Tuesday, August 10, 2010

சரித்திர நாயகி நானா சாவித்திரியா?

உலகத்தில் எல்லா மனைவிகளும் அவங்க வாழ்க்கையில் ஒரு முறையாவது கிடைக்குமான்னு ஏங்கும் ஒரு வாய்ப்பு எனக்கு வந்த போது நான் வேண்டாம்னு முகம் திருப்பிக்கிட்டேன்னு நினைச்சால் எனக்கே என்னை நினைத்து பெருமையா இருக்கு. என்னுடைய இந்த பெருந்தன்மையை பற்றி கேள்விப்பட்டாங்கன்னா நம்ம ஊரு 'அமர்சித்ர கதைகள்' கம்பெனிகாரங்க 'சத்தியவான் சாவித்ரி' கதையோடு சேர்த்து என் கதையையும் வெளியிட்டுருவாங்க. அதில் எனக்கு சந்தேகமே இல்லை. ஆனால் புத்தகமா வெளி வந்து நம்மூர் நண்டு சிண்டெல்லாம் படிக்க நேர்ந்தால் கணவர் மனம் நோகுமேன்னு ஒரு நல்ல எண்ணத்தில் தான் இப்படி அதிகமா யாருமே படிக்காத தமிழ் சங்க ப்ளாக்ல வந்து இந்த கதையை சொல்லறேன்.

மூணு வருஷத்துக்கு முன் நடந்த இது ஒரு உண்மை சம்பவம்.

---------------------------------------------------------------------------------

இந்தியாவுக்கு கோடைகால விடுமுறைக்கு கிளம்ப எல்லா ஆயத்தங்களும் செய்தாச்சு. நாளை விடிந்தா பெட்டி படுக்கையை தூக்கி கொண்டு விமானதளத்துக்கு போக வேண்டியது தான். இந்த நேரத்தில் நீங்களா இருந்தா என்ன செய்வீங்க? நிம்மதியா படுத்து தூங்கி கனவில் அபிமான நடிகர் 'ஹாரிசன் போர்ட்' கையை குலுக்கி விட்டு எழுந்து ஊருக்கு போய் சேருவீங்க. அதை செய்யாமல் விட்டு விட்டு பொழுது போகலைன்னு நான் வாசல் பக்கம் குழந்தைகளுடன் விளையாட போனதை விதின்னு சொல்லாமல் வேறெப்படி சொல்லறது?

முப்பது வயசில் மூணு வயசு குழந்தையின் ஆர்வத்தோட ஸ்கூட்டர் விட்டு விளையாடினால் என்ன நடக்குமோ அது தான் நடந்தது. தார் ரோட்டில் தலை குப்புற விழுந்து வலது கண் பக்கம் பயங்கர அடி. வீங்கிய முகத்துக்குள்ளே புதைஞ்சு போன கண்களை கஷ்டப்பட்டு திறந்து பார்த்த போது எதிரில் கலங்கலாய் தெரிஞ்சது வீடு. ஒரு இருநூறு மில்லிசரக்கு போட்டு சோகத்தில் ஆடி ஆடி நடக்கும் சினிமா ஹீரோ போல் ரத்த சிவப்பான கண்களோடு ஆடிக்கொண்டே வீட்டுக்குள் வந்த என்னை பார்த்து பதறி போன என் கணவர் என்னை பக்கத்து ஆஸ்பத்திரியின் எமர்ஜென்சி அறைக்கு அழைத்து போக அங்கே ஆரம்பிச்சது அவருடைய கெட்ட நேரம்.

கரு ரத்தம் கட்டி போய் வீங்கியிருந்த என் முகத்தை பார்த்த நர்சுகளும் டாக்டர்களும் கோபத்தில் திரும்பி என் கணவரை பார்த்த பார்வையில் இருந்த உக்கிரத்தை பாண்டிய நாட்டு சபையில் நடந்த திருவிளையாடல் காட்சியில் சிவன் "நக்கீரா என்னை நன்றாக பார்" அப்படீன்னுதன் நெற்றிக்கண்ணை கோபத்தில் திறந்த போது கடைசியாக பார்த்த ஞாபகம். அவங்களோட கோவத்தின் காரணம் புரியாமல் மலங்க மலங்க விழித்த என் கணவரை வெளியே உட்கார சொல்லி விட்டு ஸ்கேன் செய்யும் ரூமுக்கு என்னை அழைத்து போய் அனுதாபத்தோடு பார்த்த நர்சை கண்டு எனக்கும் குழப்பம் தான். ஆனால் மேலே யோசனை பண்ண முடியாமல் முகம் பத்து விசில் வந்த ப்ரெஸ்டீஜ் குக்கர் போல வலியில் தெறித்தது.

ஒரு வழியாக ஸ்கேன் முடிந்து டாக்டர் வந்து பார்த்து வலிக்கு மாத்திரை குடுத்து முடித்த போது தான் என் கணவர் கவலையோடு கதவுக்கு வெளியே நின்னு எட்டி பார்ப்பது தெரிந்தது. அவரை உள்ளே கூப்பிட சொல்லி நான் சொன்ன போது ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட டாக்டரும் நர்சும் மெதுவாக என்னிடம் பேச்சை ஆரம்பித்தார்கள். வீட்டில் ஏதும் பிரச்சனை என்றால் தைரியமாக சொல்லலாம். பயப்பட வேண்டாம். என்னை போல பெண்களுக்கு பல காப்பகங்கள் இருக்கு. கை நீட்டும் கணவருக்கு பயந்து கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சட்டம் என் பக்கம் தான். இந்த ரீதியில் இன்னும் பல விஷயங்களை கனிவாக பொறுமையாக சொல்லி கொண்டே போனாங்க. ஒன்றும் புரியாமல் முதலில் விழித்த எனக்கு விஷயம் விளங்க ஆரம்பித்த போது அடி வயத்திலிருந்து பொங்கிய சிரிப்பை மீறி ஒரு விஷயம் உறைத்தது.

என் கணவரின் குடுமி அந்த ஒரு வினாடி என் கையில். என் ஒரு தலை அசைப்பில் பாவம் அவர் மாமியார் வீட்டு களியை ருசி பார்க்க வேண்டி இருக்கும். ஆஹா! எப்பேர்பட்ட ஒரு அரிய வாய்ப்பு! கோடானு கோடி மனைவிகள் உலகத்தில் தங்கள் வலது புருவத்தை வெட்டி கொடுக்க தயாராக இருக்கும் (மாசம் ரெண்டு தரம் அழகு நிலையம் சென்று தீட்டி விட்டு கொண்டும் வரும் அதே புருவத்தை தான் சொல்லறேன்) இந்த ஒரு வாய்ப்பு தேடாமல் கனிந்த பழம் போல என் மடியில் விழுந்த போது மனம் சஞ்சலப்படாமல் நெஞ்சில் உரமுடன் 'இவர் இதற்கு காரணமில்லை. இவர் நிரபராதி' ன்னு சொல்லி சட்டத்தின் கொடும் பிடியில் சிக்காமல் என் கணவரை மீட்டு கொண்டு வந்த நானா இல்லை சத்யவானின் சாவித்ரியா சரித்திர நாயகி?

No comments: