Sunday, October 22, 2023

சவாலே சமாளி! {நவராத்திரி நினைவுகள் 2023}

நானும் பல வருடமாக கண்ணில் படும் கணினி நிபுணர்களை எல்லாம் கெஞ்சிப் பார்த்து சலித்து விட்டேன்.  பகல் இரவு அப்படீன்னு பாரபட்சம் பார்க்காமல் எந்நேரமும் கணினியோடு குடுத்தனம் பண்ணும் சக இந்தியர்களில் ஒருவர் கூட  என் வேண்டுகோளை காதில் வாங்காமல் போனது வருந்தத் தக்க விஷயம்.  இந்த உலகத்தில் இரக்கம், தயை, பச்சாதாபம் எல்லாம், தலிபான் ஆட்சியில் பெண் சுதந்திரம் போல் கடத்தப்பட்டது எப்போது?  நவராத்திரி சீசனில் இரிச்மண்டு நகரில் பெண்கள் படும் பாட்டை பார்த்து இனி அந்த கொலுவில் இருக்கும் கடவுளே மனமிரங்கி வந்து ஒரு app ஐ எழுதினால் தான் எங்களுக்கு விடிவு வரும் போல இருக்கு. 

நாங்கள் பெண்கள்.  பெரும் ஆற்றல் மிக்கவர்கள் தான்.  ஒத்துக்கறேன்.  வாழ்க்கை எங்கள் பக்கமாக  விட்டெறியும் எந்த பந்தையும் அஞ்சாமல் நேர்கொண்டு அசராமல் சிக்ஸர் அடிக்கும்  மன உறுதி கொண்டவர்கள் தான்.  இல்லைன்னு சொல்லலை.  இருந்தாலும் நவராத்திரி சீசனில் வந்து எங்கள் முன் குவியும் சவால்களில் நாங்கள் ஆடிப்போவது என்னவோ மறுக்க முடியாத ஒரு உண்மை.

அப்படி என்ன மீனா உங்களுக்கு பெரிய சவால்கள் னு நீங்க கேட்பீங்கன்னு தெரிஞ்சு தான் நான் ரெடியா list போட்டு கொண்டு வந்திருக்கேன்.  மேலே படிங்க.

சவால் #1:  

வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே போகும் கொலு அழைப்புகள்.  Evite, whatsapp, text, email அப்படீன்னு பல திசைகளிலிருந்து வந்து குவியும் இந்த அன்பான அழைப்புகளை வர வர சமாளிக்கவே முடியலை.  யார் யார் என்னென்னிக்கு கொலுவுக்கு கூப்பிட்டு இருக்காங்க?  சுதா வீட்டில் செவ்வாய் கிழமை கூப்பிட்டால் சுதாவின் தெரு முனையில் இருக்கும் கீதாவும் அன்னிக்கே கூப்பிட கூடாதா?  அவங்க தெரு ரொம்ப அழகா தான் இருக்கு.  நான் மறுக்கலை. ஆனால் அதுக்குன்னு பெட்ரோல் விக்கற விலைக்கு ஒரே  தெருவுக்கு எத்தனை முறை வண்டியை விட முடியும், சொல்லுங்க?  

இன்னொரு  ரொம்ப முக்கியமான புள்ளி விவரம் இதோ.  எத்தனை மணிக்கு பிறகு அவரவர் கொலுவுக்கு கூப்பிட்டு இருக்காங்க?  ஏன்னா அந்த வீட்டம்மா சுண்டலை தாளிப்பதற்கு முன்னாடி நம்ம போய்  நின்னா நல்லா இருக்காது பாருங்க. அப்புறம் ஒன்பது நாட்கள் தானே நவராத்திரி விழா?  சராசரியாக ஒரு வீடு  மூணு  மணி நேரம் அவங்க கொலுக்கதவை திறக்கையில், optimal ரூட் மேப் இல்லாமல் எப்படிங்க  ஐம்பதுக்கும் மேலே உள்ள கொலு வீடுகளுக்கு போக முடியும்?  விறு விறுன்னு நடந்து பாருங்களேன்னு விவரமில்லாமல் நீங்கள் சொன்னீங்கன்னா அடுத்த கொலுவில் உங்களுக்கு சுண்டல் cut.

சவால் #2:

கடந்த சில வருடங்களாக நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் எந்த நிறத்தில் புடவை கட்டணும்னு யாரோ ரூம் போட்டு யோசிச்சு பட்டியல் போட்டு வாட்ஸாப்பில் சகட்டு மேனிக்கு பரப்பி விடறாங்க.  தப்பில்லை.  ஒரு விதமா உதவி தான்.  ஏன்னா என்ன புடவை உடுத்தணும்னு நாம மண்டையை உடைத்து கொள்ள வேண்டாம் பாருங்க.  பின்ன என்னதுக்கு இப்படி புலம்பணும்னு நீங்க கேக்கறீங்க.  நியாயமான கேள்வி.  

என்னோட குறை இது தான்.  பட்டியல் போடறவங்க சும்மா நீலம், பச்சை, சிவப்பு அப்படீன்னு சொன்னா பத்தாதா?  மயில் பச்சை, ராயல் நீலம், காஷ்மீர் மிளகாய் சிவப்பு., கூவம் நதி கருப்பு.....இப்படி எல்லாம்  நுணுக்கமா பட்டியல் போடுவது அவசியமா?  ஒரு நாள் கிளம்பும் அவசரத்தில்  (ராயல் ப்ளூ தேதியில்) நான் ஒரு பிங்க் கலர் புடவையில் ஏதோ ஒரு ப்ளூ பார்டர் புடவை கட்டி கொண்டு போனேன்.  அவ்வளவு தான்.  அன்னிக்கு ஊர் மக்கள் என்னை அவங்க மூக்கு கண்ணாடியை கீழே தள்ளி பார்த்த பார்வையில் ரொம்ப shame shame ஆ போச்சு.   இந்த சோதனை எங்களுக்கு தேவையா?

சவால் #3:

நம்ப பாரம்பரியத்துக்கு ஒரு குறையில்லாமல் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் கொண்டு வரும் ஆப்பிளும் ஆரஞ்சு பழ மூட்டைகளும் தான் எங்களோட அடுத்த சவால்.  ஒவ்வொரு வருஷமும் இந்த ஒன்பது நாளும் அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளில் ஒரு பழம் கூட விட்டு வைக்காமல் நம்மூர் பெண்கள் வழித்து கொண்டு போவதாக ஊரில் பேச்சு.  நானே எங்க வீட்டு கொலுவுக்கு வரவங்களுக்கு கொடுக்க  போன வாரம் 200 பழங்கள் வாங்கினேன்னா பாருங்களேன்.  வீட்டுக்கு வந்தவங்களுக்கு தாம்பூலத்தில் ஆளுக்கு ரெண்டு பழம் வைத்து கொடுத்து ஒரு வழியா எங்க வீட்டு பழ மலையை மடுவாக மாத்தி விட்டு நிமிர்ந்தால், வந்தவங்க அன்போடு எங்கள் கொலுவுக்கு கொண்டு வந்து குமித்திருந்த ஆப்பிளும் ஆரஞ்சும் வாழைப்பழமும் என்னை பார்த்து கெக்கலி கொட்டிச்சு.  எவ்வளவு தான் நாங்களும்  ஜூஸ் பண்ணி குடிக்க முடியும், சொல்லுங்க?  ஆப்பிள் ரசம், ஆப்பிள் தொக்கு, ஆப்பிள் ஜேம், வாழைப்பழ அப்பம், வாழைப்பழ பிரெட்......இதுக்கு மேல என்ன பண்ண முடியும்?  வேறே சமையல் குறிப்பு தெரிஞ்சா சொல்லுங்களேன் ப்ளீஸ். 

சவால் #4:

"மீனா, எங்க கொலுவில் இந்த வருடம் எந்த பொம்மை புதுசுன்னு சொல்லுங்க பார்க்கலாம்?"  - இப்படி அதிரடியாக கிளம்பும் திடீர் தேர்வுகள். ஆவலோடு என் முகத்தை பார்த்து இந்த கேள்வியை கேட்கும் இரிச்மண்டு  பெண்களை பார்த்தால் எனக்கு என்னவோ பாவமாக  தான் இருக்கும்.  இந்த மாதிரி தேர்வில் என்னிக்குமே நான் பாசானதாக சரித்திரம் இல்லை.  எனக்கு மட்டும்  சொல்லணும்னு ஆசை இருக்காதா?  ஆனால் பாருங்க, எங்க வீட்டு கொலுவில் என்ன பொம்மை  இருக்குன்னு எனக்கே கொஞ்சம் சுமாரா தான் நியாபகம் இருக்கும் போது, போன வருடம் உங்க வீட்டில் ஒரு ஐந்து நிமிஷம் நான் பார்த்த பொம்மை எனக்கு நினைவிருக்கும்னு நீங்க எப்படி எதிர்பார்க்கறீங்க?  இதுக்காக எல்லாம் கோவிச்சுக்கிட்டு என்னை போல மறதி உள்ளவங்களுக்கு சுண்டல் தராம மட்டும் இருந்தீங்கன்னா அது ரொம்ப தப்பு.  தேங்காய் மாங்காய் போட்ட அமர்க்களமான சுண்டல் இல்லை அப்படீன்னாலும் பரவாயில்லை. ஒரு சுமார் சுண்டலையாவது ஆறுதல் பரிசாக கொடுத்துடுங்க, சரியா?  

என் நவராத்திரி சவால் பட்டியல் இன்னும் ரொம்பவே நீளம்.  அதனால் இன்னிக்கு இதோடு நிறுத்திக் கொண்டு,  ஊரெல்லாம் சுண்டல் மணம் கமழும் இந்த நவராத்திரி சீசனில்  அனைவருக்கும் என் நவராத்திரி வாழ்த்துக்கள் சொல்லி விடை பெறுகிறேன். 

-மீனா சங்கரன் 

Tuesday, December 19, 2017

கச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3

இந்த வாரக்கடைசியில் இந்தியாவை விட்டு கிளம்பணும். அதுக்குள்ள நிறைய கச்சேரிகளையும் , காண்டீன்களையும்  பார்த்திடணும்னு  சபதம் எடுத்து தினமும் ரெண்டு அல்லது மூணு கச்சேரி சபாக்களுக்கு  விடாமல் படை எடுக்கிறேன்.

Ola டாக்சி கம்பெனி ஆளுங்க காந்தி சிலைக்கு பக்கத்துல எனக்கும் சிலை எழுப்ப ஏற்பாடு பண்ணறாங்கன்னு ஒரு வதந்தி இருக்கு. இந்த ரெண்டு வாரத்தில், கொண்டு வந்த அந்நிய செலாவணில முக்காலுக்கும் மேல நான் ஓலா டாக்சிக்கு கொடுத்தேங்கறது உண்மை தான். அதுக்காக காந்திக்கு சமமா எனக்கு சிலை எழுப்பரதெல்லாம் அதிகமா படறது.  ஏதோ மனசுல பட்டதை சொல்லறேன். அப்புறம் அவங்க இஷ்டம்.

சென்னைல மக்கள் தொகை பெருக்கத்தை கண் கூடா பார்க்கணும்னா சாயந்திரம் நாலு மணிக்கு மேல ஏதாவது ஒரு கச்சேரிக்கு கிளம்பி வந்தா போதும். தெருவுக்கு தெரு ஒரு கச்சேரி இருந்தாலும் சாயந்திரம் நடக்கும் எல்லா கச்சேரிகளிலும் கும்பல் அலை மோதுவது ஆச்சர்யம் தான். 

நாலு நாள் முன்னாடி அபிஷேக் ரகுராம் அவர்களின் கச்சேரிக்கு போயிருந்தேன்.  இடம் கிடைக்காதோன்னு ரெண்டு மணி நேரம் முன்னாடியே போய் இடம் பிடிச்சது நல்லதா போச்சு. சீக்கிரமா போய் இடம் பிடிக்கற நல்ல பழக்கத்தை சின்ன வயசுல என் அப்பா கிட்ட தான் கத்துண்டேன்.  ராத்திரி எட்டு மணி ரயிலுக்கு காலை பத்து மணிக்கே ஸ்டேஷன் போய் உக்காந்து ப்லாட்போர்ம் பெருக்கி துடைப்பதை கண் கொட்டாம ஆசையா பார்க்கற குடும்பம் எங்களது தான்.

அபிஷேக்கோட கச்சேரிக்கு சீக்கிரம் போனது நல்லதா போச்சு. முதல்ல உட்காரும் சேரெல்லாம் காலி. அப்புறம் நடை பாதைல ஒரு இன்ச் இடத்தை கூட வேஸ்ட் பண்ணாம  மக்கள் உட்கார்ந்தாங்க. வேற வழி தெரியாம சபா ஆட்கள் ஒரு பெரிய ஜமக்காளத்தை மேடைக்கு கீழ விரிக்க ரெண்டு நிமிஷத்துல அதுவும் கூட full ஆகவே அடுத்து மக்கள் பாய்ஞ்சது மேடைக்கு ஏறும் படிக்கட் மேல தான். அபிஷேக் சாரோட  மடி மட்டும் தான் பாக்கி இருக்குன்னு ஆனதும் தான் கதவை ஒரு வழியா பூட்டினாங்க. ஸ்பைடர் மேன் மாதிரி சுவத்துல ஒட்டிக்க கூடிய திறமை மட்டும் மனிதனுக்கு இருந்திருந்தா இன்னும் நூறு பேராவது குறைஞ்சது அந்த அருமையான கச்சேரியை ரசிச்சிருக்கலாமேன்னு என்னால நினைக்காம இருக்க முடியலை.

நிறைய சபாக்களில் காலை 9 மணியிலேர்ந்தே கச்சேரிகள் ஆரம்பம். வெளிநாட்டிலேர்ந்து வரும்  நிறைய இளம் பாடகர்கள் இந்த நேரத்துல  தான் பாடறாங்க. ரொம்ப  அருமையா பாடற இந்த இளம் வித்வான்களின் திறமையை கேட்க நிறைய கும்பல் இல்லாதது வருத்தமா தான் இருக்கு. பகல் உணவை முடிச்சப்புறம் ரெண்டு மணி நேரம் தூங்கி எழுந்து காபி குடிக்கற நேரமா தான் மக்கள் சபா கான்டீனை பார்த்து போறாங்கன்னு என்னோட அனுமானம். அவங்களை சொல்லியும் குத்தமில்லை. காப்பின்னா அது கான்டீன் காப்பி தான். ரொம்பவே சூப்பர். 

இப்பல்லாம் அடிக்கடி எனக்கு கனவுல குழிப்பணியாரமும்,  கீரை வடையுமா  வருது.  எப்பவாவது தான் வாழைப்பூ வடையும் வாழைக்காய் பஜ்ஜியும் வரும்.  எது வந்தாலும் வராட்டாலும் ஒவ்வொரு கனவிலும் கரெக்ட்டா ஆஜராவது சபா கேன்டீன் காப்பி தான்.  வாரக்கடைசியில் ஊருக்கு போன பிறகு என் குடும்பத்தினருக்கு அடுத்து நான் ரொம்ப மிஸ் பண்ணுவது இந்த கான்டீன் காப்பியா தான் இருக்கும்னு நினைக்கிறேன்.

பாட்டை தலை ஆட்டி ரசிக்கறச்சே பேசாம கண்ணை மூடிக்கறது தான் நமக்கு நல்லது என்பதை இந்த இரண்டு வார அனுபவம் எனக்கு கற்று கொடுத்திருக்கு. இல்லைன்னா அடுத்த நாற்காலியில் உட்கார்ந்திருப்பவர் நம்ம கிட்ட ராகம் பேரை கேட்க வாய்ப்பிருக்கு.  ஏதோ பத்துல நாலு ராகம் தட்டு தடுமாறி சொல்லிடுவேன்.  மிச்சது multiple choice ல ஜம்முனு விட்டுடுவேன். ராகம் தெரிஞ்சா மட்டும் தான் கண்ணை திறந்து வச்சுக்கறது.  ராகம் புரியலைனா கண் மூடி த்யானத்துல ஆழ்ந்திடுவேன்.  அனாவசியமா நம்மை யாரும் அப்போ தானே கேள்வி கேட்க மாட்டா. வாழ்க்கை நமக்கு எத்தனையோ பாடங்களை கத்து கொடுக்கிறது. அதுல இது ரொம்ப முக்கியமான ஒண்ணு அப்படிங்கறது என்னோட அபிப்ராயம். 

ரெண்டு வாரமா என்னை தொடர்ந்து வந்து என் கூட கச்சேரி அனுபவங்களை பகிர்ந்து கொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி கூறி இந்த கச்சேரி கலாட்டா தொடரை இத்துடன் முடித்து கொண்டு விடை பெறுகிறேன்.

- மீனா சங்கரன்
வர்ஜீனியா, அமேரிக்கா

Thursday, December 14, 2017

கச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 2

நான் வெளிநாட்டிலேர்ந்து சென்னைக்கு  வந்து இறங்கி இன்னியோட ஒரு வாரம் ஆகிறது.  தினமும் தேடித் தேடி கச்சேரி சபாக்களை விஜயம் பண்ணினதுல  இப்போ எந்த கச்சேரிக்கு போனாலும் கண்ல படற மாமா மாமிகளை பார்த்து சிரிச்ச முகமா ''சௌக்கியமா, இன்னிக்கு கேன்டீன்ல என்ன மெனு'' ன்னு கேக்கற அளவுக்கு என் நட்பு வட்டம் பெருகியிருக்குன்னா பாருங்களேன்!

ஊருக்கு வந்திறங்கிய ரெண்டாம் நாள் சாயந்திரம் நான் போன இடம் இன்னிக்கு சங்கீத உலகத்தின் சிகரத்தில் இருக்கும்  ஒரு சகோதரிகளின் கச்சேரிக்கு.  அதெப்படி வாயை திறந்தாலே இவங்க  ரெண்டு பேருக்கும் பாட்டு சும்மா காசி அல்வா மாதிரி  வழுக்கிக் கொண்டு வந்து விழறது. அப்படிங்கற அதி முக்கிய ஆராய்ச்சியை அதிக நேரம் செய்யாமல் கச்சேரியை ரசிக்க ஆரம்பிச்ச நான் உட்கார்ந்திருந்தது எட்டாவது வரிசையில்.

தர்பார் ராக வர்ணத்திலே சபையை சுண்டி இழுக்க ஆரம்பித்த   ரெண்டு பேரும் அடுத்தடுத்து ஆரபி, ஹிந்தோளம் மற்றும் பந்துவராளி கீர்த்தனைகளை அருமையாய் பாடி ஒட்டு மொத்தமா மக்களை மயக்கி கை தட்டலை வாங்கினது குறிப்பிடத்தக்கது..  ரசிப்போட உச்சத்துல  தலையை இப்படியும் அப்படியுமா ஆட்டினதுல நாலாவது பாட்டு முடியறதுக்குள்ள எனக்கு கழுத்துல சரியான சுளுக்கு.  எனக்காவது பரவாயில்லை. பக்கத்துல ஒரு மாமா  சபாஷ், பலே சொல்லி சொல்லியே நாக்கு வறண்டு, ஓய்ந்து போய் உக்காந்திருந்தார் பாவம்.

எல்லா சங்கீத வித்துவான்களுக்கும்  விதூஷிகளுக்கும் இந்த  ரசிகையோட பணிவான வேண்டுகோள் இது தான்.  அடுத்தடுத்து எல்லாப் பாட்டையும் நீங்க அசத்தலா பாடிக்கொண்டே போனா   ரசிகர்களோட நிலைமை என்னன்னு கொஞ்சமாவது நீங்க  யோசனை பண்ணி பார்க்கணும்.  அப்பப்போ நடுவுல கொஞ்சம் சுமாரா ஒரு பாட்டு பாடினா தானே நாங்களும் ஒரு வாய் மோரோ, தண்ணியோ குடிச்சு  ஆசுவாசப்படுத்திக்க முடியும்?  நீ இரங்காயெனில் புகல் ஏது அப்படீன்னு அடுத்த சபாவுக்குள்ள நுழைஞ்சு உங்களை பார்த்து நான் பாடறதும் பாடாததும் உங்க கைல தான் இருக்கு, சொல்லிட்டேன்.

முதல் நாலு பாட்டு வரை  தெம்பா தலை ஆட்டிண்டு இருந்த  எனக்கு வந்த சோதனை அடுத்ததா சகோதரிகள் பாடின சஹானா ராக ''கிருபை நெலகொன்ன'' கீர்த்தனை மூலமா தான்.  சஹானா ராகம் சும்மாவே சொக்குப் பொடி போடும்.  எனக்கோ ஜெட் லாக்.  இந்த சகோதரிகள் வேறு  தேன்ல குழைச்சு நெய்ல தோச்ச குரலில்  மக்களை அசத்தித் தான் ஆவோம்னு  கங்கணம் கட்டிண்டு பாடினா நானும் தான் என்ன செய்ய முடியும்? 

எட்டாவது வரிசைல  கண் சொக்கி போய் உட்கார்ந்திருந்தது என் குத்தமா?  பிரிய மாட்டேன்னு அடம் பிடிச்ச இமை ரெண்டயும்  கையால எத்தனை நேரம் தான் நானும் பிரிச்சு பிரிச்சு விட முடியும்?  எடுத்த முயற்சியில் கை  விடா விக்ரமாதித்தன் போல என் கன்னத்தை நானே வேகமா பட்டு பட்டுன்னு அடிச்சு கூட பார்த்தேன்.  மேடையிலிருந்த சகோதரிகள் என்னை மரியாதையா (?) பார்த்தது மட்டுமில்லாம பக்கத்துல இருந்த மாமா மாமி எல்லாம்  என் கிட்டேர்ந்து  நைசா நகர்ந்து அடுத்த வரிசைக்கு போய் உட்கார்ந்தது தான் மிச்சம். தூக்கம் கலைஞ்ச பாடு இல்லை.

சரி, கான்டீன் பக்கம் போய் ஒரு கப் காப்பி சாப்பிட்டுட்டு வருவோம்னு நினைத்து கடிகாரத்தை பார்த்தா ராத்திரி மணி ஏழே முக்கால்.  அடடா எட்டாக போறதான்னு  உடனே பாய்ஞ்சு கான்டீனுக்கு தலை தெறிக்க ஓடினேன்.  ஏன் என்ன அவசரம்னு விவரமில்லாம நீங்க கேட்டாலும் நான் பொறுமையா தான் உங்களுக்கு பதில் சொல்லுவேன்.

இந்த ஒரு வாரத்துல நான் அனுபவப்பட்டு கற்றது இது தான்.  ராத்திரி சரியா மணி எட்டு அடிச்சா சபாவில் உள்ள பாதி மாமாக்களும் மாமிகளும் கொண்டு வந்த துணிப்பையை தூக்கிண்டு கும்பலா வெளிநடப்பு பண்ணிடுவா.  அந்த சரஸ்வதியே பூலோகம் இறங்கி வந்து கச்சேரி பண்ணினாலும் இதே கதி தான்.  என்னோட காப்பி கொட்டை சைஸ் மூளையை கசக்கி நான் யோசனை பண்ணதுல தான் தெரிஞ்சுது இவா எல்லாம் சாப்பிட்டுட்டு சுகர் மாத்திரை போடற நேரம் அதுன்னு.  கிளம்பர கும்பல்ல பாதி பேர் தோசை கனவோடு வீட்டுக்கு போனா மிச்ச பேர் கான்டீன் டேபிள்ல மாத்திரை டப்பாவை திறந்துண்டு உட்கார்ந்திடுவா. இவாளுக்கு முன்னாடி போய்  கர்சீப் போட்டு சேர் பிடிக்க தான் நான் அப்படி தலை தெரிக்க ஓடினேன்.

வந்ததோ வந்தோம், காப்பிக்கு துணையா இருக்கட்டுமேன்னு ஒரு தட்டு குழிப் பணியாரத்தையும் சேர்த்து சொல்லிட்டு தான் உட்கார்ந்தேன். இந்த சகோதரிகளோ  இன்னும் குறைஞ்சது ரெண்டு மணி நேரமாவது மேடையில் கலக்குவா போல தெரியுது.  கை  தட்ட எனக்கும் தான் தெம்பு வேண்டாமா சொல்லுங்கோ?

-மீனா சங்கரன்


Friday, December 8, 2017

கச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 1

சாம்பார் வடைக்கு அப்புறமா நான் அதிகமா ஜொள்ளு விட்டுக்  கணட  கனவு, மார்கழி மாசத்துல சென்னைக்கு  வந்து தினமும் ஆசை தீர பாட்டு கச்சேரிகள் கேட்பது தான்.  நான் இத்தனை நாளா கஷ்டப்பட்டு விட்ட ஜொள்ளுக்கு பலனில்லாம போகலை.  கடவுள் ஒரு வழியா இந்த வருஷம் என் கனவை நனவாக்கிட்டார்.

பெட்டி நிறைய புடவையும் மனசு நிறைய கச்சேரி ஆசையுமா நேத்து சென்னை வந்து இறங்கின எனக்கு ஒரே இன்ப அதிர்ச்சி.  பல வருஷங்களா நானும்  சென்னைக்கு வந்து போயிண்டு இருக்கேன்.  எப்பவும் நெத்திக் கண்ணை திறந்து உக்கிரமா முறைச்சு பார்த்து, தமிழ் சீரியல் மாமியார்களை நினைவுபடுத்தும்  சூரியனை பார்த்தே பழக்கப்பட்ட  எனக்கு இந்த இளம் சூட்டோட இனிமையா வரவேற்கும் மார்கழி மாச சூரியன் புதுசு.  பயணம் ஆரம்பமே மனசுக்கும் உடம்புக்கும் இதமா இருந்தது.

காப்பி குடிச்ச கையோட கச்சேரி லிஸ்ட்டை பார்க்க காலை பேப்பரை புரட்டின எனக்கு கண்ணை இருட்டிண்டு வந்தது தான் மிச்சம்.  ஒரு ஊர்ல  இவ்வளவு சபாக்களா? ஒரே நாள்ல, ஒரே நேரத்துல இவ்வளவு கச்சேரியா? எதுக்கு போறதுன்னு  ரொம்ப நேரம் குழம்பி ஒரு வழியா இங்கி பிங்கி பாங்கி தயவுல ரெண்டு கச்சேரியை தேர்வு செய்து நிமிர்ந்த போது ஏதோ மலையை புரட்டின உணர்வு.

அடுத்தடுத்து நடக்கப் போகும் ரெண்டு கச்சேரிகளை கேட்க ஆவலா (ஆனா கொஞ்சம் லேட்டா) அரங்கத்தில் நுழைஞ்ச நானும் என் கணவரும்  ஆச்சர்யத்தில் அப்படியே நின்னுட்டோம் .  நாலு தக்காளியை தூக்கி கும்பலுக்கு நடுவில்  போட்டா மிக்சி இல்லாமலே நிமிஷமா சட்னி ரெடியாரா மாதிரி ஒரு மக்கள் சமுத்திரம்!  இதே வித்வான் எங்க ஊருக்கு வந்து கச்சேரி பண்ணின போது ஹாலில் ஈ ஓட்ட தனியா ஆள் போட்ட ஞாபகம். சொத்தில்  பாதி எழுதி வைக்கறேன்னு சத்தியம் பண்ணாக்கூட கச்சேரிக்கு வர மாட்டேன்னு அடம் பிடிக்கற எங்க ஊர் மக்களை பார்த்தே பழகிட்ட எனக்கு இது ஒரு புது அனுபவம்.

எங்களுக்கு முன்னாடியே வந்து எங்களுக்காக  ரெண்டு சீட் போட்டு வச்சிருந்த என் தங்கைக்கு நான் கணக்கில்லாமல் கடன் பட்டிருக்கேன். காலேஜ் போற காலத்துல  காலை நேர அவசரத்தில்  எனக்கு பிளவுசுக்கு பட்டன் தச்சு தந்ததிலேர்ந்து இப்போ வருஷா வருஷம் நான் இந்தியா வரதுக்கு முன்னாடியே எனக்காக  பார்த்து பார்த்து துணிமணி வாங்கி, நான் ஒவ்வொரு முறையும் கண்டதையும் சாப்பிட்டு வயித்த வலியில் சுருண்டு படுக்கும் போது  விடாம என்னோட ஆஸ்பத்திரிக்கு அலைவது வரை பாசத்தில் அவளை மிஞ்ச நான் பல பிறவி எடுக்க வேண்டியிருக்கும்.

இதென்னடா காமெடி படம் போட்டா பாசமலர் படம் ஓடுதேன்னு நீங்க நினைக்கறது எனக்கு புரியாம இல்லை. அப்பப்போ சீரியஸ் சீன் இல்லைனா காமெடிக்கு என்ன வேல்யூ சொல்லுங்க?  சரி சரி  இதோ அடுத்த சீன் மாற்றம்.

ஜன சமுத்திரத்தில் நீச்சல் அடிச்சு ஒரு வழியா எங்களுக்கான சீட்டுக்கு வந்து சேர்ந்த போது ஒரு பன்னீர் சோடா பாட்டிலை நினைச்சு நான் ஏக்கப்பட்டது உண்மை தான் ஆனால் மேடையில் மோஹனம் ராக ஆலாபனா சூடு பிடிக்க ஆரம்பிச்சதுல பன்னீர் சோடா நினைவை  தற்காலிகமா ஒத்தி வைக்க முடிவு பண்ணி உட்கார்ந்தேன்.  ஆ......என்னதிது? இந்த பிளாஸ்டிக் சேரோட மிச்ச பாதி எங்கே போச்சு? அவசரமா மத்தவங்க சேரையெல்லாம் எட்டிப் பார்த்ததுல சேர் கம்பெனிக்காரன் ஒட்டு மொத்தமா எல்லார்க்கும் கரும்புள்ளி செம்புள்ளி அடிச்சுட்டான்னு புரிஞ்சது.  வாழ்க்கைல நான் அதிகமா எதுக்கும் ஆசைப்பட்டது கிடையாது. உட்காரற சேர்ல சீட் கொஞ்சம் பெருசா இருக்கணும்னு ஆசைப்படறது அவ்வளவு பெரிய தப்பா? தஞ்சாவூர் பொம்மை மாதிரி ஆடி ஆடி எவ்வளவு நேரம் தான் ஒருத்தர் பாலன்ஸ் பண்ண முடியும் சொல்லுங்க?

முன் சீட் சேரை பிடிச்சிண்டு ஒரு வழியா சமாளிச்சு உட்கார்ந்த போது தான் அதை கவனிச்சேன்.  கண்ணுக்கு தெரிஞ்ச வரைக்கும் எனக்கு முன்னாடி உட்கார்ந்திருந்தது எல்லாம் மாமாக்களும் மாமிகளும்  தான்.  சொல்லி வச்சா மாதிரி எல்லா மாமிகளின்  கொண்டையிலும் சின்னதா கிள்ளிய மல்லிப்பூ சரம்.  மாமாக்கள் எல்லோரும் இசைக்கு ஏற்ற மாதிரி தலையையும் கையையும் ஆட்டி ஆட்டி ரசிப்பதை பார்க்க ரொம்ப அழகா இருந்தது.  ஒரு சிலர் தாளம் கூட போட்டார்கள் ஆனா யார் பாடற பாடலுக்குன்னு தான் சரியா புரியலை.

மாமிகளில் ஒரு சிலர் ரொம்ப trendy யா ப்ளௌஸ் போட்டிருப்பதை என் தங்கை தான் சுட்டி காமிச்சா.  எனக்கு அதிலெல்லாம் கொஞ்சம் விவரம் பத்தாது. அவ சொல்லி தான் எனக்கு தெரியும் இப்போதைய trend புடவைக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாம ப்ளௌஸ் போடுவது அப்படீன்னு.  பச்சை புடவைக்கு நீல கலர் ப்ளௌஸ் போட்டு கலக்கிய மாமிக்கு தான் முதல் பரிசுன்னு என் தங்கையோட கலந்தாலோசிச்சதுல புரிஞ்சுண்டேன்.  குனிஞ்சு என் புடவை பிளவுசை பார்த்ததுல வெக்கமா போச்சு. யூனிபோர்ம் மாதிரி மாட்சிங்கா போட்டுண்டு வந்திருந்தேன்.  அரங்கத்துல என்னை மாதிரி மாட்சிங்கா புடவை ப்ளௌஸ் போட்டிருந்த சில பெண்களை பார்த்து 'பாவம் NRI ' யா இருக்கும்னு நினைச்சு பெருமூச்சு விட்டு மேடையில் கவனத்தை வைத்தேன். 

காப்பி ராகம் காதில் தேனா பாய்ந்ததில் திடீர்னு வயித்துக்கும்  ஏதாவது பாய்ந்தா நல்லா இருக்கும்னு தோணித்து.  இந்த அரங்கத்தில் சாப்பிட எதுவும் கிடைக்காதுன்னு நல்ல காலம் முன்னாடியே விசாரிச்சு கண்டுபுடிச்சதுல  நான் வரும்  வழியிலேயே அடையார் ஆனந்தபவன் ல காரை நிறுத்தி கார போண்டா, கார கொழுக்கட்டை மற்றும் சமோசா எல்லாம்  பாக் பண்ணி சமயோஜிதமா வாங்கிண்டு வந்துட்டேன்.  செவிக்கு மட்டும் உணவு போதும்னு சொல்ல நான் என்ன லூசா? காபியோடு ஒரு கார போண்டாவை உள்ள தள்ளின போது தேவாம்ருதமா தான் இருந்தது.

எனக்கு முன்னாடி உட்கார்திருந்த மாமா கார போண்டா வாசனைல திரும்பி  பார்த்து எங்களை கொஞ்சம் முறைச்சா மாதிரி இருந்தது.  மாமா நீங்க தப்பு தப்பா தாளம் போட்ட போது நான் உங்களை முறைச்சேனா? அப்போ நீங்க மட்டும் ஏன் என் கார வடைல கண் போடறேள்?  அப்படீன்னு நான் mind வாய்ஸ் ல மாமாவோட செல்லமா சண்டை பிடிச்ச முடிச்ச போது மேடையில்  கமாஸ் அமர்க்களப்பட்டுண்டு இருந்தது.  வித்வான் கமாஸோட இண்டு இடுக்குல எல்லாம் பூந்து விளையாடிண்டு இருந்தார்.  தமிழக் கடவுளான முருகன் மீது அழகான ஒரு தமிழ்ப் பாட்டு.  கார போண்டாவை காத்தோடு  விட்டுட்டு பாட்டில் ஐக்கியமாகி கச்சேரி சுருட்டி ராகக் கீர்த்தனையோடு முடியும் போது தான் நான் நிஜவுலகுக்கு திரும்பினேன்.

கச்சேரி முடிஞ்சு கும்பலோட வெளியில் வந்த போது தான் கவனிச்சேன் என்னை சுத்தி எத்தனை அருமையான சங்கீத வித்வான்கள் நடந்து வராங்க அப்படீன்னு.  வலது பக்கம் ஒரு மாமா வராளியை கிழிக்க இடது பக்கம் ஒரு மாமி பைரவியை முணுமுணுக்க  என்னோட கச்சேரி கனவை இவ்வளவு அருமையா நனவாக்கிய கடவுளுக்கு நன்றி கூறி நானும் ஏதோ பாட்டை முணுமுணுத்துண்டே என் கணவரோடு வீட்டை பார்த்து நடையை கட்டினேன்.

-தொடரும்

Monday, November 20, 2017

வாழ்க உன் குலம்! வளர்க உன் தொண்டு!

போன வாரம் நடந்த தமிழ்ச்சங்க கலை நிகழ்ச்சிகளில் மிக அதிகமாக மேடையேற்றப்பட்டது நடன நிகழ்ச்சிகள் தான்.  நமக்கு நடுவில் இவ்வளவு நாட்டிய பேரொளிகளா அப்படீன்னு நான் கண்ணிடுக்கி ஆச்சர்யப்படும் அளவு சக ரிச்மண்ட் வாசிகள் நேத்து அரங்கத்தை அவங்க குதிகாலால் கலக்கினாங்க. ஒரு மத்திய தர குடும்பத்தலைவி அன்போடு செய்யற பாயசத்துல  இங்கொண்ணும் அங்கொண்ணுமா ஏகாந்தமா மிதக்குமே முந்திரிப் பருப்பு அதே போல நாலு நடனங்களுக்கு நடுவில் ஒரு நாடகம், ஒரு பட்டிமன்றம் அப்படீன்னு தூவி  அம்சமா தொகுத்து வழங்கியிருந்தாங்க ரிச்மண்ட் தமிழ்ச்சங்க நிர்வாக குழு.  


ஐந்தாறு பேர் கொண்ட குழுவா மேடை ஏறி விறு விறுன்னு சுழன்று ஆடிய பெண்கள் ரொம்பவே அசத்தினாங்க..  அவங்க கை காலை வெட்டின ஜோர்ல எனக்கு தான் வலது தோள்பட்டையில் கொஞ்சம் முணுமுணுன்னு வலி.  வீட்டுக்கு வந்தவுடனே மறக்காம Bengay தடவிட்டு தான் படுத்தேன்.  Sympathy வலியை நான் என்னிக்கும் குறைவா எடை போடறது கிடையாது.


மேடை ஏறிய அஞ்சே நிமிஷத்துல குறைஞ்சது 1000 கலோரியை அசால்ட்டா எரிச்ச அந்த பெண்களை பார்த்து நான் வயிறெரிஞ்சுது உண்மை தான்.  இட்லிப்பானை  மாதிரி என் ரெண்டு காதுலயும் அவங்க ஆட்டத்தை பார்த்து புகை வந்ததுக்கு காரணம் இல்லாம இல்லை.  சரி இதை ஏன் இப்படி ஊருக்கே சொல்லி ஷேம் ஷேம் ஆகணும்னு கேட்டீங்கன்னா அரிச்சந்திரனோட பக்கத்து வீட்டு மாமாவின் சின்ன வயசில்  தொலைந்து போன தங்கச்சி மகளா நான் இருப்பது தான் அதுக்கு காரணம்.  எவ்வளவு கசப்பான உண்மையா இருந்தாலும் மறைக்க முடியறதில்லை.


நீங்க அதிர்ச்சி  அடையாம இருப்பீங்கன்னா ஒரு விஷயத்தை இப்போ சொல்லுவேன்.  நானும்  கடந்த சில நாட்களா நாட்டிய வகுப்புகளுக்கெல்லாம் போயிட்டு வரேன்.  பரதம், குச்சிப்புடி மேல பரிதாபப்பட்டு விட்டுட்டு மேல்நாட்டு வழக்கமான ஸ்டெப் dance மற்றும் tango இப்படி சில விபரீத முயற்சிகள்ல இறங்கியிருக்கேன்.  இது என்னடா ரிச்மண்டுக்கு வந்த சோதனைன்னு நீங்க பதறுவது புரியாமல் இல்லை.  என்ன செய்யறது?  பக்கத்து உடற்பயிற்சி கூடத்துக்கு போன ஜென்மத்து கடன் பாக்கி மாதிரி வருஷா வருஷம் பெரிய தொகையா கட்டி என்னை டென்சன் ஆக்குவது என் கணவர் தான்.  நான் பாட்டுக்கு நிம்மதியா என் sofa உண்டு என் சேர் உண்டுன்னு வாழ்க்கையை ஓட்டறது அவருக்கு ஏதோ அஜீரணத்தை தருதுன்னு நினைக்கிறேன்.  பேமிலி membership எடுத்து கொடுத்து என்னை நல்வழியில் நடத்த முயற்சி செய்யறார்.  நான் சாதாரண வழியிலயே  நடக்க மாட்டேன்.  இதுல என்னை நல்வழில வேற நடத்தணும்னா சுலபமான காரியமா?


ஸ்டெப் டான்ஸ் வகுப்பறைக்குள்ள முதல் தடவை எட்டிப் பார்த்த போது வயித்துக்குள்ள இருந்த வெங்காய  ரவா தோசை மைக்கேல் ஜாக்சன் மாதிரி குதியாட்டம் போட்டது.   ‘காக்க காக்க கனகவேல் காக்க’ முணுமுணுத்துண்டே தான் அந்த அறைக்குள்ள நுழைஞ்சேன்.  என் பெற்றோர் பண்ண புண்ணியம் என்னை என்னிக்கும் கை விடாதுன்னு எனக்கு நானே பல முறை ஞாபகப்படுத்தி கொள்ள வேண்டியிருந்தது.   அறைக்குள்ள நுழைஞ்சு  சுத்தி முத்தி பார்த்தா இன்முகத்தோட என்னை வரவேற்ற பத்து பெண்களுமே என்னை விட வயதில் மூத்தவங்க.  அப்படியே பூரிச்சு போய்ட்டேன். ஆஹா இவங்களே ஆடும் போது நாம ஆடிட மாட்டோமா?  இப்படி நினைச்சு சந்தோஷத்துல நெஞ்சை நிமிர்த்தி தைரியமா நின்ன  என்னை பார்த்து விதி கை கொட்டி சிரிச்சது அப்போ எனக்கு தெரியாம போச்சு.


எங்க நடன வகுப்பு ஆசிரியை அப்போ உள்ளே நுழைஞ்சார்.  ரொம்ப சிரித்த முகமா அமைதியா இருந்த அவரைப் பார்த்த உடனே ஒரு பெரிய டம்ளர் ஓட்ஸ் கஞ்சி குடிச்ச தெம்பு எனக்கு.  அந்த டீச்சரம்மா சஷ்டியப்தபூர்த்திக்கும் சதாபிஷேகத்துக்கும் நடுவுல எங்கயோ இருப்பார்னு என்னோட யூகம்.  


Dance ஆட ஆரம்பிக்கும் முன் கை  காலை நீட்டி stretch செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய டீச்சரம்மா முதல்ல குனிஞ்சு அவரவர் காலை தொட சொன்னார்.  ஹுக்கும்! அவர் பாட்டுக்கு சுலபமா சொல்லிட்டார். என்னை சுத்தி எல்லோரும் இடுப்பு வரை முழுசா மடங்கின போது என் முதுகு அரை இஞ்சுக்கு மேல மடங்குவேனா அப்படீன்னு மக்கர் பண்ணி மானத்தை வாங்கினதை பத்தி ஒரு நிமிஷமாவது அவர் யோசனை பண்ணியிருப்பாரா?.  கைக்கு எட்டாத தூரத்தில் இருந்த என் கால்களை ஏக்கத்தோட பார்க்கறதை தவிர நான் வேறென்ன செய்ய முடியும்?


அடுத்து இசைத்தட்டை போட்டு விட்டு நாங்க ஆட வேண்டிய steps ஐ  சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சாங்க அந்த அம்மா.  முதல்ல வலது காலை ஒரு step முன் வச்சு உடனே பின் வைக்கணுமாம்.  என்னதிது?? சின்ன வயசிலேர்ந்து முன் வச்ச காலை எப்பவும் பின் வைக்கக் கூடாதுன்னு சொல்லி தானே  வளர்த்திருக்காங்க.  என்னடா இந்தம்மா தெளிவா இப்படி குழப்பறாங்களே ன்னு தீவிர யோசனையில் இருந்த நான் அடுத்த நாலு steps ஐ சரியா கவனிக்காம கோட்டை விட்டுட்டேன்.


அதோட பலன் இசைத்தட்டை ஓட விட்டுட்டு dance ஆரம்பிச்சப்போ  அவங்க வலது பக்கமா போனா நான் இடது பக்கமா போய் ஒரு பெரியம்மா மேல அடிக்கடி முட்டி மன்னிப்பு கேட்டது தான்.  தப்பு செய்தா மன்னிப்பு கேக்கறதுல எங்க குடும்பத்துல யாரையுமே மிஞ்ச முடியாது.  இதை நினைச்சு எனக்கு கொஞ்சம் பெருமை தான். சில நேரம் தப்பு செய்யறதுக்கு முன்னாடியே கூட உஷாரா மன்னிப்பை கேட்டுடுவோம்.  பிற்காலத்துல எப்பவாவது உதவுமே!  என் மேல மோதி மோதி வாழ்க்கைல ரொம்பவே அடிபட்டுட்ட அந்த பெரியம்மா வை அப்புறம் அந்த வகுப்புல ஏனோ பாக்கவே முடியலை. பார்த்தா கண்டிப்பா இன்னொரு முறை மன்னிப்பு கேட்டுடுவேன்.


ஒரு மணி நேரம் நாட்டியம் அப்படிங்கற பேருல என் இடுப்பை டிங்கு வாங்கின டீச்சரம்மா கடைசியில ஒரு பத்து நிமிஷம் யோகா பயிற்சி செய்ய சொல்லி என் வயித்துல பால் வார்த்தாங்க.  நல்லா காலை நீட்டி படுத்து  இழுத்து மூச்சு விடணுமாம்.  அம்மா பரதேவதா!  வாழ்க உன் குலம்!  வளர்க உன் தொண்டு! சொதப்பாம நான் செய்ய கூடிய ஒரு விஷயத்தை ஒரு வழியா சொன்னியேம்மா.  இது தான் சாக்குன்னு டக்குனு படுத்துட்டேன்.  இழுத்து மூச்சு விட விட கண்ணை அழுத்தி தூக்கம் வர மாதிரி வேற இருந்தது. சரியா அப்போ பார்த்து class முடிஞ்சுடுத்து.  பக்கத்துல இருந்த அந்த இடிபட்ட அம்மாவையே கை  கொடுக்க சொல்லி எழுந்து ஒரு வழியா நொண்டி நொண்டி வீடு வந்து சேர்ந்தேன்.


எதுக்கு இவ்வளோ பெரிய கதையை சொன்னேன்னா என்னை  போல நாட்டிய பேரொளிகளை எங்கப் பார்த்தாலும் நீங்கள் அவங்க முயற்சியை பாராட்டணும்னு தான். வாழ்க்கைல எவ்வளோ அடிபட்டு மேடை ஏறினாங்களோ அப்படீன்னு ஒரு நிமிஷம் நீங்க கருணையோடு அவங்கள பார்க்கணும் அப்படிங்கறது தான் என் ஆசை.


சமீப தமிழ்ச்சங்க கலை விழாவில் நடனமாடி கலக்கிய ஆண் பெண் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

-மீனா சங்கரன்

Tuesday, September 26, 2017

நவராத்திரி நினைவலைகள் - 2017

வழக்கம் போல ரிச்மண்டில் இந்த வருஷமும் கொலு சீசன் களை கட்ட ஆரம்பித்து இன்னியோட நாள் ஆறு.  வாசல்  கதவை திறந்து வெளியே வந்தாலே  தாளித்த சுண்டல் வாசனைல ஊரே மணக்குது.  அடுத்தடுத்து வடையும், கேசரியும், சு ண்டலும், சர்க்கரைப் பொங்கலுமா வீட்டுல மணத்ததுல எங்க வீட்டு நாய்கள் திடீர் உண்ணாவிரதம். இந்த அச்சுபிச்சு pedigree உணவு அவங்களுக்கு இனி வேண்டாமாம். எங்களுக்கு மட்டும் இதென்ன நாய் பொழப்புன்னு அவங்க வருத்தப் படறதுலயும் ஒரு நியாயம் இருப்பதை மறுக்க முடியலை.

எங்க ஊரை பத்தி இங்க ஒண்ணு சொல்லியே ஆகணும்.  பத்து வருஷத்துக்கு முன்னாடி,  கல்யாண வீட்டு வாசல்ல சும்மா பாவ்லா காட்டி தெளிப்பாங்களே, அந்த பன்னீர் துளி மாதிரி இங்கொண்ணு அங்கொண்ணுன்னு  தான் இருந்தது இந்திய குடும்பங்கள்.   தெரியாம ரெண்டு கூமான்  (Kumon) சென்டர் திறந்தாலும் திறந்தாங்க, அவ்வளவு தான் அமெரிக்காவுல கூமான் இல்லாத ஊரிலிருந்து நம்ம மக்கள் எல்லோரும் அடிச்சு பிடிச்சு ரிச்மண்டுக்கு ஓடி வந்துட்டாங்க.  களை எடுக்காம விட்டத் தோட்டத்துல கட்டுக்கடங்காம வளருமே காட்டுச்செடி அந்த மாதிரி இந்திய மக்கள் தொகை இன்னிக்கு ரிச்மண்டில் பெருகிட்டு வருது. 

ஊர்ல எந்த வீடு விலைக்கு வந்தாலும் அத வாங்கறது ஒரு இந்தியக் குடும்பம் தான்னு bet வைக்கலாம் வரியான்னு கூப்பிட்டா  ஒரு சின்னக் குழந்தை கூட அந்த ஆட்டத்துக்கு வர மாட்டேங்குது. இவ்வளவு புத்திசாலியா நானும் சின்ன வயசுல இருந்திருக்கேனாம்மான்னு  எங்க அம்மா கிட்ட கேட்டா  சந்தோஷத்துல (?) எங்க அம்மாவுக்கு தொண்டை அடைச்சு பேச்சே வர மாட்டேங்குது. 

இந்த பெருகி வரும் இந்திய குடும்பங்களை பார்த்து யார் அதிகமா சந்தோஷப்படறாங்கன்னா அது அமெரிக்க வியாபாரிகள் தான்.   நவராத்திரி சீசன்ல தூக்கி விட்டெரியும் உணவு தட்டுக்கள் மற்றும் டம்பளர்களை   வண்டியோட அள்ளிக்கொண்டு போகும் இந்திய பெண்களை குலதெய்வமாவே  இவங்க கொண்டாடறாங்கன்னு  ஊர்ல பேசிக்கறாங்க. .  நாயகன் ஸ்டைல்ல சொல்லணும்னா நாலு பேருக்கு உதவும்னா இன்னும் நாலு தட்டை எடுத்து போட்டு சாப்பிட்டு விட்டெறிய  ஒரு இந்தியன் என்னைக்குமே தயங்க மாட்டான். புல்லரிக்க வைக்கக்கூடிய புள்ளி விவரங்களில் இதுவும் ஒன்று.

ஆனா உதவிக்கரம் நீட்டறதுல துளி கூட பாரபட்சம் பார்க்காதவங்க நம்ப இந்திய பெண்கள்.   Racial  discrimination அப்படிங்கற வார்த்தையை இந்த ஊர்ல அடிக்கடி கேட்டு காது புளிச்சு போய் தான் அவங்க இப்படி ஆயிட்டாங்க அப்படிங்கறது என்னோட அனுமானம்.  இந்திய வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கும் எங்க அருள் உண்டு அப்படீன்னு இந்த மாசம் இந்திய  மளிகை கடைல உள்ள பயத்தம் பருப்பு, கொண்டைக்கடலை, பச்சை பயறு, வேர்க்கடலை போன்ற தானியங்களை ஒரு பாக்கெட் விடாம வழிச்செடுத்து  வாங்கி வந்து சுண்டலுக்கு ஊற வச்சிட்டாங்க ன்னு நினைக்கறச்ச பெருமை படாம இருக்க முடியலை.

அதென்னவோ இந்த வருஷம் சொல்லி வெச்சா மாதிரி பெண்கள் எல்லோரும்  ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கலர் புடவைகளை தான் விரும்பி இந்த சீசனுக்கு உடுத்தியிருக்காங்க.  புடவைக் கலர்ல தான் மாற்றம் இருக்கே தவிர அவங்க போடும் அகல ஜன்னல் போட்ட  காத்தோட்டமான ஜாக்கெட்டில் எந்த ஒரு மாற்றமும் இல்லைங்கறது விசேஷம்.

ஒரு பெண் எவ்வளவு வீட்டு கொலுவுக்கு போகிறாள் அப்படிங்கறதை அவ சுண்டல் கலெக்ஷனுக்காக எடுத்துப் போகும் பையை வைத்தே சுலபமா சொல்லிடலாம்.  IIT காலேஜ் பசங்க தூக்கிட்டு போற ஜோல்னா பை மாதிரி இருந்தா, அவள்  ஒரு ஐந்தாறு வீட்டுக்கு கிளம்பி இருக்கிறாள்னு அர்த்தம்.  நம்மூர் வண்ணாத்தி சைக்கிளுக்கு பின்னாடி கட்டியிருக்கும்  சலவை துணி பை  சைசில் இருந்தால் அவளுக்கு ஒரு பத்து வீட்டில் அழைப்பு இருக்குன்னு அர்த்தம்.  கோயம்பேடு காய்கறி சந்தைல வந்திறங்கும் கோணிப் பை ரேஞ்சுல பார்த்தீங்கன்னா சர்வ நிச்சயமா அவள் அன்று  நடுராத்திரி வரைக்கும் தெருத்தெருவா சுண்டலுக்கு சுத்தப் போகிறாள் அப்படீங்கறதுல சந்தேகம் இல்லை. 

போன வருஷம் நவராத்திரி blog ல நான் புலம்பினதை ஞாபகம் வச்சிருந்த சில நல்ல மனங்கள் சுண்டலோட இந்த முறை பக்கோடா, உருளைக்கிழங்கு போண்டா மற்றும் அருமையான டீ போட்டு கொடுத்து என் மனசை குளிர வச்சிட்டாங்க.  தெருத்தெருவா சுத்தறதுக்கும் ஒரு தெம்பு வேண்டாமா? நன்றி தோழிகளே. 

இந்த கணவர்கள் சங்கம் தான் என் குரலுக்கு இன்னும் செவி சாய்க்க மாட்டேங்கறாங்க.  மனைவிகள் கஷ்டப்பட்டு வீடு வீடா போய் வாங்கி வர்ற சுண்டல்ல சரி பாதி பங்குக்கு மட்டும் கேக்காமயே வர்றவங்க கொலு அழைப்புக்களை வரிசைப்படுத்தி கொடுக்க ஒரு app  எழுதிக் கொடுக்க கூடாதா?  தெரியாம தான் கேக்கறேன்.  இந்த உலகத்துல கருணை கபடி ஆட போயிருக்கா?  இல்ல நியாயம் தான் கிரிக்கெட் விளையாட போயிருக்கா?  

காலம் இந்தக் கேள்விக்கு நல்ல ஒரு பதிலை சொல்லும்னு நம்பிக்கையோட  எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள் சொல்லி விடை பெறுகிறேன். 

-மீனா சங்கரன்


Monday, June 12, 2017

தில்லாலங்கிடி மோகனாம்பாள்: ஒரு அலசல்

ரிச்மண்ட் நகருக்கு  எங்க குடும்பம் குடி வந்து இதோட பத்து வருஷம் ஆகப் போகுது.  ஒரு சராசரி NRI தமிழச்சி தன் வாழ்க்கையில் கொட்டற குப்பைக்கு எந்த விதத்துலயும்  குறையாம அதே இத்துப்போன  பக்கெட்ல நானும் கொட்டறேன்னு மிதப்பா நினைச்சிட்டிருந்த  என் வாழ்க்கைல நேத்து ஒரு ஆச்சரிய குறி போடும் புது அனுபவம்.

இது நாள் வரைக்கும் தமிழ்ச்சங்கம் தொகுத்து வழங்கியிருக்கும் பல கலை நிகழ்ச்சிகளை சமோசா டீ சகிதம் பல முறை ரசிச்சிருக்கேன் நான்.   சங்கீதம், நாட்டியம், பட்டிமன்றம் எல்லாம் எங்க ரிச்மண்ட் மக்களுக்கு தண்ணி பட்ட பாடு.  ஒரு சிலருக்கு இளையராஜா  ஒண்ணு விட்ட சித்தப்பா முறைனா பலருக்கு  தியாகராஜ ஸ்வாமிகள் வருஷா வருஷம் பொங்கலிட்டு தீ மிதிக்கும் குலதெய்வம்.  இது குயில் பறக்கும் ஊர் அப்படீன்னு  யாரைக் கேட்டாலும் உங்க தலைலயே நச்சுனு அடிச்சு சொல்லுவாங்க.

சரி பாட்டை விடுங்க. வீட்டுக்கு ஒரு மரம்  வளர்த்து நீங்க நிச்சயம் பாத்திருப்பீங்க.  ஆனா தெருவுக்கு ஒரு பெண் குழந்தையை நாட்டியப் பேரொளியாய் வளர்க்கும் ஊரை இதுக்கு முன்னாடி பார்த்திருக்கீங்களா?  பரதம், குச்சிப்புடி,  கோலிவுட், ஹாலிவுட் அப்படீன்னு முழுசா நாங்க நாட்டிய சாஸ்த்திரத்தை  குத்தகைக்கு எடுத்து ரொம்ப நாளாச்சு.  பட்டிமன்றமா? ஹா! நாங்கள் வாய்ச்சொல்லிலும் வீரரடி. வீட்டுக்குள்ளயும் அடிச்சுக்குவோம் அப்புறம் டக்குனு குதிச்சு மேடை ஏறி ஊரறியவும் அடிச்சுக்குவோம்.  கூச்ச நாச்சமெல்லாம் கொஞ்சம் கூட கிடையாது. சொற்போரில் எங்களை வெல்ல இன்னொரு பாப்பையா பிறந்து தான் வரணும்னு பரவலா ஒரு கருத்து இருப்பது உண்மை.

எதுக்கு இத்தனை பெரிய முகவுரைன்னு குழப்பமா இருக்கா?  ஒரு கல்யாணம் பண்ண ஆயிரம் பொய் சொல்லலாம்னு சொன்ன அதே தமிழ் மரபு,  ஒரு பக்கப் பதிவை எழுத முடியாம முழி பிதுங்கி  தவிக்கும் ஒரு அப்பாவி தமிழ் பெண் (நாந்தேன்) நாற்பது வார்த்தையை கூட்டி எழுதினா கோவிச்சுக்கவா போறது?  சரி சரி, நீங்க நெற்றிக்கண்ணை மூடுங்க. விஷயத்துக்கு வந்துட்டேன்.

இந்தியாவிலிருந்து வந்து Y.G. மதுவந்தியின் தலைமையில் நடக்கும் மஹம் கலைக்குழு நேத்து சாயந்திரம் ரிச்மண்ட் இந்துக்  கோவிலில் 'தில்லாலங்கடி மோகனாம்பாள்' அப்படீன்னு ஒரு முழு நீள நகைச்சுவை நாடகம் போட்டு அசத்தினாங்க.  ரெண்டு மணி நேரம் சிரிப்பலையில் அந்த அரங்கமே ஆட்டம் கண்டு போச்சு.  வாய் விட்டு சிரிப்பது ஒரு வரம்.  ஒரு சில மணி நேரம் எல்லாக் கவலையையும் மறந்து ஒரு ஊரையே சிரிக்க வச்ச புண்ணியம் தில்லாலங்கிடி குழுவினருக்கு தான் சேரும்.

மேடை நாடகம் எப்படிப்பட்ட ஒரு அசாத்தியமான கலைன்னு நேத்து வரைக்கும் எனக்கு தெரிஞ்சதில்லை. நடிகர்கள் அவங்க வரிகளை மறந்தா இதுல  take 2 கிடையாது. பார்வையாளர்கள் டீ குடிக்கற ஜோர்ல ஜோக்கை கோட்டை விட்டாங்கன்னா நிறுத்தி அவங்களுக்கு மறுபடியும் எடுத்துச் சொல்ல pause பட்டனும் கிடையாது.  ஒவ்வொரு ஸீனுக்கு நடுவிலும் backdrop மாத்துவதிலிருந்து, லைட்ஸ் சவுண்ட் set பண்ணுவது வரை பல விதத்திலும் கடினமான கலையாக தெரியும் மேடை நாடகத்தை அசால்ட்டாக நேற்று செய்தனர் மஹம் கலைக்குழுவினர்.

சரி இவங்களாவது நாடகம் மேடை ஏத்தறதுல பழம் தின்னு கொட்டை போட்டவங்கன்னு சொல்லலாம்.  தினந்தோறும் கணினியோட வேலையில் மாரடிக்கும்  சில ரிச்மண்ட் வாசிகளும் இதில் பங்கேற்று மிக அருமையாக நடித்து பார்வையாளர்களை அசத்தியது தான் இன்னும் சிறப்பான அம்சம்.

இதுக்கு முன்னாடி வாயை குவித்து எத்தனையோ முறை விசிலடிக்க பாத்து தோத்து போயிருக்கிற  நான் நேத்து எங்க ஊர் ரிச்மண்ட் மக்களை நாடக மேடையில் பார்த்த சந்தோஷத்துல உணர்ச்சி வசப்பட்டு  ஊதிய வேகத்துல எனக்கு முன்னாடி சீட்டுல உட்கார்ந்திருந்தவரோட அழுந்த வாரிய தலைமுடி கலைஞ்சு போச்சுன்னா பாருங்களேன்.  அவர் திரும்பி பார்த்து முறைச்சதும் இனி இப்படி பாசப்பறவையை அடிக்கடி பறக்க விடமாட்டேன்னு அவருக்கு வாக்கு வேற கொடுத்திருக்கேன்.

மஹம் குழுவிற்கும், அவர்களை இங்கு வரவழைத்து 'தில்லாலங்கிடி மோகனாம்பாள்' நாடகத்தை எங்களுக்கு அளித்த ரிச்மண்ட் executive committee குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.