Tuesday, June 29, 2010

துப்பறியும் சாம்பு இப்பொழுது எங்கே?

ரொம்ப சுறுசுறுப்புன்னு சொல்ல முடியாட்டாலும் என்னை யாரும் இது வரை சோம்பேறின்னு சொன்னது இல்லைங்க. அடிக்கடி துடைச்சு துடைச்சு சுத்தம் பண்ணாட்டாலும் வீட்டுக்கு நாலு பேர் வரப்போறாங்கன்னு தெரிஞ்சா உடனே வாழும் அறையில் (living room) இறைஞ்சு கிடக்கிற பத்து விளையாட்டு சாமான்கள், அரை டஜன் நாய் பொம்மைகள், ஐந்தாறு அழுக்கு காலணி உறை, நாலு தலையணை, இரண்டு கதை புத்தகங்கள் மற்றும் பற்பல கலர் ரிமோட் கண்ட்ரோல்கள் எல்லாத்தையும் அள்ளி எடுத்துட்டு போய் பக்கத்து அறையில் போட்டு கதவை இழுத்து தாளிட்டு சுத்தம் செஞ்சிடுவேன். வீட்டுக்கு வர்றவங்க மூக்கில் விரல் வச்சு ஆச்சர்யப்படுவாங்க. என் நல்ல பேருக்கு பங்கம் வராமல் என்னுடைய நாய் பக்கத்து அறை வாசலில் உட்கார்ந்து யாரையும் உள்ளே போக விடாமல் காவல் இருக்கும். இப்ப நானே அந்த அறைக்குள் போக பயந்து போகறது இல்லைன்னா பாருங்களேன்!

அப்படிப்பட்ட நான் வீடு நிறைய கூடைகளில் தோய்த்து மடிக்காமல் துணி மணிகளை அப்படியப்படியே போட்டு வைத்திருப்பதை பார்த்து நீங்க ஆச்சர்யப்படறது எனக்கு புரியுது. என்னை மட்டும் இல்லை. எல்லா வீட்டு தலைவிகளையும் கேட்டு பாருங்க. அதுக்கு ஒரு காரணம் தான் சொல்லுவோம். முடிவேயில்லாத ஒரு வேலையை எப்படீங்க செய்ய முடியும்? ஒரு வழியா ஐந்தாறு கூடை துணிகளையும் வாஷிங் மஷினில் போட்டு துவைத்து, காய வைத்து, மடித்து அலமாரியில் வைத்து விட்டு திரும்பினால், எங்கிருந்தோ இன்னும் ரெண்டு கூடையில் அழுக்கு துணி வந்து உட்கார்ந்து என்னை பார்த்து கை கொட்டி கெக்கலிக்கிறது. பல வருஷங்களா 'நீயா நானா பார்ப்போம்' அப்படீங்கற வீராப்பில் நான் அழுக்கு துணியுடன் தனியாக போட்ட குஸ்தியை பார்த்து பரிதாபப்பட்டு என் கணவர் என்னை ஒதுங்கச் சொல்லி இப்போது அவர் இந்த போரில் இறங்கியிருக்கார்.

சில வருடங்களுக்கு முன்னாடியெல்லாம் ஆர்வத்துடன் துணி துவைச்சு மடிச்சு வைப்பேங்க. எதையும் சாதிக்க முடியும்னு நம்புகிற வயசு அப்போது. ஆனால் இப்பல்லாம் பெருகி வரும் அழுக்கு துணிகளை வெல்ல எனக்கு சக்தி இல்லைன்னு ஒத்துக் கொள்ளும் மனப்பக்குவம் வந்து விட்டது. இந்தப் பக்குவம் வந்ததால தான் "துவைத்த துணியை மடிச்சு அலமாரியில் வைத்து என்ன செய்ய போகிறோம்? நம் தலை அந்தப்பக்கம் திரும்பியவுடன் அது குதித்து அழுக்கு கூடையில் உட்கார போகிறது. அதனால் மடிக்காமல் கூடையிலே இருக்கட்டும்" னு விட்டுட்டேன்.

ரொம்ப காலமாவே ஒரு சந்தேகம் எனக்கு. நான் தான் எங்க வீட்டில் துணிகள் வாங்குவேன். அளவாத்தான் வாங்குவேன். அப்படி இருக்கையில் ராத்திரியோட ராத்திரியாக எப்படியோ துணிமணித்தொகை வீட்டில் பெருகிக் கொண்டு வரா மாதிரி தோணுது. நாலு துணி இருந்த அலமாரியில் இருபது துணி இருக்கிற மாதிரி தோன்றுகிறது. இந்த மர்மத்தை துப்பு துலக்க எனக்கு நேரமும் இல்லை. புத்திசாலித்தனமும் பத்தாது. இந்த வேலைக்கு துப்பறியும் சாம்புவைத் தான் கூப்பிடலாம்னு இருக்கேன். அவர் தொலைபேசி எண் உங்ககிட்ட இருக்கா?

பி.கு. - இது RTS ப்ளாக் தளத்தில் மே 2009 ல் வெளிவந்த கட்டுரை.

6 comments:

ப.கந்தசாமி said...

எல்லா ஊட்லயும் இதே பிரச்சினைதாங்க. சாம்பு வந்தார்னா அப்டியே எங்கூட்டுக்கும் தகவல் கொடுங்க.

எல் கே said...

enga veetla intha pracahanai illenga

வடுவூர் குமார் said...

ஓ! சாம்புவா? 2 வார‌த்துக்கு முன்பு ம‌ஸ்க‌ட்டுக்கு வ‌ந்திருந்தார்...தெரிந்தால் சொல்லியிருக்க‌லாம். :-))

soundr said...

:))))

(ஐய்யோ, பொண்டாட்டி மேடம் மொறைக்கிராங்க‌, smiley a அழிச்சிடுங்க‌)

Meena Sankaran said...

@ Dr.P Kandaswamy PhD - துப்பறியும் சாம்புவை மட்டும் கண்டு பிடிச்சேன்னா 'உங்க சேவை உலகத்துக்கு தேவை' ன்னு கோழி மாதிரி அமுக்கி காண்ட்ராக்ட் போட்டு நாலு பேருக்கு உதவ அனுப்பலாம்னு தான் பிளான். உங்களுக்கும் சொல்லறேன், சரி தானே? :-))

@ LK மற்றும் வடுவூர் குமார் - ஆனாலும் இந்த கிண்டல் கொஞ்சம் கூட நல்லாயில்லை. ஏற்கனவே நொந்து போயிருக்கரவங்க தலையில இப்படி நொச்சுனு குட்டலாமா?

:-))

@ soundr - :-)))

விசு said...

//நாலு பேரை சிரிக்க வைக்க முடியும்னா ரூம் போட்டு யோசனை பண்ணறது கூட தப்பில்லைன்னு அடிச்சு சொல்லற ஒரு ஜீவன்!//

இதே தத்துவத்தில் வாழ்பவன் அடியேன். தமிழ் மனதில் தங்கள் பதிவை கண்டு வந்தேன். அடியேனுக்கு ஒரு மனைவி இரண்டு டீனேஜ் ராசாதிக்கள்.

எம்புட்டு துணி வரும்னு பாத்துக்குங்க. துணி மடிப்பது பிள்ளைகளின் வேலை என்று ஆரம்பித்து... இவளுக மடிக்காமல் விட்டால் அம்மணிக்கு சாமி ஏறிடுமே என்று நான் பல வருடங்களுக்கு முன் மடிக்க ஆரம்பித்தேன். அதுவே கால போக்கில் என் கடமைகளில் ஒன்றாகிவிட்டது.

இன்னது.. துவைத்த துணியை மடிக்காமல் கூடையில் விட்டு விட்டீர்களா.. கொடுத்து வைத்தவர் உங்க வூட்டு கார். இங்கே நிலைமை வேறு. அழுக்கு துணியே ஏன் அப்படி உள்ளது .. அதை மடித்து அழுக்கு துணி கூடையில் வைக்கவில்லையா என்று சொல்லுவார்கள்.

நன்றாக எழுதுகின்றீர்கள் வாழ்த்துக்கள்.