Saturday, July 17, 2010

அஹிம்சை முறையில் குழந்தை வளர்ப்பா?

சிலரோட பேச்சில் தேன் ஒழுகும் அப்படீன்னு சொல்லி கேட்டுருக்கேன். இரண்டு நாட்கள் முன்னாடி சன் டீவியில் ஒரு பெண்மணி குழந்தை வளர்ப்பு பற்றி அப்படித்தான் ரொம்ப அழகாக, இனிமையாக, தெளிவாக பேசினாங்க. குழந்தைகளை திட்டாமல், அடிக்காமல் அன்பாக பேசி நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டிய அவசியத்தை ரொம்ப வலியுறுத்தி சொன்னாங்க. இன்று பல அம்மாக்கள் கொத்தனார் சிமென்ட் பூசுவது போல் குழந்தைகளுக்கு சாதம் ஊட்டுவதை பார்த்தால் நாம் சாப்பிட்டதெல்லாம் வெளியே வந்து விடும் போல இருக்குன்னு வருத்தத்தோட சொன்னாங்க. இன்னும் குழந்தை வளர்ப்பு பற்றி ஆச்சரியத்தக்க விஷயங்கள் நிறைய சொன்னாங்க. இவங்களை மட்டும் நான் நேரில் பார்த்தால் சாஷ்டாங்கமா காலில் விழுந்திடுவேன். அஹிம்சை முறையில் குழந்தை வளர்ப்பா? இது நடக்க கூடிய ஒரு விஷயம் தானா? நினைத்தால் எட்டாக்கனி போல் ஏக்கமாக இருக்கு எனக்கு.

தினமும் இருபத்து நாலு மணி நேரத்தில் எப்படியாவது ஒரு எட்டு மணி நேரமாவது என் குழந்தைகளைத் திட்டாமல் இருக்க நான் முயற்சி செய்வேன். ஏதோ கடவுள் புண்ணியத்தில் இரவு எட்டு மணி நேரம் அவங்க தூங்கரதாலே இது முடியறது. மீதியுள்ள நேரமெல்லாம் வாளும், அம்பும் இல்லாத போர்களம் போல் அமர்க்களப்படும் எங்கள் வீடு. பீஷ்மரும், துரோணரும் மறுபிறவி எடுத்து வந்தால் கலியுக குருக்ஷேத்ரம்னு எங்க வீட்டு வாசல்லதான் தேரோட வந்து நிப்பாங்க. பள்ளி நாட்களில் காலையில் குழந்தைகளை எழுப்பி தயாராக சொல்லி கழிவறைக்குள் தள்ளி விட்டு சமையலறைக்குள் நான் வந்த பத்தாவது நிமிடம் சங்கு ஊதாமலே போர் தொடங்கி விடும் எங்க வீட்டில்.

"மணி ஆறு அம்பது. Breakfast ready. சீக்கிரம் வாடா கண்ணம்மா கீழே."

"-----------------------------"

"ஏழு பத்து. பல் தேச்சாச்சா இல்லியா? நான் வரட்டா மாடிக்கு?"

"--------------------------------"

"ஏழு பன்னண்டு. மாச மசன்னு என்னடீ பண்ணிண்டு இருக்க அங்க? "

"இன்னிக்கு Spirit wear டே அம்மா. என் ஸ்பெஷல் ஷர்ட் எங்கே?"

"எதுக்கு இவ்வளவு சீக்கிரமா கேக்கற? இன்னும் அரை மணி கழுச்சு கேக்கறது தானே? கழுதை. நேத்து ராத்திரி என்ன பண்ணின இத பாத்து எடுத்து வச்சுக்காம?"

"----------------------------------"

"வாயில் என்ன கொழுக்கட்டையா? பதில் சொல்லேண்டி."

இப்படியாக பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கும் ஒரு சாதாரண நாள் இரவு நாங்கள் படுக்கும் முன் என்னை ராட்சசியாக ஆக்கி விட்டு தான் முடியும். பொறுமையை மட்டும் கவர்மென்ட் ரேஷனில் கொடுத்தால் முதல் நாளே போய் படுத்து க்யூவில் இடம் பிடித்து ஒரு பத்து கிலோ அதிகமா வாங்கிடுவேன் நான். எங்க வீட்டில் அரியதொரு பண்டம் அது தான். சிரித்த படியே குழந்தைகளை கண்டிக்கும் முறை அறிந்த தாய்மார்கள் போர்ட் மாட்டி கிளாஸ் எடுக்க ஆரம்பித்தால் ரெஜிஸ்டர் பண்ண நான் தயார். ஆனால் நரசிம்ம அவதாரம் போல் காட்சி கொடுத்து பழகிய நான் பழக்கமில்லாமல் சிரித்து அன்பா பேசினால் என் குழந்தைங்க திடுக்கிட்டு போய் என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்தாலும் சேர்த்துடுவாங்க. இந்த அஹிம்சா முறை குழந்தை வளர்ப்பை படிப்படியா தான் செயல் முறைல காட்டணும்னு நினைக்கிறேன்.

உங்கள் வீட்டில் குழந்தை வளர்ப்பு எப்படீ? அஹிம்சை முறையா? மீனா முறையா? சும்மா சொல்லுங்க.

----------

ஜூலை 2009 RTS ப்ளாக் தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை.

9 comments:

ARUNA said...

pathivu miga arumai. rasithen

ahimsai murai plus meena murai irandume irukkattum

soundr said...

குழந்தைங்கள திட்டாம, அடிக்காம வளக்கவே முடியாது.
குழந்தைய சரிவர கவனிச்சிக்கிறதுக்கு முடியாம இருக்குறவங்க தான், பேட்டி கொடுத்த அம்மா மாதிரி ஸ்டண்ட் அடிப்பாங்க.
நம்ம பெற்றோர், ஆசிரியர்கள் நம்மள அடிக்காமளா வளத்தாங்க? அதுனால நம்ம நாசமாவா போனோம்?

http://vaarththai.wordpress.com

Shri ப்ரியை said...

ஹ்ஹ்ஹ்ம்ம்ம்.. அவரவர்க்கு அவரவர் கஷ்டம்... வளர்த்து பார்த்து சொல்றோமுங்க.....
பதிவு நன்று...

தக்குடு said...

தக்குடு மாதிரியான சுட்டிக் குழந்தைகளுக்குத்தான் எத்தனை பிரச்சனைகள்!! ம்ம்ம்ம்ம்ம்.....:))

Meena Sankaran said...

வாங்க அருணா. 'ரசித்தேன்'ன்னு மனமார சொன்ன உங்க நல்ல உள்ளத்துக்கு ரொம்ப நன்றி. :-)

Meena Sankaran said...

வாங்க சவுண்ட்ஆர்! திட்டாமல் குழந்தைகளை வளர்க்க முடியாதுன்னு நீங்க சொல்லறது என்னவோ ரொம்ப கரெக்ட். எத்தனை முயற்சி பண்ணினாலும் இந்த ஒரு கலையில் மட்டும் என்னால் தேறவே முடியலை.

மொறு மொறு மிக்சரோ இல்லை நமநமத்து போன மிக்சரோ எதுவானாலும் அடிக்கடி வந்து கொஞ்சம் சுவைத்து பார்க்கற உங்களுக்கு மிக்க நன்றி. :-))

Meena Sankaran said...

வாங்க ஸ்ரீப்ரியை!

//பதிவு நன்று...//

அப்படீன்னு சொன்ன உங்களுக்கும் ஒரு நன்றி. :-))

Meena Sankaran said...

//தக்குடு மாதிரியான சுட்டிக் குழந்தைகளுக்குத்தான் எத்தனை பிரச்சனைகள்!! ம்ம்ம்ம்ம்ம்.....:))//

ஹி ஹி ஹி தக்குடு.....சோக்கு?

குமரன் (Kumaran) said...

இந்த மாதிரி நேர்மையா உண்மையை வெளிப்படையா பதிவுல சொல்றதுக்கும் நல்ல துணிவு வேணும். எனக்கெல்லாம் அது இல்லை – அதனால நான் ஒரு அன்பான அமைதியான அப்பான்னு நெறைய பேரு நெனைக்கிறாங்க. நான் அடிக்கடி நரசிம்மாவதாரம் எடுக்குறதால இப்ப எல்லாம் குழந்தைகளை பாத்துக்கிறது முழுக்க முழுக்க என்னோட தங்கமணி தான். ;-)