உங்க ஊரை பத்தி எனக்கு தெரியாது ஆனால் எங்க ஊர்ல வர வர நவராத்திரி பண்டிகை கிட்டத்தட்ட ஒரு ஒலிம்பிக் ஓட்ட பந்தயம் மாதிரி ரொம்பவே விறுவிறுப்பா தான் நடக்குது. வருஷா வருஷம் மேலும் பல பல வீடுகள் ல கொலு வைத்து எல்லோரையும் கூப்பிட்டு அசத்தறாங்க. கூகிள் காலேண் டரே எங்க கொலு schedule லை பார்த்து கதி கலங்கி போய் browser tab ஐ இழுத்து மூடி படுத்துக்குதுன்னா பாருங்க.
நவராத்திரி ஆரம்பிக்கருதுக்கு ஒரு பத்து நாளைக்கு முன்னாடியிலேர்ந்து வந்து குவிய ஆரம்பிக்கற கொலு பத்திரிகைளை சரி பார்த்து Excel spreadsheet ல போடறது தான் முதல் ஜோலி. ஒரு ஏழு வருஷத்துக்கு முன் பத்து பேர் கூப்பிட்டுட்டு இருந்த நிலைமை மாறி இன்னிக்கு குறைஞ்சது ஒரு ஐம்பது பேர் வீட்டிலாவது கூப்பிடறாங்க. துண்டு பேப்பர்ல எழுதி வச்சிண்ட காலமெல்லாம் மலை ஏறியாச்சு. முன்னாடி மின்னஞ்சல்ல மட்டும் தான் பத்திரிகை அனுப்புவாங்க எங்க பெண்கள். ஆனா இப்பல்லாம் Evite , whatsapp மூலமா கூட அனுப்பறாங்க. இது போறாதுன்னு Kumon சென்டர் மற்றும் Kohls வாசல்ல எல்லாம் குங்குமச்சிமிழ் வச்சு நின்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்கன்னு வேற பேசிக்கறாங்க. Spreadsheet உதவி மட்டும் இல்லைன்னா எத்தனையோ சுண்டல் பாக்கெட்டுகள் பல வீடுகள்ல சீந்துவார் இன்றி அனாதையா கிடக்கும்.
Spreadsheet ல நாள் வாரியா, zone வாரியா, நேரம் வாரியா பிரிச்சு பிரிண்ட் ஔட் எடுத்து நிமிர்றதுக்குள்ள நாக்கு வறண்டு ஒரு பன்னீர் சோடா கிடைக்காதான்னு ஏங்கி போய் நான் ஒரு சுத்து இளைச்ச மாதிரி இருக்கும் எனக்கு. ஆனா பாருங்க முதல் நாள் புடவை கட்டறச்ச பாதி கை மட்டும் ஏறி வேலை நிறுத்தம் செய்யற என் blouse அந்த நினைப்புக்கு மிகப் பெரிய ஆப்பு ஒண்ண சத்தமில்லாம வைக்கும். ஆனால் அதுக்கெல்லாம் அசர்ரதுக்கு நீங்க வேற ஆளை பார்க்கணும்.
விக்ரமாதித்யன் கதைல வர்ற மாதிரி என் உயிர் நவராத்திரியின் போது மட்டும் ஏழு தெரு தாண்டி, ஆறு மாடி ஏறி, அஞ்சு வீட்டுக்குள்ள இருக்கிற நாலு விதமான சுண்டல் ல தான் மறைஞ்சு இருக்கும். ஒன்பது நாளும் சுண்டல் பாக்கெட் வாங்குவதில் எந்த ஒரு தடங்கல் வந்தாலும் இந்த மீனா பொங்கி எழுந்திடுவாங்கற உண்மை ஊர்ல பல பேருக்கு தெரியும். அஞ்சா நெஞ்சத்தோடு பாரதியின் புதுமை பெண் மாதிரி நிமிர்ந்து நின்னு எல்லாத் தடங்கல்களையும் எதிர் நோக்கி வீர நடை போட்டு எனக்கு வர வேண்டிய சுண்டல் பாக்கெட்டுகளை கைபற்றர வரைக்கும் நான் ஓயவே மாட்டேன். என்னை பெத்தவங்களுக்கு கூட இந்த விஷயத்துல என்னை நினைச்சு ரொம்ப பெருமை.
நவராத்திரி ஒன்பது நாளும் மாலை மூணு மணிக்கு ஆரம்பிச்சா எங்க ஓட்டம் ஒரு பத்து மணிக்கு தான் நிக்கும். இந்த சீசன்ல எல்லா தெருக்களிலும் பட்டு புடவை கட்டி, நகை நட்டு போட்டு மங்களகரமா இருக்கற பெண்களால தான் அதிக டிராபிக் ஜாம். பல சமயம் 2 அல்லது 3 பேரா சேர்ந்து கூட கொலு ரௌண்ட்ஸ் போவாங்க. நான் பார்த்த வரைக்கும் முக்கியமான ஒரு விஷயம் பாட்டு பாடலைன்னா எங்க ஊர் மக்கள் சுண்டல் கொடுக்கரதில்லை. இதனால பாட தெரியாதவங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து மூளைபுயல் மூலமா (அதான் brainstorming) இதுக்கு ஒரு தீர்வு கண்டிருக்காங்கன்னு கேள்வி. அதி புத்திசாலியான இந்திய பெண்கள் இப்ப பாடறதை கூட outsource பண்ணிடறாங்களாம் .
இதை நானே போன வாரம் கண் கூடா பாத்தேன். ஒரு தோழி அவங்க வயதான அம்மாவை கூட கூட்டிகிட்டு தெரு தெருவா ஏறி எறங்கிட்டிருந்தாங்க. ஒரு கொலு வீட்டுல நுழைஞ்சு 5 நிமிஷத்துல இந்த தோழி அவங்க அம்மாவை பாத்து, விவேக் பாஷைல சொல்லனும்னா, cute ஆ கண்ணடிச்சாங்க. உடனே அவங்க அம்மா தொண்டைய செருமிகிட்டு டக்குனு பாடி கலக்கிட்டாங்க. நான் அசந்தே போயிட்டேன். என்ன ஒரு மாஸ்டர் பிளான்! கொலுவுக்கு பாடறது நீங்க நினைக்கறா மாதிரி ஈசியான வேலை இல்லை. ஒரே ஒரு பாட்டை வச்சு தேய்க்க முடியாது. நம்ம போற வீட்டுக்கெல்லாம் நம்ம பின்னாடியே ஒரு கும்பல் வருவாங்க. ஒரே பாட்டை எல்லா இடத்துலயும் பாடினா நம்ம வண்டவாளம் ஊர் தண்டவாளத்துல அன்னிக்கு ராத்திரிக்குள்ளயே அமோகமா வளைய வரும்.
நவராத்திரி முதல் நாளைக்கப்புறம் எங்க closet பக்கம் போகாம இருப்பது உங்க இருதயத்துக்கு தான் நல்லது. வரிசையா தினமும் நாங்க உருவி போடற புடவைங்க வழிஞ்சு ஒரு மினி சுனாமியை ஞாபகப்படுத்தும். ஆயிரக்கணக்கில் குடுத்து வாங்கின பட்டு புடவைகளை நாங்க கூசாம ஒரு ஓரமா விட்டெறிவோம் இந்த ஒன்பது நாட்களும். பொதுவா கணவர்களுக்கு ரத்த கொதிப்பு அதிகமாவது இந்த சீசனில் தான்னு ஆராய்ச்சி பண்ணினால் யாராவது கண்டு பிடிக்கலாம். கொலு பொம்மைகளை கட்டி மேலே போட்டு மூச்சு விட்டப்புறம் தான் நாங்க புடவை கடையை கவனிக்கவே வருவோம்.
இந்த வருஷம் நவராத்திரி முடிஞ்சு நாலு நாள் ஆச்சு. வீடு புயல் அடிச்சு ஓய்ந்தாப்பல இருக்கு. வீடு வீடா ஏறி ஏறி கால் கழண்டு போச்சு. சர்வ வியாதி நிவாரணியான Tylenol துணையோட என்னை மாதிரி பல பெண்களின் வாழ்க்கை மெதுவா அவங்களோட அன்றாட பாதைக்கு திரும்பிண்டிருக்கு. வேர்கடலை, கொண்டைகடலை, பட்டாணி, பயத்தம் பருப்பு, கடலை பருப்பு, காராமணி, பச்சை பயறு இப்படி பலவிதமான சுண்டலை ஒன்பது நாளா மாத்தி மாத்தி சாப்பிட்ட திருப்தியில்(?), இனி ஒரு வருஷத்துக்கு சுண்டல் பேரையே யாரும் சொல்ல கூடாதுன்னு பல வீடுகளில் ஒரு புது விரதம் எடுத்திருக்காங்களாம்.
இதுக்கு மேல மொக்கை போட்டு உங்க பொறுமையை சோதிக்காம இந்த வருஷ நவராத்திரியின் இனிமையான நினைவுகளோடு உங்களிடமிருந்து விடை பெறுவது: மீனா சங்கரன். :-)
1 comment:
ji happy to see your involvement in OUR TRADITIONAL FUNCTION KOLU
may your involvement increse every year...
Post a Comment