டாக்டர் பட்டம் வாங்கணும்னு கொஞ்ச நாளாவே ஒரு நப்பாசை எனக்கு. டாக்டர் மீனா அப்படீன்னு சொல்லிக்க ஒரு கெட்டப்பா இருக்குமேன்னு பாக்கறேன். அதுக்காக பத்து வருஷம் கஷ்டப்பட்டு முன் நெத்தி வழுக்கையாற வரைக்கும் படிச்சு டாக்டர் பட்டம் வாங்குன்னு சிரமமான அறிவுரையெல்லாம் எனக்கு குடுக்காதீங்க. நடக்கற விஷயமா ஏதாவது பேசுவோம். சுலபமா டாக்டர் பட்டம் வாங்க ரெண்டு வழி தான் இருக்கு.
தமிழ்நாட்டு ஆளும்கட்சியில எம்.எல்.ஏவா சேர்ந்து ஏதாவது புது தனியார் பல்கலைகழகம் திறக்கும் போது போய் ரிப்பன் வெட்டி குடுத்தாக்க அவங்களே சூப்பரா ஒரு ஜிலு ஜிலு பொன்னாடை போர்த்தி விட்டு டாக்டர் பட்டமும் குடுத்திடுவாங்க. இது ஒரு வழி. ஆனா அரசியல் எனக்கு சரி வராது. ஏன்னா கட்சில சேர்ந்த உடனேயே எல்லோரும் மரியாதை காரணமா 'அம்மா மீனா' அல்லது 'மீனாம்மா'ன்னு பவ்யமா கூப்பிட ஆரம்பிப்பாங்க. அதெல்லாம் வயசை அனாவசியமா கூட்டி காமிக்கும். எனக்கு தேவையா சொல்லுங்க?
ரெண்டாவது வழி தினப்படி நாம பிரமாதமா செய்யற ஒரு விஷயத்தையே எடுத்து அதுல பீ.எச்.டீ குடுப்பாங்களான்னு ஆராயணும். எப்படியும் செய்யற ஒரு வேலைக்கு பட்டம் குடுத்தாங்கன்னா எவ்வளவு சுலபம்? இந்த வழி தான் சரின்னு எனக்குப்பட என்னோட தினசரி வேலைகளை அலச ஆரம்பித்தேன். உலகத்துல எந்த ஒரு பல்கலைகழகமும் பாத்திரம் தேய்ப்பது, சமைப்பது, வீடு சுத்தம் செய்வதுக்கெல்லாம் டாக்டர் பட்டம் குடுப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை. அவசியம் குடுக்க வேண்டிய சில துறைகள் தான் இவைன்னு மனப்பூர்வமா நான் நம்பறேன். செய்து பார்த்தா தானே தெரியும் அந்த கஷ்டம்? கணக்கும், இலக்கியமும், விஞ்ஞானமும் ஒரு வீட்டு தலைவியோட வேலைகளோடு போட்டியிட முடியுமா? ஆனா டாக்டர் பட்டம் இதுல கொடுப்பாங்கன்னு நம்பறது நடப்புக்கு ஒத்து வராத முட்டாள்தனம்.
சரி வீட்டு வேலை இல்லாத, ஆனா தினமும் நான் செய்யற ஒரு விஷயம் என்னன்னு யோசனை பண்ணின போது தான் மண்டைக்குள்ள பளிச்சுன்னு ஒரு பல்ப் எரிஞ்சுது. அத்தி பூத்தா மாதிரி எப்பவாவது தான் எரியும் இந்த பல்ப் ஆனா எரிஞ்சா பிரகாசமா எரியும். தெனமும் கண் முழிச்சிருக்குற நேரத்துல பாதி நேரம் இதை தான் செய்யறேன். கடந்த ரெண்டு வருஷமா அரும்பாடு பட்டு இந்த துறையோட நெளிவு சுளிவுகளை எல்லாம் முழுசாக கத்து தேற முயற்சி செய்து வர்றேன். என்னை விட இந்த ஒரு கலையை எங்க ஊரில் இன்னும் பலர் பல வருஷங்களா ரொம்ப அருமையா செய்யறாங்க. அப்படி என்ன பெரிய கலைன்னு கேக்கறீங்களா?
கையில் நசுங்கின அலுமினியப் பாத்திரம், உடம்பில் கசங்கி கந்தலான துணி - இவை இல்லாமலேயே பிச்சை எடுப்பது. என்ன? இந்த கலையை பத்தி கேள்விப்பட்டதில்லையா நீங்க? கவலை டபேல். விலாவாரியா நான் சொல்லேறேன் கேளுங்க.
ஊரில் ஒரு புது கோவில் கட்ட திட்டமா? நிதி வசூல் செய்யாமல் கோவில் கட்ட முடியாதா? நம்ம அபிமானக் கடவுள் (அபிமான நடிகர்னு சொல்லி தான் இது வரை கேள்விப்பட்டிருப்பீங்க) சந்நிதி கொண்டு வர என்ன வேணா செய்ய தயாரா இருக்கோமா? எங்க பிச்சை தொழில் அப்படி தான் ஆரம்பிச்சது. அப்புறம் இந்திய கலாச்சாரத்தை வளர்க்க கர்னாடக இசை கலைஞர்களை அழைத்து ஊரில் நிகழ்ச்சிகள் போட முடிவு எடுக்கப்பட்ட போது ஒரு சின்ன விஷயம் இடிச்சது. கஜானா காலி, வேறென்ன புதுசா? மறுபடியும் தூக்கினோமே கண்ணுக்கு தெரியாத அந்த அலுமினிய பாத்திரத்தை. இதையெல்லாம் தாண்டினா குழந்தைங்களோட பள்ளிக்கூடத்துக்கு நிதி திரட்டியாகணும். பள்ளிக்கூடத்துக்கு பாப்கார்ன் வித்து வித்து (பாதி பாப்கார்னை நாங்களே தின்னு தின்னு) வாய்ல எப்பவுமே உப்பு கரிக்கரா மாதிரி ஒரு பீலிங்.
முதல்ல நீங்க முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டிய ஒரு விஷயம் என்னன்னா, இந்த பிச்சைக் கலையை சிறப்பா செய்து வர்ற நாங்க எல்லோருமே சில பல கௌரவமான பிச்சை டெக்னிக்குகளை கையாளுவதில் வல்லவர்கள்னு. அனாவசியமா யாரும் எங்களை தெருவோரமா நின்னு போற வர வண்டிகளை நிறுத்தி 'அய்யா, அம்மா...பார்த்து கொஞ்சம் போடுங்க'ன்னு தலையை சொரியும் கும்பல்னு நினைச்சுடக் கூடாது பாருங்க. அப்படி என்ன பெரிய டெக்னிக்? தட்டை தூக்கிண்டு தெருவுல சுத்துவதுக்கு பதில் மாத்தி மாத்தி போன் மேல போன் போட்டு மக்கள் கழுத்தை அறுக்கறது தான். "கோவிலுக்கு அம்பது டாலர் தான் தர முடியுமா? அதுக்கென்ன நோ ப்ராப்ளம்ஸ். ஆனா கர்நாடக இசை வளர்க்கும் குழுவுக்கு மட்டும் ஒரு நூறு டாலர் குடுத்துடுங்க சரியா? உங்க வீட்டு பக்கமா இன்னிக்குஎனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நானே வந்து உங்ககிட்ட காசோலை வாங்கிக்கவா?" சிரிச்சு சிரிச்சே பணத்தை உருவிட மாட்டோம் நாங்க!
ஊர் மக்களை நினைச்சா சில சமயம் பாவமா கூட இருக்கு. எந்த பக்கம் திரும்பினாலும் அவங்க பேன்ட் பாக்கெட்ல கை விட்டு பர்ஸ் எடுக்க ஒருத்தர் ரெடியா இருக்கோம். என்ன தான் செய்வாங்க அவங்களும். அன்னிக்கு கூட தெரிஞ்சவங்களா தெரியுதேன்னு கை தூக்கி நான் ஹலோ சொல்லறதுக்குள்ள ஒரு குடும்பம் பயந்து போய் பின்னங்கால் பிடரில இடிக்க திரும்பி ஓடிட்டாங்க.
என் தமக்கை ஆங்கில இலக்கியத்துல பீ.எச்.டீ முடித்து டாக்டர் பட்டம் எடுத்தவள்னு இங்க ரொம்ப பெருமையோடு உங்ககிட்ட சொல்லிக்கிறேன். எங்க குடும்பத்தோட முதல் டாக்டர் அவள் தான். கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பின்பு மேல் படிப்பை தொடர்ந்து எம்.பில் மற்றும் பீ.எச்.டீ எடுத்து எங்களுக்கெல்லாம் சொல்லொணா பெருமை சேர்த்தவள் அவள். எங்க குடும்பத்தோட டாக்டர் கோட்டா அவ தயவுல முடிஞ்சு போச்சு. ரொம்ப திறமைசாலி என் தமக்கை. முன் நெத்தி வழுக்கை ஆகாமலேயே பீ.எச்.டீ பட்டம் வாங்கிட்டான்னா பாருங்களேன்! பெரிய எதிர்ப்பார்ப்புக்கள் எதுவும் என்னிடம் இல்லாததால தான் குறுக்கு வழியில் சுலபமா பிச்சை எடுத்தே பீ.எச்.டீ எடுக்க முடியுமான்னு இன்னிக்கு நான் ஒரு ஆழ்ந்த சிந்தனைல இருக்கேன்.
எனக்கு டாக்டர் பட்டம் கிடைக்கும்னு உங்களுக்கு நம்பிக்கை இருக்கா?
------------------------------------
This was written for and published in the RTS blogpage earlier this year. Hope you enjoy it!