Monday, June 28, 2010

ஆஸ்தான புலவரும் சின்னத் திரையும்!

காட்சி - 1
எலியூர் அரண்மனை

"யாரங்கே?" இடி போல் முழங்கியது எலியூர் அரசனின் குரல். இரு காவலாளிகள் எங்கிருந்தோ நொடியில் வந்து வணங்கினர்.

"மன்னா, தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம்."

"உடனே சென்று ஆஸ்தான புலவரை அரண்மனைக்கு அழைத்து வரவும். இரண்டு நாட்களாக அவர் சபைக்கு வரவில்லை. இன்று பல்லியூரில் இருந்து வந்த புலவரை தர்க்கத்தில் நான்கு கேள்விகள் கேட்க நம் சபையில் ஒருவரும் இல்லை. எலியூருக்கு எத்தனை பெரிய அவமானம்?" கோபத்தில் அரசனின் முடுக்கிய மீசை துடித்தது.

விரைந்து சென்ற காவலாளிகள் சில நிமிடங்களில் புலவருடன் திரும்பினர். அழுது வீங்கி நிராசையுற்ற கண்களுடன் தன் முன்னே நின்ற புலவரைப் பார்த்ததும் அதிர்ந்து போனான் மன்னன்.

"புலவரே, என் நாட்டின் குடிமகனின் கண்களில் கண்ணீரா? ஐயகோ, நான் என் கடமையை செய்ய தவறியவன் ஆனேனே. என்ன குறை உங்களுக்கு? என்னிடம் சொல்லுங்கள்."

"சின்னத்திரையில் ஐந்து வருடங்களாக ஓடிக்கொண்டிரும் மெகா சீரியல் இன்றுடன் முடிவடைகிறது மன்னா. ஐந்து வருடங்களாக என் குடும்பத்தின் அங்கமாகவே ஆகி விட்ட சின்னத்திரை நடிகர்களை இனி பார்க்கவே முடியாதே என்ற வருத்தத்தில் அழுது அழுது எனக்கு ஜன்னி கண்டு விட்டது. அதனால் தான் என்னால் சபைக்கு வர இயலவில்லை அரசே."

"என்னது, சின்னத் திரையில் வரும் மெகா சீரியல் நடிகர்களிடம் உங்களுக்கு அவ்வளவு பிரியமா? ஆச்சர்யமாக உள்ளதே! அதன் காரணத்தை சற்றே விளக்கமாக சொல்லுங்கள் புலவரே."

"எலியூர் அரசே, தினமும் சபை முடிந்து வீடு திரும்பினால் எனக்காக மெகா சீரியல் குடும்பங்கள் காத்திருக்கும். ஒவ்வொரு நாளும் அந்த கதாபாத்திரங்கள் படும் துன்பங்கள் சொல்லில் அடங்காது மன்னா. இவைகளின் கதாநாயகிகள் மாமியாரிடம் உதைப்பட்டு, கணவனிடம் அடிபட்டு, பிறந்த வீட்டார் முன் அவமானப்பட்டு, தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்டு, கொலை சூழ்ச்சியில் அகப்பட்டு........அப்பப்பா...அவர்கள் படும் பாட்டை பார்த்து எத்தனை நாட்கள் நான் கண்ணீர் விட்டுருப்பேன். அரசே.....உங்கள் கண்களில் கண்ணீரா?"

"புலவரே...போதும் போதும். இனி சொல்லாதீர்கள். உங்கள் மெகா சீரியலில் நல்லது எதுவுமே நடக்காதா?"

"மன்னா....எலியூரில் சூரியன் மேற்கில் உதித்தாலும் உதிக்கலாம்...மெகா சீரியலில் நல்லதாக எதுவும் நடக்க சிறிதும் வாய்ப்பில்லை."

"புலவரே, எனக்கு ஒரு நல்ல யோசனை. நாளை பல்லியூர் புலவர் சபைக்கு வரும் போது நீர் இந்த மெகா சீரியல் பற்றி நாலு கேள்வி அவரைக் கேளுங்கள். நிச்சயம் வெற்றி உங்களுக்கே."

"அப்படியே செய்யலாம் மன்னா. நாளைக் காலையில் சபையில் பல்லியூர் புலவரை சந்திக்க தயாராக வருகிறேன்."

------------

காட்சி - 2
புலவர்களின் மோதல்
எலியூர் அரண்மனை ராஜ சபை

காவலாளன்: எலி பிடிக்கும் பூனையின் எதிரி அவன் வீரன், பராக்ரம சூரன், தான் உண்ட மீதியை தானம் செய்யும் வள்ளன், பளபள உடை அணியும் அழகன், அவன் எலியூர் மன்னன் அழுமூஞ்சிவர்மன் பராக் பராக் பராக்.

பல்லியூர் புலவர்: மன்னாதி மன்னா, பல்லியூர் நாட்டு மக்களின் சார்பாக உங்களுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

எலியூர் அரசன்: வெளிநாட்டு புலவரே, வருக வருக...இன்று எங்கள் ஆஸ்தான புலவர் உங்கள் பண்டிதத்தை சோதனை செய்வார். ஆஸ்தான புலவரே, தர்க்கத்தை துவக்கலாம்.

ஆஸ்தான புலவர்: அப்படியே ஆகட்டும் மன்னா.

புலவரே, இதோ உங்களுடைய முதல் கேள்வி. சின்னத் திரையில் வரும் மெகா சீரியலில் ஒரு மாமியார் தன்னுடைய மருமகளுக்கு இன்முகத்துடன் காப்பி பானம் கொடுத்தால் அதற்கு என்ன அர்த்தம்?

வெளிநாட்டு புலவர்: அவருக்கு மருமகளிடம் அபரிதமான அன்பென்று அர்த்தம்.

ஆஸ்தான புலவர்: தவறு. பானத்தில் விஷம் கலந்து கொடுத்து "சென்று வா மகளே" என்று சொல்கிறார் என்று அர்த்தம். இதோ உங்களுடைய அடுத்த கேள்வி. தமிழ் மெகா சீரியலில் கிட்டத்தட்ட அறுபது வயது இருக்கும் ஒரு பெரியவர் குனிந்த தலையுடன் அழுகையில் உடம்பு குலுங்க ஒரு துண்டால் வாயை மூடி கொண்டு ஒரு வீட்டை விட்டு வெளியே வருகிறார் என்றால் அதற்கு என்ன அர்த்தம்?

வெளிநாட்டு புலவர்: அந்த வீட்டில் அவருடைய உறவினர் ஒருவர் தவறி விட்டார் என்று அர்த்தம்.

ஆஸ்தான புலவர்: இல்லை. அவருடைய மகள் புகுந்த வீட்டில் வேலைக்காரியாக உழைப்பதை கண்டு ரத்த கண்ணீர் பெருகி மகளின் கணவரையும், மாமியாரையும் "இது நியாயமா?" என்று கேள்வி கேட்டு அவர்களிடம் அவமானப்பட்டு வீடு திரும்புகிறார் என்று அர்த்தம்.

இதோ உங்களுடைய மூன்றாவது கேள்வி. சின்னத் திரையில் கதாநாயகிகளாக வரும் பாத்திரங்கள் அதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

வெளிநாட்டு புலவர்: இந்தக் கேள்வி சற்று கடினமாக உள்ளது. எனக்கு சிறிது நேர அவகாசம் வேண்டும் புலவரே.

எலியூர் அரசன்: ஒரு மணி நேர உணவு இடைவேளைக்கு பின் தர்க்கத்தை மறுபடியும் தொடரலாம்.

புலவர்கள்: அப்படியே ஆகட்டும் மன்னா.

ராஜ சபையை விட்டு அனைவரும் வெளியேறுகிறார்கள்.

---------------

காட்சி - 3
உணவு இடைவேளைக்கு பின் தர்க்கம் தொடர்கிறது
எலியூர் அரண்மனை ராஜ சபை

காவலாளன்: எலி பிடிக்கும் பூனையின் எதிரி அவன் வீரன், பராக்ரம சூரன், தான் உண்ட மீதியை தானம் செய்யும் வள்ளன், பளபள உடை அணியும் அழகன், அவன் எலியூர் மன்னன் அழுமூஞ்சிவர்மன் பராக் பராக் பராக்.

எலியூர் அரசன்: வெளிநாட்டு புலவரே, ஆஸ்தான புலவரின் மூன்றாவது கேள்விக்கு விடை சொல்லி தர்க்கத்தை தொடர தாங்கள் தயாரா?

வெளிநாட்டு புலவரே: ஆமாம் மன்னா.

எலியூர் அரசன்: ஆஸ்தான புலவரே மீண்டும் ஒரு முறை மூன்றாவது கேள்வியை கேளுங்கள்.

ஆஸ்தான புலவர்: அப்படியே ஆகட்டும் மன்னா. புலவரே, சின்னத் திரையில் கதாநாயகிகளாக வரும் பாத்திரங்கள் அதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

வெளிநாட்டு புலவர்: விளம்பரங்களில் நடித்து பற்பல சாமான் விற்கும் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

ஆஸ்தான புலவர்: தவறு. அவர்கள் அதற்கு முன் பெரிய திரையில் முன்னிலை கதாநாயகிகளாக நடித்து திருமணமான அடுத்த நாளிலிருந்து அழகையும் கவர்ச்சியையும் இழந்ததாக முத்திரை குத்தப்பட்டு அக்கா, பெரியம்மா, சிறிய தாயார் போன்ற பாத்திரங்களுக்கு ஒதுக்கப்பட்ட சோகத்தில் நொடிந்து போய் நடித்து கொண்டிருந்தார்கள்.

எலியூர் அரசன்: சபாஷ்! சபாஷ்!

ஆஸ்தான புலவர்: நன்றி அரசே! இதோ எனது அடுத்த கேள்வி. ஒரு மெகா தொடரை இன்று பார்த்த பின்பு ஒரு வருடம் சென்ற பின்பு மறுபடி பார்த்தால் கதையில் மாற்றம் இருக்குமா இருக்காதா?

வெளிநாட்டு புலவர்: அது எப்படி ஒரு வருடத்தில் மாற்றம் இல்லாமல் போகும்? நிச்சயம் ஒரு வருடத்தில் பல சம்பவங்கள் முடிந்திருக்கும்.

ஆஸ்தான புலவர்: அது தான் இல்லை. வாரத்தில் ஒரு முறை அரைமணி நேரம் வரும் தொடரில் இருபத்தெட்டு நிமிடம் விளம்பரங்கள் போட்டு இரண்டு நிமிடம் மட்டுமே தொடர் வருவதால் ஒரு வருடத்தில் கதை நகர சிறிதும் வாய்ப்பில்லை.

இதோ எனது கடைசி கேள்வி புலவரே. கொலைக் காட்சி போன்ற ஒரு முக்கியமான காட்சியில் வில்லன் கத்தியை உயர்த்தி பிடித்து குத்துவதற்கு முன்பு அதிர்ச்சி தருவது போல பின்னணி இசை வரும். அப்பொழுது என்ன நடக்கும்?

வெளிநாட்டு புலவர்: இதற்கு விடை எனக்கு தெரியாது புலவரே. உங்கள் புலமைக்கு நான் தலை வணங்கி இந்த தர்க்கத்தை நீங்களே வென்றீர் என ஒத்துக் கொள்கிறேன். உங்களது கடைசி கேள்விக்கு நீங்களே பதிலையும் சொல்லி விடுங்கள் ஐயா.

ஆஸ்தான புலவர்: இதோ அதன் பதில் புலவரே. ஒன்றுமே நடக்காது. மறுபடி அடுத்த வாரம் தொடரும் என்று கூறி நேயர்களை நோகடிப்பார்கள். அவ்வளவு தான்.

வெளிநாட்டு புலவர்: நான் தோற்று விட்டேன் மன்னா. உங்கள் நாட்டு புலவரின் அறிவாற்றலின் முன்பு நான் தலை குனிகிறேன் அரசே. இனி நான் எலியூர் பக்கம் எந்த ஒரு தர்க்கத்திற்கும் வர மாட்டேன் என்று கூறி விடை பெறுகிறேன்.

எலியூர் அரசன்: சென்று வாரும் புலவரே. சின்னத் திரையை கரைத்து குடித்திருக்கும் எங்கள் புலவரிடம் தோற்றது உமக்கு இழிவு அல்ல. பெருமை தான். ஆஸ்தான புலவரே, நன்று செய்தீர், இந்நாட்டின் பெருமையை உயர்த்தினீர். உங்களின் சின்னத் திரை மெகா தொடர்களின் பண்டிதத்தை பாராட்டி 'மெகா புலவர்' என்று பட்டம் அளித்து இந்த பத்து பொற்காசுகளை சமானமாக அளிக்கிறேன்.

ஆஸ்தான புலவர்: கொடைவள்ளல் அழுமூஞ்சிவர்மா! உங்கள் அல்பத்தனத்துக்கு நான் என்றென்றும் கடன் பட்டிருக்கேன். வாழ்க எலியூர் மன்னன்! வளர்க அவன் புகழ்!

(முடிவுற்றது)

பிகு: இந்த நாடகம் ரிச்மன்ட் தமிழ் சங்கம் ப்ளாக் தளத்திற்காக மே 2009 ல் நான் எழுதியது.

7 comments:

soundr said...

இது உண்மையிலேயே உங்க படைப்பா,
இல்ல, மண்டபத்துல யாராவது எழுதிக்கொடுத்து.....
:-)

LK said...

கலக்கறீங்க மீனா

Anonymous said...

நாலு பேரை சிரிக்க வைக்க முடியும்னா உண்மையிலேயே கலக்கறீங்க மீனா

Amudhavan said...

வாழ்த்துக்கள். பொதுவாக தமிழில் பெண்கள் யாரும் இயல்பான நகைச்சுவையுடன் எழுதுவதில்லை. உங்களுக்கு இயல்பான நகைச்சுவை அருமையாக வருவதை ரசிக்க முடிகிறது. தொடர்ந்து நிறைய எழுதுங்கள். என்னுடைய எழுத்துக்களைப் படிக்க;http://amudhavan.blogspot.com

Meenakshi Sankaran said...

@ LK மற்றும் அனானிக்கு : உங்க ரசிப்புக்கு ரொம்ப நன்றி. :-)

Meenakshi Sankaran said...

வாங்க அமுதவன். உங்க வாழ்த்துக்களுக்கும் ரசிப்புக்கும் மிக்க நன்றி.

உங்க எழுத்துக்களில் சிலதை படித்தேன். உலகத்தமிழ் செம்மொழி மாநாடு பற்றி அருமையாக தொகுத்து எழுதியிருக்கீங்க.

Meenakshi Sankaran said...

வாங்க soundr.

// இது உண்மையிலேயே உங்க படைப்பா,
இல்ல, மண்டபத்துல யாராவது எழுதிக்கொடுத்து.....:-) //

கோவத்துல 'நக்கீரா என்னை நன்றாக பார்!' அப்படீன்னு என்னை டைலாக் அடிக்க வச்சுறாதீங்க, ஆமாம் சொல்லிட்டேன்.
:-))