Wednesday, June 30, 2010

வெள்ளிக்கிழமையா? பூசாரியை கூப்பிடுங்க!

"உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே"

தெனாலி மாதிரி லிஸ்ட் போட்டு சொல்லற அளவு பல பயங்கள் எனக்கு இருந்தா கூட, நம்ம பாரதி சொல்லற இந்த உச்சி மீது வானம் இடிஞ்சு விழற ஜுஜுபி வேலைக்கெல்லாம் நான் அனாவசியமா பயப்படறது இல்லை. அது பாட்டுக்கு விழுந்திட்டு போகட்டும்னு விட்டுடுவேன். நான் அதிகமா பயந்து நடுங்கறது ஒரே ஒரு விஷயத்துக்கு மட்டும் தான். அது தான் வெள்ளிக்கிழமை.

வெள்ளிக்கிழமை விடிஞ்சாலே நான் 'உலக மகா கோழை' அப்படீங்கற பட்டத்தை வாங்க தயாராயிடுவேன். ஊர் உலகத்துல எல்லாரும் வெள்ளிக்கிழமை சாயந்திரம் வந்தா "அப்பாடா, இனி ரெண்டு நாள் வேலைக்கு போக வேண்டாம், ஸ்கூல் போக வேண்டாம்"னு சந்தோஷமா இருப்பாங்க. நான்? அம்மன் கோவில் பூசாரியை வேப்பிலை அடிக்க கூப்பிடும் நிலையில் இருப்பேன். என்னோட இந்த பயத்துக்கு என்ன காரணம்னு சொல்லறேன் கேளுங்க.

என் குழந்தைகளுக்கு 102 டிகிரி ஜுரம் வந்தா, அது வெள்ளிக்கிழமை சாயந்திரம் தான் வரும்னு ஒரு தீர்கதரிசியோட தீர்மானத்தோட என்னால சொல்ல முடியும். திங்கள் லேந்து வெள்ளி சாயந்திரம் வரை ஒரு பூச்சி பொட்டு கூட கடிக்காம மிகச்சிறந்த உடல் நிலையில் இருக்கும் என் குழந்தைங்களுக்கு வெள்ளிகிழமை ராத்திரிக்குள் ஜுரம், வாந்தி, பேதி, தலை வலி, வயித்த வலி, பல் வலி மற்றும் இதர பல உடல் உபாதைகள் வரக்கூடிய வாய்ப்பு மிக மிக அதிகம். ஐந்து மணிக்கு குழந்தை வைத்தியர் ஆபீஸ் இழுத்து மூடியாச்சா என்று உறுதிப்படுத்திண்டு தான் எல்லா உபாதைகளும் ஆரம்பிப்பது போல இருக்கும்.

அது மட்டும் இல்லை. வாழ்க்கைக்கு எங்களுக்கு அதி அவசியமா தேவைப்படும் எல்லா இயந்திரங்களும் வெள்ளிக்கிழமை சாயந்திரம் வந்தா சொல்லி வச்சா மாதிரி பட்டுன்னு உயிர் விட்டுடும். வெய்யில் காலத்தில் குளிர் சாதன பெட்டி வெள்ளிக்கிழமை அன்னிக்கு தான் விறைத்து போய் நிற்கும். குளிர் காலத்தில் வெப்ப நிலை பெட்டி பொசுங்கி சாம்பலாவது வெள்ளி அன்று தான். பாத்ரூம் பைப்பெல்லாம் உடைஞ்சு வீட்டை வெள்ளத்துல ஆழ்த்துவது சர்வநிச்சயமா வெள்ளிக்கிழமை அன்னிக்கு தான். ரிப்பேர் செய்பவர்கள் இனி இரண்டு நாள் கழித்து திங்களன்று தான் வேலைக்கு வருவார்கள் அப்படீன்னு உறுதிப்படுத்திண்ட பின்பு தான் எங்கள் வீட்டு துணி துவைக்கும் இயந்திரம் வேலை செய்வதை நிறுத்தும். உயிரில்லாத இந்த இயந்திரங்களுக்கு எங்கிருந்து இவ்வளவு புத்திசாலித்தனம் வருதுன்னு எவ்வளவு யோசனை பண்ணியும் எனக்கு புரியலைங்க.

என் கணவரின் புத்தம் புது நூறு டாலர் சூட்டில் அரை கப் சாம்பாரை நான் கொட்டினால் அது சர்வ நிச்சயமா வெள்ளி இரவாய் தான் இருக்கும். Dry Cleaners கடை திறந்திருக்கும் போது ஏன் இப்படி நடக்கமட்டேங்கறது அப்படீங்கற என் கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கலை. மொத்ததுல என்னை கதறடிக்க கூடிய திறன் வெள்ளிக்கிழமையிடம் தான் இருக்கு.

அடடா, நாளைக்கு வெள்ளிகிழமையா? ஒக்க நிமிஷம் வைட்டீஸ் ப்ளீஸ். பக்கத்து கோவில் பூசாரிக்கு ஒரு போன் பண்ணி ஒரு கொத்து வேப்பிலைக்கு ஆர்டர் கொடுக்கணும்.

உங்களோட தெனாலி லிஸ்ட் எவ்வளவு நீளம்? யோசிச்சு வைங்க இதோ வந்திடறேன்.

6 comments:

LK said...

@மீனா
நாளைக்கு வெள்ளி . இந்த முறை என்ன ரிப்பேர் ஆக போது

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//நாலு பேரை சிரிக்க வைக்க முடியும்னா ரூம் போட்டு யோசனை பண்ணறது கூட தப்பில்லைன்னு அடிச்சு சொல்லுவேன். //

யாரைன்னு சொல்லவே இல்லீங்களே.. :))))

soundr said...

இது monday bluesச விட மோசமா இருக்கே madam......

http://vaarththai.wordpress.com

தக்குடுபாண்டி said...

வெள்ளிக்கிழமை அன்னிக்கிதான் தக்குடுவோட போஸ்டும் வரும். இனிமே இங்க லிஸ்ட்ல இதையும் சேத்துக்கோங்கோ!...:)

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

:-)

Meena Sankaran said...

@ LK - கடவுள் க்ருபைல முக்கால் நாள் தள்ளிட்டேன். பார்ப்போம். God is great. :-))

@ எஸ். பாலபாரதி - ஆனாலும் குசும்பு ஜாஸ்தியா இருக்கே உங்களுக்கு! என்னை வம்புல மாட்டி விட தயார வந்திருக்கீங்களா? :-))

@ soundr - கரெக்டா சொன்னீங்க. உலகத்துல எல்லோர்க்கும் செவ்வாய் தோஷம்னா எனக்கு மட்டும் வெள்ளி தோஷம். :-((

@ தக்குடுபாண்டி - ஹி ஹி ..சேத்துண்டாச்சு.

@உளவு.காம் - உங்க ரசிப்புக்கு நன்றி.