க்களமான சுண்டல் இல்லை அப்படீன்னாலும் பரவாயில்லை. ஒரு சுமார் சுண்டலையாவது ஆறுதல் பரிசாக கொடுத்துடுங்க, சரியா?  

என் நவராத்திரி சவால் பட்டியல் இன்னும் ரொம்பவே நீளம்.  அதனால் இன்னிக்கு இதோடு நிறுத்திக் கொண்டு,  ஊரெல்லாம் சுண்டல் மணம் கமழும் இந்த நவராத்திரி சீசனில்  அனைவருக்கும் என் நவராத்திரி வாழ்த்துக்கள் சொல்லி விடை பெறுகிறேன். 

-மீனா சங்கரன் 

Tuesday, December 19, 2017

கச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3

இந்த வாரக்கடைசியில் இந்தியாவை விட்டு கிளம்பணும். அதுக்குள்ள நிறைய கச்சேரிகளையும் , காண்டீன்களையும்  பார்த்திடணும்னு  சபதம் எடுத்து தினமும் ரெண்டு அல்லது மூணு கச்சேரி சபாக்களுக்கு  விடாமல் படை எடுக்கிறேன்.

Ola டாக்சி கம்பெனி ஆளுங்க காந்தி சிலைக்கு பக்கத்துல எனக்கும் சிலை எழுப்ப ஏற்பாடு பண்ணறாங்கன்னு ஒரு வதந்தி இருக்கு. இந்த ரெண்டு வாரத்தில், கொண்டு வந்த அந்நிய செலாவணில முக்காலுக்கும் மேல நான் ஓலா டாக்சிக்கு கொடுத்தேங்கறது உண்மை தான். அதுக்காக காந்திக்கு சமமா எனக்கு சிலை எழுப்பரதெல்லாம் அதிகமா படறது.  ஏதோ மனசுல பட்டதை சொல்லறேன். அப்புறம் அவங்க இஷ்டம்.

சென்னைல மக்கள் தொகை பெருக்கத்தை கண் கூடா பார்க்கணும்னா சாயந்திரம் நாலு மணிக்கு மேல ஏதாவது ஒரு கச்சேரிக்கு கிளம்பி வந்தா போதும். தெருவுக்கு தெரு ஒரு கச்சேரி இருந்தாலும் சாயந்திரம் நடக்கும் எல்லா கச்சேரிகளிலும் கும்பல் அலை மோதுவது ஆச்சர்யம் தான். 

நாலு நாள் முன்னாடி அபிஷேக் ரகுராம் அவர்களின் கச்சேரிக்கு போயிருந்தேன்.  இடம் கிடைக்காதோன்னு ரெண்டு மணி நேரம் முன்னாடியே போய் இடம் பிடிச்சது நல்லதா போச்சு. சீக்கிரமா போய் இடம் பிடிக்கற நல்ல பழக்கத்தை சின்ன வயசுல என் அப்பா கிட்ட தான் கத்துண்டேன்.  ராத்திரி எட்டு மணி ரயிலுக்கு காலை பத்து மணிக்கே ஸ்டேஷன் போய் உக்காந்து ப்லாட்போர்ம் பெருக்கி துடைப்பதை கண் கொட்டாம ஆசையா பார்க்கற குடும்பம் எங்களது தான்.

அபிஷேக்கோட கச்சேரிக்கு சீக்கிரம் போனது நல்லதா போச்சு. முதல்ல உட்காரும் சேரெல்லாம் காலி. அப்புறம் நடை பாதைல ஒரு இன்ச் இடத்தை கூட வேஸ்ட் பண்ணாம  மக்கள் உட்கார்ந்தாங்க. வேற வழி தெரியாம சபா ஆட்கள் ஒரு பெரிய ஜமக்காளத்தை மேடைக்கு கீழ விரிக்க ரெண்டு நிமிஷத்துல அதுவும் கூட full ஆகவே அடுத்து மக்கள் பாய்ஞ்சது மேடைக்கு ஏறும் படிக்கட் மேல தான். அபிஷேக் சாரோட  மடி மட்டும் தான் பாக்கி இருக்குன்னு ஆனதும் தான் கதவை ஒரு வழியா பூட்டினாங்க. ஸ்பைடர் மேன் மாதிரி சுவத்துல ஒட்டிக்க கூடிய திறமை மட்டும் மனிதனுக்கு இருந்திருந்தா இன்னும் நூறு பேராவது குறைஞ்சது அந்த அருமையான கச்சேரியை ரசிச்சிருக்கலாமேன்னு என்னால நினைக்காம இருக்க முடியலை.

நிறைய சபாக்களில் காலை 9 மணியிலேர்ந்தே கச்சேரிகள் ஆரம்பம். வெளிநாட்டிலேர்ந்து வரும்  நிறைய இளம் பாடகர்கள் இந்த நேரத்துல  தான் பாடறாங்க. ரொம்ப  அருமையா பாடற இந்த இளம் வித்வான்களின் திறமையை கேட்க நிறைய கும்பல் இல்லாதது வருத்தமா தான் இருக்கு. பகல் உணவை முடிச்சப்புறம் ரெண்டு மணி நேரம் தூங்கி எழுந்து காபி குடிக்கற நேரமா தான் மக்கள் சபா கான்டீனை பார்த்து போறாங்கன்னு என்னோட அனுமானம். அவங்களை சொல்லியும் குத்தமில்லை. காப்பின்னா அது கான்டீன் காப்பி தான். ரொம்பவே சூப்பர். 

இப்பல்லாம் அடிக்கடி எனக்கு கனவுல குழிப்பணியாரமும்,  கீரை வடையுமா  வருது.  எப்பவாவது தான் வாழைப்பூ வடையும் வாழைக்காய் பஜ்ஜியும் வரும்.  எது வந்தாலும் வராட்டாலும் ஒவ்வொரு கனவிலும் கரெக்ட்டா ஆஜராவது சபா கேன்டீன் காப்பி தான்.  வாரக்கடைசியில் ஊருக்கு போன பிறகு என் குடும்பத்தினருக்கு அடுத்து நான் ரொம்ப மிஸ் பண்ணுவது இந்த கான்டீன் காப்பியா தான் இருக்கும்னு நினைக்கிறேன்.

பாட்டை தலை ஆட்டி ரசிக்கறச்சே பேசாம கண்ணை மூடிக்கறது தான் நமக்கு நல்லது என்பதை இந்த இரண்டு வார அனுபவம் எனக்கு கற்று கொடுத்திருக்கு. இல்லைன்னா அடுத்த நாற்காலியில் உட்கார்ந்திருப்பவர் நம்ம கிட்ட ராகம் பேரை கேட்க வாய்ப்பிருக்கு.  ஏதோ பத்துல நாலு ராகம் தட்டு தடுமாறி சொல்லிடுவேன்.  மிச்சது multiple choice ல ஜம்முனு விட்டுடுவேன். ராகம் தெரிஞ்சா மட்டும் தான் கண்ணை திறந்து வச்சுக்கறது.  ராகம் புரியலைனா கண் மூடி த்யானத்துல ஆழ்ந்திடுவேன்.  அனாவசியமா நம்மை யாரும் அப்போ தானே கேள்வி கேட்க மாட்டா. வாழ்க்கை நமக்கு எத்தனையோ பாடங்களை கத்து கொடுக்கிறது. அதுல இது ரொம்ப முக்கியமான ஒண்ணு அப்படிங்கறது என்னோட அபிப்ராயம். 

ரெண்டு வாரமா என்னை தொடர்ந்து வந்து என் கூட கச்சேரி அனுபவங்களை பகிர்ந்து கொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி கூறி இந்த கச்சேரி கலாட்டா தொடரை இத்துடன் முடித்து கொண்டு விடை பெறுகிறேன்.

- மீனா சங்கரன்
வர்ஜீனியா, அமேரிக்கா

Thursday, December 14, 2017

கச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 2

நான் வெளிநாட்டிலேர்ந்து சென்னைக்கு  வந்து இறங்கி இன்னியோட ஒரு வாரம் ஆகிறது.  தினமும் தேடித் தேடி கச்சேரி சபாக்களை விஜயம் பண்ணினதுல  இப்போ எந்த கச்சேரிக்கு போனாலும் கண்ல படற மாமா மாமிகளை பார்த்து சிரிச்ச முகமா ''சௌக்கியமா, இன்னிக்கு கேன்டீன்ல என்ன மெனு'' ன்னு கேக்கற அளவுக்கு என் நட்பு வட்டம் பெருகியிருக்குன்னா பாருங்களேன்!

ஊருக்கு வந்திறங்கிய ரெண்டாம் நாள் சாயந்திரம் நான் போன இடம் இன்னிக்கு சங்கீத உலகத்தின் சிகரத்தில் இருக்கும்  ஒரு சகோதரிகளின் கச்சேரிக்கு.  அதெப்படி வாயை திறந்தாலே இவங்க  ரெண்டு பேருக்கும் பாட்டு சும்மா காசி அல்வா மாதிரி  வழுக்கிக் கொண்டு வந்து விழறது. அப்படிங்கற அதி முக்கிய ஆராய்ச்சியை அதிக நேரம் செய்யாமல் கச்சேரியை ரசிக்க ஆரம்பிச்ச நான் உட்கார்ந்திருந்தது எட்டாவது வரிசையில்.

தர்பார் ராக வர்ணத்திலே சபையை சுண்டி இழுக்க ஆரம்பித்த   ரெண்டு பேரும் அடுத்தடுத்து ஆரபி, ஹிந்தோளம் மற்றும் பந்துவராளி கீர்த்தனைகளை அருமையாய் பாடி ஒட்டு மொத்தமா மக்களை மயக்கி கை தட்டலை வாங்கினது குறிப்பிடத்தக்கது..  ரசிப்போட உச்சத்துல  தலையை இப்படியும் அப்படியுமா ஆட்டினதுல நாலாவது பாட்டு முடியறதுக்குள்ள எனக்கு கழுத்துல சரியான சுளுக்கு.  எனக்காவது பரவாயில்லை. பக்கத்துல ஒரு மாமா  சபாஷ், பலே சொல்லி சொல்லியே நாக்கு வறண்டு, ஓய்ந்து போய் உக்காந்திருந்தார் பாவம்.

எல்லா சங்கீத வித்துவான்களுக்கும்  விதூஷிகளுக்கும் இந்த  ரசிகையோட பணிவான வேண்டுகோள் இது தான்.  அடுத்தடுத்து எல்லாப் பாட்டையும் நீங்க அசத்தலா பாடிக்கொண்டே போனா   ரசிகர்களோட நிலைமை என்னன்னு கொஞ்சமாவது நீங்க  யோசனை பண்ணி பார்க்கணும்.  அப்பப்போ நடுவுல கொஞ்சம் சுமாரா ஒரு பாட்டு பாடினா தானே நாங்களும் ஒரு வாய் மோரோ, தண்ணியோ குடிச்சு  ஆசுவாசப்படுத்திக்க முடியும்?  நீ இரங்காயெனில் புகல் ஏது அப்படீன்னு அடுத்த சபாவுக்குள்ள நுழைஞ்சு உங்களை பார்த்து நான் பாடறதும் பாடாததும் உங்க கைல தான் இருக்கு, சொல்லிட்டேன்.

முதல் நாலு பாட்டு வரை  தெம்பா தலை ஆட்டிண்டு இருந்த  எனக்கு வந்த சோதனை அடுத்ததா சகோதரிகள் பாடின சஹானா ராக ''கிருபை நெலகொன்ன'' கீர்த்தனை மூலமா தான்.  சஹானா ராகம் சும்மாவே சொக்குப் பொடி போடும்.  எனக்கோ ஜெட் லாக்.  இந்த சகோதரிகள் வேறு  தேன்ல குழைச்சு நெய்ல தோச்ச குரலில்  மக்களை அசத்தித் தான் ஆவோம்னு  கங்கணம் கட்டிண்டு பாடினா நானும் தான் என்ன செய்ய முடியும்? 

எட்டாவது வரிசைல  கண் சொக்கி போய் உட்கார்ந்திருந்தது என் குத்தமா?  பிரிய மாட்டேன்னு அடம் பிடிச்ச இமை ரெண்டயும்  கையால எத்தனை நேரம் தான் நானும் பிரிச்சு பிரிச்சு விட முடியும்?  எடுத்த முயற்சியில் கை  விடா விக்ரமாதித்தன் போல என் கன்னத்தை நானே வேகமா பட்டு பட்டுன்னு அடிச்சு கூட பார்த்தேன்.  மேடையிலிருந்த சகோதரிகள் என்னை மரியாதையா (?) பார்த்தது மட்டுமில்லாம பக்கத்துல இருந்த மாமா மாமி எல்லாம்  என் கிட்டேர்ந்து  நைசா நகர்ந்து அடுத்த வரிசைக்கு போய் உட்கார்ந்தது தான் மிச்சம். தூக்கம் கலைஞ்ச பாடு இல்லை.

சரி, கான்டீன் பக்கம் போய் ஒரு கப் காப்பி சாப்பிட்டுட்டு வருவோம்னு நினைத்து கடிகாரத்தை பார்த்தா ராத்திரி மணி ஏழே முக்கால்.  அடடா எட்டாக போறதான்னு  உடனே பாய்ஞ்சு கான்டீனுக்கு தலை தெறிக்க ஓடினேன்.  ஏன் என்ன அவசரம்னு விவரமில்லாம நீங்க கேட்டாலும் நான் பொறுமையா தான் உங்களுக்கு பதில் சொல்லுவேன்.

இந்த ஒரு வாரத்துல நான் அனுபவப்பட்டு கற்றது இது தான்.  ராத்திரி சரியா மணி எட்டு அடிச்சா சபாவில் உள்ள பாதி மாமாக்களும் மாமிகளும் கொண்டு வந்த துணிப்பையை தூக்கிண்டு கும்பலா வெளிநடப்பு பண்ணிடுவா.  அந்த சரஸ்வதியே பூலோகம் இறங்கி வந்து கச்சேரி பண்ணினாலும் இதே கதி தான்.  என்னோட காப்பி கொட்டை சைஸ் மூளையை கசக்கி நான் யோசனை பண்ணதுல தான் தெரிஞ்சுது இவா எல்லாம் சாப்பிட்டுட்டு சுகர் மாத்திரை போடற நேரம் அதுன்னு.  கிளம்பர கும்பல்ல பாதி பேர் தோசை கனவோடு வீட்டுக்கு போனா மிச்ச பேர் கான்டீன் டேபிள்ல மாத்திரை டப்பாவை திறந்துண்டு உட்கார்ந்திடுவா. இவாளுக்கு முன்னாடி போய்  கர்சீப் போட்டு சேர் பிடிக்க தான் நான் அப்படி தலை தெரிக்க ஓடினேன்.

வந்ததோ வந்தோம், காப்பிக்கு துணையா இருக்கட்டுமேன்னு ஒரு தட்டு குழிப் பணியாரத்தையும் சேர்த்து சொல்லிட்டு தான் உட்கார்ந்தேன். இந்த சகோதரிகளோ  இன்னும் குறைஞ்சது ரெண்டு மணி நேரமாவது மேடையில் கலக்குவா போல தெரியுது.  கை  தட்ட எனக்கும் தான் தெம்பு வேண்டாமா சொல்லுங்கோ?

-மீனா சங்கரன்


Friday, December 8, 2017

கச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 1

சாம்பார் வடைக்கு அப்புறமா நான் அதிகமா ஜொள்ளு விட்டுக்  கணட  கனவு, மார்கழி மாசத்துல சென்னைக்கு  வந்து தினமும் ஆசை தீர பாட்டு கச்சேரிகள் கேட்பது தான்.  நான் இத்தனை நாளா கஷ்டப்பட்டு விட்ட ஜொள்ளுக்கு பலனில்லாம போகலை.  கடவுள் ஒரு வழியா இந்த வருஷம் என் கனவை நனவாக்கிட்டார்.

பெட்டி நிறைய புடவையும் மனசு நிறைய கச்சேரி ஆசையுமா நேத்து சென்னை வந்து இறங்கின எனக்கு ஒரே இன்ப அதிர்ச்சி.  பல வருஷங்களா நானும்  சென்னைக்கு வந்து போயிண்டு இருக்கேன்.  எப்பவும் நெத்திக் கண்ணை திறந்து உக்கிரமா முறைச்சு பார்த்து, தமிழ் சீரியல் மாமியார்களை நினைவுபடுத்தும்  சூரியனை பார்த்தே பழக்கப்பட்ட  எனக்கு இந்த இளம் சூட்டோட இனிமையா வரவேற்கும் மார்கழி மாச சூரியன் புதுசு.  பயணம் ஆரம்பமே மனசுக்கும் உடம்புக்கும் இதமா இருந்தது.

காப்பி குடிச்ச கையோட கச்சேரி லிஸ்ட்டை பார்க்க காலை பேப்பரை புரட்டின எனக்கு கண்ணை இருட்டிண்டு வந்தது தான் மிச்சம்.  ஒரு ஊர்ல  இவ்வளவு சபாக்களா? ஒரே நாள்ல, ஒரே நேரத்துல இவ்வளவு கச்சேரியா? எதுக்கு போறதுன்னு  ரொம்ப நேரம் குழம்பி ஒரு வழியா இங்கி பிங்கி பாங்கி தயவுல ரெண்டு கச்சேரியை தேர்வு செய்து நிமிர்ந்த போது ஏதோ மலையை புரட்டின உணர்வு.

அடுத்தடுத்து நடக்கப் போகும் ரெண்டு கச்சேரிகளை கேட்க ஆவலா (ஆனா கொஞ்சம் லேட்டா) அரங்கத்தில் நுழைஞ்ச நானும் என் கணவரும்  ஆச்சர்யத்தில் அப்படியே நின்னுட்டோம் .  நாலு தக்காளியை தூக்கி கும்பலுக்கு நடுவில்  போட்டா மிக்சி இல்லாமலே நிமிஷமா சட்னி ரெடியாரா மாதிரி ஒரு மக்கள் சமுத்திரம்!  இதே வித்வான் எங்க ஊருக்கு வந்து கச்சேரி பண்ணின போது ஹாலில் ஈ ஓட்ட தனியா ஆள் போட்ட ஞாபகம். சொத்தில்  பாதி எழுதி வைக்கறேன்னு சத்தியம் பண்ணாக்கூட கச்சேரிக்கு வர மாட்டேன்னு அடம் பிடிக்கற எங்க ஊர் மக்களை பார்த்தே பழகிட்ட எனக்கு இது ஒரு புது அனுபவம்.

எங்களுக்கு முன்னாடியே வந்து எங்களுக்காக  ரெண்டு சீட் போட்டு வச்சிருந்த என் தங்கைக்கு நான் கணக்கில்லாமல் கடன் பட்டிருக்கேன். காலேஜ் போற காலத்துல  காலை நேர அவசரத்தில்  எனக்கு பிளவுசுக்கு பட்டன் தச்சு தந்ததிலேர்ந்து இப்போ வருஷா வருஷம் நான் இந்தியா வரதுக்கு முன்னாடியே எனக்காக  பார்த்து பார்த்து துணிமணி வாங்கி, நான் ஒவ்வொரு முறையும் கண்டதையும் சாப்பிட்டு வயித்த வலியில் சுருண்டு படுக்கும் போது  விடாம என்னோட ஆஸ்பத்திரிக்கு அலைவது வரை பாசத்தில் அவளை மிஞ்ச நான் பல பிறவி எடுக்க வேண்டியிருக்கும்.

இதென்னடா காமெடி படம் போட்டா பாசமலர் படம் ஓடுதேன்னு நீங்க நினைக்கறது எனக்கு புரியாம இல்லை. அப்பப்போ சீரியஸ் சீன் இல்லைனா காமெடிக்கு என்ன வேல்யூ சொல்லுங்க?  சரி சரி  இதோ அடுத்த சீன் மாற்றம்.

ஜன சமுத்திரத்தில் நீச்சல் அடிச்சு ஒரு வழியா எங்களுக்கான சீட்டுக்கு வந்து சேர்ந்த போது ஒரு பன்னீர் சோடா பாட்டிலை நினைச்சு நான் ஏக்கப்பட்டது உண்மை தான் ஆனால் மேடையில் மோஹனம் ராக ஆலாபனா சூடு பிடிக்க ஆரம்பிச்சதுல பன்னீர் சோடா நினைவை  தற்காலிகமா ஒத்தி வைக்க முடிவு பண்ணி உட்கார்ந்தேன்.  ஆ......என்னதிது? இந்த பிளாஸ்டிக் சேரோட மிச்ச பாதி எங்கே போச்சு? அவசரமா மத்தவங்க சேரையெல்லாம் எட்டிப் பார்த்ததுல சேர் கம்பெனிக்காரன் ஒட்டு மொத்தமா எல்லார்க்கும் கரும்புள்ளி செம்புள்ளி அடிச்சுட்டான்னு புரிஞ்சது.  வாழ்க்கைல நான் அதிகமா எதுக்கும் ஆசைப்பட்டது கிடையாது. உட்காரற சேர்ல சீட் கொஞ்சம் பெருசா இருக்கணும்னு ஆசைப்படறது அவ்வளவு பெரிய தப்பா? தஞ்சாவூர் பொம்மை மாதிரி ஆடி ஆடி எவ்வளவு நேரம் தான் ஒருத்தர் பாலன்ஸ் பண்ண முடியும் சொல்லுங்க?

முன் சீட் சேரை பிடிச்சிண்டு ஒரு வழியா சமாளிச்சு உட்கார்ந்த போது தான் அதை கவனிச்சேன்.  கண்ணுக்கு தெரிஞ்ச வரைக்கும் எனக்கு முன்னாடி உட்கார்ந்திருந்தது எல்லாம் மாமாக்களும் மாமிகளும்  தான்.  சொல்லி வச்சா மாதிரி எல்லா மாமிகளின்  கொண்டையிலும் சின்னதா கிள்ளிய மல்லிப்பூ சரம்.  மாமாக்கள் எல்லோரும் இசைக்கு ஏற்ற மாதிரி தலையையும் கையையும் ஆட்டி ஆட்டி ரசிப்பதை பார்க்க ரொம்ப அழகா இருந்தது.  ஒரு சிலர் தாளம் கூட போட்டார்கள் ஆனா யார் பாடற பாடலுக்குன்னு தான் சரியா புரியலை.

மாமிகளில் ஒரு சிலர் ரொம்ப trendy யா ப்ளௌஸ் போட்டிருப்பதை என் தங்கை தான் சுட்டி காமிச்சா.  எனக்கு அதிலெல்லாம் கொஞ்சம் விவரம் பத்தாது. அவ சொல்லி தான் எனக்கு தெரியும் இப்போதைய trend புடவைக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாம ப்ளௌஸ் போடுவது அப்படீன்னு.  பச்சை புடவைக்கு நீல கலர் ப்ளௌஸ் போட்டு கலக்கிய மாமிக்கு தான் முதல் பரிசுன்னு என் தங்கையோட கலந்தாலோசிச்சதுல புரிஞ்சுண்டேன்.  குனிஞ்சு என் புடவை பிளவுசை பார்த்ததுல வெக்கமா போச்சு. யூனிபோர்ம் மாதிரி மாட்சிங்கா போட்டுண்டு வந்திருந்தேன்.  அரங்கத்துல என்னை மாதிரி மாட்சிங்கா புடவை ப்ளௌஸ் போட்டிருந்த சில பெண்களை பார்த்து 'பாவம் NRI ' யா இருக்கும்னு நினைச்சு பெருமூச்சு விட்டு மேடையில் கவனத்தை வைத்தேன். 

காப்பி ராகம் காதில் தேனா பாய்ந்ததில் திடீர்னு வயித்துக்கும்  ஏதாவது பாய்ந்தா நல்லா இருக்கும்னு தோணித்து.  இந்த அரங்கத்தில் சாப்பிட எதுவும் கிடைக்காதுன்னு நல்ல காலம் முன்னாடியே விசாரிச்சு கண்டுபுடிச்சதுல  நான் வரும்  வழியிலேயே அடையார் ஆனந்தபவன் ல காரை நிறுத்தி கார போண்டா, கார கொழுக்கட்டை மற்றும் சமோசா எல்லாம்  பாக் பண்ணி சமயோஜிதமா வாங்கிண்டு வந்துட்டேன்.  செவிக்கு மட்டும் உணவு போதும்னு சொல்ல நான் என்ன லூசா? காபியோடு ஒரு கார போண்டாவை உள்ள தள்ளின போது தேவாம்ருதமா தான் இருந்தது.

எனக்கு முன்னாடி உட்கார்திருந்த மாமா கார போண்டா வாசனைல திரும்பி  பார்த்து எங்களை கொஞ்சம் முறைச்சா மாதிரி இருந்தது.  மாமா நீங்க தப்பு தப்பா தாளம் போட்ட போது நான் உங்களை முறைச்சேனா? அப்போ நீங்க மட்டும் ஏன் என் கார வடைல கண் போடறேள்?  அப்படீன்னு நான் mind வாய்ஸ் ல மாமாவோட செல்லமா சண்டை பிடிச்ச முடிச்ச போது மேடையில்  கமாஸ் அமர்க்களப்பட்டுண்டு இருந்தது.  வித்வான் கமாஸோட இண்டு இடுக்குல எல்லாம் பூந்து விளையாடிண்டு இருந்தார்.  தமிழக் கடவுளான முருகன் மீது அழகான ஒரு தமிழ்ப் பாட்டு.  கார போண்டாவை காத்தோடு  விட்டுட்டு பாட்டில் ஐக்கியமாகி கச்சேரி சுருட்டி ராகக் கீர்த்தனையோடு முடியும் போது தான் நான் நிஜவுலகுக்கு திரும்பினேன்.

கச்சேரி முடிஞ்சு கும்பலோட வெளியில் வந்த போது தான் கவனிச்சேன் என்னை சுத்தி எத்தனை அருமையான சங்கீத வித்வான்கள் நடந்து வராங்க அப்படீன்னு.  வலது பக்கம் ஒரு மாமா வராளியை கிழிக்க இடது பக்கம் ஒரு மாமி பைரவியை முணுமுணுக்க  என்னோட கச்சேரி கனவை இவ்வளவு அருமையா நனவாக்கிய கடவுளுக்கு நன்றி கூறி நானும் ஏதோ பாட்டை முணுமுணுத்துண்டே என் கணவரோடு வீட்டை பார்த்து நடையை கட்டினேன்.

-தொடரும்

Monday, November 20, 2017

வாழ்க உன் குலம்! வளர்க உன் தொண்டு!

போன வாரம் நடந்த தமிழ்ச்சங்க கலை நிகழ்ச்சிகளில் மிக அதிகமாக மேடையேற்றப்பட்டது நடன நிகழ்ச்சிகள் தான்.  நமக்கு நடுவில் இவ்வளவு நாட்டிய பேரொளிகளா அப்படீன்னு நான் கண்ணிடுக்கி ஆச்சர்யப்படும் அளவு சக ரிச்மண்ட் வாசிகள் நேத்து அரங்கத்தை அவங்க குதிகாலால் கலக்கினாங்க. ஒரு மத்திய தர குடும்பத்தலைவி அன்போடு செய்யற பாயசத்துல  இங்கொண்ணும் அங்கொண்ணுமா ஏகாந்தமா மிதக்குமே முந்திரிப் பருப்பு அதே போல நாலு நடனங்களுக்கு நடுவில் ஒரு நாடகம், ஒரு பட்டிமன்றம் அப்படீன்னு தூவி  அம்சமா தொகுத்து வழங்கியிருந்தாங்க ரிச்மண்ட் தமிழ்ச்சங்க நிர்வாக குழு.  


ஐந்தாறு பேர் கொண்ட குழுவா மேடை ஏறி விறு விறுன்னு சுழன்று ஆடிய பெண்கள் ரொம்பவே அசத்தினாங்க..  அவங்க கை காலை வெட்டின ஜோர்ல எனக்கு தான் வலது தோள்பட்டையில் கொஞ்சம் முணுமுணுன்னு வலி.  வீட்டுக்கு வந்தவுடனே மறக்காம Bengay தடவிட்டு தான் படுத்தேன்.  Sympathy வலியை நான் என்னிக்கும் குறைவா எடை போடறது கிடையாது.


மேடை ஏறிய அஞ்சே நிமிஷத்துல குறைஞ்சது 1000 கலோரியை அசால்ட்டா எரிச்ச அந்த பெண்களை பார்த்து நான் வயிறெரிஞ்சுது உண்மை தான்.  இட்லிப்பானை  மாதிரி என் ரெண்டு காதுலயும் அவங்க ஆட்டத்தை பார்த்து புகை வந்ததுக்கு காரணம் இல்லாம இல்லை.  சரி இதை ஏன் இப்படி ஊருக்கே சொல்லி ஷேம் ஷேம் ஆகணும்னு கேட்டீங்கன்னா அரிச்சந்திரனோட பக்கத்து வீட்டு மாமாவின் சின்ன வயசில்  தொலைந்து போன தங்கச்சி மகளா நான் இருப்பது தான் அதுக்கு காரணம்.  எவ்வளவு கசப்பான உண்மையா இருந்தாலும் மறைக்க முடியறதில்லை.


நீங்க அதிர்ச்சி  அடையாம இருப்பீங்கன்னா ஒரு விஷயத்தை இப்போ சொல்லுவேன்.  நானும்  கடந்த சில நாட்களா நாட்டிய வகுப்புகளுக்கெல்லாம் போயிட்டு வரேன்.  பரதம், குச்சிப்புடி மேல பரிதாபப்பட்டு விட்டுட்டு மேல்நாட்டு வழக்கமான ஸ்டெப் dance மற்றும் tango இப்படி சில விபரீத முயற்சிகள்ல இறங்கியிருக்கேன்.  இது என்னடா ரிச்மண்டுக்கு வந்த சோதனைன்னு நீங்க பதறுவது புரியாமல் இல்லை.  என்ன செய்யறது?  பக்கத்து உடற்பயிற்சி கூடத்துக்கு போன ஜென்மத்து கடன் பாக்கி மாதிரி வருஷா வருஷம் பெரிய தொகையா கட்டி என்னை டென்சன் ஆக்குவது என் கணவர் தான்.  நான் பாட்டுக்கு நிம்மதியா என் sofa உண்டு என் சேர் உண்டுன்னு வாழ்க்கையை ஓட்டறது அவருக்கு ஏதோ அஜீரணத்தை தருதுன்னு நினைக்கிறேன்.  பேமிலி membership எடுத்து கொடுத்து என்னை நல்வழியில் நடத்த முயற்சி செய்யறார்.  நான் சாதாரண வழியிலயே  நடக்க மாட்டேன்.  இதுல என்னை நல்வழில வேற நடத்தணும்னா சுலபமான காரியமா?


ஸ்டெப் டான்ஸ் வகுப்பறைக்குள்ள முதல் தடவை எட்டிப் பார்த்த போது வயித்துக்குள்ள இருந்த வெங்காய  ரவா தோசை மைக்கேல் ஜாக்சன் மாதிரி குதியாட்டம் போட்டது.   ‘காக்க காக்க கனகவேல் காக்க’ முணுமுணுத்துண்டே தான் அந்த அறைக்குள்ள நுழைஞ்சேன்.  என் பெற்றோர் பண்ண புண்ணியம் என்னை என்னிக்கும் கை விடாதுன்னு எனக்கு நானே பல முறை ஞாபகப்படுத்தி கொள்ள வேண்டியிருந்தது.   அறைக்குள்ள நுழைஞ்சு  சுத்தி முத்தி பார்த்தா இன்முகத்தோட என்னை வரவேற்ற பத்து பெண்களுமே என்னை விட வயதில் மூத்தவங்க.  அப்படியே பூரிச்சு போய்ட்டேன். ஆஹா இவங்களே ஆடும் போது நாம ஆடிட மாட்டோமா?  இப்படி நினைச்சு சந்தோஷத்துல நெஞ்சை நிமிர்த்தி தைரியமா நின்ன  என்னை பார்த்து விதி கை கொட்டி சிரிச்சது அப்போ எனக்கு தெரியாம போச்சு.


எங்க நடன வகுப்பு ஆசிரியை அப்போ உள்ளே நுழைஞ்சார்.  ரொம்ப சிரித்த முகமா அமைதியா இருந்த அவரைப் பார்த்த உடனே ஒரு பெரிய டம்ளர் ஓட்ஸ் கஞ்சி குடிச்ச தெம்பு எனக்கு.  அந்த டீச்சரம்மா சஷ்டியப்தபூர்த்திக்கும் சதாபிஷேகத்துக்கும் நடுவுல எங்கயோ இருப்பார்னு என்னோட யூகம்.  


Dance ஆட ஆரம்பிக்கும் முன் கை  காலை நீட்டி stretch செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய டீச்சரம்மா முதல்ல குனிஞ்சு அவரவர் காலை தொட சொன்னார்.  ஹுக்கும்! அவர் பாட்டுக்கு சுலபமா சொல்லிட்டார். என்னை சுத்தி எல்லோரும் இடுப்பு வரை முழுசா மடங்கின போது என் முதுகு அரை இஞ்சுக்கு மேல மடங்குவேனா அப்படீன்னு மக்கர் பண்ணி மானத்தை வாங்கினதை பத்தி ஒரு நிமிஷமாவது அவர் யோசனை பண்ணியிருப்பாரா?.  கைக்கு எட்டாத தூரத்தில் இருந்த என் கால்களை ஏக்கத்தோட பார்க்கறதை தவிர நான் வேறென்ன செய்ய முடியும்?


அடுத்து இசைத்தட்டை போட்டு விட்டு நாங்க ஆட வேண்டிய steps ஐ  சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சாங்க அந்த அம்மா.  முதல்ல வலது காலை ஒரு step முன் வச்சு உடனே பின் வைக்கணுமாம்.  என்னதிது?? சின்ன வயசிலேர்ந்து முன் வச்ச காலை எப்பவும் பின் வைக்கக் கூடாதுன்னு சொல்லி தானே  வளர்த்திருக்காங்க.  என்னடா இந்தம்மா தெளிவா இப்படி குழப்பறாங்களே ன்னு தீவிர யோசனையில் இருந்த நான் அடுத்த நாலு steps ஐ சரியா கவனிக்காம கோட்டை விட்டுட்டேன்.


அதோட பலன் இசைத்தட்டை ஓட விட்டுட்டு dance ஆரம்பிச்சப்போ  அவங்க வலது பக்கமா போனா நான் இடது பக்கமா போய் ஒரு பெரியம்மா மேல அடிக்கடி முட்டி மன்னிப்பு கேட்டது தான்.  தப்பு செய்தா மன்னிப்பு கேக்கறதுல எங்க குடும்பத்துல யாரையுமே மிஞ்ச முடியாது.  இதை நினைச்சு எனக்கு கொஞ்சம் பெருமை தான். சில நேரம் தப்பு செய்யறதுக்கு முன்னாடியே கூட உஷாரா மன்னிப்பை கேட்டுடுவோம்.  பிற்காலத்துல எப்பவாவது உதவுமே!  என் மேல மோதி மோதி வாழ்க்கைல ரொம்பவே அடிபட்டுட்ட அந்த பெரியம்மா வை அப்புறம் அந்த வகுப்புல ஏனோ பாக்கவே முடியலை. பார்த்தா கண்டிப்பா இன்னொரு முறை மன்னிப்பு கேட்டுடுவேன்.


ஒரு மணி நேரம் நாட்டியம் அப்படிங்கற பேருல என் இடுப்பை டிங்கு வாங்கின டீச்சரம்மா கடைசியில ஒரு பத்து நிமிஷம் யோகா பயிற்சி செய்ய சொல்லி என் வயித்துல பால் வார்த்தாங்க.  நல்லா காலை நீட்டி படுத்து  இழுத்து மூச்சு விடணுமாம்.  அம்மா பரதேவதா!  வாழ்க உன் குலம்!  வளர்க உன் தொண்டு! சொதப்பாம நான் செய்ய கூடிய ஒரு விஷயத்தை ஒரு வழியா சொன்னியேம்மா.  இது தான் சாக்குன்னு டக்குனு படுத்துட்டேன்.  இழுத்து மூச்சு விட விட கண்ணை அழுத்தி தூக்கம் வர மாதிரி வேற இருந்தது. சரியா அப்போ பார்த்து class முடிஞ்சுடுத்து.  பக்கத்துல இருந்த அந்த இடிபட்ட அம்மாவையே கை  கொடுக்க சொல்லி எழுந்து ஒரு வழியா நொண்டி நொண்டி வீடு வந்து சேர்ந்தேன்.


எதுக்கு இவ்வளோ பெரிய கதையை சொன்னேன்னா என்னை  போல நாட்டிய பேரொளிகளை எங்கப் பார்த்தாலும் நீங்கள் அவங்க முயற்சியை பாராட்டணும்னு தான். வாழ்க்கைல எவ்வளோ அடிபட்டு மேடை ஏறினாங்களோ அப்படீன்னு ஒரு நிமிஷம் நீங்க கருணையோடு அவங்கள பார்க்கணும் அப்படிங்கறது தான் என் ஆசை.


சமீப தமிழ்ச்சங்க கலை விழாவில் நடனமாடி கலக்கிய ஆண் பெண் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

-மீனா சங்கரன்

Tuesday, September 26, 2017

நவராத்திரி நினைவலைகள் - 2017

வழக்கம் போல ரிச்மண்டில் இந்த வருஷமும் கொலு சீசன் களை கட்ட ஆரம்பித்து இன்னியோட நாள் ஆறு.  வாசல்  கதவை திறந்து வெளியே வந்தாலே  தாளித்த சுண்டல் வாசனைல ஊரே மணக்குது.  அடுத்தடுத்து வடையும், கேசரியும், சு ண்டலும், சர்க்கரைப் பொங்கலுமா வீட்டுல மணத்ததுல எங்க வீட்டு நாய்கள் திடீர் உண்ணாவிரதம். இந்த அச்சுபிச்சு pedigree உணவு அவங்களுக்கு இனி வேண்டாமாம். எங்களுக்கு மட்டும் இதென்ன நாய் பொழப்புன்னு அவங்க வருத்தப் படறதுலயும் ஒரு நியாயம் இருப்பதை மறுக்க முடியலை.

எங்க ஊரை பத்தி இங்க ஒண்ணு சொல்லியே ஆகணும்.  பத்து வருஷத்துக்கு முன்னாடி,  கல்யாண வீட்டு வாசல்ல சும்மா பாவ்லா காட்டி தெளிப்பாங்களே, அந்த பன்னீர் துளி மாதிரி இங்கொண்ணு அங்கொண்ணுன்னு  தான் இருந்தது இந்திய குடும்பங்கள்.   தெரியாம ரெண்டு கூமான்  (Kumon) சென்டர் திறந்தாலும் திறந்தாங்க, அவ்வளவு தான் அமெரிக்காவுல கூமான் இல்லாத ஊரிலிருந்து நம்ம மக்கள் எல்லோரும் அடிச்சு பிடிச்சு ரிச்மண்டுக்கு ஓடி வந்துட்டாங்க.  களை எடுக்காம விட்டத் தோட்டத்துல கட்டுக்கடங்காம வளருமே காட்டுச்செடி அந்த மாதிரி இந்திய மக்கள் தொகை இன்னிக்கு ரிச்மண்டில் பெருகிட்டு வருது. 

ஊர்ல எந்த வீடு விலைக்கு வந்தாலும் அத வாங்கறது ஒரு இந்தியக் குடும்பம் தான்னு bet வைக்கலாம் வரியான்னு கூப்பிட்டா  ஒரு சின்னக் குழந்தை கூட அந்த ஆட்டத்துக்கு வர மாட்டேங்குது. இவ்வளவு புத்திசாலியா நானும் சின்ன வயசுல இருந்திருக்கேனாம்மான்னு  எங்க அம்மா கிட்ட கேட்டா  சந்தோஷத்துல (?) எங்க அம்மாவுக்கு தொண்டை அடைச்சு பேச்சே வர மாட்டேங்குது. 

இந்த பெருகி வரும் இந்திய குடும்பங்களை பார்த்து யார் அதிகமா சந்தோஷப்படறாங்கன்னா அது அமெரிக்க வியாபாரிகள் தான்.   நவராத்திரி சீசன்ல தூக்கி விட்டெரியும் உணவு தட்டுக்கள் மற்றும் டம்பளர்களை   வண்டியோட அள்ளிக்கொண்டு போகும் இந்திய பெண்களை குலதெய்வமாவே  இவங்க கொண்டாடறாங்கன்னு  ஊர்ல பேசிக்கறாங்க. .  நாயகன் ஸ்டைல்ல சொல்லணும்னா நாலு பேருக்கு உதவும்னா இன்னும் நாலு தட்டை எடுத்து போட்டு சாப்பிட்டு விட்டெறிய  ஒரு இந்தியன் என்னைக்குமே தயங்க மாட்டான். புல்லரிக்க வைக்கக்கூடிய புள்ளி விவரங்களில் இதுவும் ஒன்று.

ஆனா உதவிக்கரம் நீட்டறதுல துளி கூட பாரபட்சம் பார்க்காதவங்க நம்ப இந்திய பெண்கள்.   Racial  discrimination அப்படிங்கற வார்த்தையை இந்த ஊர்ல அடிக்கடி கேட்டு காது புளிச்சு போய் தான் அவங்க இப்படி ஆயிட்டாங்க அப்படிங்கறது என்னோட அனுமானம்.  இந்திய வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கும் எங்க அருள் உண்டு அப்படீன்னு இந்த மாசம் இந்திய  மளிகை கடைல உள்ள பயத்தம் பருப்பு, கொண்டைக்கடலை, பச்சை பயறு, வேர்க்கடலை போன்ற தானியங்களை ஒரு பாக்கெட் விடாம வழிச்செடுத்து  வாங்கி வந்து சுண்டலுக்கு ஊற வச்சிட்டாங்க ன்னு நினைக்கறச்ச பெருமை படாம இருக்க முடியலை.

அதென்னவோ இந்த வருஷம் சொல்லி வெச்சா மாதிரி பெண்கள் எல்லோரும்  ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கலர் புடவைகளை தான் விரும்பி இந்த சீசனுக்கு உடுத்தியிருக்காங்க.  புடவைக் கலர்ல தான் மாற்றம் இருக்கே தவிர அவங்க போடும் அகல ஜன்னல் போட்ட  காத்தோட்டமான ஜாக்கெட்டில் எந்த ஒரு மாற்றமும் இல்லைங்கறது விசேஷம்.

ஒரு பெண் எவ்வளவு வீட்டு கொலுவுக்கு போகிறாள் அப்படிங்கறதை அவ சுண்டல் கலெக்ஷனுக்காக எடுத்துப் போகும் பையை வைத்தே சுலபமா சொல்லிடலாம்.  IIT காலேஜ் பசங்க தூக்கிட்டு போற ஜோல்னா பை மாதிரி இருந்தா, அவள்  ஒரு ஐந்தாறு வீட்டுக்கு கிளம்பி இருக்கிறாள்னு அர்த்தம்.  நம்மூர் வண்ணாத்தி சைக்கிளுக்கு பின்னாடி கட்டியிருக்கும்  சலவை துணி பை  சைசில் இருந்தால் அவளுக்கு ஒரு பத்து வீட்டில் அழைப்பு இருக்குன்னு அர்த்தம்.  கோயம்பேடு காய்கறி சந்தைல வந்திறங்கும் கோணிப் பை ரேஞ்சுல பார்த்தீங்கன்னா சர்வ நிச்சயமா அவள் அன்று  நடுராத்திரி வரைக்கும் தெருத்தெருவா சுண்டலுக்கு சுத்தப் போகிறாள் அப்படீங்கறதுல சந்தேகம் இல்லை. 

போன வருஷம் நவராத்திரி blog ல நான் புலம்பினதை ஞாபகம் வச்சிருந்த சில நல்ல மனங்கள் சுண்டலோட இந்த முறை பக்கோடா, உருளைக்கிழங்கு போண்டா மற்றும் அருமையான டீ போட்டு கொடுத்து என் மனசை குளிர வச்சிட்டாங்க.  தெருத்தெருவா சுத்தறதுக்கும் ஒரு தெம்பு வேண்டாமா? நன்றி தோழிகளே. 

இந்த கணவர்கள் சங்கம் தான் என் குரலுக்கு இன்னும் செவி சாய்க்க மாட்டேங்கறாங்க.  மனைவிகள் கஷ்டப்பட்டு வீடு வீடா போய் வாங்கி வர்ற சுண்டல்ல சரி பாதி பங்குக்கு மட்டும் கேக்காமயே வர்றவங்க கொலு அழைப்புக்களை வரிசைப்படுத்தி கொடுக்க ஒரு app  எழுதிக் கொடுக்க கூடாதா?  தெரியாம தான் கேக்கறேன்.  இந்த உலகத்துல கருணை கபடி ஆட போயிருக்கா?  இல்ல நியாயம் தான் கிரிக்கெட் விளையாட போயிருக்கா?  

காலம் இந்தக் கேள்விக்கு நல்ல ஒரு பதிலை சொல்லும்னு நம்பிக்கையோட  எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள் சொல்லி விடை பெறுகிறேன். 

-மீனா சங்கரன்


Monday, June 12, 2017

தில்லாலங்கிடி மோகனாம்பாள்: ஒரு அலசல்

ரிச்மண்ட் நகருக்கு  எங்க குடும்பம் குடி வந்து இதோட பத்து வருஷம் ஆகப் போகுது.  ஒரு சராசரி NRI தமிழச்சி தன் வாழ்க்கையில் கொட்டற குப்பைக்கு எந்த விதத்துலயும்  குறையாம அதே இத்துப்போன  பக்கெட்ல நானும் கொட்டறேன்னு மிதப்பா நினைச்சிட்டிருந்த  என் வாழ்க்கைல நேத்து ஒரு ஆச்சரிய குறி போடும் புது அனுபவம்.

இது நாள் வரைக்கும் தமிழ்ச்சங்கம் தொகுத்து வழங்கியிருக்கும் பல கலை நிகழ்ச்சிகளை சமோசா டீ சகிதம் பல முறை ரசிச்சிருக்கேன் நான்.   சங்கீதம், நாட்டியம், பட்டிமன்றம் எல்லாம் எங்க ரிச்மண்ட் மக்களுக்கு தண்ணி பட்ட பாடு.  ஒரு சிலருக்கு இளையராஜா  ஒண்ணு விட்ட சித்தப்பா முறைனா பலருக்கு  தியாகராஜ ஸ்வாமிகள் வருஷா வருஷம் பொங்கலிட்டு தீ மிதிக்கும் குலதெய்வம்.  இது குயில் பறக்கும் ஊர் அப்படீன்னு  யாரைக் கேட்டாலும் உங்க தலைலயே நச்சுனு அடிச்சு சொல்லுவாங்க.

சரி பாட்டை விடுங்க. வீட்டுக்கு ஒரு மரம்  வளர்த்து நீங்க நிச்சயம் பாத்திருப்பீங்க.  ஆனா தெருவுக்கு ஒரு பெண் குழந்தையை நாட்டியப் பேரொளியாய் வளர்க்கும் ஊரை இதுக்கு முன்னாடி பார்த்திருக்கீங்களா?  பரதம், குச்சிப்புடி,  கோலிவுட், ஹாலிவுட் அப்படீன்னு முழுசா நாங்க நாட்டிய சாஸ்த்திரத்தை  குத்தகைக்கு எடுத்து ரொம்ப நாளாச்சு.  பட்டிமன்றமா? ஹா! நாங்கள் வாய்ச்சொல்லிலும் வீரரடி. வீட்டுக்குள்ளயும் அடிச்சுக்குவோம் அப்புறம் டக்குனு குதிச்சு மேடை ஏறி ஊரறியவும் அடிச்சுக்குவோம்.  கூச்ச நாச்சமெல்லாம் கொஞ்சம் கூட கிடையாது. சொற்போரில் எங்களை வெல்ல இன்னொரு பாப்பையா பிறந்து தான் வரணும்னு பரவலா ஒரு கருத்து இருப்பது உண்மை.

எதுக்கு இத்தனை பெரிய முகவுரைன்னு குழப்பமா இருக்கா?  ஒரு கல்யாணம் பண்ண ஆயிரம் பொய் சொல்லலாம்னு சொன்ன அதே தமிழ் மரபு,  ஒரு பக்கப் பதிவை எழுத முடியாம முழி பிதுங்கி  தவிக்கும் ஒரு அப்பாவி தமிழ் பெண் (நாந்தேன்) நாற்பது வார்த்தையை கூட்டி எழுதினா கோவிச்சுக்கவா போறது?  சரி சரி, நீங்க நெற்றிக்கண்ணை மூடுங்க. விஷயத்துக்கு வந்துட்டேன்.

இந்தியாவிலிருந்து வந்து Y.G. மதுவந்தியின் தலைமையில் நடக்கும் மஹம் கலைக்குழு நேத்து சாயந்திரம் ரிச்மண்ட் இந்துக்  கோவிலில் 'தில்லாலங்கடி மோகனாம்பாள்' அப்படீன்னு ஒரு முழு நீள நகைச்சுவை நாடகம் போட்டு அசத்தினாங்க.  ரெண்டு மணி நேரம் சிரிப்பலையில் அந்த அரங்கமே ஆட்டம் கண்டு போச்சு.  வாய் விட்டு சிரிப்பது ஒரு வரம்.  ஒரு சில மணி நேரம் எல்லாக் கவலையையும் மறந்து ஒரு ஊரையே சிரிக்க வச்ச புண்ணியம் தில்லாலங்கிடி குழுவினருக்கு தான் சேரும்.

மேடை நாடகம் எப்படிப்பட்ட ஒரு அசாத்தியமான கலைன்னு நேத்து வரைக்கும் எனக்கு தெரிஞ்சதில்லை. நடிகர்கள் அவங்க வரிகளை மறந்தா இதுல  take 2 கிடையாது. பார்வையாளர்கள் டீ குடிக்கற ஜோர்ல ஜோக்கை கோட்டை விட்டாங்கன்னா நிறுத்தி அவங்களுக்கு மறுபடியும் எடுத்துச் சொல்ல pause பட்டனும் கிடையாது.  ஒவ்வொரு ஸீனுக்கு நடுவிலும் backdrop மாத்துவதிலிருந்து, லைட்ஸ் சவுண்ட் set பண்ணுவது வரை பல விதத்திலும் கடினமான கலையாக தெரியும் மேடை நாடகத்தை அசால்ட்டாக நேற்று செய்தனர் மஹம் கலைக்குழுவினர்.

சரி இவங்களாவது நாடகம் மேடை ஏத்தறதுல பழம் தின்னு கொட்டை போட்டவங்கன்னு சொல்லலாம்.  தினந்தோறும் கணினியோட வேலையில் மாரடிக்கும்  சில ரிச்மண்ட் வாசிகளும் இதில் பங்கேற்று மிக அருமையாக நடித்து பார்வையாளர்களை அசத்தியது தான் இன்னும் சிறப்பான அம்சம்.

இதுக்கு முன்னாடி வாயை குவித்து எத்தனையோ முறை விசிலடிக்க பாத்து தோத்து போயிருக்கிற  நான் நேத்து எங்க ஊர் ரிச்மண்ட் மக்களை நாடக மேடையில் பார்த்த சந்தோஷத்துல உணர்ச்சி வசப்பட்டு  ஊதிய வேகத்துல எனக்கு முன்னாடி சீட்டுல உட்கார்ந்திருந்தவரோட அழுந்த வாரிய தலைமுடி கலைஞ்சு போச்சுன்னா பாருங்களேன்.  அவர் திரும்பி பார்த்து முறைச்சதும் இனி இப்படி பாசப்பறவையை அடிக்கடி பறக்க விடமாட்டேன்னு அவருக்கு வாக்கு வேற கொடுத்திருக்கேன்.

மஹம் குழுவிற்கும், அவர்களை இங்கு வரவழைத்து 'தில்லாலங்கிடி மோகனாம்பாள்' நாடகத்தை எங்களுக்கு அளித்த ரிச்மண்ட் executive committee குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

Tuesday, May 23, 2017

ஒரு பிரஜையின் பிரயாணம் - பாகம் 3

முதல் பாகம் இங்கே: ஒரு பிரஜையின் பிரயாணம் - பாகம் 1
இரண்டாம் பாகம் இங்கே: ஒரு பிரஜையின் பிரயாணம் - பாகம் 2 

இடம் - இமிக்ரேஷன் ஆபீஸ் வரவேற்ப்பு கூடம், அமெரிக்கா

நாற்காலியில் அமர்ந்திருப்போர் - பாஞ்சாலி, மீனா சங்கரன், மீனாவின் தாயார் "அம்புஜம்", MLA அராஜகசத்ரு மற்றும் குஞ்சம்மா.

திருவள்ளுவர் சற்று கோபமாக தேர்வு அறையிலிருந்து திரும்பி வந்து வரவேற்ப்பறையில் மீண்டும் அமர்கிறார்.  

Translator: அம்மா அம்புஜம், உங்களை நேர்முகத் தேர்வுக்கு அய்யா உள்ளே கூப்பிடறாங்க.  என்னோட இப்படி சீக்கிரம் வாங்கம்மா!  (வேகமாக உள்ளே செல்ல திரும்புகிறார்).

அம்புஜம்: தம்பி எனக்கும் துள்ளி குதிச்சு வேகமா உங்களோட வர ஆசை தான் ஆனால்  பாருங்க என் கால் முட்டிக்கு அது புரியலையே!  (நாற்காலியை பிடித்து கொண்டு மெதுவாக எழுந்திருக்கிறார்).  

ஏம்மா பாஞ்சாலி நான் தேர்வு முடிஞ்சு வெளியே வர கொஞ்சம் நேரமாகும்.  எனக்கு  அவா கிட்ட கேட்க நிறைய கேள்விகள் இருக்கு.  அதனால நீ வேணா போய் அதுக்குள்ள உன் தலைல தடவியிருக்கிற  வெந்தயத்தை அலசிண்டு வந்துடறையா?  ஏற்கனவே இந்தியர்கள்னா இவாளுக்கு இளப்பம்னு பேசிக்கறா, நீ பாட்டுக்கு தலைல ஏதோ ஒழுக தேர்வுக்கு  போனா, நன்னாவா இருக்கும்? அதான் சொல்லறேன்.  

மீனா சங்கரன்:  அம்மா,  உனக்கு இது  இப்ப ரொம்ப அவசியமா?  போய் நல்லபடியா தேர்வை முடிச்சு அமெரிக்க பிரஜையாகி திரும்பி வா, சரியா?  ஆல் தி பெஸ்ட் அம்மா.  

அம்புஜம்:  டோன்ட் வொர்ரி மீனா.  நான் தான் ரெண்டு நாளா வெங்கடாசலபதியை வேரோட பிடிங்கியிருக்கேனே.  அதோட பாதாம் கீர் வேற நைவேத்தியம் பண்ணறேன்னு வேண்டிண்டு இருக்கேன். அந்த பகவான் நிச்சயமா என்னை கை விட மாட்டான்.  நான் இதோ போயிட்டு வந்துடறேன்.

(மொழிபெயர்ப்பாளரின் பின்னால் அம்புஜம் தேர்வறைக்கு செல்கிறார்)

Immigration Officer:  Please have a seat Mrs. Ambujam.  Will you raise your right hand and promise to tell the truth, the whole truth and nothing but the truth today? 

Translator:  தயவு செய்து உட்காரவும் திருமதி அம்புஜம்.  உங்கள் வலது கையை உயர்த்தி உண்மை, முழு உண்மை, உண்மையை தவிர இன்று வேறொன்றும் சொல்ல மாட்டேனென்று சூளுரைக்க முடியுமா?

அம்புஜம்;  சூளுரைக்கறது ஒண்ணும் பிரச்சனை இல்லை தம்பி.  ஆனா வலது கையை அவ்வளவு நேரம் தூக்கி பிடிக்கறது தான் கஷ்டம்.  ஏன்னா கொஞ்ச வருஷமா வலது தோள்பட்டை ல வாதம் இருக்கு.  நானும் எத்தனையோ எண்ணை தடவிப்பாத்துட்டேன்.  ஒண்ணும் கேக்க மாட்டேங்கறது.   உங்க ஆபீசர் கொஞ்சம்ட் adjust பண்ணிண்டா நான் வலது கை சுண்டு விரலை வேணா இப்படி தூக்கிப் பிடிக்கவா?  

(looking at the Translator) தம்பி ஐயாவுக்கு புரியறா மாதிரி  எடுத்து சொல்லுப்பா.  அவர் பாட்டுக்கு நான் சூ சூ போகணும்னு சொல்லறேன்னு தப்பா நினைக்க போறார்.  அடடே என்ன இப்படி பேந்த பேந்த முழிக்கிறார்!  No going one bathroom sir, just taking oath sir.

Translator:  I have no problems.....(Immigration officer interrupted)

Immigration Officer:  Never mind the translation.  I understood that.  Forget the oath part.  Let us begin the interview right away.

Translator:  அம்மா உங்க சுண்டு விரலை கீழே  போட்டுடுங்க.  அய்யா இப்போ தேர்வை தொடங்க போறாரு. 

Immigration Officer: Let us begin with the civics quiz.  

Ambujam: மொழி பெயர்ப்பு தம்பி, நீங்க சிரமப்படாதீங்க.  I talk good English. I will be ok.  நீங்க  பேசாம ரெஸ்ட்  எடுங்க.  

Question 1:  How many US senators are there Mrs. Ambujam? 

Ambujam:  100 senators but I have one question  sir.  Why US needs 100 senators?  Waste of money, don't you think?  இதை தான் காசை கரியாக்கரதுன்னு எங்க ஊர்ல சொல்லுவோம். 

Officer:  Never mind that Mrs. Ambujam.  Let's try a different question - What does the Constitution do?

Ambujam: (தனக்குள்ளே)  என்னதிது?  Constipation பத்தியெல்லாம் இங்க கேக்கறா?  சரி, சாருக்கு வயறு உபாதை  போல இருக்கு. நமக்கு தெரிஞ்ச நாலு வைத்தியத்தை சொல்லுவோமே!

ஒண்ணும் கவலை படாதீங்க சார்.  If you follow my instructions, you will feel better in no time sir.  (Takes a ziploc snack bag from her purse).  Try taking a quarter spoon of this 'அங்காயப்பொடி' with buttermilk for 3 days and life will be smooth again sir.  This powder is magic, I tell you.  I made it myself.  (beams in pride)

Officer (shouts in exasperation):  CONSTITUTION Mrs. Ambujam, not Constipation!  

Ambujam: அடடா எதுக்கு இந்த கத்து கத்தறார்?  Do you have blood pressure sir?  You should see a doctor soon.  Health is wealth, you know.  Look at me.  I am 75 years old and I have no pressure problems at all.  Only people around me have blood pressure sir.  Never me.  (shakes head in pity)

Officer:  That does not surprise me Mrs. Ambujam.  Let's try a different approach here.  What can you do to make this country better if you are a citizen?  Will you make a positive contribution to this nation if you are a citizen?

Traslator: அம்மா உங்களை பிரஜை ஆக்கினா, இந்த நாட்டுக்கு ஏதாவது உருப்படியா பண்ணுவீங்களான்னு  ஐயா கேக்கறார்.  

Ambujam: யாரை பார்த்து என்ன கேள்வி கேக்கறாரு?  நல்லா எடுத்து சொல்லுங்க உங்க அய்யாவுக்கு.  உப்பு காரமா வடாம் வத்தல் போட இந்த அம்புஜத்தை மிஞ்ச இன்னும் ஒருத்தர் பொறந்து தான் வரணும்னு. அப்புறம் உங்க ஊரு Burger King la onion rings அப்படீன்னு சொல்லி ரொம்பவே சுமாரா ஒரு பஜ்ஜி போடறாங்களே.  அவங்களுக்கு ஒரு சமையல் பயிற்சி கொடுக்க பிளான் வச்சிருக்கேன்.  இந்த நாடே என் பஜ்ஜி சுவையில மயங்கர நாள் ரொம்ப தூரத்துல இல்லைன்னு அவர்கிட்ட சொல்லுங்க தம்பி. 

Translator: Sir, this woman, apparently, is an expert chef and says that she has plans to revitalize the way this country makes food.

Officer:  Oh really?  That is as good a contribution as any.  Alright Mrs. Ambujam.  Congratulations, you have passed your citizenship test.

Ambujam: Thank you sir.  I knew offering பாதாம் கீர் as நெய்வேத்தியம் was a very good idea sir. (smiles widely)

Officer: Huh?? Never mind.  (to the translatorr) Please show Mrs. Ambujam out and bring Mr. Arajagasathru in for his test.
.
(தொடரும்)

Sunday, October 9, 2016

சுடச்சுட சுண்டல்!

அமெரிக்காவில் நவராத்திரி கொண்டாடும்  பெண்கள் அனைவர் சார்பிலும் தான் இதை நான் சொல்லறேன்.  வீட்டுக்கு வீடு கணினியோட குடும்பம் நடத்துற கணவர்கள் இருந்து எங்களுக்கு  என்ன பிரயோஜனம்?  எத்தனை தரம் தும்மினோம் , எத்தனை தரம் ஏப்பம் விட்டோம்  அப்படீன்னு பார்க்கறதுக்கு எல்லாம் app வந்தாச்சு.  ஆனா பேக்கு மாதிரி  நவராத்திரி ஒவ்வொரு நாளும் ஐந்து மணி நேரம் Evite invitations ஐ தூக்கிண்டு ரோடு ரோடா அலையும் எங்களுக்கு உதவ ஒரு app ஐயும் இது வரை காணும். 

இந்த கணவர்கள் குழு எங்கயாவது கூட்டு சேர்ந்தா GOP கட்சி உறுப்பினர் Donald Trump ஒரு அக்மார்க் வில்லனா இல்லை அரை லூசா அப்படீன்னு தீவிரமா தர்க்கம்  பண்ணி நேரத்தை வீணாக்கறதை விட்டுட்டு கால் கடுக்க தெருத்தெருவா சுண்டல் வாங்க சுத்தற மனைவிகளுக்கு உதவ ஒரு app எழுதலாம்.  

எங்க ஊருல போன வருஷத்தை விட கூடுதலா ஒரு ஐம்பது வீடாவது இந்த வருஷம் கொலு வச்சு கூப்பிட்டு இருக்காங்க.  மின்னல் மீனா அப்படீன்னு பெயர் எடுக்கற அளவுக்கு சும்மா சுனாமி மாதிரி சுத்தி சுத்தி சுண்டல் பாக்கெட் வாங்கி, நவராத்திரி ஆரம்பிச்சு நாலே நாளுல சுரம் வந்து படுக்கற நிலையில் இருக்கிறேன்.  வாட்ஸாப்ப், Evite பத்திரிகைகளையே சமாளிக்க முடியாம முழி பிதுங்கற எங்களை போற வீட்டு கொலுவில் பார்க்கறவங்க வேற ஆசையா கூப்பிடராங்க.  இனி யார் கையிலாவது  குங்குமச்சிமிழ் பார்த்தா சட்டுன்னு தலை மேல் போட்டுக்க ஒரு முக்காடை இப்ப தான் கைப்பையில் எடுத்து வச்சிருக்கேன்.   வாழ்க்கையோட சவால்களை சமாளிக்க நாம் தயாரா இருக்கறது அவசியம் இல்லையா? 

இதெல்லாம் ஒரு சவாலான்னு எங்களை பார்த்து சிரிச்ச விதி இன்னிக்கு காலையில் 'இக்கட சூடு' ன்னு ஒரு பெரிய புயலை எங்க ஊர் பக்கமா தூக்கி போட்டு பார்த்தது.  ஹா!!! ஜுஜுபி!!! இதுக்கெல்லாம் அசர்றதுக்கு இந்திய பெண்கள் என்ன கை சூப்பும் வாண்டுகளா?  பட்டு புடவை, நகை நட்டு போட்டு அம்மன் ரோல் கே ஆர் விஜயா மாதிரி ஒரு இந்திய பெண்கள் அணி இன்று மாலை  சுமார் 3 மணி தருவாயில் வீட்டை விட்டு குடை சகிதம் கிளம்பி கொட்டும் மழைல முழ நீள லிஸ்டில் உள்ள அத்தனை கொலு வீட்டுக்கும் போனது என்னவோ மறுக்க முடியாத உண்மை.  எப்படி நிச்சயமா சொல்லறேன்னா அது எங்க அணி தான்.  என் தோழிகளும் நானும் அந்த அடாத மழையிலும் விடாது குடை பிடிச்சு கொலு வீடுகளுக்கு போனதை நினைச்சா எனக்கே புல்லரிச்சு உடம்பு சில்லிட்டு போறது.  இது மழைல நனைஞ்சதால வந்த சில்லுப்பு இல்லைன்னு சொன்னா வீட்டுல தான் யாரும் ஒத்துக்க மாட்டேங்கறாங்க. 

ரொம்ப சுவையான ஒரு சம்பவம் இன்னிக்கு நடந்தது.  வழக்கம் போல் ஒரு வீட்டுக்குள் நுழையும் போதே நாங்க சுருதி பெட்டி மேல பாய்ஞ்சு ஆன் செய்து பாட தயாரான அந்த நேரம் இன்னொரு நல்ல தோழி குடையோட நுழைந்தாள்.  அருமையான பாடகி.  எங்க எல்லோருக்கும் ஒன்னு ரெண்டு பாட்டு சில வருஷங்களுக்கு முன்னாடி சொல்லி கொடுத்திருக்கா. சரி அதுல ஒரு பாட்டை எல்லோருமே சேர்ந்து பாடறதுன்னு தீர்மானம் பண்ணி ஆரம்பித்தோம்.

முதல் சங்கதி முடிக்கறதுக்கு முன்னாடி வாசல் கதவு தட்டி குடையோடு நுழைந்தார் மற்றுமொரு தோழி.  பார்த்தா அவளுக்கும் அந்த பாட்டு தெரியுமாம்.  நுழைந்த வேகத்தில் பாய்ந்து எங்களோட  அவரும் பாட ஆரம்பிச்சார்.  கூடிய சீக்கிரத்தில் பாதி கூடம் நிரம்பி வழிந்து எல்லோரும் எங்களோட சேர்ந்து அதே பாட்டை பாட ஆரம்பித்தார்கள்.  அப்ப தான் எனக்கு அந்த ஐடியா வந்தது.   சினிமாவுல வருமே குடும்பப்பாட்டுன்னு? அது மாதிரி இப்ப எங்களுக்கு ஊர் பாட்டுன்னு ஒண்ணு  இருக்கு.  எங்க ஊர்க்காரர் எங்கயாவது தொலைஞ்சு போய்ட்டா இந்த பாட்டு முதல் வரி பாடினா போதும்.  நாங்க யாரவது அடுத்த வரியை பாடிண்டே நடந்து போய் உடனே அவரை கண்டு பிடிச்சிடுவோம்.   ஊர் பாட்டு வைத்திருக்கும் ஒரே ஊர் எங்க ஊர் தான் அமெரிக்காவில் அப்படீன்னு  நினைச்சா பெருமைபடாம இருக்க முடியலை. 

எல்லோர் வீடுகளிலும் தரும் பல விதமான சுண்டல்களை நிச்சயமா நான் அனுபவிச்சு தான் சாப்பிடறேன்.    அதுல சந்தேகமே இல்லை. இருந்தாலும் யாராவது சுண்டலோட கொஞ்சம் பஜ்ஜி பக்கோடா தந்து ஒரு கப் காப்பி தந்தால் வேண்டாம்னு சொல்லிடப்போறேனா என்ன?  நாளைக்கு போக வேண்டிய வீடுகளில் வாழும் தோழிகள் யாராவது இந்த ப்ளோக் படிப்பார்கள்னு ஒரு நம்பிக்கையோட எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள் சொல்லி விடைபெறுவது உங்கள் மீனா சங்கரன்.




Tuesday, May 10, 2016

காமாவுக்கு சோமா!

இப்படி ஒரு சவாலை நான் எதிர்ப்பார்க்கவே இல்லையே!  இந்த மனுஷனை என்ன தான் செய்யறது?

சின்ன வயசுல என் கூட பிறந்தவங்களோட  நான் போடாத போட்டியா? ஜெயிக்காத சவாலா?  ஒவ்வொரு ராத்திரியும் வீட்டு கூடத்துல தொங்கற அந்த ஒத்த உஷா சீலிங் fan நேர் அடியில இடம் பிடிச்சு படுக்கற போட்டியில  எவ்வளவு தில்லுமுல்லு பண்ணி என் தமக்கையோட ஜெயிச்சிருப்பேன்? சரி அப்படியே ஏதோ ஒரு போட்டியில தோத்து போயிட்டா கூட கவுந்து படுத்து அழாம இதெல்லாம் ஒரு மேட்டரா அப்படீன்னு தட்டி விட்டுட்டு அடுத்த சவாலை தேடிப்போற நான் இன்னிக்கு வாழ்க்கைல எதிர்ப்பாராத வந்த இந்த போட்டியில் ஸ்தம்பிச்சு போய் நிக்கறது என்னவோ உண்மை.

இந்த நூற்றாண்டிலேயே விஷயத்துக்கு வருவியா இல்ல நான் போயிட்டு நிதானமா அப்புறமா வரட்டான்னு நீங்க கோபமா கேக்கறது எனக்கு காதுல விழறது. ஏன்னா எனக்கு தான் பாம்பு செவியாச்சே!  உங்க நெற்றிக்கண் என் ஐயன் திருச்சிற்றம்பலத்துது  மாதிரி அம்சமா தான் இருக்கு. இருந்தாலும் அதை நீங்க தயவு செய்து மூடியே வைங்க.  இதோ வந்துட்டேன் விஷயத்துக்கு.

இன்னிக்கி என் புலம்பலின் காரணகர்த்தா எங்க ஊர் சாஸ்த்ரிகள்.   நல்ல மரியாதைக்குரிய மனிதர்.  வேதங்களை கரைச்சு குடிச்சவர்.   எங்க குடும்பத்தோட வைதீக காரியங்களை முன்னின்று அருமையா செய்து வைப்பவர்.  ஆனால் அதோட நிறுத்தாம  கல்யாணம் ஆகி கடல் தாண்டி வந்த என் வாழ்க்கைல கடந்த பத்து வருஷமா தமிழ் சீரியல் வில்லி மாதிரி விளையாடுவது தான் முடியலை.

இவர் சாதுர்ய போன் (அதான் smart phone) எப்போ வாங்கினாரோ அப்போ ஆரம்பிச்சது எனக்கு ஏழரை நாட்டு சனி.  இந்த குட்டி டப்பாவுக்குள்ள இத்தனை அதிசயமான்னு ஆச்சர்ய குறி போட்டு அதுக்குள்ள முழுசா ஐக்கியமானவர்  சில வாரங்களுக்கு பின்னாடி  அந்த குகையிலேர்ந்து வெளியே தலை தூக்கின போது இன்றைய கல்லூரி பசங்களை எல்லாம் தூக்கி சாப்படற மாதிரி சமூக வலைத்தள வல்லுநரா தான் வெளியே வந்தார்.   இன்னிக்கு வைதீகம் போக மிச்ச நேரம் எங்க குடும்ப மரத்தில் (family tree) இருக்கற எல்லாரோட (குஞ்சு குளுவான் உட்பட) பிறந்த நாள், மண நாள் மேலும் பல முக்கிய நாட்களுக்கு whatsapp, facebook மற்றும் ஈமெயில் மூலமா முதல் ஆளா வாழ்த்து சொல்வதை தொழிலாக செய்கிறார்.

காமாவுக்கு சோமா அப்படீங்கற வார்த்தையை நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா?   என் பெரியப்பாவுக்கு ரொம்ப பிடிச்ச ஒரு சொற்சொடர் அது.  எங்க வீட்டு மூணாவது தெருவில் உள்ள ஒரு மாமி ஒரு நாள் அவங்க நாத்தனாரோட மச்சினர் பெண் கல்யாணத்துக்கு எங்களுக்கு பத்திரிகை வச்சு கூப்டுட்டு போனா.   அந்த மாமி கிளம்பி வாசல் கேட் கூட மூடியிருக்காது.  நானும் என் தமக்கையும் உடனே ஓடி போய் உள் அலமாரியை திறந்து அந்த கல்யாணத்துக்கு  எந்த புடவை கட்டலாம்னு முக்கியமான ஒரு சர்ச்சையில இருந்த போது தான் எங்க பெரியப்பா 'காமாவுக்கு சோமா' வை பத்தி எங்களை உக்கார வச்சு விளக்கமா சொன்னார்.   அதை சிரத்தையாக கேட்டுட்டு நாங்க விடாம கல்யாணம் போய் வந்தோம்ங்கறது வேற விஷயம்.

போன மாசம் என் சின்ன பெண்ணோட பிறந்த நாள்.  நான் பார்த்து பார்த்து அவளுக்கு பிடிச்ச பரிசுகள்  மற்றும் துணிமணிகள் வாங்கி முதல் நாளே பாக் செய்து ஆசையா அவள் எழுந்ததும் முதல் ஆளா அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல காத்திருந்தா, எங்க சாஸ்த்ரிகள் கத்தி கபடா இல்லாமலே என் கழுத்தை சூப்பரா வெட்டி சாய்த்தார்.   நடு ராத்திரி  12 மணிக்கு போர் களத்தில் படை வீரர்கள் மாதிரி வரிசையா whatsapp, email மற்றும் facebook மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்களை சகட்டு மேனிக்கு தட்டி விட்டிருக்கார்.  ஒரு தாய் என்ன தான் செய்ய முடியும்?

போன வருஷம் கொந்தளிச்சு எழுந்தேன் நான். இன்னிக்கு நானா நீங்களா பார்க்கலாம்னு கங்கணம் கட்டி எங்க திருமண நாளுக்கு என் கணவர் கண் திறந்ததும் அவர் போன் பாக்கறதுக்கு முன்னாடி நான் வாழ்த்து சொல்லி "அப்பாடா, ஒரு வழியா சாஸ்திரிகளை beat பண்ணிட்டேன்" னு சந்தோஷமா கை தட்டி கெக்கலி கொட்டின என்னை 'ஐயோ பாவம்' ங்கற மாதிரி பார்த்தார் என் கணவர். விசாரித்ததுல முதல் நாள் இரவே சாஸ்திரிகள் ஈமெயில் வாழ்த்து அனுப்பிட்டாராம்.

எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வு இல்லைன்னு என் குழந்தைகளுக்கு அடிக்கடி சொல்லற நான் காந்திஜியின் கொள்கைகளை கடைசி வரை விடாமல்  கடைப்பிடிக்க  சாஸ்த்ரிகள் விடுவாரா?  காலம் தான் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லணும்.

-- மீனா சங்கரன்

Note:  There is absolutely no offense intended towards the subject of the post.  He is a highly revered man in the family and has my utmost respect.  The post is simply meant as light entertainment and should be taken as such with a pinch of salt. :-)

Wednesday, December 16, 2015

வங்கக்கடலுக்கு வேப்பிலை அடிச்சாச்சா?

ஒரு மாசம் முன்னாடி தமிழ்நாட்டில் வெள்ளம் வரப்போகுது அப்படீன்னு யாராவது சொல்லியிருந்தா லூசாப்பா நீன்னு நிச்சயமா கேட்டுருப்பேன். எனக்கு நினைவு தெரிஞ்சு தமிழ் மக்கள்  நல்ல தண்ணியை கனவுல பாத்து ஏக்கமா பெருமூச்சு விட்டு தான் பழக்கம்.  சின்ன வயசுல காலையில் பல் தேய்க்கக் கூட தண்ணி இல்லாமல் பக்கத்துக்கு தெரு குழாயில் ஒரு பக்கெட் தண்ணி அடிக்க க்யூவில் நின்ன ஞாபகம் இன்னும் எனக்கு நெஞ்சில் பசுமையா இருக்கு. அப்படி தண்ணி லாரி பின்னாடி கலர் கலர் குடத்தோட பின்னங்கால் பிடரி ல இடிக்க ஓடற மக்களை மட்டுமே இவ்வளவு நாளா  பார்த்த தமிழ்நாட்டுல  இன்னிக்கு கரைபுரளும் வெள்ளமா? வெச்சா குடுமி இல்ல செரைச்சா மொட்டையா?  என்ன கொடுமைங்க இது கார்த்திகேயன் ?  (சும்மா ஒரு சேஞ்சுக்கு தான்.  எவ்வளவு நாள் தான் சரவணனையே புடுங்க முடியும்?)

எனக்கு ஒரு சந்தேகம்.  வங்கக்கடலுக்கு கூட சாமி வருமா?  சின்ன வயசுல கோவில் பூஜையில் ஒரு தாடி வச்ச அண்ணனுக்கு சாமி வந்து பார்த்து பயந்திருக்கேன்.  நம்ம பிரபு தேவாவுக்கு அவர் ஒண்ணு விட்ட அண்ணனோன்னு சந்தேகம் வரும்படியான அதே தாடி, அதே வேகம்! அந்த மாதிரி ஆட்டத்தை  இத்தன வருஷம் கழிச்சு இப்ப தான் மறுபடியும் வங்கக்கடல்ல பார்க்கறேன்.

சொல்றேனேன்னு தப்பா நினைக்காதீங்க. ஆனாலும் இந்த வங்கிக்கு (வங்கக்கடலை சுருக்கி நான் வச்ச செல்ல பேருங்க) இவ்ளோ ஆக்ரோஷம் கூடாது.  அவரவர் கஷ்டப்பட்டு, கடனோ உடனோ வாங்கி கட்டின வீடும், வீட்டு சாமான்களும் தண்ணியில் மிதக்கரதுல அப்படி என்ன தான் சந்தோஷமோ?   மழை வந்தா காகித கப்பல் மிதக்க விட்டு நான் பாத்திருக்கேன்.  இப்போ ப்ரிஜ்ஜும் , டிவியும் மிதந்து போறதாமே? ரெண்டு வாரமா சாமியாடின வங்கிக்கு  வேப்பிலை அடிச்சு மலை இறக்கின அந்த முருகனுக்கு  என் கையால சர்க்கரை பொங்கல் பண்ணி நைவேத்தியம் பண்ணலாம்னு ஒரு எண்ணம் இருக்கு.  ஆனா அதுக்கான நேரம் தான் இல்லை.

வெளிநாட்டுக்கு வந்து குடி புகுந்துட்டாலும் அமெரிக்கவுல வாழற என்னை மாதிரி தமிழர்களுக்கு நம்ம ஊர் பாசம் ரொம்பவே அதிகம்.  ஒரு வாரம் தமிழ் நாடு அங்க வெள்ளத்துல மிதந்ததுன்னா இங்க நாங்க கை நகத்தை கடிச்சு குதறி எங்க டென்ஷனை குறைக்கறோம் அப்படீங்கற பேர்ல ஒரு சோகக்கடல்ல மிதந்தோம். .  ஊர்ல அம்போன்னு  விட்டுட்டு வந்த நம்ம சொந்தமெல்லாம் நல்லபடியா இருக்காங்களான்னு  தெரியாம விலை உயர்ந்த ஷாம்பூ போட்டு உறுவி எடுத்தது போக இருந்த மிச்ச நாலே நாலு தலை முடியை கஷ்டப்பட்டு ரெண்டு கையால பிச்சுகிட்டிருந்தோம்.  ஆனா இழுக்க இழுக்க வர்றதுக்கு இது என்ன துச்சாதனன் உறுவின புடவையா?   ஒரு நிமிஷத்துக்கப்புறம் இனி இழுத்தா மண்டை ஓடு தான்னு புரியவும் அடுத்தது என்ன செய்யலாம்னு ரூம் போட்டு யோசனை பண்ணினோம்.

அமெரிக்கா  போரவங்க எல்லாம் காப்பசீனோ குடுச்சிட்டு கால் நீட்டி உக்காந்திருக்காங்கன்னு தப்பா நினைக்கிற ஆட்களில் நீங்களும் ஒருத்தரா இருந்தீங்கன்னா எங்க வாழ்க்கை பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சுக்கங்க. ஒரு சராசரி இந்தியனின் தினசரி அமெரிக்க வாழ்வில் அவருக்கு பல பல முகங்கள். அவரே வீட்டு தலைவர்/தலைவி, அவரே காரோட்டி, அவரே வீட்டை பெருக்கி, துடைக்கும் ஆள், அவரே  துணிகளை இஸ்தரி செய்பவர், அவரே குழந்தைகளை பராமரிப்பவர், அவரே ப்ளம்பர், அவரே தோட்டக்காரர்....மொத்ததுல அவரே ஒரு பாவமான ஜீவன்.   இதுல அவர் எங்க காப்பசீனோ குடிச்சு காலை நீட்டறது ?

ஆனா இதே 'பேக்கு' என்று செல்லமா அழைக்கப்படும் அயல்நாட்டு இந்தியர்கள்  நம்ம ஊர் மக்கள் யாருக்காவது கஷ்டம்னு மட்டும் கேள்விப்பட்டாங்க அவ்ளோ தான்.  வரிஞ்சு கட்டிண்டு  உதவ கிளம்பிடுவாங்க.  எங்கயோ போய் உக்காந்துண்டு எப்படி உதவுவீங்கன்னு இளக்காரமா?  வேறென்ன, நிதி திரட்டி தான்.  இதுல மட்டும் எங்களை மிஞ்சிக்க ஆளே கிடையாது.  ஆ,வூன்னா டென்ட் போட்டு நிதி திரட்ட கூடிடுவோம்.

ரெண்டு நாள் முன்னாடி அப்படி தான். போற வரவங்களை எல்லாம் வந்து 10 டாலரை இந்த கல்லாப்பெட்டில  போட்டுட்டு ஆசை தீர பாடுங்க, ஆடுங்க நாங்க ரசிக்கரோம்னு அடிச்சு சொல்லி எங்க ஊர் தமிழ் சங்கம் செய்த சூப்பர் ஏற்பாடின் படி கலை நிகழ்ச்சி நடத்தி, நிதி திரட்டி, தமிழ் நாட்டுக்கு வெள்ள நிவாரணியாய் அனுப்ப இருக்காங்க.  அமெரிக்காவின் எல்லா ஊருலேயும் தமிழர்கள் இது போல நிதி திரட்டி அவங்களால முடிஞ்ச உதவியை பண்ணறதா கேள்விப்பட்டேன்.  இந்த மனித நேயத்தை நினைச்சு பெருமை படாம இருக்க முடியலை.

எங்க ரிச்மண்ட் ஊர் மக்கள் இதோட விடுவாங்களா?  அதான் இல்லை. வெள்ளத்துல அடிச்சுண்டு போனது வீடு மட்டும் இல்லை, எல்லோரோட துணியும்னு யார் சொன்னாங்களோ தெரியலை.  உடனே அவங்க அவங்க அலமாரியை திறந்து கவுத்து போட்டு அவங்க போடற/போடாத, பிடிச்ச/பிடிக்காத. துணிகளை எல்லாம் அள்ளி போட்டு ஊருக்கு அனுப்ப தயாராகிட்டாங்க.  ஒரு வாரமா கர்ணப்பரம்பரைல வந்த அக்கம்பக்கத்து மக்கள் கொடுத்த துணி மூட்டைகளை பிரிச்சு அடுக்கினதுல என் தோழிகள் பலருக்கும் தூக்கத்துல கூட புடவையும், சல்வார் கமீசுமா கண் முன்னாடி வலம் வருதாம்.

பக்கத்து அறைல இருக்கற மிச்ச துணி மூட்டையை டப்பாவுல அடுக்கிட்டு அடுத்த வேலை வங்கிக்கு வந்த சாமியை மலை ஏத்தின குமரனுக்கு நைவேத்தியதுக்கு சர்க்கரை பொங்கல் செய்யறது தான்.

-மீனா சங்கரன் 

Monday, October 26, 2015

சுண்டலோ சுண்டல்!

உங்க ஊரை பத்தி எனக்கு தெரியாது ஆனால் எங்க ஊர்ல வர வர நவராத்திரி பண்டிகை கிட்டத்தட்ட ஒரு ஒலிம்பிக் ஓட்ட பந்தயம் மாதிரி ரொம்பவே விறுவிறுப்பா தான் நடக்குது.  வருஷா வருஷம் மேலும் பல பல வீடுகள் ல  கொலு வைத்து எல்லோரையும் கூப்பிட்டு அசத்தறாங்க.  கூகிள் காலேண் டரே  எங்க கொலு schedule லை பார்த்து கதி கலங்கி போய் browser tab  ஐ இழுத்து மூடி படுத்துக்குதுன்னா பாருங்க.     

நவராத்திரி ஆரம்பிக்கருதுக்கு ஒரு பத்து நாளைக்கு முன்னாடியிலேர்ந்து வந்து குவிய ஆரம்பிக்கற கொலு பத்திரிகைளை சரி பார்த்து Excel spreadsheet ல போடறது தான் முதல் ஜோலி.   ஒரு ஏழு வருஷத்துக்கு முன் பத்து பேர் கூப்பிட்டுட்டு இருந்த நிலைமை மாறி இன்னிக்கு குறைஞ்சது ஒரு ஐம்பது பேர் வீட்டிலாவது கூப்பிடறாங்க.   துண்டு பேப்பர்ல எழுதி வச்சிண்ட காலமெல்லாம் மலை ஏறியாச்சு.  முன்னாடி மின்னஞ்சல்ல மட்டும் தான் பத்திரிகை அனுப்புவாங்க எங்க பெண்கள்.  ஆனா இப்பல்லாம் Evite , whatsapp மூலமா கூட அனுப்பறாங்க.  இது போறாதுன்னு  Kumon சென்டர் மற்றும் Kohls வாசல்ல எல்லாம் குங்குமச்சிமிழ் வச்சு நின்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்கன்னு வேற பேசிக்கறாங்க.   Spreadsheet உதவி மட்டும் இல்லைன்னா எத்தனையோ சுண்டல் பாக்கெட்டுகள் பல வீடுகள்ல சீந்துவார் இன்றி அனாதையா கிடக்கும். 

Spreadsheet ல நாள் வாரியா, zone வாரியா, நேரம் வாரியா  பிரிச்சு பிரிண்ட் ஔட் எடுத்து நிமிர்றதுக்குள்ள நாக்கு  வறண்டு ஒரு பன்னீர் சோடா கிடைக்காதான்னு ஏங்கி போய் நான் ஒரு சுத்து இளைச்ச மாதிரி இருக்கும் எனக்கு.  ஆனா பாருங்க முதல் நாள் புடவை கட்டறச்ச பாதி கை மட்டும் ஏறி வேலை நிறுத்தம் செய்யற  என் blouse அந்த நினைப்புக்கு  மிகப் பெரிய ஆப்பு ஒண்ண  சத்தமில்லாம வைக்கும்.   ஆனால் அதுக்கெல்லாம் அசர்ரதுக்கு நீங்க வேற ஆளை பார்க்கணும்.  

விக்ரமாதித்யன் கதைல வர்ற மாதிரி என் உயிர் நவராத்திரியின்  போது மட்டும் ஏழு தெரு தாண்டி, ஆறு மாடி ஏறி, அஞ்சு வீட்டுக்குள்ள இருக்கிற நாலு விதமான சுண்டல் ல தான் மறைஞ்சு இருக்கும். ஒன்பது நாளும் சுண்டல் பாக்கெட் வாங்குவதில்  எந்த ஒரு தடங்கல் வந்தாலும் இந்த மீனா பொங்கி எழுந்திடுவாங்கற உண்மை ஊர்ல பல பேருக்கு தெரியும்.   அஞ்சா நெஞ்சத்தோடு பாரதியின் புதுமை பெண் மாதிரி நிமிர்ந்து நின்னு எல்லாத் தடங்கல்களையும்  எதிர் நோக்கி வீர நடை போட்டு எனக்கு வர வேண்டிய சுண்டல் பாக்கெட்டுகளை கைபற்றர வரைக்கும்  நான் ஓயவே மாட்டேன்.   என்னை பெத்தவங்களுக்கு கூட இந்த விஷயத்துல என்னை நினைச்சு ரொம்ப பெருமை. 

நவராத்திரி ஒன்பது நாளும் மாலை மூணு மணிக்கு ஆரம்பிச்சா எங்க ஓட்டம் ஒரு பத்து மணிக்கு தான் நிக்கும்.  இந்த சீசன்ல எல்லா தெருக்களிலும் பட்டு புடவை கட்டி, நகை நட்டு போட்டு மங்களகரமா இருக்கற பெண்களால தான் அதிக டிராபிக் ஜாம்.   பல சமயம் 2 அல்லது 3 பேரா சேர்ந்து கூட கொலு ரௌண்ட்ஸ் போவாங்க.  நான் பார்த்த வரைக்கும் முக்கியமான ஒரு விஷயம் பாட்டு பாடலைன்னா எங்க ஊர் மக்கள் சுண்டல் கொடுக்கரதில்லை.  இதனால பாட தெரியாதவங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து மூளைபுயல் மூலமா (அதான் brainstorming) இதுக்கு ஒரு தீர்வு கண்டிருக்காங்கன்னு கேள்வி.  அதி புத்திசாலியான இந்திய பெண்கள் இப்ப பாடறதை கூட outsource பண்ணிடறாங்களாம் .  

இதை நானே போன வாரம் கண் கூடா பாத்தேன்.  ஒரு தோழி அவங்க வயதான அம்மாவை கூட கூட்டிகிட்டு தெரு தெருவா ஏறி எறங்கிட்டிருந்தாங்க.  ஒரு கொலு வீட்டுல நுழைஞ்சு 5 நிமிஷத்துல இந்த தோழி அவங்க அம்மாவை பாத்து, விவேக் பாஷைல சொல்லனும்னா, cute ஆ கண்ணடிச்சாங்க.  உடனே அவங்க அம்மா தொண்டைய செருமிகிட்டு டக்குனு பாடி கலக்கிட்டாங்க.  நான் அசந்தே போயிட்டேன்.  என்ன ஒரு மாஸ்டர் பிளான்!  கொலுவுக்கு பாடறது நீங்க நினைக்கறா மாதிரி ஈசியான வேலை இல்லை.  ஒரே ஒரு பாட்டை வச்சு தேய்க்க முடியாது.  நம்ம போற வீட்டுக்கெல்லாம் நம்ம பின்னாடியே ஒரு கும்பல் வருவாங்க.  ஒரே பாட்டை எல்லா இடத்துலயும் பாடினா நம்ம வண்டவாளம் ஊர் தண்டவாளத்துல அன்னிக்கு ராத்திரிக்குள்ளயே அமோகமா வளைய வரும்.  

நவராத்திரி முதல் நாளைக்கப்புறம் எங்க closet பக்கம் போகாம இருப்பது உங்க இருதயத்துக்கு தான் நல்லது.  வரிசையா தினமும் நாங்க உருவி போடற புடவைங்க வழிஞ்சு ஒரு மினி சுனாமியை ஞாபகப்படுத்தும்.  ஆயிரக்கணக்கில் குடுத்து வாங்கின பட்டு புடவைகளை நாங்க கூசாம ஒரு ஓரமா விட்டெறிவோம் இந்த ஒன்பது நாட்களும்.  பொதுவா கணவர்களுக்கு ரத்த கொதிப்பு அதிகமாவது இந்த சீசனில் தான்னு ஆராய்ச்சி பண்ணினால் யாராவது கண்டு பிடிக்கலாம்.  கொலு பொம்மைகளை கட்டி மேலே போட்டு  மூச்சு விட்டப்புறம் தான் நாங்க புடவை கடையை கவனிக்கவே  வருவோம்.   

இந்த வருஷம் நவராத்திரி முடிஞ்சு நாலு நாள் ஆச்சு.  வீடு புயல் அடிச்சு ஓய்ந்தாப்பல இருக்கு.  வீடு  வீடா ஏறி ஏறி கால் கழண்டு போச்சு.  சர்வ வியாதி நிவாரணியான Tylenol துணையோட என்னை மாதிரி பல பெண்களின் வாழ்க்கை மெதுவா அவங்களோட அன்றாட பாதைக்கு திரும்பிண்டிருக்கு.  வேர்கடலை, கொண்டைகடலை, பட்டாணி, பயத்தம் பருப்பு, கடலை பருப்பு, காராமணி, பச்சை பயறு இப்படி பலவிதமான சுண்டலை ஒன்பது நாளா மாத்தி மாத்தி சாப்பிட்ட திருப்தியில்(?), இனி ஒரு வருஷத்துக்கு சுண்டல் பேரையே யாரும் சொல்ல கூடாதுன்னு பல வீடுகளில் ஒரு புது விரதம் எடுத்திருக்காங்களாம்.

இதுக்கு மேல மொக்கை போட்டு உங்க பொறுமையை சோதிக்காம இந்த வருஷ நவராத்திரியின் இனிமையான நினைவுகளோடு உங்களிடமிருந்து விடை பெறுவது:  மீனா சங்கரன். :-)

Tuesday, September 20, 2011

ஒரு பிரஜையின் பிரயாணம் -பாகம் 2

(ஒரு பிரஜையின் பிரயாணம் - முதல் பாகம் இங்கே)


என் அமெரிக்க பிரஜை பிரயாணத்தின் இரண்டாவது பாகத்தை கட்டுரைக்கு பதில் ஒரு நாடக வடிவில் எழுதி இருக்கிறேன். 99.9 % கற்பனை, 0.1 % மட்டுமே உண்மை. உங்க காதுல ஒரு அஞ்சு முழம் பூவுக்கு குறையாமல் இன்னிக்கு சுத்தறதுன்னு கங்கணம் கட்டி நான் எழுதிய நாடகம் இதோ. :-)

இடம் - இமிக்ரேஷன் ஆபீஸ் வரவேற்ப்பு கூடம், அமெரிக்கா

நாற்காலியில் அமர்ந்திருப்போர் - திருவள்ளுவர், பாஞ்சாலி, மீனா சங்கரன், மீனாவின் தாயார் "அம்புஜம்", MLA அராஜகசத்ரு மற்றும் குஞ்சம்மா.

Announcement:

Immigration Officer calling out loud: We now invite the following people to get ready for their interview next. Ti.....ti.....tizhu......tizhuvalvan, pen chali, mina san kaaren, Ambaajam, MLA (gives up after a while) and kunjamma. Please have all the necessary documentation ready and bring with you when your names are called again.


Translator - இப்பொழுது நாங்கள் டி டி டீழு ....டீழுவல்வன், பேன் சளி, மீனா சன் காரேன், அம்பாஜம், MLA (சொல்ல இயலாததால் விட்டு விட்டார்), மற்றும் குஞ்சம்மா - இவர்களை தேவையான பத்திரங்களோடு நேர்முகத் தேர்வுக்கு தயாராகுமாறு கேட்டு கொள்கிறோம்.

திருவள்ளுவர் - டீழுவல்வனா? வாசுகியின் வாயில் அல்வாவாய் இனித்த என் பெயருக்கு உம்மோடு வாயில் இப்படி ஒரு இடியா? வயதில் முதியவனான எனக்கு இந்த நாட்டில் இவ்வளவு தான் மதிப்பா?

'பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.'

என்ற என் குறளை மறந்தே விட்டீரா?

குஞ்சம்மா - யோவ் பெருசு, உன்னோட ஆனாலும் ரோதனையா போச்சுய்யா. ஆ வூன்னா ஒரு ரெண்டு வரி அணு குண்டை நீ பாட்டுக்கு எங்க மண்டைல போட்டுட்டு போயிரு. உன்னால ஊர்ல சின்ன பசங்க கனவுல எல்லாம் ராத்திரி பல்லவன் பஸ்ஸோட பின் பக்கம் வந்து பயமுடுத்துதாம். சும்மா முறுக்கிக்காம அந்தம்மா கூப்பிட்டா போவியா, என்னமோ ரொம்ப தான்....


அம்புஜம் - வள்ளுவர் மாமா, இதுக்கெல்லாம் கோவிச்சுக்காதீங்கோ. வந்த காரியம் நல்ல படியா முடியணும், அது தானே இப்போ முக்கியம். இந்த நேர்முக பரிட்சைல பாஸ் பண்ணி நல்லபடியா அமெரிக்க பிரஜை ஆகணுமேன்னு ஒரு மாசமா தினமும் நான் சுந்தர காண்டம் படிச்சிண்டு இருக்கேன்..இருந்தாலும் இன்னிக்கு அந்த பகவான் எனன நினைக்கிறானோ, தெரியலையே. ஏம்மா பாஞ்சாலி, பிரஜை ஆயிடுவோம்னு நீ மனசுல நம்பிக்கையோட இருக்கியா? ஆமாம், அது எனன உன் தலையில பச்சையா அசிங்கமா ஏதோ பூசிண்டு வந்திருக்க? அச்சச்சோ, புருவம் பக்கத்துல வேற லேசா ஒழுகறதே!


பாஞ்சாலி - (புடவை நுனியில் துடைத்தபடியே) அது ஒன்றும் இல்லை அம்மா. கொஞ்சம் நாளாகவே தலையில் பொடுகு பிரச்சனை அதிகமாக இருக்கு. அந்த துச்சாதனன் கம்னாட்டியின் ரத்தத்தை என் கூந்தலில் என்று பூசினேனோ அன்றிலிருந்தே இந்த தொல்லை தான். அதோடு இவ்வுலகம் மெச்ச ஒரு சபதம் எடுத்து வேறு கொஞ்சம் நாளாகி விட்டது. சரி ஒரே அம்பில் இரு கௌரவர்களாய் இருக்கட்டுமே என்று தான் 'அமெரிக்க பிரஜை ஆகாமல் இந்த கூந்தலை நீராட மாட்டேன்' என்று சபதம் போட்டு அதே கையோடு ஒரு பிடி வெந்தயத்தை வேப்பிலையோடு அரைத்து என் கூந்தலில் தடவிக்கொண்டேன். பிரஜை ஆகா விட்டாலும், பொடுகாவது தொலையுமே?

அம்புஜம்: ஆனாலும் நீ புத்திசாலி தான் பாஞ்சாலி. இல்லேன்னா பாண்டவா மாதிரி ஒரு கூட்டு குடும்பத்துல வாக்கப்பட்டு உன்னால பிழைக்க முடியுமா? எனக்கு ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம்மா. உங்க மாமியார் குந்தி தேவி..(மீனாவின் முறைப்பில் கேள்வியை நிறுத்துகிறார்)

மீனா: ஏம்மா பொடுகையும் குந்தி தேவியையும் பத்தி வாதம் பண்ண இது தான் நேரமா? அமெரிக்க வரலாறு பத்தின தேர்வுக்கு நீ ரெடியா? அமெரிக்காவோட கொடியில் ஏன் பதிமூணு கோடு போட்டிருக்கு, சொல்லு பார்ப்போம்?

அம்புஜம்: பத்து மாசம் சுமந்து பெத்த தாயை நிக்க வச்சு கேள்வி கேக்கறியே, இது சரியா மீனா? அதோட 13 ராசி இல்லாத நம்பர். பேசாம கொடியில 12 கோடு போட்டா போதும்னு நானே ஒபாமாவுக்கு எழுதி போடலாம்னு இருக்கேன். எப்படி என் ஐடியா? (மீனாவின் கண்ணில் கிலோ கணக்கில் நிராசை)

MLA அராஜகசத்ரு: இந்திய வரலாற்று பரிட்சைக்கே தில்லா கோனார் உரை நூல் கூட படிக்காம போய் எழுதி அஞ்சு மார்க் மட்டுமே எடுத்து பெயிலானவன் நான். அமெரிக்க வரலாறுன்னா மட்டும் என்ன கொம்பா? உடனே படிச்சிரணுமா? எவன்டா அவன் என்னை படிக்க சொல்லறது இங்கே? டாய்.................


அம்புஜம்: வேண்டாம்பா MLA! அமெரிக்காவுக்கு வந்த இடத்துல இப்படி வேட்டியை தூக்கி கட்டினா நல்லாவா இருக்கு. இறக்கி விட்டுடு. அது சரி, உள்ள போட்டிருக்கியே அழுக்கா ஒரு கட்டம் போட்ட அரை நிஜார், அது என்ன போன வருஷம் ஆளும் கட்சி உன்னை ஒரு மாசம் ஜெயிலுக்குள்ள போட்டாங்களே, அப்ப குடுத்ததா? சொல்றேன்னு தப்பா நினைக்காதே. இந்த கலர் ரொம்ப சுமாரா இருக்கு. அடுத்த முறை போனீன்னா நல்லா ராமர் நீலத்துல கேட்டு வாங்கி போட்டுக்கோப்பா. உன் நிறத்துக்கு அட்டகாசமா இருக்கும்.

மீனா: ஷ்....அம்மா கொஞ்சம் சும்மா இருக்கியா.

-------------------------------
In the interview room:

Officer - Will you raise your right hand and promise to tell the truth, the whole truth and nothing but the truth today?

Translator - உங்கள் வலது கையை உயர்த்தி உண்மை, முழு உண்மை, உண்மையை தவிர வேறொன்றும் சொல்ல மாட்டேனென்று சூளுரைக்க முடியுமா?


திருவள்ளுவர் -
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொல். என்று சொன்ன என் வாய்மையின் மேலா சந்தேகம்? (உக்ரமாக) நக்கீரா என்னை நன்றாக பார்!

Translator - Nakkeeraa, look at him.

Officer - Who, for the love of Mary and Joseph, is Nakkeeraa?

Translator - மேரி மற்றும் ஜோசப் மேல் உள்ள அன்பினால் கேட்கிறேன், யார் அந்த நக்கீரா?


திருவள்ளுவர் - அது ஒரு பெரிய கதை. வேண்டுமானால் 'திருவிளையாடல்' படம் வாங்கி தருகிறேன், போட்டு பார்த்து கற்றுக்கொள்ள சொல்லுங்கள்.


Translator - That is a big story. If you want..

Officer - No, no, no, no....... I don't want a big story. For that matter, I don't want a small story either. (groaning) Just 2 minutes in to the interview and I already have the mother of all headaches. ( at the translator) Please take this man outside and bring "Ambujam" in for the interview. (Looking at திருவள்ளுவர்) I will get back to you Mr. Theruvalvan. Please step outside and take a seat until you are called in again.

---------------------
(இந்த பிரஜையின் பிரயாணம் தொடரும்)

Thursday, March 3, 2011

வா வா வசந்தமே!

அப்பாடா! ஒரு வழியா வசந்த காலம் ஆஜர். கடந்த ஆறு மாசமா வெளியே வராதான்னு ஊர்ல எல்லாரும் ஏக்கமா எட்டி பாத்துகிட்டு இருந்த சூரியன் இப்போ தான் மனமிரங்கி பரம விசிறிகளான எங்களுக்கு காட்சி தர முன் வந்திருக்கான். வாழ்க்கை சூடு பிடிக்க ஆரம்பிக்கற நேரம் இது.

நாலு மாசமா அலட்சியப்படுத்தினதில் தெருவுல எல்லார் வீட்டு தோட்டமும் எங்க வீட்டு தோட்டத்தோட போட்டி போட்டுக்கிட்டு 'நீ மோசமா, நான் மோசமா'ன்னு பல்லிளிச்சது போன வாரம் வரைக்கும் தான். நேத்து காலையில் எதேச்சையா ஜன்னல் வழியா எட்டிப்பார்த்தா என்ன ஒரு ஆச்சர்யம்! ஹாரி பாட்டர் மந்திரக்கோல் ஆட்டி 'ஜீபூம்பா' ன்னு சொன்னா மாதிரி எங்க வீட்டை தவிர எல்லார் வீட்டு வாசலிலும் வண்ண பூச்செடிங்க அழகழகா பூத்து என்னைய பார்த்து 'உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே' ன்னு அழகு காட்டுது. எங்க வீட்டு கிட்டே வரும் போது மந்திரக்கோலுக்கு சார்ஜ் போயிருக்குமோ? Stock market shares வாங்கி போடற எண்ணம் இருக்குறவங்களுக்கு இது நல்ல தருணம். Lowes மற்றும் Home Depot கம்பனிங்க பூச்செடி வித்தே Wallstreet ட்டை வலுவாக்கராங்கன்னு கேள்விப்பட்டேன்.

வயசில் சின்னவங்க, பெரியவங்கன்னு வித்யாசம் பாராட்டாம எல்லோர் முட்டியையும் ஒரே மாதிரி பதம் பார்த்துகிட்டு இருந்த குளிர் காலத்தை அடிச்சு விரட்டிட்டு ஒயிலா வசந்த காலம் எட்டிப் பார்க்கும் போது இந்த மாதிரி உற்சாகமா பூந்தோட்டமோ இல்லை காய்கறித் தோட்டமோ மக்கள் போடறது நாம எல்லாரும் நடைமுறைல பாக்கற ஒரு விஷயம் தான்.

ஆனா எங்க ஊர் மக்கள் வசந்தம் வந்ததும் தோட்ட வேலையை விட உற்சாகமா இன்னொரு விஷயம் செய்வாங்க. அது தான் உடல்பயிற்சி. சூரியன் சாயல்ல வட்டமா ஒரு பெரிய ஸ்டிக்கர் பொட்டை பார்த்தா கூட போதும், ஏதோ பூச்சாண்டி குச்சி எடுத்துகிட்டு துரத்தரா மாதிரி தெருவில் இறங்கி ஓட ஆரம்பிச்சிடுவாங்க. விடிகார்த்தால காப்பி டீ கூட குடிக்காம ஜட்டியை விட கொஞ்சம் பெருசா ஒரு நிஜார் மாட்டிகிட்டு தலை தெறிக்க ஓடற சில மக்களை நிறுத்தி விசாரிச்சதுல இதுக்கு ரெண்டு முக்கிய காரணங்கள் இருக்குன்னு தெரிஞ்சுகிட்டேன். ஒண்ணு புத்துணர்ச்சி. மற்றது உடல் எடை குறைப்பு.

இவங்க ஓட்டமா ஓடி கொட்டற வியர்வையை ட்யூப் போட்டு பக்கெட்டில் பிடிச்சா நாலு ரோஜா பூ செடிக்கு ஒரு வாரம் தண்ணி விடலாம். இதுல எங்கேர்ந்து புத்துணர்வு வரும்னு எனக்கு புரியலை. ஹமாம் சோப்பு விளம்பர அறிவுரையை கடைபிடிச்சா தானா புத்துணர்வு வந்திட்டு போறது. இதுக்கு போய் தலை தெறிக்க ஒடுவானேன்? எங்க குடும்பத்தில் புத்துணர்ச்சி பெற நாங்க நம்பகமான ஒரு formula கண்டு பிடிச்சு வச்சிருக்கோம். ஒரு கப் பில்டர் காப்பி + ஒரு தட்டு 'ஜானகி' பிராண்ட் தேன்குழல் = புத்துணர்ச்சி. இதை patent பண்ணலாமான்னு கூட ஒரு யோசனை இருக்கு. பார்ப்போம். God is great.

உடல் எடை குறைப்பை பத்தி அதிகம் எதுவும் சொல்ல எனக்கு விருப்பம் இல்லைங்க ஏன்னா அது ஒரு சோக கதை. சரி அதை விட்டு தள்ளுவோம்.

வசந்த காலம் வந்தாலே பொதுவா எல்லா வீட்டுத் தலைவிகளுக்கும் ஒரு வினோதமான உந்துதல் வரும். பத்து வருஷ coma விலேர்ந்து திடீர்னு கண்ணை திறந்து 'அடடா இப்படி குப்பைத்தொட்டிக்குள்ள போய் வாழரோமே' ன்னு உணர்ந்தவங்க மாதிரி வசந்த காலம் வந்து பளிச்சினு வெய்யில் அடிச்ச உடனே வீட்டை சுத்தம் செய்யறதில் இறங்கிடுவாங்க. சுத்தம் பண்ணறேன்னு சொல்லி வீட்டில் உள்ள எல்லா அலமாரி சாமான்களையும் இழுத்து வெளியே போடறது இந்த சீசனுக்கே உண்டான ஒரு விசேஷம்.

அது மட்டும் இல்லை. வீட்டுத் தலைவிகளோட தானதர்ம உணர்வுகள் தலை தூக்கி நிற்கற நேரம் வசந்த காலம் தான். கணவர், குழந்தைகளோட உடம்பில் போட்டிருக்கிற துணிகளை மட்டும் விட்டு வச்சிட்டு மிச்ச எல்லாத்தையும் மூட்டை கட்டி 'salvation army' இல்லைனா 'goodwill' கடைங்களுக்கு தானம் செஞ்சுடுவாங்க. ரெண்டு வாரம் முன்னாடி வாங்கின புத்தம் புது துணிமணி எல்லாம் கூட இந்த மூட்டைக்குள்ள தான் இருக்கும். எல்லாத்தையும் எடுத்து தானம் பண்ணிட்டு Macy's கடைல spring sale ன்னு அடுத்த வருஷம் தானம் பண்ண வேண்டிய துணி மணி மற்றும் இதர சாமான்களை வாங்கரதுல பிசியாயிடுவாங்க. எனக்கு எப்படித் தெரியும்ன்னு கேக்கறீங்களா? நேத்து தான் நான் பத்து மூட்டை சாமான்களை தானம் செஞ்சேன். என் கணவரோட சட்டை வைக்கும் அலமாரி நான் துடைச்ச துடைப்பில வைரம் மாதிரி மின்னரதுன்னா பாருங்களேன்! கொடை வள்ளல் கர்ணனோட தங்கச்சின்னு என் கணவர் (பெருமையா ???) சொன்னது என் காதுல நல்லாவே விழுந்தது.

Kohl's கடைலேர்ந்து 20% off வசந்த கால தள்ளுபடி கூபான் இன்னிக்கு தான் வந்திருக்கு. இதுவே நவராத்திரி காலமா இருந்ததுன்னா குங்குமச்சிமிழ் எடுத்துகிட்டு கொலுவுக்கு கூப்பிட Kohl's கடைக்கு போயிடுவேன். ஏன்னா நம்ம மக்கள் எல்லாம் கூபான் பிடிச்சிகிட்டு அங்கே தானே இப்போ இருப்பாங்க?

பி.கு.- இந்த பதிவு போன வருடம் RTS தமிழ் சங்க ப்ளாகில் நான் எழுதி வெளியிடப்பட்டது.

Thursday, February 3, 2011

ஒரு பிரஜையின் பிரயாணம் - 1

முதல் பாகம்: விளையாட சொப்பு வேணும்னா வாங்கித்தரேன், என் கையை திருப்பி கொடு!

கல்யாணம் ஆகி சரியா முப்பதாவது நாள் ஒரு புது மணத்தம்பதி அவங்க வீட்டு தினமலர் காலெண்டர்ல தேதியை கிழிச்சு முடிச்சு திரும்பரத்துக்குள்ள ஊரில் சுத்தி உள்ள மக்கள் எல்லாரும் அவங்க வீட்டு வாசக்கதவை தட்டி 'என்ன, ஏதாவது விசேஷம் உண்டா?' அப்படீன்னு படு முக்கியமா கேட்டு பாத்திருப்பீங்க. ஏன்? இதை தெரிஞ்சு இவங்க வாழ்க்கையில் என்ன ஆதாயம்னு நீங்க யோசனை பண்ணறது எனக்கு புரியறது. ஆதாயமாவது ஆவக்காயாவது! எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறு தான். பகல் போய் இரவு வரா மாதிரி பலருக்கும் இது ஒரு 'இயல்பான' கேள்வியாப் போச்சு நம்ம ஊருல.

இதே மாதிரி இன்னொரு 'இயல்பான' கேள்வியை அமெரிக்காவில் அடிக்கடி நான் கேட்டிருக்கேன். சேர்ந்தா மாதிரி நாலு தடவை உங்களை ஒரு சக இந்தியர் கடைத்தெருவுல பார்த்தார்னா அடுத்த முறை பல நாள் பழகின உணர்வோடு கிட்ட வந்து கை குலுக்கி 'ஹலோ, எப்படி இருக்கீங்க? கல்யாணம் ஆகி குழந்தைங்க இருக்கா உங்களுக்கு? பச்சை அட்டை (green card) வாங்கிட்டீங்களா?' ன்னு கண்டிப்பா உங்களை கேக்கலைன்னா என் பேரை மாத்தி 'கோமளவல்லி'ன்னு வச்சுக்க நான் தயார். இன்னும் இரண்டு தடவை பார்த்ததும், போன ஜென்மத்து விட்ட குறையோ, தொட்ட குறையோன்னு நீங்க நினைக்கும் படி வாஞ்சையோடு உங்களை கட்டிண்டு 'நீங்க அமெரிக்க பிரஜை ஆயிட்டீங்களா? எப்போ?' ன்னு படு ஸ்ரத்தையாக விசாரிப்பார். இந்த கேள்விக்கான உங்களோட பதில் அவரோட வாழ்க்கையில் எந்த ஒரு வளமும் கொடுக்காதுன்னு தெரிஞ்சாலும் நிச்சயம் கேட்பார். இரவு போய் பகல் மாதிரி இதுவும் இன்னொரு 'இயல்பான' கேள்வி இங்க.

'நீங்க அமெரிக்க பிரஜையா' ங்கற கேள்விக்கு கடந்த சில வருஷங்களா பல முறை நான் 'இல்லை'ன்னு பதில் சொல்லி சொல்லி ஏதோ பரீட்சையில் பெயிலான உணர்வு எனக்கு. இனியொரு முறை இந்த அவமானம் பட என்னால முடியாதுன்னு என் கணவர்கிட்ட சில மாதங்களுக்கு முன்னால கண்டிப்பா சொல்லிட்டேன். முதலில் அவ்வளவா கண்டுக்காத அவர் நான் சவுதி இளவரசி (பின்ன வயசானவங்களை தானே ராணின்னு சொல்லணும்?)மாதிரி நீள கருப்பு அங்கியும், முகத்திரையும் போட்டுண்டு தான் இனி காய்கறி வாங்கவே வெளியே போவேன்னு அடம் பிடிக்க ஆரம்பிச்சதும் தான் பிரச்சனையோட தீவிரத்தை புரிஞ்சுண்டு உடனடியா நாங்க அமெரிக்க பிரஜையாக தேவையான டஜன் forms ஐ தயார் பண்ணி அனுப்பி வைத்தார்.

இமிக்ரேஷன் ஆபீசில் இருந்து முதல் கடிதம் ஒரு வழியா வந்து சேர்ந்தது. ஆனா என்ன ஒரு அக்கிரமம்? எங்க ரெண்டு பேரையும் உடனடியாக வந்து கைநாட்டு (fingerprinting) போட்டு விட்டு போகும் படி அந்த கடிதம் ஆணையிட்டிருந்தது. வந்ததே கோபம் எனக்கு! "என்னை பார்த்தா கைநாட்டு கேஸ் மாதிரியா இருக்கு இவங்களுக்கு? எவ்வளவு கஷ்டப்பட்டு, திண்டாடி, தெருப்பொரிக்கி பட்டம் வாங்கியிருப்பேன்? கை நாட்டு போடவா கூப்பிடறாங்க? என்னை யாருன்னு நினைச்சாங்க இவங்க?" தீபாவளி சரவெடி பார்த்திருக்கீங்களா? அதே மாதிரி தான் என் கணவர்கிட்ட அன்னிக்கு நான் பொரிஞ்சு தள்ளினேன். 'டாய்....எவன்டா அவன்' ன்னு சத்யராஜ் பாணியில லுங்கியை தூக்கி சொருகிண்டு இமிக்ரேஷன் ஆபீசை பார்த்து போர்க்கொடி பிடிச்சு ஒரு நடை போடாத குறை மட்டும் தான்.

சரியான சமயத்தில் என் கணவர் மட்டும் சமயோஜிதமா என் கிட்ட 'அளவுக்கு அதிகமா ஆசைப்படற ஆம்பளையும், அளவுக்கு அதிகமா கோபப்படற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லைன்னு நம்ம ரஜினி சொன்னதை மறந்துடாதே மீனா' ன்னு சொல்லி என் கோபத்தை கட்டுப்படுத்தலைன்னா என்ன ஆயிருக்குமோ சொல்லவே முடியாது. படையப்பா திரைப்படம் என் வாழ்க்கையில இப்படி ஒரு திருப்புமுனையா அமையும்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. தலைவர்னா சும்மாவா பின்ன!

ஒரு வழியா எதுக்கு எங்களோட கைரேகையை பதிவு செய்ய கூப்பிடறாங்கன்னு என் கணவர் விளக்கி சொன்னதும் சரி தான்னு தலை ஆட்டிட்டு நான் சாதுவா (ஆமாம் நானே தான்...அதென்ன அவ்வளவு நக்கல் உங்களுக்கு?) அவர் பின்னால அந்த ஆபீசுக்கு போனா என்ன ஒரு ஆச்சர்யம்? அப்படியே நம்ம தமிழ்நாடு கவர்மென்ட் ஆபீஸ் ஒண்ணுக்குள்ள நுழையறா மாதிரியே இருந்தது.

இதை எங்கேயோ நிச்சயம் பார்த்திருக்கோமேன்னு நினைக்க வைக்க கூடிய அதே அழுக்கு நாற்காலி. அதே அழுது வடியற சுவர். Terminator படத்து வில்லன் மாதிரி அதே உணர்ச்சியை காட்டாத முகங்கள். ரொம்ப சந்தோஷமா இருந்தது எனக்கு. இருக்காதா பின்ன? ரொம்ப நாட்களுக்கு அப்புறம் இந்திய மண்ணை தொட்ட உணர்வாச்சே! ஒரு வழியா என் டோக்கன் எண்ணை (ஆமாம், இங்கயும் அதே டோக்கன் தான்) கூப்பிட்டதும் என் கணவருக்கு பிரியா விடை கொடுத்துட்டு ஒரு அழுக்கு ரூமிலேர்ந்து இன்னொரு அழுக்கு ரூமுக்கு ஒரு அம்மணி பின்னாலேயே போனேன்.

என் கையை தூக்கி பார்த்த அந்த அம்மணி ஏமாற்றத்தில் சோர்ந்து போய் நின்னது சில நொடிகள் தான். உடனே சமாளிச்சிண்டு பிளாஸ்டிக் டப்பியில இருந்த ஒரு துர்நாற்ற தீர்த்தத்தை சர் சர்ன்னு என் கைல அடிச்சு ஒரு துணியினால என் விரல்களை ஆவேசமா தேய்க்க ஆரம்பிச்சாங்க. அவங்க மட்டும் இவ்வளவு நல்லா என் கையை தேச்சு அலம்பி விடுவாங்கன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா நான் காலையில் கொஞ்சம் சோப்பை குறைவாவே உபயோகிச்சிருப்பேன். செலவாவது மிச்சமாயிருக்குமே!

இனி தேச்சா எலும்பு தான்னு உறுதியானதும் தேய்ப்பதை நிறுத்திட்டு என் விரல்களை கைல தூக்கி பிடிச்சு அவங்க அவ்வளவு உன்னிப்பா ஆராயறதை பார்த்து எனக்கு கொஞ்சம் உதறல். என்ன பிரச்சனை? இப்போ தான் ரின் சோப்பு போட்டு தோச்ச வெள்ளை வேட்டி மாதிரி பளபளன்னு தானே இருக்கு நம்ம விரல்? ஒரு வேளை அஞ்சுக்கு பதில் நமக்கு ஏழெட்டு விரல்கள் இருக்கோ? அதான் இந்தம்மா இப்படி குழம்பி போய் நிக்கறான்களோ அப்படீன்னு எல்லாம் எனக்கு ஒரே யோசனை. ஒருவழியா என் விரல்களோட அழகில் திருப்தியான அந்த அம்மா ஒவ்வொரு விரலா எடுத்து ஒரு கண்ணாடி scanner மேல வச்சு இப்படியும் அப்படியும் திருப்பி திருப்பி விளையாட ஆரம்பிச்சாங்க.

பூமா தேவி மாதிரி இல்லைன்னாலும் நானும் பொதுவா பொறுமைசாலி தாங்க. ஆனா எத்தனை நேரம் தான் கையை இன்னொருவர் கிட்ட கொடுத்துட்டு பேக்கு மாதிரி நிக்கறது? நான் மட்டும் Barbie பொம்மை மாதிரி இருந்திருந்தேன்னா என் விரல்களை கழட்டி அவங்க கைல கொடுத்து 'ஆசை தீர விளையாடிட்டு திரும்பி கொடும்மா ராசாத்தி'ன்னு சொல்லிட்டு நிம்மதியா ஒரு ஓரமா உக்காந்திருப்பேன்.

ஒரு வழியா பல கோணங்களில் என் விரல்களை படம் பிடிச்சுட்டு கொசுறுக்கு என் முகத்தையும் சின்னதா படம் பிடிச்சுட்டு அவங்க வேலையை முடிச்சாங்க அந்த அம்மா. 'கிளம்பட்டா தாயீ' ன்னு பையை தூக்கிண்டு வெளியே போக நான் திரும்பினா என் கைல ஒரு பேப்பரும் பேனாவும் கொடுத்து உக்கார வச்சிட்டாங்க மறுபடியும். என்ன விஷயம்னு பார்த்தா அந்தம்மா இன்முகமா என்னை வரவேற்று நல்லபடியா என் விரல்களை கவனிச்சுகிட்டு மொத்தத்துல எனக்கு இனிமையான அனுபவம் ஒண்ணை கொடுத்தாங்களான்னு கேள்வி கேட்டிருந்தாங்க. ஹ்ம்ம்..........நம்ம எழுதறதை எழுதி அந்தம்மா கைலயே வேற அதையும் கொடுக்கணுமாம். இதென்ன வம்பு! நான் பாட்டுக்கு எசகுபிசகா ஏதாவது எழுதி அவங்க கைல கொடுத்தா அவங்க கோச்சுகிட்டு என்னை வீட்டுக்கு அனுப்பாம உக்கார வச்சு என் விரலை எடுத்து இன்னும் நாலு மணி நேரம் திருகினா நான் என்ன ஆறது?

இப்ப என்ன? பகவத்கீதை புஸ்தகத்து மேல சத்தியமா பண்ண சொல்லறாங்க? அதோட அவங்க மனம் குளிர நாலு வார்த்தை சொன்னா போகப்போறது என் காசா பணமா? இப்படி தீர்மானம் பண்ணி அவசரமா பேனாவை எடுத்தேன். உன்னைப் போல உண்டாம்மா ராசாத்தி, என் ஒட்டு நிச்சயம் உனக்கு தான்னு அடிச்சு தள்ளி எழுதி குடுத்துட்டு என் விரல்களை பேன்ட் பாக்கெட்குள்ள ஜாக்கிரதையா மறைச்சு வச்சு நல்லபடியா வெளிய கொண்டு வந்து சேர்த்தேன்.

---- ஒரு பிரஜையின் பிரயாணம் தொடரும்

Thursday, December 16, 2010

முன் நெத்தி வழுக்கையாகாமல் பீ.எச்.டீ. பட்டம் வாங்குவது எப்படி??

டாக்டர் பட்டம் வாங்கணும்னு கொஞ்ச நாளாவே ஒரு நப்பாசை எனக்கு. டாக்டர் மீனா அப்படீன்னு சொல்லிக்க ஒரு கெட்டப்பா இருக்குமேன்னு பாக்கறேன். அதுக்காக பத்து வருஷம் கஷ்டப்பட்டு முன் நெத்தி வழுக்கையாற வரைக்கும் படிச்சு டாக்டர் பட்டம் வாங்குன்னு சிரமமான அறிவுரையெல்லாம் எனக்கு குடுக்காதீங்க. நடக்கற விஷயமா ஏதாவது பேசுவோம். சுலபமா டாக்டர் பட்டம் வாங்க ரெண்டு வழி தான் இருக்கு.

தமிழ்நாட்டு ஆளும்கட்சியில எம்.எல்.ஏவா சேர்ந்து ஏதாவது புது தனியார் பல்கலைகழகம் திறக்கும் போது போய் ரிப்பன் வெட்டி குடுத்தாக்க அவங்களே சூப்பரா ஒரு ஜிலு ஜிலு பொன்னாடை போர்த்தி விட்டு டாக்டர் பட்டமும் குடுத்திடுவாங்க. இது ஒரு வழி. ஆனா அரசியல் எனக்கு சரி வராது. ஏன்னா கட்சில சேர்ந்த உடனேயே எல்லோரும் மரியாதை காரணமா 'அம்மா மீனா' அல்லது 'மீனாம்மா'ன்னு பவ்யமா கூப்பிட ஆரம்பிப்பாங்க. அதெல்லாம் வயசை அனாவசியமா கூட்டி காமிக்கும். எனக்கு தேவையா சொல்லுங்க?

ரெண்டாவது வழி தினப்படி நாம பிரமாதமா செய்யற ஒரு விஷயத்தையே எடுத்து அதுல பீ.எச்.டீ குடுப்பாங்களான்னு ஆராயணும். எப்படியும் செய்யற ஒரு வேலைக்கு பட்டம் குடுத்தாங்கன்னா எவ்வளவு சுலபம்? இந்த வழி தான் சரின்னு எனக்குப்பட என்னோட தினசரி வேலைகளை அலச ஆரம்பித்தேன். உலகத்துல எந்த ஒரு பல்கலைகழகமும் பாத்திரம் தேய்ப்பது, சமைப்பது, வீடு சுத்தம் செய்வதுக்கெல்லாம் டாக்டர் பட்டம் குடுப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை. அவசியம் குடுக்க வேண்டிய சில துறைகள் தான் இவைன்னு மனப்பூர்வமா நான் நம்பறேன். செய்து பார்த்தா தானே தெரியும் அந்த கஷ்டம்? கணக்கும், இலக்கியமும், விஞ்ஞானமும் ஒரு வீட்டு தலைவியோட வேலைகளோடு போட்டியிட முடியுமா? ஆனா டாக்டர் பட்டம் இதுல கொடுப்பாங்கன்னு நம்பறது நடப்புக்கு ஒத்து வராத முட்டாள்தனம்.

சரி வீட்டு வேலை இல்லாத, ஆனா தினமும் நான் செய்யற ஒரு விஷயம் என்னன்னு யோசனை பண்ணின போது தான் மண்டைக்குள்ள பளிச்சுன்னு ஒரு பல்ப் எரிஞ்சுது. அத்தி பூத்தா மாதிரி எப்பவாவது தான் எரியும் இந்த பல்ப் ஆனா எரிஞ்சா பிரகாசமா எரியும். தெனமும் கண் முழிச்சிருக்குற நேரத்துல பாதி நேரம் இதை தான் செய்யறேன். கடந்த ரெண்டு வருஷமா அரும்பாடு பட்டு இந்த துறையோட நெளிவு சுளிவுகளை எல்லாம் முழுசாக கத்து தேற முயற்சி செய்து வர்றேன். என்னை விட இந்த ஒரு கலையை எங்க ஊரில் இன்னும் பலர் பல வருஷங்களா ரொம்ப அருமையா செய்யறாங்க. அப்படி என்ன பெரிய கலைன்னு கேக்கறீங்களா?

கையில் நசுங்கின அலுமினியப் பாத்திரம், உடம்பில் கசங்கி கந்தலான துணி - இவை இல்லாமலேயே பிச்சை எடுப்பது. என்ன? இந்த கலையை பத்தி கேள்விப்பட்டதில்லையா நீங்க? கவலை டபேல். விலாவாரியா நான் சொல்லேறேன் கேளுங்க.

ஊரில் ஒரு புது கோவில் கட்ட திட்டமா? நிதி வசூல் செய்யாமல் கோவில் கட்ட முடியாதா? நம்ம அபிமானக் கடவுள் (அபிமான நடிகர்னு சொல்லி தான் இது வரை கேள்விப்பட்டிருப்பீங்க) சந்நிதி கொண்டு வர என்ன வேணா செய்ய தயாரா இருக்கோமா? எங்க பிச்சை தொழில் அப்படி தான் ஆரம்பிச்சது. அப்புறம் இந்திய கலாச்சாரத்தை வளர்க்க கர்னாடக இசை கலைஞர்களை அழைத்து ஊரில் நிகழ்ச்சிகள் போட முடிவு எடுக்கப்பட்ட போது ஒரு சின்ன விஷயம் இடிச்சது. கஜானா காலி, வேறென்ன புதுசா? மறுபடியும் தூக்கினோமே கண்ணுக்கு தெரியாத அந்த அலுமினிய பாத்திரத்தை. இதையெல்லாம் தாண்டினா குழந்தைங்களோட பள்ளிக்கூடத்துக்கு நிதி திரட்டியாகணும். பள்ளிக்கூடத்துக்கு பாப்கார்ன் வித்து வித்து (பாதி பாப்கார்னை நாங்களே தின்னு தின்னு) வாய்ல எப்பவுமே உப்பு கரிக்கரா மாதிரி ஒரு பீலிங்.

முதல்ல நீங்க முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டிய ஒரு விஷயம் என்னன்னா, இந்த பிச்சைக் கலையை சிறப்பா செய்து வர்ற நாங்க எல்லோருமே சில பல கௌரவமான பிச்சை டெக்னிக்குகளை கையாளுவதில் வல்லவர்கள்னு. அனாவசியமா யாரும் எங்களை தெருவோரமா நின்னு போற வர வண்டிகளை நிறுத்தி 'அய்யா, அம்மா...பார்த்து கொஞ்சம் போடுங்க'ன்னு தலையை சொரியும் கும்பல்னு நினைச்சுடக் கூடாது பாருங்க. அப்படி என்ன பெரிய டெக்னிக்? தட்டை தூக்கிண்டு தெருவுல சுத்துவதுக்கு பதில் மாத்தி மாத்தி போன் மேல போன் போட்டு மக்கள் கழுத்தை அறுக்கறது தான். "கோவிலுக்கு அம்பது டாலர் தான் தர முடியுமா? அதுக்கென்ன நோ ப்ராப்ளம்ஸ். ஆனா கர்நாடக இசை வளர்க்கும் குழுவுக்கு மட்டும் ஒரு நூறு டாலர் குடுத்துடுங்க சரியா? உங்க வீட்டு பக்கமா இன்னிக்குஎனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நானே வந்து உங்ககிட்ட காசோலை வாங்கிக்கவா?" சிரிச்சு சிரிச்சே பணத்தை உருவிட மாட்டோம் நாங்க!

ஊர் மக்களை நினைச்சா சில சமயம் பாவமா கூட இருக்கு. எந்த பக்கம் திரும்பினாலும் அவங்க பேன்ட் பாக்கெட்ல கை விட்டு பர்ஸ் எடுக்க ஒருத்தர் ரெடியா இருக்கோம். என்ன தான் செய்வாங்க அவங்களும். அன்னிக்கு கூட தெரிஞ்சவங்களா தெரியுதேன்னு கை தூக்கி நான் ஹலோ சொல்லறதுக்குள்ள ஒரு குடும்பம் பயந்து போய் பின்னங்கால் பிடரில இடிக்க திரும்பி ஓடிட்டாங்க.

என் தமக்கை ஆங்கில இலக்கியத்துல பீ.எச்.டீ முடித்து டாக்டர் பட்டம் எடுத்தவள்னு இங்க ரொம்ப பெருமையோடு உங்ககிட்ட சொல்லிக்கிறேன். எங்க குடும்பத்தோட முதல் டாக்டர் அவள் தான். கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பு மேல் படிப்பை தொடர்ந்து எம்.பில் மற்றும் பீ.எச்.டீ எடுத்து எங்களுக்கெல்லாம் சொல்லொணா பெருமை சேர்த்தவள் அவள். எங்க குடும்பத்தோட டாக்டர் கோட்டா அவ தயவுல முடிஞ்சு போச்சு. ரொம்ப திறமைசாலி என் தமக்கை. முன் நெத்தி வழுக்கை ஆகாமலேயே பீ.எச்.டீ பட்டம் வாங்கிட்டான்னா பாருங்களேன்! பெரிய எதிர்ப்பார்ப்புக்கள் எதுவும் என்னிடம் இல்லாததால தான் குறுக்கு வழியில் சுலபமா பிச்சை எடுத்தே பீ.எச்.டீ எடுக்க முடியுமான்னு இன்னிக்கு நான் ஒரு ஆழ்ந்த சிந்தனைல இருக்கேன்.

எனக்கு டாக்டர் பட்டம் கிடைக்கும்னு உங்களுக்கு நம்பிக்கை இருக்கா?

------------------------------------

This was written for and published in the RTS blogpage earlier this year. Hope you enjoy it!

Tuesday, November 23, 2010

சித்ரகுப்தா, எடு உன் லெட்ஜரை!

அறிவிப்பு - இது வழக்கம் போலான நகைச்சுவை பதிவு அல்ல. மனிதத்தோல் போர்த்திய சில மிருகங்களின் அரக்கத்தனத்தில் மனமொடிந்து நான் எழுதிய பதிவு தான் இது. ஆரோக்யமான இருதயம் இருந்தால் மட்டுமே இதை படிக்கவும்.

----------------------------------------

அரக்கத்தனமும் அசுரத்தனமும் உலகத்தில் தலைவிரித்து ஆடும் போது கடவுள் அவதாரம் எடுத்து உலகத்தை காப்பார் என்பது நம் புராணங்களும் இதிகாசங்களும் வலியுறுத்தி சொல்கிற ஒரு விஷயம். இன்டர்நெட் வலைப்பூ மூலமாக இத்தனை நாட்களாக இனிமையான விஷயங்களை மட்டுமே பொழுது போக்குக்காக படித்து கொண்டிருந்த எனக்கு நேற்று ஒரு பலமான சாட்டை அடி. மனிதாபிமானம், மனித நேயம் - இதெல்லாம் வெறும் பைத்தியக்கார கனவுகளோ என்று எண்ண வைக்கும் அதிபயங்கரமான அசுரத்தனம் ஒன்றை நேற்று வலைப்பூ மூலம் முதல் தடவையாக பார்த்து தெரிந்து கொண்ட எனக்குள் ஏதோ உறைந்து போன மாதிரியான உணர்வு.

பாசமான உறவுகள், இனிமையான நண்பர்கள் மற்றும் அருமையான சமூக தோழமைகள் - இது தான் நான் சாதாரணமாக வாழும் ஒரு dettol போட்டு அலம்பிய உலகம். நான் பார்க்க உதித்து, அஸ்தமிக்கும் அதே சூரியனின் கீழ் மனிதத்தோல் போர்த்திய பல அசுரர்கள் நடமாடுவது நம்ப விரும்பாமல் நான் இத்தனை நாட்கள் மறுத்திருந்த ஒரு உண்மை. ஆனால் இன்று கண்கட்டவிழ்ந்து ஒரு முட்டாளின் சொர்கத்திலிருந்து வெளியே வந்து விட்ட நான் அதிகம் உணர்வது சீற்றமா, துக்கமா, அருவருப்பா, வெறுமையா? எனக்கு சொல்ல தெரியவில்லை.

பெண்களுக்கு சுதந்திரமும், கல்வியும், வேலை வாய்ப்புக்களும் பெருகி இருக்கும் இந்த நூற்றாண்டில் இந்தியாவின் பல இடங்களில் இன்னும் பல இளம் பெண்கள் செக்ஸ் அடிமைகளாக விற்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு பின்பு தூக்கி எறியப்படுகிறார்கள் என்ற செய்தியை ஜீரணிக்க முடியாமல் கஷ்டப்படுவது முட்டாள்தனமென்றால் ஆமாம், நான் முட்டாள் ராஜ்யத்தின் மகாராணி தான். அதிலும் மூன்று, நாலு, ஐந்து வயது பச்சிளம் குழந்தைகளை அவர்களோட தாய் தந்தை மற்றும் உறவினர்களே சிகப்பு விளக்கு பகுதிகளில் ஒரு சில நூறு ரூபாய் தாட்களுக்காக விற்று விடுவதை கேட்டு இதயக்கூடு காலியாகி ஸ்தம்பித்து நிற்பது பைத்தியக்காரத்தனமென்றால் ஆமாம் நான் சட்டையை கிழித்து கொண்டு அலையாத ஒரு பைத்தியக்காரி தான்.

மூக்கில் சளி வந்தால் தானாக துடைக்க தெரியாத மூன்று வயது குழந்தை ஒரு செக்ஸ் அடிமையா? தார் ரோட்டில் தடுக்கி விழுந்தால் சராய்த்து ரத்தம் வரும் கால் முட்டியை பார்த்து பயத்தில் வீறிடும் நாலு வயது குழந்தை ஒரு செக்ஸ் அடிமையா? தன் பெயரையே முழுசாக இன்னும் எழுத தெரியாத ஒரு பச்சிளம் ஐந்து வயது குழந்தை ஒரு செக்ஸ் அடிமையா? குண்டு திராட்சை கண்களால் பீதியுடன் ஏறிட்டு பார்க்கும் குழந்தையை பலாத்காரம் பண்ணக் கூட ஒரு மனிதனுக்கு மனம் வருமா? சிவன் தலையில் ஊற்றெடுத்து பொங்கி ஓடும் கங்கை நதியில் சாக்கடை நீரை கொட்டக் கூட ஒரு மனிதனால் முடியுமா?

ஒரு மனிதன் அல்ல, பல மனிதர்களால் முடியும் என்பதை நேற்று பார்த்த செய்தியில் தெரிந்து கொண்டேன். ஒரு மூன்று வயது பெண் குழந்தையை gang rape செய்து, குற்றுயிரும் குலையுயிருமாய் ஆக்கி ரயில் தண்டவாளத்தில் குப்பை போல தூக்கி விட்டெறிந்து விட்டு போன மனிதர்கள் எந்த நரகத்திலிருந்து தப்பி வந்த அசுரர்கள்? இவர்கள் வாழும் இந்த பூமியில் இன்னும் மழை எப்படி பெய்கிறது? சுனாமி இவர்களை எல்லாம் இழுத்து கடலில் மூழ்கடிக்காமல் ஏன் இன்னும் விட்டு வைத்தது? அந்த குழந்தையை பெற்று விற்ற தாய் தந்தை ஏன் இன்னும் பஸ்பமாகவில்லை? ஆஸ்பத்ரியில் உயிருக்கு அந்த குழந்தை போராடும் போது பச்சிளம் குழந்தைகளிடம் தங்கள் ஆண்மையை காண்பிக்கும் இந்த அராஜகர்களேல்லாம் எப்படி உயிரோடு நடமாடலாம்? இந்த அவலைப் பெண்கள் சுவாசிக்கும் அதே காற்றை இந்த அரக்கர்களும் எப்படி சுவாசிக்கலாம்?

என் கேள்விகளுக்கு பதில் எங்கே? நம் புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் சொல்படி பார்த்தால் இந்த அசுரர்களை அழிக்க கடவுள் அவதாரம் எடுத்து வந்திருக்க வேண்டும். அவர் எங்கே? ஒ மறந்து விட்டேன். அரசன் அன்று கொல்லுவான் ஆனால் தெய்வம் நின்று தான் கொல்லுமோ? என்னால் முடியாது. எனக்கு அந்த பக்குவமும் இல்லை, பொறுமையும் இல்லை. இதோ என் கற்பனை உலகத்தில் நான் இன்றே வழங்கும் தீர்ப்புகள்.

நான் - சித்ரகுப்தா, விலகிக்கொள். இன்று ஒரு நாள் உன் லெட்ஜர் மற்றும் நாற்காலி என் கையில்.

சித்ரகுப்தன் - அப்பாடி! ஒரு நாள் எனன, ஒரு மாசம் வேணும்னாலும் நீயே இந்த வேலையை பாரு. (ஓட்டமாய் ஓடுகிறார்)

சித்ரகுப்தன் நாற்காலியில் நான் - யமதர்மா, இன்று பூமியில் ஒரு சில மனிதர்களின் அராஜகம் அதிகமாகி விட்டது. நீங்களே பயந்து எருமையில் ஏறி ஓட்டம்பிடிக்கும் அளவு அசுரத்தனம் எல்லாம் அங்கு நடக்கிறது. அவர்கள் முன் சூரபத்மனும், நரகாசுரனும் கமர்கட் திருடிய சிறு பிள்ளைகளாக தோன்றுகிறார்கள்.

யமதர்மன் - உனது பரிவுரை எனன மீனா?

நான் - பெண்களையும், சிறு குழந்தைகளையும் சொல்லொணா கொடுமை செய்யும் மானிடப் பதர்கள் அனைவருக்கும் இந்த நரகம் பற்றாது. புதுசாக ஒன்று நிர்மாணிக்க ஏற்பாடு செய்யுங்கள். எண்ணைக் கொப்பரைக்கு பதில் அங்கு கொதிக்கும் எண்ணைக் கடல் ஒன்றை நிறுவுங்கள். இந்தப் பாவிகளை அந்த கரையோரம் நிறுத்தி, கொதிக்கும் எண்ணை அலை அலையாய் பொங்கி அடித்து அதில் அவர்கள் கொஞ்சம், கொஞ்சமாக வெந்து, புண்பட்டு, கதறி சாக வேண்டும். பெண்களையும், குழந்தைகளையும் அசுரத்தனமாய் தீண்டிய அவர்கள் கைகளை வெட்டி விட்டு பின்பு தான் எண்ணை கடல் கரையோரம் நிற்க வைக்க வேண்டும்.

யமதர்மன் - செய்து விடுகிறேன் மீனா. வேறெதாவது கோரிக்கை உண்டா?

நான் - இன்னும் ஒன்றே ஒன்று மன்னா. இவர்களிடம் கொடுமைப்பட்ட அனைவரின் மனத்திலும் அந்த கொடூரமான நினைவுகளை அகற்றி அவர்கள் மகிழ்ச்சியோடு மற்ற நாட்களை பூமியில் கழிக்க நீங்கள் அருள வேண்டும்.

யமதர்மன் - இல்லை. அது எனக்கு அப்பாற்பட்டது மீனா. நினைவுகளை அகற்றி மகிழ்ச்சியோடு வாழ்வது அவரவர் கையில் தான் இருக்கிறது. உனது பரிவுரைகளை உடனே அமுலுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்கிறேன். இனி, நீ போய் சித்ரகுப்தனை சபைக்கு அனுப்பு.

நான் - அப்படியே ஆகட்டும் காலனே. (வெளியேறுகிறேன்)