Sunday, October 22, 2023

சவாலே சமாளி! {நவராத்திரி நினைவுகள் 2023}

நானும் பல வருடமாக கண்ணில் படும் கணினி நிபுணர்களை எல்லாம் கெஞ்சிப் பார்த்து சலித்து விட்டேன்.  பகல் இரவு அப்படீன்னு பாரபட்சம் பார்க்காமல் எந்நேரமும் கணினியோடு குடுத்தனம் பண்ணும் சக இந்தியர்களில் ஒருவர் கூட  என் வேண்டுகோளை காதில் வாங்காமல் போனது வருந்தத் தக்க விஷயம்.  இந்த உலகத்தில் இரக்கம், தயை, பச்சாதாபம் எல்லாம், தலிபான் ஆட்சியில் பெண் சுதந்திரம் போல் கடத்தப்பட்டது எப்போது?  நவராத்திரி சீசனில் இரிச்மண்டு நகரில் பெண்கள் படும் பாட்டை பார்த்து இனி அந்த கொலுவில் இருக்கும் கடவுளே மனமிரங்கி வந்து ஒரு app ஐ எழுதினால் தான் எங்களுக்கு விடிவு வரும் போல இருக்கு. 

நாங்கள் பெண்கள்.  பெரும் ஆற்றல் மிக்கவர்கள் தான்.  ஒத்துக்கறேன்.  வாழ்க்கை எங்கள் பக்கமாக  விட்டெறியும் எந்த பந்தையும் அஞ்சாமல் நேர்கொண்டு அசராமல் சிக்ஸர் அடிக்கும்  மன உறுதி கொண்டவர்கள் தான்.  இல்லைன்னு சொல்லலை.  இருந்தாலும் நவராத்திரி சீசனில் வந்து எங்கள் முன் குவியும் சவால்களில் நாங்கள் ஆடிப்போவது என்னவோ மறுக்க முடியாத ஒரு உண்மை.

அப்படி என்ன மீனா உங்களுக்கு பெரிய சவால்கள் னு நீங்க கேட்பீங்கன்னு தெரிஞ்சு தான் நான் ரெடியா list போட்டு கொண்டு வந்திருக்கேன்.  மேலே படிங்க.

சவால் #1:  

வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே போகும் கொலு அழைப்புகள்.  Evite, whatsapp, text, email அப்படீன்னு பல திசைகளிலிருந்து வந்து குவியும் இந்த அன்பான அழைப்புகளை வர வர சமாளிக்கவே முடியலை.  யார் யார் என்னென்னிக்கு கொலுவுக்கு கூப்பிட்டு இருக்காங்க?  சுதா வீட்டில் செவ்வாய் கிழமை கூப்பிட்டால் சுதாவின் தெரு முனையில் இருக்கும் கீதாவும் அன்னிக்கே கூப்பிட கூடாதா?  அவங்க தெரு ரொம்ப அழகா தான் இருக்கு.  நான் மறுக்கலை. ஆனால் அதுக்குன்னு பெட்ரோல் விக்கற விலைக்கு ஒரே  தெருவுக்கு எத்தனை முறை வண்டியை விட முடியும், சொல்லுங்க?  

இன்னொரு  ரொம்ப முக்கியமான புள்ளி விவரம் இதோ.  எத்தனை மணிக்கு பிறகு அவரவர் கொலுவுக்கு கூப்பிட்டு இருக்காங்க?  ஏன்னா அந்த வீட்டம்மா சுண்டலை தாளிப்பதற்கு முன்னாடி நம்ம போய்  நின்னா நல்லா இருக்காது பாருங்க. அப்புறம் ஒன்பது நாட்கள் தானே நவராத்திரி விழா?  சராசரியாக ஒரு வீடு  மூணு  மணி நேரம் அவங்க கொலுக்கதவை திறக்கையில், optimal ரூட் மேப் இல்லாமல் எப்படிங்க  ஐம்பதுக்கும் மேலே உள்ள கொலு வீடுகளுக்கு போக முடியும்?  விறு விறுன்னு நடந்து பாருங்களேன்னு விவரமில்லாமல் நீங்கள் சொன்னீங்கன்னா அடுத்த கொலுவில் உங்களுக்கு சுண்டல் cut.

சவால் #2:

கடந்த சில வருடங்களாக நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் எந்த நிறத்தில் புடவை கட்டணும்னு யாரோ ரூம் போட்டு யோசிச்சு பட்டியல் போட்டு வாட்ஸாப்பில் சகட்டு மேனிக்கு பரப்பி விடறாங்க.  தப்பில்லை.  ஒரு விதமா உதவி தான்.  ஏன்னா என்ன புடவை உடுத்தணும்னு நாம மண்டையை உடைத்து கொள்ள வேண்டாம் பாருங்க.  பின்ன என்னதுக்கு இப்படி புலம்பணும்னு நீங்க கேக்கறீங்க.  நியாயமான கேள்வி.  

என்னோட குறை இது தான்.  பட்டியல் போடறவங்க சும்மா நீலம், பச்சை, சிவப்பு அப்படீன்னு சொன்னா பத்தாதா?  மயில் பச்சை, ராயல் நீலம், காஷ்மீர் மிளகாய் சிவப்பு., கூவம் நதி கருப்பு.....இப்படி எல்லாம்  நுணுக்கமா பட்டியல் போடுவது அவசியமா?  ஒரு நாள் கிளம்பும் அவசரத்தில்  (ராயல் ப்ளூ தேதியில்) நான் ஒரு பிங்க் கலர் புடவையில் ஏதோ ஒரு ப்ளூ பார்டர் புடவை கட்டி கொண்டு போனேன்.  அவ்வளவு தான்.  அன்னிக்கு ஊர் மக்கள் என்னை அவங்க மூக்கு கண்ணாடியை கீழே தள்ளி பார்த்த பார்வையில் ரொம்ப shame shame ஆ போச்சு.   இந்த சோதனை எங்களுக்கு தேவையா?

சவால் #3:

நம்ப பாரம்பரியத்துக்கு ஒரு குறையில்லாமல் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் கொண்டு வரும் ஆப்பிளும் ஆரஞ்சு பழ மூட்டைகளும் தான் எங்களோட அடுத்த சவால்.  ஒவ்வொரு வருஷமும் இந்த ஒன்பது நாளும் அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளில் ஒரு பழம் கூட விட்டு வைக்காமல் நம்மூர் பெண்கள் வழித்து கொண்டு போவதாக ஊரில் பேச்சு.  நானே எங்க வீட்டு கொலுவுக்கு வரவங்களுக்கு கொடுக்க  போன வாரம் 200 பழங்கள் வாங்கினேன்னா பாருங்களேன்.  வீட்டுக்கு வந்தவங்களுக்கு தாம்பூலத்தில் ஆளுக்கு ரெண்டு பழம் வைத்து கொடுத்து ஒரு வழியா எங்க வீட்டு பழ மலையை மடுவாக மாத்தி விட்டு நிமிர்ந்தால், வந்தவங்க அன்போடு எங்கள் கொலுவுக்கு கொண்டு வந்து குமித்திருந்த ஆப்பிளும் ஆரஞ்சும் வாழைப்பழமும் என்னை பார்த்து கெக்கலி கொட்டிச்சு.  எவ்வளவு தான் நாங்களும்  ஜூஸ் பண்ணி குடிக்க முடியும், சொல்லுங்க?  ஆப்பிள் ரசம், ஆப்பிள் தொக்கு, ஆப்பிள் ஜேம், வாழைப்பழ அப்பம், வாழைப்பழ பிரெட்......இதுக்கு மேல என்ன பண்ண முடியும்?  வேறே சமையல் குறிப்பு தெரிஞ்சா சொல்லுங்களேன் ப்ளீஸ். 

சவால் #4:

"மீனா, எங்க கொலுவில் இந்த வருடம் எந்த பொம்மை புதுசுன்னு சொல்லுங்க பார்க்கலாம்?"  - இப்படி அதிரடியாக கிளம்பும் திடீர் தேர்வுகள். ஆவலோடு என் முகத்தை பார்த்து இந்த கேள்வியை கேட்கும் இரிச்மண்டு  பெண்களை பார்த்தால் எனக்கு என்னவோ பாவமாக  தான் இருக்கும்.  இந்த மாதிரி தேர்வில் என்னிக்குமே நான் பாசானதாக சரித்திரம் இல்லை.  எனக்கு மட்டும்  சொல்லணும்னு ஆசை இருக்காதா?  ஆனால் பாருங்க, எங்க வீட்டு கொலுவில் என்ன பொம்மை  இருக்குன்னு எனக்கே கொஞ்சம் சுமாரா தான் நியாபகம் இருக்கும் போது, போன வருடம் உங்க வீட்டில் ஒரு ஐந்து நிமிஷம் நான் பார்த்த பொம்மை எனக்கு நினைவிருக்கும்னு நீங்க எப்படி எதிர்பார்க்கறீங்க?  இதுக்காக எல்லாம் கோவிச்சுக்கிட்டு என்னை போல மறதி உள்ளவங்களுக்கு சுண்டல் தராம மட்டும் இருந்தீங்கன்னா அது ரொம்ப தப்பு.  தேங்காய் மாங்காய் போட்ட அமர்க்களமான சுண்டல் இல்லை அப்படீன்னாலும் பரவாயில்லை. ஒரு சுமார் சுண்டலையாவது ஆறுதல் பரிசாக கொடுத்துடுங்க, சரியா?  

என் நவராத்திரி சவால் பட்டியல் இன்னும் ரொம்பவே நீளம்.  அதனால் இன்னிக்கு இதோடு நிறுத்திக் கொண்டு,  ஊரெல்லாம் சுண்டல் மணம் கமழும் இந்த நவராத்திரி சீசனில்  அனைவருக்கும் என் நவராத்திரி வாழ்த்துக்கள் சொல்லி விடை பெறுகிறேன். 

-மீனா சங்கரன் 

8 comments:

Anonymous said...

மீனா, எனக்கு ஒரு டவுட்டு. ஒரே நாளில் ரெண்டு பேர் வீட்டு கொலு அதுவும் ரெண்டு கலர் code புடவை கட்டிக்கொண்டு வர சொன்னா என்ன பண்ண 🤔🤔

Anonymous said...

Hilarious as usual. Here we had a quiz about all devis 😂 😂

I asked to make it an open book quiz 😂

Meena Sankaran said...

"மீனா, எனக்கு ஒரு டவுட்டு. ஒரே நாளில் ரெண்டு பேர் வீட்டு கொலு அதுவும் ரெண்டு கலர் code புடவை கட்டிக்கொண்டு வர சொன்னா என்ன பண்ண 🤔🤔"

@அனானிமஸ் - இதுக்கு சுலபமான தீர்வு இது தான். ரெண்டு புடவையை ஒண்ணு மேல ஒண்ணு கட்டிண்டு, இரண்டாவது வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி மேல் புடவையை யாரும் பாக்காத போது டக்குன்னு உருவிட வேண்டியது தான். Desperate measures for desperate times, you know.

Meena Sankaran said...

@Anonymous - Open book quiz is such a smart idea. As long we can consult with Google, all quizzes can be passed, right?

Anonymous said...

#1 உங்களுக்கே இது சேம் சைட் கோல் மாதிரி தெரியல? ஒரே தெருவில் இருக்கும் மீனாவும் விஜியும் அப்படின்னு மாத்தி எழுதனா, கொஞ்சம் சுயபரிசோதனையா இருக்கும்! Hilarious as usual. இந்த புடவை நிற கலாட்டாவின் பின்னால் கண்டிப்பாக ஏதோ ஒரு ஜவுளிக் கடைக்காரந்தான் இருக்கனும். அதில் என்ன நம்ம ஊருக்கு சம்பந்தமே இல்லாத grey!!!??? இந்த கலர் போட்டுட்டு வந்தா ஏதோ பெண்கள் யூனிபார்ம் போட்டுட்டு பள்ளிக்கு வர மாதிரி இருக்கு. ஏற்கனவே நூறு புடவைங்களுக்கு மேல வச்சி எங்க வார்ட் ரோபை பறிகொடுத்து கலங்கி நிற்கும் தந்தைக்குலத்தின் சார்பாக ஒரு குரல்! இவ்வள்வு புடவைல அந்த ஒம்போது கலர்ல பாதி இல்லையா!!!???? - நாகு

Anonymous said...

ஹாஹா. அருமை மீனா. மலை போல் குவிந்திருக்கும் ஆப்பிளுக்கு இன்னும் விமோசனம் கிடைக்கவில்லை. ஆனால் வந்த
ஆரஞ்சுகளை வைத்து சகதர்மிணி ரசம் வைக்க நான் தோலை உரித்து (ஆரஞ்சைதான்)
வத்தக்குழம்பு வைத்தேன்.

Anonymous said...

ஹாஹா அருமை மீனா. மலை போல் குவிந்திருக்கும் ஆப்பிளுக்கு இன்னும் விமோசனம் கிடைக்கவில்லை. ஆனால் வந்த
ஆரஞ்சுகள் ரசத்திலும்
ஆரஞ்சுத்தோல் வத்தல்
குழம்பிலும் ஐக்கியமாகி விட்டன🙂

Anonymous said...

Super o Super Meena, I’m glad to see you have started writing again on this auspicious Navarathri season. Especially on Saraswathi pooja and Vijayadasami day! May the Goddess bless you with more more opportunities to do so! Wonderful post exhibiting your sense of humor!