எனக்கு பாம்பு செவின்னு நேத்து பேச்சு வாக்குல யாரோ சொன்னா. அதாவது அந்த அளவு துல்லியமா எனக்கு காது கேட்கிறதாம். மனசுக்குள்ளே நான் சிரிச்சுண்டேன். ஒரு இருபது வருஷத்துக்கு முன் என் காது அடிச்ச கூத்து இவங்களுக்கு எப்படி தெரியும்? இல்லை இல்லை. சரியா சொல்லணும்னா என் காதை வச்சுண்டு என் அம்மாவும், ஒரு காது மூக்கு தொண்டை வைத்தியரும் அடிச்ச கூத்துன்னு சொல்லணும். எனக்கு காது சரியா கேக்கும்னு நம்பிக்கை போய் வீட்டுல எல்லோரும் Charades விளையாட்டு ஆடி சைகை செய்ய பழக ஆரம்பிச்சுட்டாங்கன்னா பாருங்களேன். சுருக்கமா சொல்லணும்னா.......அனாவசியமா எதுக்கு சுருக்கணும்? அப்புறம் பதிவை நான் எப்படி ஜவ்வாட்டம் இழுக்கறது? முழுசாவே சொல்லறேன். கேளுங்க.
----------------------------------------------
பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரும் போதே எனக்கு முணுமுணுன்னு ஒரே காது வலி அன்னிக்கு. பையை வீசி விட்டு நேரா அம்மாகிட்ட போய் சொன்னேன். அம்மியில் ஏதோ துவையல் அரைச்சிண்டு இருந்த அம்மா நொடியில் டாக்டரா மாறி "மார்கழி மாச குளுரில் ஜில்லுனு தண்ணியில் காலங்கார்த்தால தலைக்கு குளிக்காதேன்னு நான் சொன்னா யார் கேக்கறா? அதான் சளி பிடிச்சு காது வலிக்கறது" அப்படீன்னு பளிச்சுன்னு டியாக்னோசிஸ் கொடுத்தா. "அதெல்லாம் இல்லைம்மா. காதுக்குள்ள ஒரு கட்டி இருக்குன்னு நினைக்கிறேன்" ன்னு நான் சொன்னேனோ இல்லையோ அம்மா மட மடன்னு வீட்டுக்குள்ளே போய் டார்ச் எடுத்துண்டு வந்தா .
இதை டார்சுன்னு சொல்லறதை விட பீமனோட கதைன்னு சொன்னா பொருத்தமா இருக்கும். அத்தனை பெருசா இருக்கும். இந்த டார்ச் கூடிய சீக்கிரத்தில் மைகல் ஜாக்சனை விட பிரபலமாக போகுதுன்னு எங்களுக்கு அப்போ தெரியலை. சொர்கலோகத்து கதவு திறந்தால் என்ன மாதிரி ஒளி வரும்னு எங்க வீட்டு டார்ச் லைட் அடிச்சு பார்த்தா உங்களுக்கு புரிஞ்சுடும். டார்ச்சை என் காதுக்குள் அடித்து பார்த்த அம்மா அதிர்ந்து போனாள். "என்னடி இது, பிள்ளையார் சதுர்த்தி வெல்ல கொழுக்கட்டை சைசுக்கு இருக்கு இந்த கட்டி" அப்படீன்னு கவலையில் ஆழ்ந்தாள். இதை தொடர்ந்து நாலு நாட்கள் மஞ்சளும், உப்பும் அரைத்து கை வைத்தியம் செய்து பார்த்து தோற்ற அம்மா இனி டாக்டரை தான் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
எங்க குடும்ப வைத்தியரை பத்தி தான் உங்களுக்கெல்லாம் தெரியுமே. விடிகாலை சூரியன் உதிக்கும் முன் அவர் க்ளினிக்குக்குள்ளே போய் டென்ட் கட்டி கயித்து கட்டில் போட்டு படுக்க தயாரா இருந்தா தான் அங்கே போகணும். அதுக்கு நேரமோ பொறுமையோ இல்லாமல் நானும் என் அம்மாவும் நாலு தெரு தள்ளி புதுசா திறந்திருந்த ஒரு காது, மூக்கு, தொண்டை வைத்தியரிடம் போக தீர்மானித்தோம். "கோடியாத்து மாமி நேத்தி என் கிட்ட சொன்னா...இந்த டாக்டர் ரொம்ப படிச்சவராம். அதுவும் காதை பத்தி மட்டுமே ரெண்டு வருஷம் தனியா படிச்சிருக்காராம். நிச்சயம் சரி பண்ணிடுவார்." அம்மாவின் மனசு நிறைய நம்பிக்கையோடு என் காது நிறைய கட்டியோடு நாங்க இந்த டாக்டரிடம் நேரம் குறித்து கொண்டு ஒரு வழியாக செக்கப்புக்கு போனோம்.
என் அம்மாவை பத்தி ஒரு விஷயம் இங்கே சொல்லணும். கொடுக்குற காசு வீணாகாம டாக்டர்கிட்ட நிறைய கேள்வி கேட்பா. நிறைய விஷயம் சொல்லுவா. இந்த காது டாக்டர் முன் போய் உட்கார்ந்ததும் அம்மா பேச்சை துவங்கினாள். "வணக்கம் டாக்டர். என் பொண்ணுக்கு நாலு நாளா காதுல கட்டி. புதன்கிழமை அன்னிக்கு ஆரம்பிச்சது. அன்னிக்கி கார்த்தால ரசம் சாதம் சாப்டுட்டு போனா ஸ்கூலுக்கு. கொஞ்சம் மாம்பழம் நறுக்கி கொடுத்தேன். அதனால சூடு ஜாஸ்தியாகி இந்த கட்டி வந்ததோன்னு சந்தேகமா இருக்கு. எனக்கு வீட்டுல கொஞ்சம் வேலை ஜாஸ்தி டாக்டர். இவள் காதை நன்னா செக் பண்ணி உள்ளுக்கு சாப்பிட நாலு மாத்திரையும், வெளியே தடவ ஒரு களிம்பும் எழுதி குடுத்திடுங்கோ. அடிக்கடி வந்துட்டு போறது கொஞ்சம் சிரமம். ஆனா பாவம் குழந்தைக்கு அடிக்கடி வயிற்று வலி வரும். அதனால பாத்து நல்ல மாத்திரையா எழுதுங்கோ." அம்மா மூச்செடுத்து மறுபடி ஆரம்பிக்கறதுக்குள்ளே டாக்டர் புகுந்தார். "முதல்ல செக் பண்ணலாம் அம்மா. அப்புறம் எப்படி ட்ரீட் பண்ணனும்னு நான் சொல்லறேன்." என்னை பக்கத்து நாற்காலியில் உக்கார சொல்லி வாயை திறந்து நாக்கை நீட்ட சொன்னார். அவ்வளவு தீவிரமா அவர் என் வாய்க்குள்ளே டார்ச் அடித்து பார்ப்பதை பார்த்தால் கோகுல கிருஷ்ணன் வாய்க்குள் தெரிந்த உலகம் என் வாய்க்குள்ளேயும் தெரியுதோன்னு எனக்கு பயங்கர சந்தேகம். அப்படியே திறந்த வாக்கில் உறைஞ்சு போயிடுமோன்னு பயந்திருந்த என் வாயை ஒரு வழியா மூடிய போது, டாக்டர் டார்ச்சை மூக்கின் பக்கம் திருப்பினார். மூக்கை செக் செய்து விட்டு மருந்து சீட்டு எழுதி அம்மா கையில் கொடுத்தார். "இந்த மாத்திரையை வாங்கி சாப்பிட்டுட்டு பத்து நாளைக்கப்புறம் வாங்க" ன்னு சொல்லி எங்களை அனுப்பி வச்சுட்டார். வெளியே வந்த நாங்க குழம்பி போய் நின்னோம். கிளினிக் வாசலில் இருந்த பெரிய போர்டை மறுபடி படித்து பார்த்தால் "காது" டாக்டர்னு தான் போட்டிருந்தது. ஹ்ம்ம்...காதை தவிர மத்ததை தானே இவர் செக் பண்ணினார்? நிஜமாவே பெரிய டாக்டர் தான் போல இருக்கு. கட்டியை பாக்காமலே மாத்திரை குடுத்துட்டாரே?
அடுத்த பத்து நாளும் வீடு ஒரே சர்க்கஸ் தான். மாத்திரை சாப்பிட்டு எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் காது கட்டி சௌபாக்யமா இருந்தது. ஒரு நாளைக்கு நாலு தரம் அம்மா என் காதுக்குள் டார்ச் லைட் அடித்து பார்த்து புலம்புவா. அதோட நிக்காமல் வாசல் கதவை திறந்து உள்ளே வரும் ஒருவரையும் விட்டு வைக்காமல் கூப்பிட்டு "கொஞ்சம் இப்படி வாங்கோளேன். எங்க மீனா காதுல கட்டி. பெரிய காது டாக்டரிடம் காமிச்சும் ஒண்ணும் சரியா போற மாதிரி இல்லை. இதோ டார்ச். மீனாவை கூப்பிடறேன். நீங்க கொஞ்சம் செக் பண்ணுங்கோ, சரியா? மீனா.....இங்க வந்து உன் காதை கொஞ்சம் காமிம்மா." என்னவோ பெருமையா ரிப்போர்ட் கார்ட் கொண்டு வந்து காமின்னு சொல்லரா மாதிரி அம்மா என்னை கூப்பிடுவா. ஒரு நாள் எங்க தெரு கீரைக்காரி கஷ்டப்பட்டு தலையில் இருந்த கூடையை இறக்கி வச்சுட்டு என் காதை டார்ச் அடிச்சு பார்த்து விட்டு தனக்கு தெரிந்த நாலு கை வைத்தியத்தை சொல்லிட்டு போனாள். வாசக்கதவு பக்கமா டார்ச் வைக்க ஸ்பெஷல் தட்டு ஒண்ணு கட்டலாமான்னு கூட வீட்டில் பேச்சு நடந்தது. ஒரு வாரம் அம்மா கூப்பிடவுடன் வந்து டார்ச் வெளிச்சத்தில் காதை காமித்து பழகி போய் அப்புறம் நானே வாசக்கதவு திறக்குற சத்தம் கேட்டால் டக்குனு போய் டார்ச் எடுத்துண்டு நின்னுடுவேன்னா பாருங்களேன்.
ஒரு வழியா பத்து நாள் மாத்திரை சாப்பிட்டு முடித்து விட்டு கட்டியில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் காது டாக்டரிடன் மறுபடியும் போனோம். இந்த முறை அவரிடம் காதை எப்படியாவது காட்டி விடணும் அப்படீங்கற தீர்மானத்தோடு போனோம். போய் நாற்காலியில் உட்காரும் போதே திரும்பி காது அவர் கண்ணுக்கு தெரியும் படி உட்கார்ந்தேன். இப்ப அவராலே எப்படி மிஸ் பண்ண முடியும்? ஆனால் அவர் "நேரா உட்கார்ந்து வாயை திறந்து நாக்கை நீட்டும்மா" ன்னாரு. வேறு வழியில்லாமல் அவர் சொன்ன படி உட்கார்ந்தால் பழைய படி தொண்டையையும், மூக்கையும் செக் செய்து விட்டு ஏதோ எழுத ஆரம்பிச்சார். நொந்து போய் "டாக்டர், எனக்கு கட்டி காதுல" ன்னு மெதுவா சொன்னேன். "ம்ம் தெரியும்மா. இந்த மாத்திரையை ஒரு அஞ்சு நாள் சாப்பிட்டுட்டு வா. கட்டி கரயலைனா கீறி எடுத்துடலாம்." என்னவோ மைசூர் பாகை கீறல் போடற மாதிரின்னாவது சொல்லறார். அங்கே நாங்க எடுத்த ஓட்டம் எங்க குடும்ப வைத்தியர் கிளினிக் வாசல்ல தான் நின்னுது. என் காது கூத்தை கேட்டு சிரிச்சுண்டே ஒரு களிம்பு எழுதி கொடுத்த எங்க வைத்தியர் "உனக்கு காசு ரொம்ப இருந்தா போய் அட்மிட் ஆகி ஆபரேஷன் எல்லாம் பண்ணிக்கோ. இல்லைன்னா இதை தடவிப்பாரு" அப்படீன்னாரு. ரெண்டே நாளுல கட்டி இருந்த இடம் தெரியாமல் போயிடுத்து. டார்ச்சை நல்லா துடைச்சு உள்ளே வச்சோம். அதுக்கும் தான் பாவம் ஓய்வு வேண்டாமா?
12 comments:
//எனக்கு பாம்பு செவின்னு நேத்து பேச்சு வாக்குல யாரோ சொன்னா. அதாவது அந்த அளவு துல்லியமா எனக்கு காது கேட்கிறதாம்//
பாம்புச் செவி என்று யாரு ஆரம்பித்தாங்களோ? தெரியவில்லை. உண்மையில் பாம்புக்குக் காதே இல்லையாம்; உயிரியல் ஆய்வாளர் கூற்று.
Paambukku kaathu kidaiyaathu enpathu therinja yaaro "paambu sevinu" ungalai kalaaichu irukkaanga!(mookkum velai seyyaathu naakkin moolame vaasanai ariyum)
:)
http://vaarththai.wordpress.com
அருமை
என் மீனா எங்க வீட்டு பக்கம்லா வர மாட்டீங்கள
//அம்மாவின் மனசு நிறைய நம்பிக்கையோடு என் காது நிறைய கட்டியோடு நாங்க இந்த // அருமையான வர்ணனை மீனா மாமி!...:)
யோகன் பாரிஸ், வவ்வால், சவுண்ட் ஆர், எல்.கே மற்றும் தக்குடுபாண்டி,
வாங்க. மிக்சரை மென்னு இங்க பின்னூட்டமிட்டதுக்கு ரொம்ப நன்றி.
எல்.கே,
கூடிய சீக்கிரம் உங்க தளத்துக்கு வந்து எட்டிப் பார்க்கறேன், சரியா?
தக்குடு,
இன்னொரு முறை 'மீனா மாமி'ன்னு சொன்னேளோ, உங்க பேச்சு கா தான், ஆமாம் சொல்லிட்டேன். இன்னும் ஒரு பத்து பதினஞ்சு வருஷத்துக்கு அப்புறமா வேணும்னா அப்படி கூப்பிடுங்க. :-)
//இன்னொரு முறை 'மீனா மாமி'ன்னு சொன்னேளோ, உங்க பேச்சு கா தான்,// Then meena akka! okeyvaa??..:)
மாமி / அக்கா அல்லது யக்காவ் !!!!! இதை வைச்சே ஒரு பதிவு போட்டுடலாம் போல இருக்கே !!!! ஐயையோ வடை போச்சே !!!!
அனுபவம் ( பதிவு ) சூப்பார இருந்தது .... எனக்கெல்லாம் சின்ன வயசில , விளக்குல காய்ச்சின எண்ணையை ஊத்தினா !!!!.
//Then meena akka! okeyvaa??..:)//
இது தான் கரெக்ட். சரி இப்போ உங்ககிட்ட பழம் விட்டுட்டேன். :-)
விளக்குல காய்ச்சின எண்ணையா??? உங்க காது இப்போ எப்படி? ஓரளவாவது கேக்குமா?
வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி அது ஒரு கனாக்காலம். :-)
Haha meena thoroughly enjoyed this post. I just visualised each and every word
Post a Comment