அதிர்ச்சி அடையாமல் கேட்பீங்கன்னா உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லுவேன். எதுக்கும் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு உட்கார்ந்தே கேளுங்க. நீங்கள் கர்ப்பிணியாகவோ, இருதய நோய் உடையவராகவோ இருந்தால் இந்தப் பதிவை மேற்கொண்டு படிக்காமல் இருப்பது உங்களுக்கு நல்லது. ரெடியா? இதோ கேளுங்க.
நான் உல்லாச விடுமுறைப் பயணம் ஒன்றை முடித்து கொண்டு ஊர் வந்து சேர்ந்து ரெண்டு நாள் தான் ஆகியிருக்கும். ஜெட் லாக் என்று பேர் பண்ணி கொண்டு என் தோழிகளின் அருமையான நளபாகத்தை அனுபவித்து கொண்டிருந்த போது தான் அந்த போன் கால் வந்தது. வாரக்கடைசியில் நடக்கவிருக்கும் கோவிலுக்கு நிதி திரட்டும் நாட்டிய விழாவில் பங்கு கொள்ள முடியுமா என்று என்னை கேட்க ஊரில் நாட்டிய ஆசிரியையாக இருக்கும் என் தோழி தான் கூப்பிட்டாள்.
அச்சச்சோ! என்னங்க ஆச்சு? மூச்சு விட மறந்துட்டீங்களா? பரவாயில்லை ஆசுவாசப் படுத்திக்கோங்க. உங்களுக்கே இவ்வளவு அதிர்ச்சியாய் இருந்தால் எனக்கு எப்படி இருந்திருக்கும் சொல்லுங்க. பரதக்கலைக்கும் எனக்கும் அலிபாபாவுக்கும் அம்புஜம் மாமிக்கும் உள்ள அதே தொடர்பு தான். (சும்மா ர்ய்மிங்கா இருக்கட்டுமேன்னு சொன்னேங்க. வேற ஒண்ணும் இல்லை..ஹி ஹி). அதுவும் நடிகை ஊர்வசியின் தங்கையா அப்படீன்னு பலரால் கேட்கப்பட்ட எனக்கு பரத நாட்டிய மேடைக்கு அழைப்பா? மேடை தான் தாங்குமா? அதுவும் சமீபத்தில் தான் ஒரு சின்ன பூகம்பம் வந்து உலுக்கி விட்டு போன எங்க ஊருக்கு இப்படி ஒரு கெட்ட நேரமா? அப்படியே ஆடி போயிட்டேன்.
தொலைபேசியின் அந்தப்பக்கத்தில் இருந்து மூச்சு பேச்சு இல்லாமல் போகவே பதறிப் போன என் தோழி அவசரமாக விஷயத்தை சொன்னாள். மேடை ஏற சொல்லி கூப்பிட்டது நாட்டியமாட இல்லையாம். முருகன் தெய்வானை கல்யாணம் பற்றிய நாட்டியத்தில் கல்யாணத்துக்கு வரும் விருந்தினர் போல வந்து மணமக்களை பூப்போட்டு ஆசீர்வதிக்க வேண்டிய ஒரு சின்ன ரோல் தான், பயப்பட வேண்டாம்னு சொன்னாள். அப்பாடா.....கலெக்டர் ஆபீஸ் டைபிஸ்ட் வேகத்தில் அடித்து கொண்டிருந்த என் பல்ஸ் நிதானப்பட்டு மூச்சு சீராகி முகம் தெளிய முழுசா முப்பது நொடி ஆச்சு. விஷயம் சொல்லிவிட்டு போனை வைக்கும் முன் மாலை ரிஹர்ஸலுக்கு கட்டாயம் வந்துவிடும்படி சொன்னாள்.
ரிஹர்ஸலா? இந்த ஜுஜுபி ரோலுக்கா? எப்படி யோசிச்சாலும் நின்னு பூப்போடுவதில் சொதப்ப முடியும்னு எனக்கு தோணலை. நான் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு சூப்பர் பட்டு புடவை கட்டி ஜிலுஜிலுன்னு நகை போட்டு மேடை ஏறி கை நிறைய பூவெடுத்து தூவணும். அவ்வளவு தானே? இதுக்கு எதுக்கு ரிஹர்ஸல்? இப்படி நினைச்சு தான் கொஞ்சம் கொழுப்பும் மிச்சம் நமுட்டு சிரிப்புமா ரிஹர்ஸலுக்கு போனேன். என் ஆணவத்தை பாத்து கலியுக கிருஷ்ணன் கண் மறைவா நின்னு கை கொட்டி சிரித்திருப்பான் போல இருக்கு.
மேடை ஏறி நாலு தப்படி நடந்து சிரித்த முகத்தோடு எங்கே நிக்கணும்னு சொல்லி கொடுத்தாங்க. மேடை ஏறுவது வரை எல்லாம் சூப்பரா செய்தேன். பிறகு தான் எல்லாமே ரிப்பேர். பளிச்சுன்னு பத்து விளக்குக்கு அடியில் நின்னு சிரிக்கணும்னா எவ்வளவு கஷ்டம்னு தெரியணும்னா என்னை கேளுங்க, நான் சொல்லறேன். இஞ்சி தின்ன குரங்குன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா? கண்ணாடியில் பார்க்கா விட்டால் கூட என் முகம் அப்படித் தான் அப்போ இருந்திருக்கும்னு என்னால அடிச்சு சொல்ல முடியும். சரி அதை விடுங்க. நாலு தப்படி எடுத்து மேடைக்கு அந்தப் பக்கம் போகணுமே? நடக்க முடியாமல் பின்னி போயிருந்த கால்களோடு நின்றிருந்த எனக்கு அந்த சின்ன மேடை கிரிகெட் மைதானம் போல விரிஞ்சு தெரிஞ்சது. ஒருவழியா மேடைக்கு அந்தப்பக்கம் வந்தவுடன் அடுத்த பிரச்சனை பூப்போடும் வரை கைகளை என்ன செய்யறது? மொத்தத்துல அந்த அஞ்சு நிமிஷம் முடியறதுக்குள்ளே சொதப்பி தள்ளினேன். இதுல அக்கிரமம் என்னன்னா எனக்கு முன்னால் மேடையில் நடனம் ஆடிக்கொண்டு இருந்த பதினைந்து இருபது வயசு கலைஞர்கள் எல்லாம் நூறு பேர் முன்னாடி மேடையில் ஆடுவது என்னவோ அவர்கள் தினமும் செய்யும் டெக்ஸ்ட் மெசேஜிங் போல யதார்த்தமா, இயல்பா, அற்புதமா செய்தாங்க.
மேடை ஏறி பத்து பேர் முன்னாடி நின்று ஆடியோ, பாடியோ, நடித்தோ மக்களை மகிழ்விக்கும் perfoming artists அனைவருக்கும் என் தொப்பி தூக்கி வணங்கி (hats off ) விடைபெறுகிறேன்.
4 comments:
//நான் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு சூப்பர் பட்டு புடவை கட்டி ஜிலுஜிலுன்னு நகை போட்டு மேடை ஏறி கை நிறைய பூவெடுத்து தூவணும். அவ்வளவு தானே? இதுக்கு எதுக்கு ரிஹர்ஸல்? //
:))
மிக எளிமையாக அதே நேரத்தில் டெக்ஸ்ட் மெசெஜ் பண்ணுவதை சரியான இடத்தில் கோர்த்து என்று கலக்கியிருக்கீங்க மேடம்...
உங்க ரசிப்புக்கு நன்றி வார்த்தை. :-))
வாங்க மௌலி சார்! உங்களை என் தோழி கவிநயாவின் பக்கத்தில் பார்த்திருக்கேன். உங்க வருகைக்கும், 'கலக்கறீங்க' ன்னு சொல்லும் ரசனைக்கும் மிக்க நன்றி.
Post a Comment